திங்கள், 10 அக்டோபர், 2016

பூமி உருண்டையா? தட்டையா?


பூமி உருண்டையா? தட்டையா?

 சென்ற மாதம் 17-09-2010 அன்று நடந்த பிஎம்எஸ் வாயிற்கூட்டத்தில் இந்து மதத்தின் பிரதாபங்கள் நீட்டி முழக்கப்பட்டன. பாரதநாட்டின் முன்னோடிகள் வானவியலில்; சிறந்து விளங்கியதாகவும் பூமியின் விட்டம் 12749 கிமீ என்றும் சுற்றளவு 40746 கிமீ என்றும் முன்னோடிகள் கண்டுபிடித்துச் சொல்லியிருப்பதாகவும் அதன் பெருமை இருட்டடிக்கப்படுகிறது என்றும் முழங்கினார்கள்.
 அப்படி பூமி உருண்டை என்பதும் விட்டமும் ஆரமும் சுற்றளவும் தெரிவிக்கப்பட்ட பிறகும் புத்தியுள்ள யாராவது தீபாவளியைக் கொண்டாடுவானா?

 தீபாவளிக் கதை என்னசொல்கிறது?  பூமியை ஒரு அசுரன் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் ஒளிந்து கொண்டதாகவும் அந்த பூமியை விஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து மீட்டதாகவும் அதனால் பூமா தேவிக்கும் பன்றி வடிவில் இருந்த விஷ்ணுவுக்கும் காதல் ஏற்பட்டு ஒரு பிள்ளை பிறந்ததாகவும் அந்தப் பிள்ளைதான் நரகாசுரன் என்றும் அந்த நரகாசுரன் தேவர்களுக்குத் தொல்லை கொடுத்ததால் விஷ்ணுவும் பூமாதேவியும் அந்த அசுரனை அழித்ததாகவும் அந்த நாளே தீபாவளி என்றும் புராணங்கள் கூறுகின்றன. அதையே இன்றைக்கும் பத்திரிகைகளையும்  தொலைக்காட்சிகளையும் ஆக்கிரமித்துள்ள பார்ப்பன வட்டாரம் பிரச்சாரம் செய்து வருகிறது.

 அப்படியானால் பூமி பாயாகச் சுருட்டக் கூடிய அளவுக்குத் தட்டையானது என்பதுதானே அதன் பொருள். அப்படி பூமியைத் தட்டை என்று எழுதியவன் முட்டாளா இல்லையா? அதை இன்னமும் அறிவியல் கருவிகளைப் பயன்படுத்திப் பிரச்சாரம் செய்து பரப்புகிறவன் அயோக்கியனா இல்லையா? அதை நம்புகிறவன் காட்டுமிராண்டியாகத்தானே இருக்க முடியும்?

 பூமி உருண்டைதான் என்பது அறிவியலால் இன்று திட்டவட்டமாக நிரூபிக்கப்பட்ட பிறகு பூமி தட்டை என்று எழுதி வைத்துள்ள புராணங்களை தீயிட்டுக் கொளுத்துவதுதானே அறிவுடைமை? அதை நம்பி கொண்டாடப்படுகின்ற பண்டிகைகளைத் தடை செய்வதுதானே அறிவுப்பூர்வமான செயல்?
இதனைச் செய்ய பிஎம்எஸ் தயாரா?

இதற்கு ஆர்எஸ்எஸ_ம் பிஜேபியும் இந்து முன்னணியும் ஒத்துக் கொள்ளுமா? பிஎம்எஸ் ஒருவேளை வீம்புக்காக ஒத்துக்கொண்டாலும் மேற்சொன்ன அமைப்புகள் ஒத்துக்கொள்ளாது. ஏனெனில் இந்தப் புராணங்களிலும் இதிகாசங்களிலும் வேதங்களிலும் ஸ்ருதிää ஸ்மிருதிகளிலும்தான் பார்ப்பான் பிர்மாவின் முகத்தில் பிறந்தவன் என்றும் அவன்தான் எல்லாரையும் விட உயர்ந்தவன் என்றும் எழுதப்பட்டுள்ளது. இவற்றை ஒழித்து விட்டால் இவையெல்லாம் பொய் என்று ஆகிவிடும். பார்ப்பான் உயர்ந்தவன் இல்லை என்றாகி விடும். எல்லோரும் சமம் என்று ஆகிவிடும். எல்லோரோடும் சமமாக இருக்க பார்ப்பான் ஒத்துக்கொள்ளுவானா?

 பார்ப்பானை உயர்ந்தவன் என்று சொல்லுவதற்காகவும் பார்ப்பனரல்லாதாரை இழிந்தவன் என்று சொல்லுவதற்காகவும்தானே தீபாவளியை ஜமாய்ங்க என்று எக்காளமிடுகின்றான் பார்ப்பான். எவ்வளுவுக்கெவ்வளவு தீபாவளியை பார்ப்பனரல்லாதோர் ஜமாய்க்கிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு பார்ப்பன உயர்ஜாதித் தன்மை பாதுகாக்கப்படுகிறது என்பதுதான் இதன் பொருள்.
பார்ப்பனரல்லாத தோழர்களே! இதில் உங்கள் நிலை என்ன? சிந்திப்பீர்!

இவண் : திராவிடர் தொழிலாளர் கழகம்                    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக