வெள்ளி, 7 அக்டோபர், 2016

ஆயதபூசையைக் கொண்டாடாதீர்! அறிவையும் மானத்தையும் இழக்காதீர்!!



நமது நாட்டில் ஆயுதபூசை என்கின்ற பெயரில் இந்தமதக் கடவுளர் - கடவுளச்சிகளான லட்சுமிää சரசுவதி,பிள்ளையார் பொம்மைகளை அல்லது படங்களைவைத்து அர்த்தமற்ற சடங்குகளைச் செய்வது வாடிக்கையாக இருக்கிறது. இந்தக் கடவுளர் கடவுளச்சிகளின் யோக்கியதையையும் அதைக் கொண்டாடுவதால் வரும் இழிவினையும் எடுத்துச் சொன்னால் நம்மீது கோபப்படுகின்றனர். ஒருசில மேதாவிகள் 'செய்யும் தொழிலே தெய்வம்'என்ற தத்துவத்தை வலியுறுத்துவதுதான் ஆயுதபூசையின் தத்துவம் என்று வியாக்கியானம் செய்கிறார்கள். உண்மையில் என்ன நடக்கிறது?

தெய்வம் என்று சொன்னால் அனைவருக்கும் பொதுவானதாகத்தானே இருக்க வேண்டும்? அனைத்துத் தொழில்களும் சமமானதாகத்தானே இருக்க வேண்டும்? எந்த வேலையை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றுதானே இருக்க வேண்டும்? அர்த்தமுள்ள(?) இந்துமதத்தில் அதற்கெல்லாம் இடமுண்டா? தொழில்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வு, அதைச் செய்யக் கூடிய தொழிலாளர்களுக்குள்ளும் உயர்வு-தாழ்வு இருக்கிறதே! தெய்வம் என்று சொன்னால் அதில் ஏற்றத்தாழ்வு இருக்கலாமா?

பிராமணனுக்கு ஓதுதலும் ஓதுவித்தலும் தொழில். சத்திரியனுக்குப் போரிடுதல்ää வைசியனுக்கு வணிகஞ் செய்தல் என்று பிரித்த இந்துமதம் இவர்கள் அனைவருக்கும் தொண்டூழியம் செய்வதற்காகவே சூத்திரர்களை பிரம்மா படைத்ததாக மனு(அ)தர்மம் சொல்கிறது. அந்த மனுதர்மம் தொழில்களிலே ஏற்றத்தாழ்வை உருவாக்குகிறது. தொழிலாளர்களையும் உயர்வு தாழ்வாகப் பிரிக்கிறது. தொழிலாளர்கள் என்றாலே சூத்திரர்கள்தான். சூத்திரர்களுக்குள்ளேயே பல பிரிவுகளைப்பிரித்து அவர்களுக்குள்ளும் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி கீழ்-மேல் என்று பலவாறாகப் பிரித்துள்ளது.

ஏர்பிடித்தலைப் பாவமான தொழில் என்கிறது மனுதர்மம். பாவமான அத்தொழிலைப் பார்ப்பான் செய்யக்கூடாது என்கிறது. 1925ல் கும்பகோணத்தில் இரண்டு பார்ப்பனர்கள் ஏர் பிடித்தார்கள் என்பதற்காக சாதியைவிட்டே நீக்கி வைக்கப்பட்டார்கள் என்பது வரலாறு. அந்த இரண்டு பார்ப்பனர்களும் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியாருக்குக் காணிக்கை அளிக்க வந்தபொழுது நீங்கள் இருவரும் பாவத்தொழிலான ஏர்பிடித்து அதனால் வரும் பொருளை காணிக்கையாக வழங்குவதால் நான் அதைப் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று மறுத்துவிட்டார்.
அதுபோலவே, மலம் எடுத்தல், செருப்புத்தைத்தல், முடிவெட்டுதல், துணிவெளுத்தல், பிணம்சுடுதல்  போன்ற சமுதாயத்திற்கு மிகவும் அத்தியாவசியமான தொழில்களெல்லாம் இழிவான தொழில்களாகக் கருதப்பட்டது. அத்தொழில் செய்யக்கூடியவர்களும் இழிவானவர்களாகக் கருதப்பட்டார்கள்.அவரவர் சாதிக்குரிய தொழிலைத்தவிர பிறசாதியானுடைய தொழிலைச் செய்வதற்கு யாரும் அனுமதிக்கப்பட்டதில்லை. இன்றைக்குப் பார்ப்பனர் உட்பட பலரும் அவர்கள் சாதிக்குரிய தொழில்களைவிட்டுவிட்டு பிற தொழில்களைச் செய்வதாக சிலபேர் சொல்கிறார்கள்.

அதற்கு மனுதர்மம் அத்தியாயம் 10, சுலோகம் 73ல் கீழ்க்கண்டவாறு பதில் சொல்லப்படுகிறது
ஷஷபிராமணன் தொழிலைச்செய்தாலும் ஒரு சூத்திரன் பிராமண ஜாதியாக மாட்டான். ஏனென்றால் பிராமணஜாதித் தொழிலில் அவனுக்கு அதிகாரமில்லை அல்லவா? அதேபோல ஒரு பிராமணன் சூத்திர ஜாதித்தொழிலைச் செய்தாலும் அவன் சூத்திர ஜாதியாகமாட்டான். ஏனென்றால் ஈனத்தொழிலைச் செய்தாலும் அவன் ஜாதி உயர்ந்ததல்லவா?|| என்று சொல்லப்படுகிறது.

இத்தகைய மனுதர்மத்தைத்தான் இன்றும் ஜெயகாந்தன் போன்றவர்கள்; உயர்த்திப்பிடிக்கின்றனர். வருணாசிரமம் தேவை என்கின்றனர். இவ்வாறு கூறி சாகித்திய அகாடமி விருதினையும் பெறுகிறார் ஜெயகாந்தன் என்றால் அதை வழங்குபவர்களுக்கு என்ன நோக்கம்? அந்த மனுதர்மத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்கின்ற வெறிதானே?

ஆகவே, செய்யும் தொழிலே தெய்வம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்றுவேலை. இந்துமத சாஸ்திரங்களின்படி; அவ்வாறு சொல்வது முரண்பாடானது. கீழ்ஜாதிக்காரன் எப்பொழுதும் தனது ஜாதிக்குரிய தொழிலையே செய்ய வேண்டும் என்பதற்காகவும்  தன் தொழிலைவிட்டு வேறு தொழில் செய்ய ஆசைப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் கூறப்படுகின்ற பசப்பு வார்த்தைதானேதவிர வேறல்ல.
எனவே, சாதியையும் சாதி இழிவையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஆயதபூசையைக் கொண்டாடாதீர்! அறிவையும் மானத்தையும் இழக்காதீர்!!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக