தந்தை பெரியார் தனது சிலைபீடத்தில் கடவுள் இல்லை, கடவுள் இல்லை - கடவுள் இல்லவே இல்லை, கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளைப்பரப்புகிறவன் அயோக்கியன், கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என்ற பொன்மொழியை கண்டிப்பாகப் போடச் சொல்வார்.
இதைப்பார்த்து ரொம்பப் பேர் மனம் புண்படுகிறது என்று புலம்புகிறவர்கள் உண்டு. இவர்கள் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்தால் பெரியார் கூற்று எவ்வளவு ஆழமானது, அறிவுப்பூர்வமானது என்பது விளங்கும்.
பெரியார் கூற்றை நிரூபிக்க தீபாவளியே நல்ல சான்றாகும்.
தீபாவளி பற்றி புராணத்தில் என்ன எழுதி வைத்துள்ளான்? பூமியை ஒரு அசுரன் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்துகொண்டான். பகவான் விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து பூமியை மீட்டான். பன்றிக்கும் பூமிக்கும் காதல் வந்து கலவி ஏற்பட்டு நரகாசுரன் பிறந்தான். அவன் தேவர்களைக் கொடுமைப்படுத்தினான். அதனால் பகவான் கிருஷ்ணனாக அவதரித்துää பூமாதேவி சத்தியபாமாவாக உருவெடுத்து இருவரும் சேர்ந்து நரகாசுரனை அழித்தார்கள். அந்த நரகாசுரன் இறந்தநாளே தீபாவளி என்கிறது புராணம்.
இதன்படி பூமி தட்டையாக இருந்தது என்பதுதானே புராணங்கள் சொல்லும் கதை. இந்தப் புராணத்தை எழுதியவனுக்கு பூமி உருண்டையாக இருக்கிறது என்ற உண்மை தெரிந்திருக்காது. பூமி தட்டையாக இருந்தது என்று அவன் கருதி எழுதி இருப்பான். அவன் முட்டாள். அவனை மன்னித்து விடலாம்.
ஆனால் இன்று பூமி உருண்டை என்பதனை அன்றாடம் நாம் உணர்ந்துள்ளோம். இன்றைக்கும் அந்தப் புராணக்கதைகளை அப்படியே அறிவியல் கண்டுபிடிப்பான பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி , திரைப்படம் எல்லாவற்றிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்களே! அவர்களுக்கு பூமி உருண்டை என்பது தெரியுமே! தெரிந்தும் அதனைப்பிரச்சாரம் செய்து பரப்புவது அயோக்கியத்தனம் இல்லையா?
இதனால்தான் கடவுளைப்பரப்புகிறவன் அயோக்கியன் என்றார் பெரியார்.
இப்படிப் பிரச்சாரம் செய்யும் பார்ப்பனர்களுக்கும் மதவாதிகளுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது.
மக்களை மதம், கடவுள், ஜாதி, திருவிழா, பண்டிகை என்ற போதையில் ஆழ்த்தி வைத்திருந்தால்தான் தங்கள் பிழைப்பு அமோகமாக நடக்கும் என்பதுதான் அந்த நோக்கம்.
இந்த மதவாதிகள்தான் நம்முடைய மக்களைக் கல்வி அறிவில்லாதவர்களாக வைத்திருந்தார்கள். தந்தை பெரியார் போராடியதன் விளைவாக இன்று நாம் அனைவரும் கல்வி பெற்றுள்ளோம். கல்வி என்பது அறிவைப் பயன்படுத்தத்தானே தவிர எதையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதற்கல்ல.
அந்த அறிவைப் பயன்படுத்தினால் தீபாவளி என்பதை ஏற்றுக்கொள்வோமா?
தீபாவளி குறித்து பார்ப்பனர் செய்து வரும் பித்தலாட்டங்களை உணராமல் இருப்போமா? தந்தை பெரியார் கூற்றிலுள்ள உண்மையைப் புரிந்துகொள்ளாமல் இருப்போமா?
பூமியைச்சுருட்டிக்கொண்டு கடலுக்குள் ஒளிந்துகொண்டான் என்று எழுதிவைத்திருக்கிறாயே பூமியும் கடலும் தனித்தனியாகவா இருந்தது என்று பெரியார் கேட்டாரே! பூமியைச்சுருட்டியவன் எதன்மீது நின்று கொண்டு சுருட்டினான் என்று கேட்டாரே! பூமாதேவியும் கடவுள்ää பன்றி அவதாரம் எடுத்த விஷ்ணுவும் கடவுள். அவர்களுக்கு எப்படி அசுரன் பிறந்தான்? என்று கேட்டாரே! இதையெல்லாம் நாம் சிந்தித்துப்பார்க்க வேண்டாமா?
வேதகாலத்தில் ஆடுமாடு மேய்த்துக்கொண்டிருந்த ஆரியக் கூட்டம் சுராபானம் சோமபானம் அருந்தினார்கள். அவர்கள் சுரர்கள். பார்ப்பனர்களை பூசுரர் என்று அழைப்பதன் தத்துவம் இதுதான். இந்த நாட்டின் பூர்வகுடிகள் திராவிடர்கள். அவர்கள் குடியை வெறுத்தார்கள். அவர்களை அசுரர்கள் என்றார்கள் ஆரியர்கள.(சுரர் எதிர்ப்பதம் அசுரர்)(நீதி எதிர்ப்பதம் அநீதி போல)
திராவிடரை அசுரர் என்று சொல்லி ஒழித்துவிட்டு அவன் இறந்த நாளை அவனது இனமான திராவிட மக்களையே கொண்டாட வைத்திருக்கிறார்களே! இதை நாம் உணராமல் தீபாவளி கொண்டாடி நம் இனத்தைக் கேவலப்படுத்தலாமா? காட்டுமிராண்டிக்காலத்தில் எழுதிவைத்த கதையை நம்பி நாமும் அந்தக் காட்டுமிராண்டிகளைப்போல் இல்லாமல் சுயமரியாதை உள்ள பகுத்தறிவு பெற்ற மக்களாக வாழவேண்டும் என்பதற்காகத்தானே பெரியார் பாடுபட்டார்? சிந்திப்பீர்!
மானமும் அறிவும் மனிதர்க்கழகு! மானத்தோடு வாழ்வோம்!! பகுத்தறிவு பெறுவோம்!!
தீபாவளி தமிழன் பண்டிகைஅல்ல என்பதை உணர்வோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக