செவ்வாய், 11 அக்டோபர், 2016

Dose no -4



மேலும் அம்பேத்கர் எழுதுகிறார்...

 " நாட்டு மக்களின் குறைகேட்டு நிவர்த்தி செய்கிற பழங்கால மன்னர்களின் பழக்கத்தைக் கூட இராமன் ஒருபோதும் கடைப்பிடிக்கவில்லை. தம் மக்கள் குறைகளை ஏதோ ஒரு தடவை இராமன் நேரில் கேட்டதாக வால்மீகி ஒரு சந்தர்ப்பத்தைக் குறிப்பிடுகிறான். அதுவும் ஒரு துயரமான நிகழ்ச்சியாகத் தெரிகிறது. அக்குறையைத் தாமே தீர்ப்பதாகப் பொறுப்பேற்கிறான் இராமன். அப்படிச் செய்கையில் வரலாறு காணாத கடுங்கொடிய குற்றத்தைச் செய்கிறான் இராமன். அதுதான் சூத்திரனான சம்பூகனின் படுகொலை நிகழ்ச்சியாகும்.

 இராமனுடைய ஆட்சிக்காலத்தில் மக்கள் யாரும் அகால மரணமடையவில்லை என்கிறான் வால்மீகி. இருந்தபோதிலும் ஒரு பார்ப்பனச்சிறுவன் அகால மரணமடைந்ததாய்ச் சொல்லப்படுகிறது. மகனைப் பறிகொடுத்த தந்தை தன் பிள்ளையின் பிணத்தைத் தூக்கிக்கொண்டு இராமனின் அரண்மணையை நோக்கிப்போனான். மன்னனின் ஆட்சியில் படிந்த மாசுதான் தன்பிள்ளையின் சாவுக்குக் காரணமென்றும் அக்குற்றத்தை அறிந்து தண்டித்தால்தான் தன் மகன் பிழைப்பான் என்றும் அப்படிப் பிழைக்க வைக்கவில்லையானால் அரண்மணை வாசலிலேயே தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் மிரட்டினான்.

 நாரதன் உட்பட எட்டு ரிஷிகளுடன் இராமன் கலந்தாலோசித்தான். இராமராஜ்யத்தில் யாரோ சூத்திரன்; ஒருவன் தவமிருப்பதாகவும் அச்செயல் தருமத்திற்கு எதிரானது என்றும் நாரதன் சொன்னான். இந்து புனித சட்டங்களின்படி பார்ப்பான் மட்டுமே தவம் செய்யலாம். பார்ப்பான்களுக்குச் சேவகம் செய்வதே சூத்திரன் கடமை என்றும் நாரதன் அடுக்கினான். தருமத்திற்கு எதிராய் ஒரு சூத்திரன் தவம் செய்வது பெரும் பாவம் என்றும் குற்றம் என்றும் இராமன் திடமாய் நம்பினான். (இங்கு தருமம் என்பது வருணாசிரம தருமமே)

 உடனே தேரில் ஏறி நாட்டைச்சுற்றிவந்து அடர்ந்த காட்டுப் பகுதியில் கடும் தவத்தில் ஈடுபட்டிருந்த சம்புகன் என்ற சூத்திரனைக் கண்டுபிடித்து அவனிடம் எந்தவித விசாரணையோ உண்மை நியாயத்தை அறிந்திடும் நோக்கமோ சிறிதும் இன்றி சம்பூகன் தலையைச் சீவி எரிந்தான் இராமன்.
 அதே நொடியில் அகால மரணமடைந்த அந்தப் பார்ப்பனச்சிறுவன் உயிர் பெற்று எழுந்தானாம். இந்த தருமத்தைக் காத்ததற்காக கடவுள்களெல்லாம் மன்னன் இராமன்மீது மலர்தூவி மகிழ்ந்தார்களாம்.||
 இதுதான் இராமராஜ்யம் என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.  இராமராஜ்யத்தில் வீதிக்கொரு ஜாதி. ஜாதிக்கொரு நீதி என்பதுதான் சட்டம். இந்த ராமராஜ்யத்தை அமைப்பதற்குத்தான் சங்பரிவாரங்கள் துடிக்கின்றன.

 இதைத் தெரிந்தோ தெரியமலோ தமிழ்நாட்டில் சில அரசியல்வியாதிகள் இந்த இராமனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.  இந்த ராமராஜ்யம் வந்தால் புரட்சி மலருமா? மறுமலர்ச்சி அடையுமா? சமத்துவம் கிட்டுமா? முன்னேற்றம் இருக்குமா? இதையெல்லாம் தங்கள் கட்சிக்குப் பெயராகக் வைத்திருக்கும் அந்தத் தலைவர்கள் சிந்திக்க மாட்டார்கள். காரணம் அரசியல்.
ஆனால் அதன் தொண்டர்கள் சிந்திக்க வேண்டாமா?
சிந்திப்பீர்! இராமன் பால மோசடியை முறியடிப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக