வெள்ளி, 2 டிசம்பர், 2016

பந்தலிலே பாகற்கா பந்தலிலே பாகக்கா போகயில பாத்துக்கலாம் போகயில பாத்துக்கலாம்


    ஒரு இழவு வீட்டிற்கு இரண்டு பெண்மணிகள் துக்கம் விசாரிக்கப் போகிறார்கள். போனவர்கள் கண்களில் அந்த வீட்டில் பாகற்காய் பந்தலில் ஏராளமாய்க் காய்த்துத் தொங்கும் காய்கள் கண்களில் பட்டுவிட்டது.  அதை எப்படியாவது கொண்டுசென்றுவிட வேண்டும் என்று திட்டமிட்ட அவர்கள் இருவரில் ஒருவர் இப்படி ஒப்பாரி வைக்கிறார்

   பந்தலிலே பாகற்கா பந்தலிலே பாகக்கா ஆஹாங்…. என்று. அதற்கு இன்னொரு பெண்மணி    போகயில பாத்துக்கலாம் போகயில பாத்துக்கலாம் ஆஹாங் .. என்று பதிலை ஒப்பாரிமூலம் தெரிவிக்கிறார். இதை இரண்டையும் கவனித்த இழவு வீட்டுக்காரப் பெண்மணி இழவு விழுந்த துக்கத்தையும் மறந்து இப்படி புலம்புகிறார்     அய்யோ நான் விதைக்கல்லோ விட்டிருக்கேன் விதைக்கல்லோ விட்டிருக்கேன் ஆஹ்ஹாங் என்று
அந்த இழவு வீட்டுற்குப் போன பெண்மணிகள் மாதிரியான நிலையில்தான் இப்பொழுது பிஎம்எஸ் இருக்கிறது.

     வெல்டர்ஸ் அசோசியேசன் போராட்டம் நடந்தபோது நிர்வாகம் பங்குபெறும் சங்கங்களையும் வெல்டர்ஸ் அசோசியேசனையும் மோதவிட நினைத்தது. இடையில் சில மனக்கசப்புக்கள் ஏற்பட்டாலும் அதற்குப்பிறகு பங்குபெறும் சங்கங்கள் எடுத்த ஒரு சரியான நிலைப்பாட்டாலும் வெல்டர்ஸ் அசோசியேசனின் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையினாலும் ஒரு சுமுகமான நிலை உருவானது. இடைப்பட்ட நேரத்தில் எல்லோரும் கவலையோடு இந்தப்பிரச்சினையை உற்று நோக்கிக் கொண்டிருந்த  நிலையில் பிஎம்எஸ் ஒரு பிட் போட்டது.
   
அதிலே பிரச்ச்னை நல்லபடியாக முடிய வேண்டும் என்ற நோக்கத்தை விட இழவு வீட்டில் ஆதாயம் தேடும் பேராசைக்காரப் பெண்மணிகள் ஒப்பாரி வைப்பது போலத்தான் இருந்தது. பிரச்சினை என்ன? அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பது எப்படி என்று கூறுவதைவிட பங்குபெறும் சங்கங்கள் துரோகம் செய்துவிட்டார்கள் என்று குற்றம்சாட்டி அதன்மூலம் அவர்களை ஓரங்கட்டி அதன்மூலம் ஆதாயம் தேட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. 1997ல் வெல்டர்ஸ் அசோசியேசன் போராடியபோது ஏதோ இவர்கள் மட்டுமே பங்குபெறும் சங்கமாக இருந்தது மாதிரியும் மற்றவர்கள் யாருமே இல்லாதது மாதிரியும் இவர்கள் மட்டுமே அதனை முடித்தது மாதிரியும் பிட் போட்டது

புதிய தோழர்களுக்கு அதெல்லாம் தெரியாது என்ற கருத்தில். ஆனால் அப்பொழுது இருந்த நான்கு சங்கங்களும் இணைந்துதான் அந்தப் பிரச்சினையை முடித்தார்களே தவிர பிஎம்எஸ் மட்டும் தனியாக எதையும் சாதிக்கவில்லை. மாறாக அதன் தலைவர் சையத் தாஜூதீன் மதனி என்ற இஸ்லாமியர் இருந்த காரணத்தால் அவரை மட்டம் தட்டும் வேலையில்தான் பிஎம்எஸ் முன்பு தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

   பிஎம்எஸ்ஸின் ஒவ்வொரு செய்கையும் பந்தலிலே பாகக்காய் பாணியிலே ஆதாயம் தேடும் நோக்கிலேதான் இருக்குமே தவிர தொழிலாளர்களுக்கு நன்மை தரும் எந்த முயற்சியும் அதில் இருக்காது. நிர்வாகத்தின் சர்வாதிகாரப் போக்கையோ துரோகங்களையோ கண்டிப்பதைவிட அல்லது அதனை எதிர்த்துப் போராடத் தொழிலாளர்களைத் தூண்டுவதைவிட தொழிற்சங்கங்களை விமர்சிப்பதன்மூலம் ஆதாயம் தேடுகின்ற புத்திதான் மேலோங்கியிருக்கும்.

அதனால்தான் 2009ல் தானும் மத்திய சங்கமாக இருந்தோம் என்பதைக்கூட மறந்துவிட்டு அல்லது மறைத்துவிட்டு ஈட்டிய விடுப்பு விசயத்தில் நிர்வாகம் எடுத்த சர்வாதிகார நடவடிக்கையை எதிர்ப்பதை விடுத்து தனக்கும் அதில் பங்குண்டு என்பதையும் மறந்துவிட்டு மற்ற சங்கங்களையும் மற்ற சங்கத் தலைவர்களையும் சாடுகின்றது. இப்போக்கினைத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. என்றைக்கும் கருவாடு மீனாகவும் போவதில்லை என்று எச்சரிக்கிறோம்.    :

பாபர் மசூதியை இடித்ததன் விளைவாகத்தான் நாட்டில் இந்த அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.

                ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் ஆறாந் தேதி வந்துவிட்டால் நாட்டில் யாருமே நிம்மதியாக இருக்க முடியாது. நிம்மதியாகப் பேருந்தில் இரயிலில் விமானத்தில் இருசக்கர வாகனத்தில் போக முடியாது. வீட்டை விட்டு வெளியில் வந்தால் கையில் ஒரு பை கூட எடுத்துச்செல்ல முடியாது.

அந்த அளவிற்கு அந்த நாளை ஒரு பயங்கரவாத நாளாக சித்தரித்து விட்டார்கள். இந்த நாடு அமைதியாக இருக்கக் கூடாது நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது என்று கருதிய ஆர்எஸ்எஸ் சங்பரிவார் பிஜேபி பிஎம்எஸ் கும்பல் அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளான டிசம்பர் ஆறாந்தேதியைத் தேர்ந்தெடுத்து நானூறு ஆண்டு பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்ததன் விளைவாகத்தான் நாட்டில் இந்த அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது.

அந்தக் காரியத்தை மனிதநேயமுள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்ற சூழ்நிலையில் அந்த நாளில் ஒவ்வொரு ஆண்டும் பாபர் மசூதியை இடித்த தினத்தை வரவேற்று துண்டறிக்கை ஒட்டி பெல் நிறுவனத்திலேயும் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்று சதி நடந்துகொண்டிருக்கிறது. அடுத்து காசியும் மதுராவும் இடிக்கப்பட வேண்டும் என்றும் நாட்டிலுள்ள அனைத்து மசூதிகளையும் இடித்து அங்கே கோயில் கட்ட வேண்டும் என்ற பொருளிலும் ஒவ்வொரு ஆண்டும் துண்டறிக்கை ஒட்டப்பட்டு வருகிறது. இது தொழிலாளர் மத்தியில் தேவையற்ற பீதியை உருவாக்கி வருகிறது.

இதனைச் செய்பவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்தான் என்பது வெள்ளிடைமலை. அவர்கள் ஒழிந்துகொண்டிருப்பது பிஎம்எஸ்ஸில். இப்படிப்பட்ட மதவெறியைத் தூண்டி அதன்மூலம் இந்த நாட்டை இந்து நாடாக்க வேண்டும். அதன்மூலம் பார்ப்பனர்கள்தான் அனைத்து உரிமையும் பெற்றவர்கள்: அவர்கள் ஆண்டவனுக்கும் மேலே@ அவர்களுக்குக் கட்டுப்பட்டே அரசாங்கம் உள்பட அனைத்தும் இயங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள். அவர் இறந்த ஜனவரி 30அய் இப்படி வெளிப்படையாகக் கொண்டாட மாட்டார்கள். காந்தியைக் கொன்ற கோட்ஷே ஆர்எஸ்எஸ்காரன் என்றால் இவர்களுக்குக் கோபம் வரும். ஆனால் கோட்ஷே ஆர்எஸ்எஸ் அல்ல என்று சொல்பவர்கள் கோழைகள் என்று கோட்ஷேயின் தம்பி கோபால் கோட்ஷே கூறுவார். அப்படிப்பட்ட கோழைகள்தான் இதுமாதிரி பெயர் போடாமல் துண்டறிக்கை ஒட்டி மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள்.

அவர்கள் பெயர் போடாமல் ஒட்டினாலும் ஒட்டியது பிஎம்எஸ்ஸில் உள்ளவர்கள்தான் என்பது நிர்வாகத்திற்கு நன்கு தெரியும். அவர்கள் பாபர் மசூதியை இடிக்க பெல் நிறுவனத்திலிருந்து சென்று கலந்துகொண்டவர்கள் என்பதும் நிர்வாகத்துக்குத் தெரியும்.

நிர்வாகம் தனக்குத் தெரியாது என்று கூறுமேயானால் ஒட்டியவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள்தான். அவர்கள் பிஎம்எஸ்ஸில்தான் இருக்கிறார்கள் என்பதற்கான ஆதாரத்தை வழங்கத் தயாராக இருக்கின்றோம்.

இந்த நிலையை முறியடிக்க ஒன்று அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது நாட்டில் மூன்றுமுறை தடைசெய்யப்பட்டு ஆர்எஸ்எஸ் ஸின் இலட்சியங்களை தொழிலாளர்களிடத்தில் பரப்பி ஆர்எஸ்எஸ் அமைக்க இருக்கும் இந்து ராஜ்யத்துக்கு அடித்தளம் அமைக்கும் பணியில் செயல்பட்டுவரும் பிஎம்எஸ் ஸைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் இங்கே ஜாதிக்கலவரமும் மதக்கலவரமும் ஏற்பட்டு தொழிலமைதி சீர்குலையும் என்று எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறோம். இவண் :

வியாழன், 1 டிசம்பர், 2016

இந்த பாஷை அவர்களுக்குப் புரியவில்லை போல் தெரிகிறது. வேறு பாஷையில் கேட்டுப் பார்ப்போம் எ


ஆர்எஸ்எஸ் சுக்கும் பிஎம்எஸ் சுக்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? பஜேபிக்கும் பிஎம்எஸ் ஸிற்கும் தொடர்பு இருக்கிறதா? இல்லையா? உன்னுடைய கொள்கை என்ன? உன்னை இயக்குவது யார்? இலட்சிய சமுதாயம் அமைக்கப் போவதாகக் கூறுகிறாயேää உன்னுடைய அந்த இலட்சிய சமுதாயத்தில் அரசியல் சட்டமாக இருக்கப் போவது மனுதர்மமா?

அம்பேத்கார் எழுதிய அரசியல் சட்டமா? அந்த இலட்சிய சமுதாயத்தில் பார்ப்பான் உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன்ää என்ற வருணாசிரமம் இருக்குமா? இருக்காதா? ஜாதி இருக்குமா? இருக்காதா? பார்ப்பான் இருப்பானா? பறையன் இருப்பானா? முடி வெட்டுவது யார்? துணி வெளுப்பது யார்? கோயிலில் மணி அடிப்பது யார்? அனைத்து ஜாதிக்காரருக்கும் அர்ச்சகர் உரிமை இருக்குமா? இருக்காதா?

அனைவருக்கும் கோயிலில் சென்று வழிபடும் உரிமை இருக்குமா? தமிழில் அர்ச்சனை நடக்குமா? சமஸ்கிருதம் மட்டும் இருக்குமா? அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமை இருக்குமா? வேலை வாய்ப்பில் தாழ்த்தப்பட்ட- பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இருக்குமா? இருக்காதா? என்ற கேள்விகளையெல்லாம் பிஎம்எஸ் ஆரம்பித்த காலத்திலிருந்திலிருந்து கொள்கை ரீதியாகவும் அறிவுப்பூர்வமாகவும்ää நாகரிகமாகவும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறோம்.

பிஎம்எஸ் 1996ல் ஒரே ஒருமுறை விபத்தைப்போல வெற்றி பெற்று அதற்குப்பிறகு எந்தத் தேர்தலிலும் வெற்றிபெற வாய்ப்பே இல்லாதபோது 2002லிருந்து தொடர்ந்து அலுவலகத்தை ஏன் காலி செய்யவில்லை என்று கேட்டு வருகிறோம். எதற்கும் இதுவரை பதிலே சொன்னதில்லை. என்ன காரணம் என்பதும் இதுவரை எங்களுக்கும் புரியவில்லை.

நாங்கள் ஆலோசித்துப்பார்த்ததில் இந்த பாஷை அவர்களுக்குப் புரியவில்லை போல் தெரிகிறது. வேறு பாஷையில் கேட்டுப் பார்ப்போம் என்று முடிவு செய்தோம்.

அவர்களுக்கு என்ன பாஷை புரியும் என்று ஆலோசித்ததில் அவர்களது பழைய துண்டறிக்கைகளை ஆய்வு செய்தோம். கம்யூனிஸ்ட் காரர்களை விமர்சனம் செய்யும்போது        மிகவும் நாகரிகமாக(?) ~திண்ணையில் இருக்கும் கம்யூனிஸ்ட்| என்றும் ~கூட்டிக்கொடுக்கும் கம்யூனிஸ்ட்| என்றும் ~அவுட் ஹவுசில் இருக்கும் கம்யூனிஸ்ட்| என்றும்~உள்ளே சுகம் வெளியே சிணுங்கல்| என்றும் அடுத்தவன் வீட்டு படுக்கையறையை எட்டிப்பார்த்து சுகம் அனுபவிப்பவர்கள் போல் தலைப்பிட்டு அவர்களது விமர்சனம் இருக்கும். அத்துடன் கண்தான ஊக்குவிப்பாளரை புரோக்கர் என்று கூட விமர்சனம் செய்திருக்கிறார்கள்.

இதுதான் பாரதப் பண்பாடுபோலும்!
ஓஹோ இவர்களுக்கு இந்த பாஷைதான் தெரியும் போலிருக்கிறது. என்று முடிவுசெய்து  எங்களுக்குப் பிடிக்காத பாஷையில் அவர்களைவிட நாகரிகமாக கேள்வி கேட்டோம். இந்த பாஷை அவர்களுக்குப் புரிந்துவிட்டதுபோலும். உடனே அவர்கள் அதே பாஷையில் எங்களுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் பாஷை கம்யூனிஸ்ட்களுக்குப் புரியாததால் அவர்கள் பிஎம்எஸ் சுக்குப் பதில் சொல்லித் தங்களை அசிங்கப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை போலும்.

எங்களுடைய நண்பர்கள் பிஎம்எஸ் ஸில் உள்ளவர்கள்கூட அவர்களுக்குப் புரியவில்லை என்பதற்காக ஏன் உங்களுக்குப் பிடிக்காத மொழியில் எழுதுகிறீர்கள். நல்ல தமிழில் நாகரிகமாக எழுதுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள்.

இப்பொழுது எங்களுக்குப் பிடித்த நல்ல தமிழில் நாகரிகமாகக் கேட்கிறோம். ஜூன் முப்பதாம் தேதிக்குள் பிஎம்எஸ் தனக்குச் சொந்தமில்லாத அலுவலகத்தைக் காலி செய்ய வேண்டும் என்று நிர்வாகம் கடிதம் கொடுத்திருக்கிறதாம். அதற்குள் பிஎம்எஸ் தனது அலுவலகத்தைக் காலிசெய்து தனக்கும் ஒழுக்கம் இருக்கிறது என்று நிரூபிக்குமா?     மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லுமா? சொல்லாதா?

நிறைய ஆர்டர்கள் குவிந்திருந்தால் இந்தக்கூட்டம் என்ன சொல்லும்? இந்த பகவான்தான் அத்தனை ஆர்டர் வருவதற்கும் காரணமாயிருந்தார் என்று சொல்லியிருக்கும்


மார்ச்சிற்குப்பிறகு இதுவரை ஒரு ஆர்டர் கூட வரவில்லையாம். சிஎம்டி சொல்லிவிட்டாராம். ஒரு சங்கம் ரொம்பவும் புலம்புகிறது. (புலம்பல் மன்னர்கள்) அதுதான் ஏப்ரல் 1ந் தேதி (முட்டாள்கள் தினத்தில்) ஒரு ஆர்டர் வந்ததே! ஒரு கோயிலுக்கு மணி செய்து தருவதற்காக ஒரு இலட்சம் ரூபாய்க்கு ஒரு செக். அதையும் கமர்சியல் ஹோம் பேஜில் பெருமையாகப் போட்டிருந்தார்களே! அப்புறம் ஏன் ஆர்டர் வரவில்லை என்று புலம்ப வேண்டும்?

நிறைய ஆர்டர்கள் குவிந்திருந்தால் இந்தக்கூட்டம் என்ன சொல்லும்? இந்த பகவான்தான் அத்தனை ஆர்டர் வருவதற்கும் காரணமாயிருந்தார் என்று சொல்லியிருக்கும். ஆர்டர் வருவதற்கு அந்த பகவான் காரணம் என்றால் ஆர்டர் வராமல் இருப்பதற்கும் அந்த பகவான்தானே காரணமாக இருக்க வேண்டும்?

இப்பொழுது மட்டும் புலம்புவானேன்?

அடுத்த ஆண்டு முதல் கோயிலிலிருந்து எந்த செக்கும் வேண்டாம்@ ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் என்று சொல்வார்களா?

இதற்கு முன்பும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1ந்தேதி ஏதாவது ஒரு கோயிலில் மணிசெய்யவோää தேர் செய்யவோ சக்கரம் செய்யவோ ஒரு லட்சம் ரூபாய்க்கோ இரண்டு லட்சம் ரூபாய்க்கோ ஏதாவது ஒரு ஆர்டர் வாங்குவார்கள். அப்பொழுதெல்லாம் இந்த பகவான்தான் அந்தந்த வருடங்களில் வந்த ஆர்டர்களுக்கு துணைபுரிந்தார் என்று வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். நம்முடைய அதிகாரிகள் அந்த ஆர்டரை வாங்க என்னென்ன கஷ்டப்பட்டிருப்பார்களோ தெரியாது. ஆனால் கல்லாக உட்கார்ந்திருக்கும் அந்தக் கடவுள்தான் அதற்கு உதவிபுரிந்தார் என்று வியாக்கியானம் செய்வதில் ஒன்றும் குறைச்சலிருக்காது.

அப்படி ஒரு ஆண்டு அய்ந்து லட்சம் ரூபாய்க்கு ஒரு ஆர்டர் வாங்கப்பட்டது. அப்படி வாங்கிய அதிகாரி ஒரு தாழ்த்தப்பட்டவர். அவர் அந்தக் கோயில் நிர்வாகத்திடம் பேசி ஒப்பந்தம் போட்டு ஆர்டர் வாங்கினார். ஆனால் அந்த ஆர்டரை நிர்வாக இயக்குனரிடம் கொடுத்தபோது கையெழுத்துப்போட்ட அதிகாரி மிஸ்ஸிங். அவருக்குக் கீழே உள்ள அதிகாரிகளும் மேலே உள்ள அதிகாரிகளும் சேர்ந்து ஈடி யிடம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் கையெழுத்துப்போட்ட அந்த அதிகாரிக்கு மட்டும் இது தெரியாது. இதை முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்டார் அந்த அதிகாரி. பின்னால்தான் அவருக்குத் தெரிய வந்தது அதனுடைய சூட்சுமம். அந்த ஆர்டரைக் கொடுக்கும் இடத்தில் பிரச்சன்னம் ஆகும் எவருடைய முதுகிலும் பூணூல் இல்லாமல் இருக்கக் கூடாது என்று தி;ட்டமிட்டு இதைச் செய்திருக்கிறார்கள் என்பது. அதன்பிறகு கடுப்பாகிப்போனார் அந்த அதிகாரி.

இப்படி ஒவ்வொரு விசயத்திலும் ஜாதி பார்க்கவும் ஜாதியைக் காக்கவும் செய்யப்படுவதுதான் பூஜையும் புனஸ்காரங்களும். ஒரு எந்திரத்தை புதிதாக நிர்மாணிக்கும்போதோ ஒரு கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டும்போதோ பார்ப்பானை வைத்துப் பூஜை போடப்படுகிறது. இதனாலெல்லாம் எந்த பிரயோசனமும் இருப்பதில்லை.

இது பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனீயத்துக்கும்தான் ஆதாயமே தவிர உற்பத்திக்கோ இலாபத்துக்கோ எந்த பலனையும் கொடுக்கப் போவதில்லை. அதுபோலத்தான் ஆயுதபூஜை என்பதும். ஆயுத பூஜை செய்வதால் கிடைக்காத ஆர்டர் கிடைக்கப் போவதுமில்லை. தொழிலாளிக்கும் எந்த இலாபமும் இருக்கப் போவதில்லை. நிறுவனத்திற்கும் எந்த நன்மையும் நடக்கப்போவதில்லை.
பார்ப்பான் உயர்ந்தவன். மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற தத்துவம்தான் அதில் நிலை நாட்டப்படும். அது தொழிலாளர்களுக்கு மானக்கேடு. அறிவுக்கேடு. எனவேää தொழிலாளர்களே!
ஆயுதபூஜை கொண்டாடாதீர்! அறிவையும் மானத்தையும் இழக்காதீர்!!  இவண் :

நீதிமன்றத் தீர்ப்பு இவர்கள் சொல்லுவதுபோல் அந்த அலுவலகத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை.

1996க்குப் பிறகு நடந்த மூன்று தேர்தல்களிலும் தோல்வியைத் தழுவிய BMSசங்கம் தொடர்ந்து தனது அலவலகத்தைப் பயன்படுத்துவது எப்படி?

2012ல் நிர்வாகத்தால் காலி செய்யப்பட்ட பிறகும் மீண்டும் அந்த அலுவலகத்தை எப்படிப் பெற்றாய்?

நீதிமன்றம் தீர்ப்பு சொல்லிருச்சு என்று நிர்வாகமும் நீ போய் ஹைகோர்ட்டக் கேளு என்று மரியாதையா(?)BMSசும் சொன்னது.
ஆனால் நீதிமன்றத் தீர்ப்பு இவர்கள் சொல்லுவதுபோல் அந்த அலுவலகத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. மாறாக பொது இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பவர்களை வெளியேற்றுவதற்காகப் பயன்படுத்தப்படும் 1971 சட்டத்தின்படி அவர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயமில்லை என்று சொல்லிவிட்டு நிர்வாகத்திற்கு அந்த சுதந்திரத்தை வழங்குகிறோம்.

அவர்களுக்கு அலுவலகம் வழங்கலாமா? வேண்டாமா? மேற்படி 1971சட்டத்தின்படி அவர்களை வெளியேற்றலாமா? வேண்டாமா? என்பதை நிர்வாகமே முடிவு செய்துகொள்ளட்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

ஆக தீர்ப்பில் கட்டாயம் அவர்களுக்கு அலுவலகத்தை வழங்க வேண்டும் என்று சொல்லாதபோதும் நிர்வாகம் அவர்களுக்கு அலுவலகத்தைத் திறந்துவிட்டிருக்கிறது என்றால் நிர்வாகமே அவர்கள் மீண்டும் பங்குபெறும் சங்கமாக வருவதற்கு உதவி செய்கிறது என்பதுதான் பொருள்.

எதனைக் காட்டி அல்லது யாரைக் காட்டிக் கொடுத்து BMS சங்கம் இந்த அலுவலகத்தைப் பெற்றது? நிர்வாகத்தின் கைக்கூலி யார்? என்பதைத் தொழிலாளர்களே! தெரிந்துகொள்வீர்! இந்தத் தேர்தலில் தோற்றாலும் அவர்களுக்கே நிர்வாகம் தாரை வார்க்குமா? அல்லது BMSஅலுவலகத்தை மரியாதையாகத் திருப்பிக் கொடுத்து தான் ஒழுக்கமான சங்கம் என்று நிரூபிக்குமா?




யார் இந்த சவர்க்கர்?


திடீரென வீர(?) சவர்க்கர் பிறந்தநாள் என்று ஒரு நோட்டீஸ் வந்துள்ளது நேற்றுத்தான் பிறந்ததுபோல. ஏன் இத்தனைநாள் இதுமாதிரி வரவில்லை? நரேந்திர மோடி என்பவரை முன்னிறுத்தி ஆர்எஸ்எஸ் ஆட்சியிலமர்ந்துள்ளதுää அதனால் இத்தனைநாள் வெளிவராத சவர்க்கர் இப்பொழுது வெளிவருகிறார் புற்றிலிருந்து பாம்புää வெளி வருவதைப்போல.

யார் இந்த சவர்க்கர்? காந்தியாரைக் கொன்ற கோட்ஷே என்பவரைத் தயாரித்தவர் இந்த சவர்க்கர் இந்துத்துவா என்னும் கருத்தியலை உருவாக்கியவர் இந்த சவர்;க்கர் இந்துமகாசபா எனும் மதவெறி இயக்கத்தைத் தோற்றுவித்தவர் இந்த சவர்க்கர் காந்தியைக் கொலை செய்வதற்கான வரைபடத்தைத் வரைந்து கொடுத்துவிட்டு பதுங்கிக் கொண்டவர் சவர்க்கர் கொலையைத் திட்டமிட்டுச் சதிவலை பின்னிய குற்றத்திற்கான தண்டனையைப் பெறாமல் தப்பித்துக்கொண்டவர் சவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் மதவெறி பிடித்த சித்பவன் பார்ப்பனர் மதத்தைப் புனரமைப்பதுä வேதங்களையும் சாத்திரங்களையும் பாதுகாப்பது பார்ப்பனர்களையும் பசுமாடுகளையும் பாதுகாப்பது கடமை என்றவர் சவர்க்கர்.

கடல் கடந்துச்செல்வது சாஸ்திர விரோதம் என்கிறது இந்துமதம். வேதங்களையும் சாஸ்திரங்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கை கொண்ட சவர்க்கர் கடல்கடந்து இலண்டன் சென்று சட்டம் படிக்கப்போனார். சாஸ்திரத்தை மீறலாமா? ஊருக்குத்தான் உபதேசமோ? படிக்கப் போனவர் பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துக்கொண்டார்.நாசிக் மாவட்டக் கலெக்டர் ஜாக்சன் என்பவர்  கொலைசெய்யப்பட்டார். இந்தக் கொலை செய்யத் திட்டம் தீட்டிக் கொடுத்ததுää ஆயுதங்கள் வாங்கிக் கொடுத்தது சவர்க்கர். வழக்கில் வசமாக மாட்டிக் கொண்டதால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்களிலேயே இந்தப் பார்ப்பனப்புலி எலியாக மாறிவிட்டது, விடுதலை செய்யுங்கள்ää நான் மன்னிப்புக் கேட்கிறேன் என்று கருணைமனு போட்டார் சவர்க்கர். ஆங்கிலேய அரசு கவனிக்கவில்லைää மீண்டும் மனு போட்டார் அந்தமான் சிறையிலிருந்து மாற்றி இந்தியச் சிறையில் போடுங்கள்” என்று மன்றாடினார்.

தன்னை விடுதலை செய்தால்ää தான் என்றென்றும் பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருப்பேன”; என்று உறுதிகூறி எழுதினார். ஊதாரியான மகன் தாயின் வீட்டு வாசலுக்கு வருவதுபோல தாயுள்ளம் கொண்ட அரசின் கதவைத் தட்டாமல் தாம் எங்கு போக முடியும்? என்று புலம்பினார். என்னை வெளியே விட்டால் என்னோடு சேர்ந்த பலரை அரசுக்கு ஆதரவாகக் கொண்டு வருவென் என்றும் வாக்குறுதி கூறிக் கடிதம் எழுதினார். மிகவும் கோழைத்தனமாக மன்றாடிக் கெஞ்சிக் கேட்டுக் கடிதம் எழுதினார். இவரா வீரசவர்;க்கர்? மொத்தம் நான்கு கடிதங்கள் எழுதினார். அதன் பயனாக மராட்டிய மாநிலம் ரத்தினகிரி சிறைக்கு மாற்றப்பட்டார்ää பிறகு எரவாடா சிறைக்கு மாற்றப்பட்டார்.

ரத்தினகிரி மாவட்ட எல்லையைத் தாண்டக்கூடாதுää 5 வருடங்களுக்கு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாதுää பேசக்கூடாதுää எழுதக் கூடாது என்கிற பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. காட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டு வெளியே வந்தது இந்த விடுதலைப் போராட்ட(?) திலகம்.

இவரைப்பற்றித்தான் இப்பொழுது புதிதாக நோட்டீஸ் வந்துள்ளது. முதல் நோட்டீஸே மதவெறியைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. பல்வேறு மதத்தவர்களும் பல இன மொழிகலாச்சாரங்களைக் கொண்டவர்களும் பணிபுரியும் இந்நிறுவனத்தில் இதுபோன்ற துண்டறிக்கை வருவது மிகவும் ஆபத்தானது. இதனை நிர்வாகம் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் மோசமான பின்விளைவுகள் வருவதற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டிய சூழல் உருவாகும் என எச்சரிக்கிறோம். நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? அல்லது வழக்கம்போல் இப்படி ஒட்டுபவர்கள் யாரென்று தெரியாது என்று மழுப்பி ஆர்எஸ்எஸ் கூடாரத்துக்குள் அடங்கிப் போகுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள்



BJP யும் BMS ம் RSS எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு

“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள் ஆசிரியர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்”                             (BMS சங்க மடல் 1998 ஜன. பிப்)

இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல். இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள் வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்? வைத்தியர்கள் யார்? இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே?

அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா?
கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது?

இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு  பூஜைபுனஸ்காரங்கள் சடங்குகள்  செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.

அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும்ää மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.
  (இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89 சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடு நாமக்கல்)

~உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம்; மற்றவர்கள் பார்ப்பனர் தயவிலேயே வாழ்கிறார்கள்| (மனு - அத்தியாயம் 1 சுலோகம் 100)

என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே? அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம்
வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அத்தகைய சமுதாயம் அமைந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களே! உங்கள் நிலை என்ன? சிந்திப்பீர்! பிஎம்எஸ் ஐ நம்பி கிடைத்த வாழ்வையும் இழக்காதீர்!