நமது நாட்டில் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு ஜாதி. எந்த ஜாதிக்காரர் மிகமிக அத்தியாவசியமான தொழிலைச் செய்கிறாரோ அவர்தான் இந்த சமுதாயத்தின் கீழான ஜாதி. யாரால் எந்தப் பலனுமில்லையோ அவர்தான் மிக உயர்ந்த ஜாதி. துப்புரவுப் பணியைச் செய்யக் கூடியவர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு வேலைநிறுத்தம் செய்தால் ஊரே நாறிப்போகும். ஆனால் ஒரு புரோகிதர் ஆறு மாதத்திற்கு வேலை நிறுத்தம் செய்தால் சமுதாயத்திற்கோ நாட்டிற்கோ எந்த நட்டமுமில்லை என்பதோடு பல நன்மைகள் உண்டு. கோயிலுக்கு யாரும் போக வேண்டியதில்லை. அதனால் நேரம் மிச்சம். பூஜைக்கு தேங்காய் பழம் சூடம் சாம்பிராணி வாங்கவேண்டியதில்லை. உண்டியலில் காசு போட வேண்டியதில்லை. திருவிழாவுக்குää தேருக்குää கும்பாபிஷேகத்துக்குää குடமுழுக்குக்கு என்று செலவழிக்க வேண்டியதில்லை. இவ்வளவு நன்மைகள் பார்ப்பனர் வேலை நிறுத்தத்தால் சமுதாயத்திற்கு கிடைக்கும் வாய்ப்பு. ஆனால் இவர்கள்தான் சமுதாயத்தில் மிக உயர்ந்த ஜாதி. தோட்டிகள் வேலைநிறுத்தத்தினால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி மக்கள் அனைவரும் பார்ப்பனர் உட்பட இறந்துபோவார்கள். அவ்வளவு அத்தியாவசியமான பணியைச் செய்கின்றவரை அர்த்தமுள்ள இந்து மதம் இழிஜாதி என்று சொல்கின்றதென்றால் இந்தக் கொடுமை இந்த நாட்டைத் தவிர வேறு எங்கும் கிடையாது.
அந்தத் துப்புரவுப் பணியாளர்களின் உயர்வுக்காக எந்த செயலும் செய்யாமல் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை அமுல்படுத்தப் போகிறார்களாம். ஏற்கனவே அந்தத் தொழில் செய்கின்றவர்களுக்கு மாற்றுப் பணிகொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி விட்டு இந்தத் தொழிலை இந்த ஜாதிக்காரர்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் அனைவரும் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றத் தயாராக இருக்கிறோம் என்ற உத்தரவாதம் அளிக்காமல் ஏதோ ஒருநாள் இரண்டு நாளைக்கு கையில் விலக்குமாறை வைத்துக்கொண்டு தொலைக்காட்சிக்கு போஸ் கொடுப்பதால் சமுதாயத்தில் எந்த நன்மையும் விளையப் போவதில்லை.
இவர்கள் கழித்த மலத்தை அள்ளிச் சுத்தம் செய்பவர்களை தோட்டி என்ற கூறி இழிவாக நடத்துவார்களாம். ஆனால் தூய்மைப் பணி செய்கிறோம் என்று படம்பிடிப்பார்களாம். இவர்கள் இலட்சக்கணக்கில் இன்னும் மனித மலங்களை தூக்கிச் சுமக்கின்ற மக்களின் அவல நிலையை என்றாவது உணர்ந்தார்களா? இவர்கள் எங்காவது பொதுக்கழிவறையை சுத்தம் செய்வார்களா? மனிதமலத்தை கையால் அள்ளிச் சுத்தம் செய்வார்களா? இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் தூய்மை இந்தியா என்பது வெறும் கானல் நீராகவே முடியும்.
நமது பெல் நிறுவனத்தில் இத்தகைய தூய்மைப் பணி செய்யக்கூடிய ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய மனமில்லை. அவர்களது ஊதியத்தை உயர்த்தக்கூட எண்ணமில்லை. அவர்களை மற்ற ஊழியர்களைப்போல சமமாக நடத்தவும் திட்டமில்லை. ஆனால் 02-10-2014 அன்று தூய்மை இந்தியா திட்டத்திற்காக அலுவலகம் வந்து உறுதிமொழி எடுத்து தூய்மைப் பணி செய்ய நிர்வாகம் சுற்றறிக்கை விடுவது வேடிக்கையானது. அனைவரும் நிர்வாக இயக்குனர் பொதுமேலாளர் உட்பட காந்தி பிறந்தநாளன்று அலுவலகம் வந்து அலுவலகத்தை சுத்தம் செய்ய நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. எல்லா இடத்தையும் அவரவர்களே சுத்தம் செய்துவிட்டால் தனியாக துப்புரவுப் பணியாளர் எதற்கு?
ஏற்கனவே அப்பணி செய்பவர்களுக்கு மாற்றுப் பணி கொடுத்து அத்தியாவசியப் பணி செய்த அனைவரையும் கவுரவிக்கலாமே! இந்த பெல் நிர்வாகம் இதனைச் செய்யுமா?
இதுவரை தேசிய விடுமுறை தினத்தில் யாரும் பணிக்கு வந்ததில்லை. ஏற்கனவே அண்ணல் அம்பேத்கர் பிறந்ததினத்தில் விடுமுறைப்பணி வைத்து அம்பேத்கரை அவமதித்தாகி விட்டது. இப்பொழுது காந்தி பிறந்த நாளில் ஒரு முன்னோட்டமாக இப்படிப்பட்ட முயற்சியை நிர்வாகம் எடுத்திருக்கிறதோ என்ற அய்யம் அனைவருக்கும் எழுகிறது. இந்த ஆண்டு உறுதிமொழி எடுக்க என்று வரவழைத்த நிர்வாகம் அடுத்த ஆண்டு வேலைக்கு வரவும் பணித்தாலும் பணிக்கலாம். ஏனெனில் இந்தத் திட்டம் பிரதமரின் திட்;டமாம். பிரதமர் சார்ந்த இயக்கம் காந்திக்கு முன்னுரிமை தராத இயக்கம். காந்தியும் குஜராத்தில்தான் பிறந்தார். வல்லபாய் பட்டேலும் குஜராத்தில்தான் பிறந்தார். காந்திக்கு முக்கியத்துவம் தராமல் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்க நடவடிக்கை எடுத்து வருபவர்தான் இந்தப் பிரதமர் மோடி அவர்கள்.
எனவே காந்திக்கு இருக்கும் மரியாதையைக் கெடுக்கவே காந்தி பிறந்தநாளில் அனைத்து அலுவலர்களும் பணிக்கு வரவேண்டும் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி படிப்படியாக அவரது பிறந்தநாளினுடைய முக்கியத்துவத்தைக் குறைக்கும் திட்டமாக இது இருக்குமோ என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இந்த சந்தேகத்தை அரசும் நிர்வாகமும் போக்குமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக