வியாழன், 2 மார்ச், 2017

இந்துத்துவவாதிகளுக்கு அம்பேத்கரின் கேள்விகள்!

தலித் மக்களை இந்து மதத்துக்குள்ளும், ‘இந்துத்துவா’ எனும் கோட்பாடுக் குள்ளும் அடக்க முயலும் சங்பரிவாரங்களின் வாதங்களை உடைத்து நொறுக்கு கிறார், டாக்டர் அம்பேத்கர்!
டாக்டர் அம்பேத்கர் முன் வைக்கும் கேள்விகள் என்ன?
• இந்துஸ்தானத்தில் வசிக்கும் ஒவ்வொருவரும் ‘இந்து’ தான் என்று வாதிட்டால், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகளும் இந்துக்களா?
• ‘இந்து’ என்ற சொல் மதத்தைக் குறிப்பிடுவதாக இருந்தால், அதில் இரண்டு பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டும். ஒன்று இந்து மதம் வலியுறுத்தும் விதிகளான சூத்திரங்கள். இந்த சூத்திரங்களைக் கூறும் சாஸ்திரங்கள், இவைகள் ஜாதியையும் தீண்டாமையையும் வலியுறுத்துவதால், தீண்டப்படாத மக்கள் ஏற்க முடியாது; மற்றொன்று - வழிபாட்டு முறைகளைப் பற்றியது. ஏனைய இந்துக்களைப் போலவே - தீண்டப்படாத மக்களும் ராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு போன்ற கடவுள்களை வணங்கும்போது, அவர்களும் இந்துக்களாகி விடுகிறார்களே என்று வாதிடப்படுகிறது. இரு பிரிவினரின் வழிபாட்டு முறை ஒன்றாக இருப்பதாலேயே இருபிரிவினரின் மதமும் ஒரே மதம் - பொது மதம் என்று கூற முடியாது; ஒரே மாதிரியான மதம் என்று வேண்டுமானால் கூறலாம்.
• இரு பிரிவினருக்கும் ‘பொது மதம்’ என்ற ஒரு மதம் இருக்குமானால், வழிபாட்டு முறைகளில் பொதுவான பங்கேற்பு இருக்க வேண்டுமல்லவா? அப்படி வழிபாட்டில் தீண்டப்படாத மக்களுக்கு பொதுவான பங்கேற்பு இல்லையே; தீண்டப்படாதவர்கள் ஒதுக்கப்படுகிறார்களே! அன்னியர்களைப்போல அவர்கள் வேறுபட்டுத் தானே நிற்கிறார்கள்?
• இந்துக்களிலே - தீண்டப்படாதவர்களைத் தவிர ஏனைய பிரிவினர் ‘வர்ணஸ்தர்கள்’ என்றும் - தீண்டப்படாதவர்கள் இதற்கு நேர் எதிராக ‘அவர்ணஸ்தர்கள்’ என்றும் அழைக்கப்படுகிறார்கள். அதேபோல் இந்துக்கள் சதுர்வனிகர் என்றும், தீண்டப்படாதவர்கள் நேர்மாறாக பஞ்சமர் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இப்படி வேறுபாடுகளை கவனிப்பதற்கு ‘சொற்களே’ வழக்கத்தில் வந்துவிட்ட நிலையில், தீண்டப்படாதவர்கள் எப்படி இந்துக்களாக இருக்க முடியும்?
• ஒரே கடவுளை கும்பிடுகிறவர்கள்; ஒரே வழிபாட்டு முறையைக் கொண்டவர்கள் எல்லாம் ஒரே சமுதாயம் என்றால், ஜெர்மானியர், பிரஞ்சுக்காரர்கள், இத்தாலியர் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் ஆகிவிடுவார்களா? இவர்கள் அனைவரும் ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்; ஒரே கடவுளைக் கும்பிடுகிறவர்கள்தானே?
• ஒரே நாட்டுக்குள்ளே - ஒரே மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்கூட ஒரே சமுதாயமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லையே! அமெரிக்காவில் வெள்ளையர்களும் கிறிஸ்தவர்கள்தான்; கறுப்பர்களும் கிறிஸ்தவர்கள்தான்; அவர்களை ஒரே சமூகம் என்று கூறிவிட முடியுமா?
• இந்துவத்தின் அடிநாதமாக இருக்கும் இந்துமதம் ஜாதியையும் - தீண்டாமையையும், மதத்தின் கட்டளைகளாகப் பிரகடனப்படுத்துகிறது; ஜாதியும், தீண்டாமையும் பிரிவினையின் மறுவடிவங்கள் அல்லவா? ஒற்றுமைக்குப் பதிலாக  வேற்றுமையை வலியுறுத்தும் ஒரு கலாச்சாரம் எப்படி - அனைத்து மக்களுக்குமான தேசியக் கலாச்சாரமாக இருக்க முடியும்?  
• இந்தியாவில் ஜாதிகளில் சிறப்பு அம்சம் ஒதுக்கி வைத்தலும், ஒதுங்கி இருத்தலுமே; இந்தக் கோட்பாடு மத நம்பிக்கையோடு இணைக்கப்பட்டு, வாழ்க்கை நெறியாகவும் வலியுறுத்தப்படுகிறது; இத்தகைய கொடூரமான ஒரு மதம் - உலகில் வேறு எங்கும் கிடையாது.
அம்பேத்கர் எழுப்பியுள்ள தர்க்க ரீதியிலான இந்த விவாதங்களுக்கு சங்பரிவாரங்களிடமிருந்த எந்த பதிலும் வரவில்லை. 
ஆதாரம்: அம்பேத்கர் எழுதிய “காந்தியும் காங்கிரசும் தீண்டாத மக்களுக்கு செய்தது என்ன?” நூல்

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 3

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)
இந்தியாவின் - அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்று சமஸ்கிருதம். சமஸ்கிருதத்தையும்  இந்தியாவின் அதிகாரபூர்வ மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கலாம் என்று கூறியதற்காக அம்பேத்கரை ‘இந்துத்துவவாதி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். இந்தியாவின் தேசிய மொழியாக ‘சமஸ்கிருதம்’ மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் ‘இந்துத்துவா’ கொள்கை.  ஆர்.எஸ்.எஸ்சுக்கு தத்துவார்த்த நூலான ‘பஞ்ச் ஆப் தாட்ஸ்’ ((Bunch of Thoughts)) நூலில் இதை கோல்வாக்கரே எழுதியிருக்கிறார். அம்பேத்கர் - இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு மொழிகளில் சமஸ்கிருதமும் இருக்க லாம் என்றார். இரண்டுக்கும் மலையளவு வேறு பாடுகள் உண்டு; இந்த உண்மையை மறைக்கிறார்கள்.
சமஸ்கிருதம் எல்லோருக்கும் பொதுவான மொழியாக இருந்ததாம். அது மக்கள் மொழியாம்; இந்த நூலில்  எழுதியிருக்கிறார்கள். அப்படி இருந் திருக்குமானால் வேதத்தை ஓதும் ‘சூத்திரன்’ நாக்கை வெட்ட வேண்டும்; வேதத்தைக் கேட்கும் ‘சூத்திரன்’ காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று ‘மனுஸ்மிருதி’யில் எழுத வைத்தது யார்? சமஸ்கிருதத் தில் எழுதப்பட்ட இந்த மனுஸ்மிருதிக்கு அம்பேத் கரே தீயிட்டாரே! ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படிக்க விரும்பிய அம்பேத்கரை அவர் தீண்டப்படாதவர் என்பதற்காக பார்ப்பனர்கள் சமஸ்கிருதப் பள்ளியில் சேர்க்க மறுத்ததை அம்பேத்கர் வரலாறு பறை சாற்றிக் கொண்டிருக்கிறதே! இது எப்படி மக்களின் மொழியாக இருந்திருக்கும்? ‘கடவுளுக்குத்’ தெரிந்த மொழி; பார்ப்பனர்கள் மட்டுமே படித்த மொழி என்பதைத் தவிர, சமஸ்கிருதத்தை உயர்த்திப் பிடிக்க அதில் என்ன இருக்கிறது? அனைத்து மக்களும் பேசிய மொழியாக அது இருந்திருக்குமானால் அது எப்படி வழக் கொழிந்து போனது?
சமஸ்கிருதம் ஒன்று மட்டுமே தேசிய மொழியாக வேண்டும் என்கிறார் கோல்வாக்கர். அது தேசிய மொழியாக இடம் பெறும் வரை இந்தி இருக்கட்டும் என்கிறார். ஆனால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒன்றாக சமஸ்கிருதமும் இருப்பதை அம்பேத்கர் எதிர்க்கவில்லை. ஆனால் ‘குருஜி’யும், ‘அண்ணலும்’ ஒரே புள்ளியில் இணைந்து நிற்கிறார்கள் என்று புரட்டு வாதம் பேசி காதில் பூ சுற்றுகின்றன ‘சங்பரிவாரங்கள்’.
‘ஆரியர்’ குறித்த பார்வையில் ஆர்.எஸ்.எஸ். ‘குருஜி’ கோல்வாக்கரும் அம்பேத்கரும் ஒரே கருத்து கொண்டிருந்தார்கள் என்று மற்றொரு கதையை அவிழ்த்து விடுகிறார்கள். இதுவும் அபத்தமான வாதம். ஆரியர்கள்தான் இந்த தேசத்தின் மக்கள்; அவர்கள் ‘மூலதாரம்’ எது என்பது சரித்திர மேதை களுக்கே தெரியவில்லை என்று கூறும் கோல்வாக்கர், ஆரியர்களைத் தவிர, ஏனையோர் அறிவற்றவர்களாக இருந்தனர் என்று கூறுவதோடு, “நாம் ஆரியர்கள்; அறிவுத் திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட் டோம்” என்று தனது நூலில் எழுதுகிறார். (We were called the elighted - the Aryas - and the rest the melachas)
அம்பேத்கர் ஆரியரை அறிவாளிகள் என்றோ, ‘ஆதி அந்தமே’ இல்லாதவர்கள் என்றோ, ஆரியரைத் தவிர மற்றவர்கள் ‘மிலேச்சர்கள்’ (இழிவுக்குரிய வர்கள்) என்றோ கூறவில்லை. இந்தியாவின் பூர்வீகக் குடிகள் நாகர்கள் தான் என்றும்; அவர்கள் பேசிய மொழி தமிழ் என்றும் அம்பேத்கர் உறுதியாக கூறுகிறார். ஆரியர்களுக்கும் நாகர்களுக்கும் நடந்த மோதலில் ஆரியர்கள் நாகர்கள் மீது தங்கள் பண்பாட்டைத் திணித்தார்கள் என்கிறார்.
அம்பேத்கர் கருத்தையே பார்ப்போம்.
“தமிழ் அல்லது திராவிடம் என்பது தென்னிந்தி யாவில் மட்டும் இருக்கவில்லை. ஆரியர்கள் வருகைக்கு முன் இந்தியா முழுமைக்குமான மொழியாக இருந்தது. காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை பேசப்பட்ட மொழியாக தமிழ் இருந்தது” என்று கூறும் அம்பேத்கர், ஆரியருக்கும் நாகருக்கும் நடந்த மோதல்களைக் குறிப்பிடுகிறார். வட இந்தியா விலிருந்த நாகர்கள் தங்கள் தாய்மொழியான தமிழை கைவிட்டு, சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டனர். ஆனால் தென்னிந்தியாவி லிருந்த நாகர்கள் தமிழை தங்கள் தாய் மொழியாகப் பேணி காத்து வந்தனர். ஆரியர் களின் சமஸ்கிருதத்தை தங்கள் மொழியாக ஏற்கவில்லை. இந்த வேறுபாட்டை கருத்தில் கொண்டால் திராவிடர் என்ற பெயர்  தென்னிந்திய மக்களுக்கு மட்டுமே ஏன் பயன்படுத்தும்படி நேர்ந்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.” (அம்பேத்கர் நூல் தொகுதி 14)
நாடு முழுமையையும் ஆரியர்களுக்கும் சமஸ்கிருத கலாச்சாரத்துக்கும் உரிமை கொண்டாடு கிறார் கோல்வாக்கர். இதற்கு நேர்மாறாக நாடு முழுதும் வாழ்ந்தவர்கள் நாகர்கள்; அவர்கள் தாய்மொழி  தமிழ் நாகர்கள்மீது ஆரியர்கள் சமஸ் கிருதத்தை திணித்தார்கள் என்கிறார் அம்பேத்கர். இருவரும் ஆனாலும் ஒரே புள்ளியில் ஒன்றிணைந்து நிற்கிறார்கள் என்று சங்பரிவாரங்கள் பிதற்றுகின்றன.
‘சிவன், விஷ்ணு போன்ற இந்து கடவுள்களை புறக்கணிக்கச் சொன்ன அம்பேத்கர், உப நிஷத்து களை ஏன் எதிர்க்கவில்லை? எனவே அவர் ஒரு இந்துத்துவ ஆதரவாளர் - இப்படியும ஒரு வாதம். சரி; எதிர்க்கவில்லை என்றால் எந்த இடத்திலாவது உப நிஷத்துகளை ஆதரிப்பதாக அம்பேத்கர் எழுதியோ பேசியோ இருக்கிறாரா என்ற கேள்விக்கு இவர் களிடம் என்ன பதில் இருக்கிறது? பார்ப்பனர்களின் கடவுள், வேதம், உபநிஷத், ஸ்ருதி, ஸ்மிருதி குறித்து அம்பேத்கர் அளவுக்கு விரிவாக ஆராய்ந்த தலை வர்கள் வேறு எவரும் இல்லை; வேதங்களுக்கும் உப நிஷதங்களுக்கும் மோதல்கள் இருந்ததை அம்பேத்கர் விவரிக்கிறார். இந்து கடவுள்களுக் குள்ளே மோதல் களை உருவாக்கியதும், பழைய கடவுள்களை அரி யணையிலிருந்து இறக்கிவிட்டு புதிய கடவுள் களையும் பெண் கடவுள்களையும் அரியணையில் உயர்த்தி வைத்ததையும் விரிவாக ஆராயும் அவர், எல்லாவற்றுக்கும் பின்னால் உந்து சக்தியாக இருந்தது பார்ப்பன மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்வதுதான் என்று அழுத்தமாக கூறுகிறார்.
காஷ்மீருக்கு தனி அந்தஸ்து தருவதில் அம்பேத்கருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அதை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் அவரவர் பகுதிகளை பிரித்து தந்து விடலாம் என்பதே அவரின் நிலைப்பாடு. இந்துத்துவாவாதிகள் கூறுவதுபோல இந்தியாவில் ஒரு மாநிலமாக்கிட வேண்டும் என்பது அல்ல.
அம்பேத்கரை ‘இந்துத்துவா’ வலைக்குள் சிக்க வைப்பதற்கு இவர்களிடம் உள்ள சரக்கு இவ்வளவு தான்! வேறு எதுவும் இல்லை; எல்லாமுமே அபத்தம்; பிதற்றல்; புரட்டு.
இந்த கூட்டம் முன் வைக்காத வாதம் ஒன்று தான்; நீங்கள் என்னதான் மறுத்தாலும் அம்பேத்கர் - “இந்துவாகத்தானே பிறந்தார்!”  என்றுகூட வாதாடக் கூடும். இதற்கும் அம்பேத்கர் ஆப்பு வைத்து விட்டார். “ஆம்! இந்துவாகத்தான் பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக விரும்பவில்லை.

அம்பேத்கருக்கு இந்து மதச் சாயம் பூசும் வரலாற்று திரிபுகளுக்கு மறுப்பு - 2

“இந்துத்துவ அம்பேத்கர்” என்ற பெயரில் தமிழக பா.ஜ.க.வின் தலைவர்கள் அண்மையில் வெளியிட்ட நூலில் முன் வைக்கப்பட்ட கருத்துகளை மறுத்து ‘மக்கள் விடுதலை’ மாத இதழுக்காக எழுதி வெளிவந்துள்ள கட்டுரை.
அம்பேத்கர் - இந்துத்துவக் கொள்கையின் தீவிர ஆதரவாளர் என்று நிலைநிறுத்த சங்பரிவாரங்கள் துடிக்கின்றன. இதற்காக வரலாறுகள் திரிக்கப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். ஷாகாக்களில் வழிபடக் கூடிய தலைவர்களில் ஒருவராக அம்பேத்கரையும் இணைத்துக்  கொண்டிருப் பதாக கூறுகிறார்கள். இன்னும் சில காலம் கழித்து காந்தியையும் ஆர்.எஸ்.எஸ். வழிபாட்டுத் தலைவர் பட்டியலில் இடம் பெற்றாலும் வியப்பதற்கு இல்லை.
அருண்ஷோரி என்ற ஒருவர் வாஜ்பாய் அமைச்சரவை யில் இருந்தார். அரசு பொதுத் துறை பங்குகளை கார்ப்பரேட்டுகளுக்கு விற்பதற்காகவே நியமிக்கப்பட்ட அமைச்சர். அவர், ‘அம்பேத்கர் - பிரிட்டிஷ் ஆதரவாளர், பிரிட்டிஷ் உளவாளி’ என்று ஒரு ‘ஆராய்ச்சி’ நூலையே எழுதினார். பா.ஜ.க. - சங்பரிவாரங்கள் -  அந்த நூலைத் தலையில் தூக்கி வைத்து ஆடின. இப்போது தமிழக பா.ஜ.க., அம்பேத்கருக்கு சொந்தம் கொண்டாட ம.வெங்கடேசன் என்ற ஒரு தலித் இளைஞரைப் பிடித்து, ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்ற ஒரு நூலை எழுத வைத்திருக்கிறது. இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் எல்லோரும் பங்கேற் றிருக்கிறார்கள்.  இப்போது அம்பேத்கர் இவர்களுக்கு  தேவைப்படுகிறார். வெளிப்படையாகச் சொன்னால் தலித் வாக்கு வங்கிக்கு வலை வீசக் கிளம்பியிருக்கிறார்கள்.
இந்த நூல் வரலாற்று அபத்தமாகவே வெளி வந்திருக்கிறது. இதில் முன் வைக்கப்பட்ட வாதங்கள் தான் என்ன? ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
“இந்து என்பதில் பவுத்தர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள் ஆகியோர்களை அம்பேத்கரே உள்ளடக்கியிருக்கிறார். அந்த வகையில் அவர் இந்துவாகவே இருந்திருக்கிறார். ..... அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்குப் பெயரே ‘இந்து சட்டத் திருத்த மசோதா தான்’.” - எனவே அம்பேத்கர் இந்துத்துவ ஆதரவாளர் - இப்படி ஒரு வாதம்!
முதன்முதலாக ‘இந்து’ என்ற பெயரைத் தந்து ‘இந்து’ சட்டங்களை உருவாக்கியவர்கள் யார்? பிரிட்டிஷ்காரர்கள் தான்.
இந்தியாவுக்கு படை எடுத்து வந்த இஸ்லாமியர்கள், சிந்து நதிக்கு அப்பால்  இந்திய துணைக் கண்டத்தில் வாழ்ந்தவர்களுக்கு ‘அல்-ஹிந்த்’ என்று பெயரிட்டனர். இது வாழும் இடத்தைக் குறித்த சொல்! இதிலிருந்துதான் ‘இந்து’ என்ற சொல்லை பிரிட்டிஷ்காரர்கள் எடுத்துக் கொண்டனர்.  அப்போது இஸ்லாமியர் - இஸ்லாமியர் அல்லாதார் என்ற இரண்டு அடையாளங்கள் மட்டுமே சமூகத்தில் இருந்தன. முஸ்லிம் அல்லாத மக்களுக்கு சட்டங்களை உருவாக்க பிரிட்டிஷ் ஆட்சி விரும்பியபோது, பார்ப்பனர்கள் அதற்கு  அடிப்படை ‘சித்தாந்தமாக’ மனு சாஸ்திரத்தை வழங்கினர். சுமார் 70 ஆண்டுகாலம் இந்தியாவில் இயங்கிய பிரிட்டிஷ் நீதிமன்றத்திலும், லண்டனில் இயங்கிய உச்சநீதிமன்றமான ‘பிரிவி கவுன்சிலிலும்’ தீர்ப்புகள் மனு சாஸ்திர அடிப்படையில்தான் வழங்கப்பட்டன. அனைவருக்கும் பொதுவான கிரிமினல் சட்டத்தை மெக்காலே கொண்டுவரும் வரை இதுதான் நிலை. ஆக, ‘இந்து’ என்ற பெயரை தந்தது பிரிட்டிஷ்காரன்; அம்பேத்கர் அல்ல. இதற்கு இறந்துபோன காஞ்சி சங்கராச்சாரியே சாட்சி.
சங்கராச்சாரி கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது. 
“அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்காவிட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.
சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை. வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களிலும் தீவிர வாதிகள், ‘விஷ்ணு சாமியே அல்ல; சிவன்தான் சாமி; விஷ்ணு சிவனுக்குப் பக்தன்’ என்று சொல்லுகிறார்கள். இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது? வெள்ளைக்காரன்  நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது.” (நூல்: தெய்வத் தின் குரல் - பாகம் 1 - பக்.266)
ஏதோ அம்பேத்கர்தான், ‘இந்து’ என்ற பெயரை ‘இந்துத்துவா’ உணர்வோடு கொடுத்ததாக எழுதுவது வரலாற்று மோசடி. பல்வேறு மதக் குழுக்களை தனக்குள் இழுத்துக் கொண்டதே ‘இந்து’ மதம்.
அரசியல் நிர்ணய சபையில் ‘இந்து’ சட்டம் குறித்த விவாதங்கள் வந்தபோது, இஸ்லாமிய கிறிஸ்துவ மத சட்டங்களைப்போல் அதற்கு ஒற்றை வடிவம் தர முடிய வில்லை. எனவே தான், எது கிறிஸ்துவ மதம் இல்லையோ எது முஸ்லிம் மதம் இல்லையோ எது யூத மதம் இல்லையோ அதுதான் ‘இந்துமதம்’ என்றுதான் சட்ட வரையறை வழங்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபையிலேயே அம்பேத்கர், அதில் அடங்கியுள்ள ஒவ்வொரு தனித் தனிக் குழுக்களுக்குமான நடைமுறைகளை மாற்றி அனைத்து ‘இந்து’க்களுக்கும் பொதுவான ‘சிவில்’ சட்டத்தைக் கொண்டு வர விரும்பினார். ‘பார்ப்பன சனாதன வர்ணாஸ்ரம’ மேலாதிக்கத்தில் இருந்த இந்து மதத்துக்குள் குறைந்த பட்சம் அதிலுள்ள பார்ப்பன மேலாண்மையை அகற்றி, அனைவரையும் முயன்றவரை சமப்படுத்தலாம் என்பதற் காகவே அம்பேத்கர் இந்த முயற்சியில் இறங்கினாரே தவிர, ‘இந்துத்துவா’வை ஆதரித்து அல்ல. ஆனால், ‘இந்து ராஷ்டிர’க் கூட்டம் இந்த முயற்சியையையும் முறியடித்தது. மீண்டும் நேருவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சரான போது இந்து பார்ப்பனிய மதம் திணித்த சமூகக் கேடுகளை அகற்றுவதற்கு 1952இல் இந்து சீர் திருத்தச் சட்டத்துக்கான மசோதாவை கொண்டு வந்தார்.
ஏற்கனவே அமுலில் இருந்த ‘இந்து’ சட்டத்தில் ‘பலதார மணம்’ அனுமதிக்கப்பட்டிருந்தது. இதை ஒழித்து, வெவ்வேறு ஜாதிகளுக்கிடையே திருமணம் செய்யும் உரிமை; பெண் குழந்தைகளையும் வாரிசாக தத்தெடுக்கலாம் என்ற உரிமை; விதவைகளுக்கும் குடும்ப சொத்தில் உரிமை என்ற அம்சங்களை உள்ளடக்கியதுதான் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்ட திருத்தம். இந்த மாற்றங்களை ‘இந்து’ சமூகத்தில் ஏற்கவே முடியாது என்று நாடாளுமன்றத்தில் இந்து மகாசபை தலைவர்களான என்.சி. சட்டர்ஜி, எஸ்.பி. முகர்ஜி உள்ளிட்ட மதவெறி பார்ப்பன சக்திகள் பலரும் எதிர்த்தனர். பழமையில் ஊறிப்போன அன்றைய குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார். உடனே அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை தூக்கி எறிந்துவிட்டு வெளியேறினார். இதுதான் வரலாறு. சரி; அவர்கள் வாதப்படியே கேட்போம். அப்படி அம்பேத்கர் கொண்டு வந்த ‘இந்து’ சட்டதிருத்தம், ‘இந்து’த்துவத் துக்கான ஆதரவின் அடையாளம் என்றால், அதை, ஏன் ‘சங்பரிவார்’களும் - இந்து மகாசபைக்காரர்களும் எதிர்த் தார்கள்? இந்த சீர்திருத்த மசோதாவை எதிர்ப்பதற்காகவே 15,000 பேர் கொண்ட ‘இராமராஜ்ய பரிஷத்’ என்ற ஒரு படையை உருவாக்கினார்கள். நாடாளுமன்றத்தின் முன்பும் டெல்லியிலும் அம்பேத்கர் உருவ படத்தை எரித்து போராட்டம் நடத்தினார்கள். டெல்லியில் மட்டும் 70 இடங்களில் அம்பேத்கர் படங்கள் எரிக்கப்பட்டன.
இவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த வாதம் -
“அம்பேத்கரின் கடுமையான விமர்சனங்கள் இந்து மதத்தை அழிக்க நினைப்பது அல்ல; சீர்திருத்த நினைப்பது தான். இதை அண்ணல் அம்பேத்கரே தெளிவாக ‘சாதி ஒழிப்பு’ நூலில் கூறியுள்ளார்.”  இது உண்மையல்ல. அம்பேத்கர் இந்துமத ஒழிப்பைத் தான் பேசினார்.
அம்பேத்கரைப் பொறுத்தவரை இந்து மதம் - ஒரு மதமே அல்ல என்பதே அவரது உறுதியான கருத்து. அது ஜாதிகளின் பட்டியல் என்றார். ‘இந்துத்துவா’ எழுத்தாளர் குறிப்பிடும் ‘ஜாதி ஒழிப்பு’ நூலிலிருந்தே ஆதாரத்தை எடுத்துக் காட்டுவோம்.
“இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்திய உள்நாட்டினரை யும் பிரித்துக் காட்டுவதற்காக முகம்மதியர்கள் இந்திய உள்நாட்டினரை ‘இந்து’க்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்புள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே காணப்படவில்லை. அக்காலத்தில் இந்தியர்கள் தங்களை தனிச் சமூகமாகவே கருதவோ, மதிக்கவோ இல்லை என்பதால், இந்தியர்களுக்கு எல்லாம் பொதுவான ஒரு சமூகப் பெயரை உண்டாக்க அவர்களுக்குத் தேவையுண்டாகவில்லை. உண்மையில் இந்துச் சமூகம் என்று ஒரு சமூகமே இல்லை. இந்துச் சமூகம் என்பது பல ஜாதிகளைச் சார்ந்த ஒரு கதம்பம்.” இதுதான் அம்பேத்கரின் உறுதியான கருத்து. (நூல்: ஜாதியை ஒழிக்க வழி)
இந்து சமூகம் என்றே கிடையாது என்று அறிவித்த தலைவரை ‘இந்துத்துவா’ ஆதரவாளராக படம் காட்டு கிறார்கள். அவர் இந்துமதத்தை சீர்திருத்தவில்லை; அழிக்கவே விரும்பினார் என்பதற்கு இதோ மற்றொரு சான்று.
1935ஆம் ஆண்டு லாகூரில், ஜாதி ஒழிப்புச் சங்கம் ஒன்று மாநாட்டுக்கு தலைமை உரை வழங்க அம்பேத்கரை அழைத்திருந்தது. ‘ஜாட்-பட்-தோடக் மண்டலம்’ என்ற அந்த அமைப்புக்கு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அம்பேத்கர் தனது உரையை முன்கூட்டியே அனுப்பியிருந் தார். உரையைப் படித்த மாநாட்டு நிர்வாகிகள் உரையில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அம்பேத்கர் அதற்கு ஒப்பவில்லை; எனவே மாநாடு நிறுத்தப்பட்டது. அம்பேத்கரின் அந்த ஆங்கில உரையை தமிழ்நாட்டில் பெரியார் அம்பேத்கரிடமிருந்து பெற்று 1936இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் சார்பில் தமிழில் வெளி யிட்டார். அந்த உரையுடன் அம்பேத்கருக்கும் அம்பேத்கரை அழைத்திருந்த ஜாதி ஒழிப்பு சங்கத்தினருக்கும் இடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களையும் அம்பேத்கர் இணைத்திருந்தார். அதில் அம்பேத்கர் உரையில் நீக்கப்பட வேண்டிய பகுதியாக ஜாதி ஒழிப்பு சங்கத்தினர் குறிப்பிட்டதும் இடம் பெற்றிருக்கிறது.
“தங்கள் உரையில் - பார்ப்பனியம் பற்றி தாங்கள் குறிப்பிட்டிருக்கும் பகுதி வரை சேர்த்திருக்கலாம். இந்துமதம் ஒழிய வேண்டும் என்றும், வேதங்கள் ஆபாசமானவை என்றும், தாங்கள் இந்து மதத்தை விட்டு நீங்கப் போவதாகவும் கடைசியில் சேர்த்திருக்கும் பகுதி - சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமாக இல்லை”.
ஜாதி ஒழிப்பு சங்கத்தினரின் வேண்டுகோளை மறுத்து அம்பேத்கர் அளித்த பதில் இது:
“இந்து மதம் ஒழிய வேண்டும் என்ற கூறுவதால் தங்கள் அமைப்பு அப்படியே கவிழ்ந்து போய் விடும் என்று நான் கருத வில்லை. வார்த்தைகளுக்குப் பயப்படுபவர்கள் மூடர்கள் என்பதுதான் எனது கருத்து..... மதம் ஒழிய வேண்டும் என்பதற்கு நான் கூறும் சமாதானங்களைக் கவனியாமல், மதம் ஒழிய வேண்டும் என்ற வார்த்தைகளைப் பார்த்த வுடனேயே பீதி அடையும். உங்கள் அமைப்பு மீது எனது மதிப்பு குறைந்து விட்டது.”
- இது அம்பேத்கர் தந்த பதில்! இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே அம்பேத்கரின் உறுதியான கருத்து என்பதற்கு இதுவே தெளிவான சான்று. அந்த ஒரு வார்த்தையை தனது உரையிலிருந்து நீக்க விரும்புவதை அம்பேத்கர் ஏற்காததோடு மாநாட்டையே புறக்கணித்தார்.
அத்தகைய தலைவரை - “மத ஒழிப்பாளர் அல்ல; மதத்தை சீர்திருத்தத்தை விரும்பியவர்” என்று எழுது கிறார்கள். இவர்களுக்கு அம்பேத்கர் மொழியிலேயே பதில் கூற வேண்டுமானால் - “வார்த்தைகளுக்கே அஞ்சும் மூடர்கள்!” என்றுதான் கூறவேண்டும்.
“அம்பேத்கர் ‘ஜாதி ஒழிப்பு’ என்றுதான் நூல் எழுதி யிருக்கிறாரே தவிர ‘இந்து மத ஒழிப்பு’ என்று நூல் எழுதினாரா?” - இப்படி ஒரு அபத்தமான கேள்வியை எழுப்புகிறார்கள். இந்து மதமே ஜாதிகளின் தொகுப்பு என்பதைத் தவிர அது ஒரு மதமோ சமூகமோ அல்ல என்று அம்பேத்கர் தெளிவாகக் கூறிவிட்ட பிறகு, ‘இந்து மத ஒழிப்பு’ என்று தனியாக ஒரு நூல் எழுதவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? இந்து மதத்தின் உயிர்நாடி யான ஜாதி - பார்ப்பனியம் - வர்ணாஸ்ரமத்தை ஒழித்து, அதன் அதிகாரங்களை மறுக்க வேண்டும் என்று அவர் கூறியதே இந்துமத ஒழிப்பு தானே? இதைவிட்டால் இந்து மதத்தில் வேறு என்ன இருக்கிறது?
அம்பேத்கர் ஜாதி எதிர்ப்பை மட்டுமல்ல; பார்ப் பனர்களை எதிர்க்கிறார்; பார்ப்பனியத்தை எதிர்க்கிறார்; புரோகித வர்க்கத்தை எதிர்க்கிறார்; வேதங்களை எதிர்க் கிறார்; மனுஸ்மிருதியை தீயிட்டுக் கொளுத்தியிருக்கிறார்; கீதையை முட்டாள்களின் உளறல்கள் என்று கூறியிருக் கிறார்; வேத-சாஸ்திரங்களுக்கு உள்ள அதிகாரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்கிறார். கடைசியில் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு புத்த மார்க்கத்தில் இலட்சக்கணக்கான மக்களுடன் இணைந்தபோது எடுத்த உறுதிமொழியில், இராமன், கிருஷ்ணன் உள்ளிட்ட இந்து கடவுள்களை வணங்க மாட்டோம்; வீட்டில் நிகழ்ச்சிகளுக்கு புரோகிதர்களை அழைக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வைக்கிறார். இந்து பார்ப்பன மதத்துக்குள் எந்த சீர்திருத்தத்தையும் கொண்டுவர முடியாது என்ற உறுதியான முடிவுக்குப் பிறகு தான் புத்த மார்க்கத்தையே தழுவுகிறார். இவ்வளவுக்குப் பிறகும் அம்பேத்கர் ‘இந்துத்துவவாதி’ என்றும் ‘இந்து’ சீர்திருத்தவாதி என்றும் கூப்பாடு போடுகிறார்கள்; நூல் எழுதுகிறார்கள்.
இனி அடுத்த வாதத்தைப் பார்ப்போம்!

வருணக்கலப்பு சாதிகளின் தோற்றம்

வருணக்கலப்பு சாதிகளின் தோற்றம்சுவாயம்பு மனு வகுத்த நான்கு பெரும் வர்ணங்களான அந்தணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரர் இவர்களில் முதல் மூன்று வர்ணத்தவர்கள் பூணூல் அணிந்து கொள்ளும் (உபநயனம்) எனும் சடங்கு செய்யும் உரிமை உள்ளதால், இவர்களை இருபிறப்பாளர்கள் (துவிஜர்கள்) என்பர். [1].

அனுலோம் சாதியினர்[தொகு]

இந்த இருபிறப்பாள துவிஜர்களான முதல் மூன்று வர்ண ஆடவர்கள், தமக்கு நேர் கீழ் உள்ள வர்ணத்துப் பெண்களிடம் கூடிப் பிறக்கும் குழந்தைகளை அனுலோம ஜாதியில் சேர்ப்பர். [2]. இந்த அனுலோம ஜாதி குழுந்தைகளுக்கு தங்கள் இருபிறப்பாள (துவிஜர்) தந்தையைப் போல் உபநயனம் எனும் பூணூல் அணியும் தகுதியுண்டு.[3]. அனுலோம சாதி குழந்தைகளின் சமூகத் தகுதியானது, தாயின் வர்ணத்திற்கு மேம்பட்டும், தந்தையின் வர்ணத்தை அடையாமலும், ஆனால் தந்தைக்குச் சமமானவரென்று மதிக்கத் தக்கவராயும் உள்ளனர். [4].

பிரதிலோம சாதியினர்[தொகு]

கீழ் வர்ணத்தை சேர்ந்த ஆடவர்கள், தமக்கு மேல் உள்ள வர்ணத்துப் பெண்டிரிடம் கூடிக் கலந்து பிறக்கும் குழந்தைகளை பிரதிலோம ஜாதியினர் என்பர். இந்த பிரதிலோம ஜாதி குழந்தைகள் தந்தையின் வர்ணதிற்குண்டான சமூகத் தகுதி அடையாது, தாயின் வர்ணத்திற்குண்டான சமூகத் தகுதியைவிட கீழான தீண்டத்தாகத 15 வகையான பாகிய சாதியில் வைக்கப்படுவர்.[5].

அனுலோம சாதிகளின் தோற்றம்[தொகு]

மேல் வருணத்து ஆண்களும், கீழ் வருணத்து பெண்களும் கூடி கலந்து பிறக்கும் குழந்தைகளை அனுலோம சாதியில் வைக்கப்படுவர். இந்த அனுலோம சாதியினர்கள் தந்தையின் வர்ணத்திற்குக் கீழும், தாயின் வருணத்திற்கு மேலான தகுதி வழங்கி பூணூல் அணியும் (உபநயனம்) சடங்கு செய்யும் உரிமை பெறுகின்றனர். மேலும் தர்ம காரியங்களை செய்யவும் அதில் கலந்து கொள்ளவும் உரிமை பெறுகின்றனர். அனுலோம சாதியினர், பிரதிலோம சாதியினரைவிட சமூகத்தில் கூடுதல் தகுதியுடையவர்கள்.
  • அந்தண வருண தந்தைகளுக்கு, வைசிய வருணத்தை சார்ந்த மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகளைஅம்பஷ்டன் என்பர்.
  • அந்தண வருண தகப்பன்களுக்கு நாலாம் வருண மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளை நிஷாதன் என்றும் பாரசவன் என்றும் அழைப்பர்.
  • சத்திரிய வருண தகப்பன்களுக்கு, நாலாம் வருண மனைவிகள் மூலம் பிறந்த குழந்தைகளை உக்கிரன் என்றழைப்பர்.
  • சத்திரிய வருண தந்தைகளுக்கு அந்தண வருண மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளைகளை சூதன் என்பர்.
  • வைசிய வருண தகப்பன்களுக்கு சத்திரிய வருண மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளைகளை மாதகன் என்பர்.
  • வைசிய வருண தகப்பன்களுக்கு அந்தண வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகளை வைதேகன் என்பர்.
இவ்வாறாக இரு பிறப்பாள (துவிஜர்கள்) வருணத்தவர்கள் கூடிக் கலந்து பிறக்கும் ஆறு வகைப்பட்ட குழந்தைகளை அனுலோம சாதியில் வைக்கப்படுவர்.

பிரதிலோம சாதிகளின் தோற்றம்[தொகு]

நான்காம் வருண தந்தைக்கும் இருபிறப்பாளர்களான மேல்வருணத்து மனைவிகளுக்கும் பிறக்கும் குழந்தைகளை பிரதிலோம சாதியில் வைக்கப்படுவர். பிரதிலோம சாதி குழந்தைகளுக்கு தந்தையின் வருணத்திற்குண்டான சமூக தகுதி கிடையாது. ஆனால் தாயின் வருணத்திற்கு குறைவான சமூகத் தகுதியுடன் வைக்கப்படுவர். சில கலப்பு வருணத்தில் பிறந்த பிரதிலோம குழந்தைகள் தீண்டத்தகாதவர்கள் பட்டியலில் சேர்த்து அவமானப்படுத்துவர். எடுத்துக்காட்டு: சண்டாளர். பிரதிலோம சாதியினருக்கு பூணூல் அணியும் உபநயனம் சடங்கு செய்ய தகுதி கிடையாது. இவர்கள் அனுலோம சாதியினரைவிட தாழ்ந்தவர்கள் ஆவர்.
  • நாலாம் வருண தந்தைகளுக்கு வைசிய வருணத்து மனைவிகள் மூலம் பிறக்கும் பிள்ளகளை அயோகவன் எனும் சாதியில் வைக்கப்படுவர்.
  • நாலாம் வருண தந்தைகளுக்கு சத்திரிய வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள க்ஷத்தா எனும் சாதியில் வைக்கப்படுவர்.
  • நாலாம் வருண தந்தைகளுக்கு அந்தண வருணத்து மனைவிகள் மூலம் பிறந்த பிள்ளைகள் சண்டாளர் எனும் சாதியில் வைக்கப்படுவர்.

நால்வர்ணத்தினர், அனுலோம - பிரதிலோம சாதிகளுடன் திருமண உறவினால் தோண்றிய சாதிகள்[தொகு]

இனி நால்வகை வர்ணத்தினர், அனுலோம மற்றும் பிரதிலோம சாதிகளுடன் திருமண உறவினால் உண்டான புதிய சாதிகளின் தோற்றம் பற்றி காண்போம்.
  • அந்தண தகப்பனுக்கு உக்கிரன் எனும் சாதியைச் சேர்ந்த (அனுலோம சாதி) மனைவியின் மூலம் பிறந்த குழந்தைகளை ஆவிரதன் என்ற சாதியிலும்; அந்தணனுக்கும் அம்பஷ்டன் சாதியைச் சேர்ந்த மனைவி மூலம் பிறந்த குழந்தைகளை அபீரன் என்ற சாதியிலும்; அந்தணனுக்கும் அயோகவன் சாதியைச் சார்ந்த மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளை திக்வணன் எனும் சாதியில் சேர்த்தனர்.
  • நிஷாதன் எனும் சாதியைச் சார்ந்த ஆடவனுக்கும் நாலாம் வருணத்தை சார்ந்த மனைவி மூலம் பிறந்த பிள்ளைகளை புற்கசன் எனும் சாதியிலும்; நாலாம் வருணத்தை சார்ந்த ஆடவனுக்கும் நிஷாத சாதி மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகளை குக்குடகன் என்ற சாதியிலும் வைத்தனர்.
  • க்ஷத்தா சாதி ஆடவனுக்கும் உக்கிரன் சாதியைச் சார்ந்த மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகளை சுவபாகன் என்ற சாதியிலும்; வைதேகன் சாதியைச் சேர்ந்த ஆடவனுக்கும் அம்பஷ்டன் சாதியை சார்ந்த மனைவிக்கும் பிறக்கும் பிள்ளைகள வேணன் என்ற சாதியில் சேர்க்கின்றனர்.
  • வைதேக சாதி ஆடவன் அயோகவ சாதிப் பெண்ணுடன் கூடிப் பெறுகின்ற பிள்ளை மைத்திரேயன் சாதியினர் ஆவான்.
  • தஸ்யூ ஆடவனுக்கும் அயோகவன் சாதி பெண்ணிற்கும் பிறந்த பிள்ளைகள் சைரந்திரன் சாதியினர் ஆவான்.
  • நிஷாத சாதி ஆடவனுக்கும் அயோகவ சாதிப் பெண்ணிற்கு பிறந்த பிள்ளைகள் மார்க்கவன் சாதியினர் ஆவான்.
  • நிஷாத சாதி ஆடவனுக்கும் விதேக சாதி பெண்ணிற்கும் பிறக்கும் பிள்ளைகளை கார்வாரன் சாதியினர் ஆவர்.
  • நிஷாத சாதி ஆடவனுக்கும் வைதேக பெண்ணிற்கும் பிறக்கும் பிள்ளைகளை ஆகிண்டிகன் சாதியினர் ஆவர்.
  • சண்டாள ஆடவனுக்கும் வைதேக சாதி பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் பாண்டு எனும் சாதியை தோற்றுவிக்கின்றனர்.
  • சண்டாள ஆடவனுக்கும் புற்கசன் சாதி பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் சோபகன் எனும் சாதியை தோற்றுவிக்கிறான்.
  • சண்டாள ஆடவனுக்கும் நிஷாத சாதிப் பெண்ணிற்கு பிறக்கும் பிள்ளைகள் அந்தியாவசாயி எனும் சாதியை தோற்றுவிக்கின்றனர்.
இவற்றில் ஆவிரதன், அபீரன், திக்வணன், புற்கசன், குக்குடகன், சுவபாகன் மற்றும் வேணன் ஆகிய கலப்பு சாதிகளை அந்தராள சாதியினர் என்று மனு கூறுகிறார்.

பாகிய சாதிகள்[தொகு]

அனுலோம - பிரதிலோம ஆகிய சாதியினர்கள் தமக்குள் சம்பந்தம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் பாகிய சாதியர் என்று மநு குறிப்பிடுகிறார். மேலும் இவர்கள் தீண்டத்தகாதவர் ஆவர். அனுலோம மற்றும் பிரதிலோம ஆடவர்கள் நால் வருணத்துப் பெண்களிடம் கூடிக் கலந்து பெறும் பிள்ளைகள் 15 வகையினரான மிகத் தாழ்ந்த பாகிய சாதியர் ஆவர்.

விராத்திய சாதியினர்[தொகு]

இருபிறப்பாளர்களான அந்தணர், சத்திரியர் மற்றும் வைசியர்களுக்கு சுய வர்ணத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு சாத்திரப்படி உபநயனம் முதலிய வைதீக கடமைகள் ஆற்ற தகுதி இல்லாமல் போனால் அவர்களை காயத்திரி மந்திரம் கூற தகுதியற்ற விராத்திய சாதியினராக கருதப்படுவர். நால்வருணத்திலும், கற்புநெறி தவறுவதாலும், சொந்த கோத்திரத்தில் மணம் புரிவதாலும், ஜாதகர்மா முதலிய சமயச் சடங்குகள் செய்யாமையாலும் கலப்பு சாதிகள் தோண்றுவதற்கு இந்த விராத்திய சாதியர்களே காரணமாயினர்.
  • விராத்திய அந்தண சாதி ஆடவனுக்கும், அந்தணப் பெண்னுக்கும் பிறக்கும் குழந்தைக்கு பூர்ஜகண்டன், என்றும் மேலும் பல நாட்டில் அவர்களை ஆவந்தியான், வாடதானன், புஷ்பதன், சைகன் எனப் பல பெயரால் அழைக்கப்படுகிறர்கள் என்று மனு கூறுகிறார்.
  • விராத்திய சத்திரிய சாதி ஆணுக்கும் சத்திரியப் பெண்னுக்கும் பிறக்கும் குழந்தைகளை சல்லன் சாதியினர் என்பர். இவனுக்கு நாடுகள் தோறும் மல்லன், நிச்விநடன், கரணன், கசன், திரவிடன் என வேறு பெயர்களும் வழங்கப்படுகிறது.
  • விராத்திய வைசிய சாதி ஆணுக்கும் வைசியப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை சுதன்வா சாதியினர் என்பர். இந்த சுதன்வாவை, தச்சன், காரூசன், விஜன்மா, மைத்திரன், சாத்துவதன் என பல இடங்களில் பல பெயர்களால் பல பகுதிகளில் அழைக்கப்படுகிறான்.
சூதன், வைதேகன், சண்டாளன், மாகதன், க்ஷத்தா மற்றும் அயோகவன் சாதி ஆடவர்கள் தத்தமது வகைப் பெண்டிரிடமும், மற்ற நால்வர்ணப் பெண்டிரிடமும் கூடிப் பிறக்கும் குழந்தைகள் தங்கள் தந்தையின் சாதியைச் சாருவர்.

கலப்பு சாதியினர்களின் தொழில்கள்[தொகு]

  • அனுலோம மற்றும் பிரதிலோம சாதியினர் இருபிறப்பாளர்களான முதல் மூன்று வர்ணத்தாருக்கு ஏவல் தொழில் செய்து பிழைக்க வேண்டும்.
  • சூதர் சாதியினர் தேரோட்டிகளாகவும், தேர்க் குதிரைகளுக்கு பயிற்சி அளிப்பவர்களாகவும் ; அம்பஷ்டர் அறுவை மருத்துவர்களாகவும்; வைதேகர் அந்தப்புரக் காவல் காப்பவர்களாகவும்; மாகதர் கடல் கடந்தும், கடற்கரையிலும் வாணிகம் செய்பவராயும் வாழ்வர்.
  • நிஷாதர் சாதியினர் மீன் பிடித்தும்; அயோகவர் சாதியினர் தச்சு வேலையும்; மேதன், ஆந்திரன், செஞ்சு ஆகிய சாதியினர்களின் தொழில் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்றலே.
  • க்ஷத்தா சாதியினர் எலி, உடும்பு பிடித்தல்; உக்கிரன், புற்கசன் சாதியினர் தோல் வியாபாரம் செய்தல்; திக்வணனுக்கும், வேணனும் இசைக் கருவிகள் வாசித்தலே தொழில்.
  • சண்டாளன் பிணத்தை எரித்தல், மரண தண்டனை நிறைவேற்றுதலே தொழில்.
  • சைரந்திரன் சாதியினர் செய்யும் தொழில்கள்:- எண்ணெய் தேய்த்தல், கை, கால் பிடித்து விடுதல், வலை வீசுதல்.
  • மைத்திரேயன் மணியடித்துக் கொண்டு, அனைவரையும் போற்றி பிச்சை எடுத்தலே தொழில்.
  • மார்க்கவன் எனும் செம்படவ சாதியினருக்கு நதிகளில் ஓடம் விடுதலே தொழில்.
  • பாண்டு சாதியினர் மூங்கில் தொடர்பான வேலைகள் செய்வது.
  • ஆகிண்டிகன் சாதியினர் குற்றவாளிகளை அடித்தல், கட்டுதல், மரணம் உண்டாக்கலே தொழில்.
  • சோபாகன் சாதியினர் மரண தண்டனை நிறைவேற்றலே தொழில்.
  • அந்தியாவசாயி சாதியினர் இடுகாட்டை காத்தலே தொழில்.