தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை ஏற்பட்டதுபோல் இலட்சுமி, சரசுவதி, பார்வதி ஆகிய மூதேவிகளுக்குள் யார் பெரியவர் என்று சண்டை ஏற்பட்டதாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காமல் அதை நிரூபிக்கப் பந்தயம் நடைபெற்றதாம். (கடவுள்களுக்கே சண்டையா என்றெல்லாம் கேட்கக்கூடாது) தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா@ இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா என்று பாட்டுப்பாடிப் பிச்சையெடுத்த பிச்சைக்காரியை ஒரே நாளில் நாட்டுக்கே இராணி ஆக்கிவிட்டாளாம் இலட்சுமிதேவி. அதேபோல கோழையாக இருந்த ஒருவனை ஒரே நாளில் வீரனாக்கினாளாம் பார்வதி. பேசவே முடியாத பிறவி ஊமை ஒருவனை ஒரே நாளில் பாவலனாக்கி அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி என்று பாட்டுப்பாடவே வைத்தாளாம் சரஸ்வதி தேவி.
இந்தப் படத்தைப் பார்த்துப்பார்த்துப் பரவசமடைந்தார்கள் மக்கள். இது திரைப்படத்தில் மட்டும்தானே நடக்கிறது? நம்வாழ்வில் நடக்கவில்லையே! இன்னும் ஏழைகளும் இருக்கிறார்கள்ää கோழைகளும் இருக்கிறார்கள்ää ஊமைகளும் இருக்கிறார்களே! அந்தக் கடவுள்களுக்குள் எப்பொழுது சண்டை வருவது? நாம் எப்பொழுது பணக்காரனாவது? படிப்பாளியாவது? பதவிபெறுவது என்று ஏங்கிக் கிடக்கிறார்கள். கண்ணிருந்தும் குருடராய்க் காதிருந்தும் செவிடராய்ää வாயிருந்தும் ஊமையாய் எவ்வளவுபேர் இருக்கிறார்கள்?
தமிழர்களே! இந்தக்கதை உண்மையா? கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்@ பரப்புகிறவன் அயோக்கியன்@ வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேறு வேண்டுமா? சிநதித்துப் பாருங்கள்.நம் நாட்டில் தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கல்வி அறிவுää பொருளாதார ஏற்றம்ää பட்டம் -பதவி எப்படி வந்தது? எப்பொழுது வந்தது? யாரால் வந்தது? வரலாறு என்ன சொல்கிறது?
இதோ அண்ணல் அம்பேத்கர் வரலாறு இப்படிச் சொல்கிறது.
~~மராட்டியத்தில் பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட கல்வியும் இலக்கியமும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தாக விளங்கின. இவை இரண்டும் சாதி இந்துக்களுக்கு மறுக்கப்பட்டன. சதாராவின் அரசர்கூட இரவில்தான் கல்வி கற்க முடிந்தது என்ற அளவிற்குப் பார்ப்பனர்களின் அதிகாரம் அச்சமூட்டுவதாக இருந்தது. பார்ப்பனரல்லாத மக்களுக்குக் கல்வியளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசால் துவக்கப்பட்ட பள்ளிகளில் பணிபுரிந்த பார்ப்பன ஆசிரியர்கள் பார்ப்பனரல்லாதாருக்குக் கற்றுத் தரமுடியாது என்று மறுத்துத் தங்கள் பதவிகளைத் தூக்கி எறிந்தனர்.
சாதி இந்துக்களுக்கே இந்த ஈனகதியென்றால் தீண்டப்படாத மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் இத்துறையில் இடம்பெறவே இல்லை. கல்வியில் அவர்கள் நெடுந்தூரம் பின்தங்கி இருந்தனர். மராட்டியத்தில் 1848ல் மகாத்மா புலே தாழ்த்தப்பட்டவர்களுக்கான முதல் பள்ளியைத் துவக்கினார். அப்பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர் யாரும் முன்வராததால் தன்னுடைய மனைவிக்குக் கல்வி கற்றுக் கொடுத்து தானும் அவரும் ஆசிரியராய் இருந்து பாடம் நடத்தினர். 1883ல் பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனப் பள்ளிகளைத் துவக்கினார். இந்தப் பள்ளிகளில் பணிபுரிய இந்துக்கள் எவரும் முன் வராததால் முஸ்லிம் ஆசிரியர்களைக் கொண்டு இப்பள்ளிகளை நடத்தினார்.|| என்று அம்பேத்கர் வரலாற்றை எழுதிய தனஞ்செய்கீர் கூறுகிறார்.
மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ~தமிழர் அடிமையானது ஏன்? எவ்வாறு?| என்ற நூலில் தமிழரின் கல்வி நிலை குறித்து இவ்வாறு எழுதுகிறார்.
~~காலந்தோறும் தமிழருடைய கல்வி அறிவு போதுமானதாக இல்லை. சுத்தமாக இல்லை. 1901ல் ஆங்கிலேயரால் எடுக்கப்பட்ட முதல் மக்கள் தொகை அறிவிப்பின்படி தமிழருள் படித்தோர் எண்ணிக்கை ஒரு விழுக்காட்டிற்கும் குறைவுதான். 99 விழுக்காட்டினர் படிக்காமல் இருந்தனர். அக்காலத்திற்கும் பின் நோக்கிச் செல்லச் செல்ல தமிழர் கல்வி கற்றதற்கான தடயங்கள் மிகமிகக் குறைவாக இருந்தன. அல்லது இல்லாமலே இருந்தன. நாயக்கர் காலம் முதல்ää பிற்காலப் பாண்டியர் காலம்ää பிற்காலச் சோழர் காலம், களப்பிரர் காலம்ää சங்க காலம் எனப் பின்நோக்கிப் பார்க்கும்பொழுது கிரேக்கம், ரோமாபுரி, எகிப்து, சீனம் யூதநாடுகளைப்போல மக்கள் நிறுவன வழி கல்வி கற்றதற்கான அல்லது கல்வி கற்பித்ததற்கான தடயங்களே இல்லை. பல்லவர் காலம் தொடங்கி நாயக்கர் காலம்வரை ஆயிரம் ஆண்டுகளில் அரசர்கள் பிராமணர்கள் நான்கு வேதங்களையும் கற்க மானியங்கள் வழங்கிய செய்திகள் அரசர் ஆட்சிதோறும் காணக்கிடக்கின்றன.
தமிழ் இலக்கியத்தில் ஆங்காங்கே முன்னிறுத்தப்படும் கல்வியின் இன்றியமையாமை பற்றிய கருத்துக்கள் தமிழ்மொழியில் காலந்தோறும் எழுதப்பெற்ற இலக்கிய இலக்கணங்கள் ஆகியன கல்வி அறிவுடைய தமிழர் இருந்தனர் என்பதற்கும் அன்னோர் கல்வியின் அருமையை அறிந்திருந்தனர் என்பதற்கான சான்றுகளே தவிர சமஸ்கிருதத்தைக் கற்பிக்க இலவச மானியங்கள் அளித்துத் தமிழக அரசுகள் ஊக்குவித்த ஊக்குவிப்புடன் ஊட்டப்பட்ட நிறுவனங்களுக்குச் சமமாக தமிழ்ப்பள்ளிகள் நடத்தப்பட்டதற்கான சான்றுகள் ஆகா.
தனிப்பட்ட முறையில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பாலாசிரியர்கள் கணக்காயர்கள் நிகழ்த்திய சிறுசிறு கல்வி முயற்சிகளே அவை. எனவே, தமிழருள் பெரும்பான்மையினர் கல்வி கற்காது இருந்தனர் என்று யூகிப்பது பிழையன்று. சமண, பவுத்தத் துறவிகள் தவம் இருந்த இடங்களில் கல்வி கற்பித்தனர். சமணத் துறவியர் தங்கியிருந்த இடம் பள்ளியென அழைக்கப்பட்டது. அங்கு சென்று இளைஞர்கள் கல்வி பயின்றனர். எனவேதான் தமிழரிடையே கல்வி கற்குமிடம் பள்ளியெனப் பெயருடையதாயிற்று|| என க.ப.அறவாணனன் எழுதுகிறார்.
இந்த மன்னர்களுடைய ஆட்சிக்காலம் என்பது மனுதர்மத்தை சட்டமாக்கி பிராமணர் ஆலோசனையுடன் நடந்த அரசுகளாகும். சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று மனுதர்மம் சொல்வதால் உழைக்கும் மக்களான பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி கானல் நீரானது. பிரிட்டிஷாரும் கிறித்துவ நிறுவனங்களும் இங்கு வந்தபிறகுதான் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்விக்கண் திறக்கப்பட்டது. 1820 காலக்கட்டத்திலேயே கிறிஸ்துவ அமைப்புக்கள் பள்ளிகளைத் திறந்து அடித்தட்டு மக்களுக்குக் கல்வி அளித்தனர். அதனால் தமிழர்களுக்கு ஓரளவுக்குக் கல்வி கிடைத்தது. ஒரு விழுக்காடு தமிழர்கள் கல்வி கற்றதையே பொறுக்க மாட்டாத திலகர் போன்றவர்கள் கீழ்ஜாதி மக்களெல்லாம் உயர் படிப்புப் படிப்பதை ஆதரிக்கவில்லை.
தமிழ்நாட்டில் 1920 முதல் 1937 வரை ஆட்சிசெய்த நீதிக்கட்சியினர் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயிலுவதற்கு ஏராளமான கல்விக்கூடங்களைத் திறந்தனர். கல்விக்கட்டணச் சலுகைää கல்வி உதவித்தொகை, மாணவர் விடுதிகள், இலவச உடைகள், உணவு என வழங்கி நாட்டில் பார்ப்பனரல்லாதார் படிக்க வசதி ஏற்படுத்தினர்.
வெள்ளைக்காரனை அண்டிப்பிழைத்த பார்ப்பனக்கூட்டம் வெள்ளைக்காரனால் துவக்கப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விதியை புகுத்தியிருந்தது. அதனை நீதிக்கட்சி அரசு 1925ல் நீக்கியது. நீதிக்கட்சி ஆதரவுடன் டாக்டர் சுப்பராயன் அமைச்சரவை அமுல்படுத்திய இடஒதுக்கீடு 1950 வரை பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் கிடைத்து வந்தது. அதனை அண்ணல் அம்பேத்கருடன் சட்டவரைவுக்குழுவில் இடம் பெற்றிருந்த அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் வாதாடி சென்னை உயர்நீதிமன்றத்தின்மூலம் செல்லாது என்று அறிவிக்க வைத்தார் . இதனை எதிர்த்து தந்தை பெரியார் போராடியதாலேயே அண்ணல் அம்பேத்கரும் பிரதமர் நேருவும் இந்திய அரசியல் சட்டத்தை முதன்முதலாகத் திருத்தினர். அதனால்தான் கல்வியில் நமக்கு இடஒதுக்கீடு காப்பாற்றப்பட்டது.
1938ல் பதவிக்கு வந்த இராஜாஜி பாரப்பனரல்லாதார் கல்விபெறுவதைப் பொறுக்க மாட்டாமல் 2500 பள்ளிகளை இழுத்து மூடினார்;. அதற்குப் பிறகும் 1952ல் ஆட்சிக்கு வந்து 6000 பள்ளிகளை இழுத்து மூடினார். அப்பொழுது நாட்டில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கை 15000. இதில் 8500 பள்ளிகளை மூடியதுடன் மாணவர்கள் அனைவரும் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தந்தை பெரியார் கடுமையாகப் போராடினார். அதனால் இராஜாஜி பதவியை விட்டு ஓடினார். தந்தை பெரியாரின் துணையுடன் ஆட்சிக்கு வந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள்தான் இராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை ஒழித்து அவர் மூடிய 6000 பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டதுடன் மேலும் பள்ளிகளைத் திறந்து தமிழ்நாட்டில் தமிழர்களின் கல்விக் கண்ணைத் திறந்தார்.
தந்தை பெரியார் போராடவில்லையென்றால் அண்ணல் அம்பேத்கர் சட்டத்தை எழுதவில்லையென்றால், காமராசர் ஆட்சிக்கு வந்து பள்ளிகளைத் திறக்கவில்லையென்றால் இன்றைக்கு தமிழர்கள் டாக்டராக, வக்கீலாக, பொறியாளராக, நீதிபதியாகää கலெக்டராகää ஆகியிருக்க முடியுமா?
இப்பொழுது சொல்லுங்கள்! நாம் கல்வி கற்றதற்கும் பட்டம் பதவி பெற்றதற்கும் பணமும் வசதியும் பெற்றதற்கும் காரணமாக இருந்தவர்கள் இந்த மாபெரும் தலைவர்களா? குழாய்ச்சண்டை போட்டதாகச் சொல்லப்படும் அந்த மூதேவிகளா? இந்த மூதேவியருக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்வதாலோ விழாக்கள் கொண்டாடுவதாலோ பயன் ஏதாவது உண்டா?
கல்விக்கு இத்தகைய வரலாறு இருக்க நம்முடைய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தம் பிள்ளைகளை விஜயதசமி அன்று பள்ளியில் சேர்க்கிறார்களே! அவர்களெல்லாம் அறிவு நாணயத்தோடு சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்த சரஸ்வதிதான் நம்முடைய மக்கள் கல்வி கற்கக் காரணமா? இராஜ கோபாலாச்சாரி குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டு வந்தபோது சரஸ்வதி எங்கே சென்றிருந்தாள்? தந்தை பெரியார் மாத்திரம் போராடாமல் இருந்திருந்தால் இன்றைக்கிருக்கும் கல்வி வளர்ச்சி இருந்திருக்குமா? இந்த வரலாறுகளையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் விஜயதசமியில் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்ப்பது அறிவுடைமையா? சிந்திப்பீர்! 24.-10.2012
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக