வெள்ளி, 7 அக்டோபர், 2016

தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி



மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் அனுபவித்து வரும் 27 சதவிகித இட ஒதுக்கீடு எப்படிக் கிடைத்தது என்று இளைஞர்களே! உங்களுக்குத் தெரியுமா?

 1977ல் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் அவர்களால் அண்ணல் அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்தின்படி அமைக்கப்பட்டது மண்டல் குழு. அது இந்தியா முழுமைக்கும் சென்று ஆய்வு செய்து பிற்படுத்தப்பட்ட மக்களின் சமூக கல்வி பொருளாதார நிலைகளைக் கணித்து ஒரு அறிக்கை தந்தது.

சுதந்திரத்துக்கு முன்பே தமிழ்நாட்டில் ஆட்சி செய்த நீதிக்கட்சி 1928லேயே அனைத்து சமூக மக்களுக்குமான வகுப்புரிமையை வழங்கி வந்தது. அதற்கான ஆவணங்கள் முழுவதும் சென்னை பெரியார் திடலில் இருந்தது. திரு.மண்டல் அவர்கள் சென்னையில் வந்து பெரியார் திடலில் தங்கி அனைத்து ஆவணங்களையும் பார்வையிட்டு மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை தந்தார்.

அதன்படி மத்திய அரசின் பொதுத்துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது.

 அறிக்கை கொடுத்தபோது இந்தியாவை ஆண்டது இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு. அந்த அறிக்கை வெளியிடப்படவே இல்லை. அதற்குள் இந்து ஆங்கில நாளிதழ் ஒரு தலையங்கம் எழுதியது. அதற்குத் தலைப்பு என்ன தெரியுமா? “BURRY THE MANDAL REPRT” என்பதுதான். அதாவது மண்டல் குழு அறிக்கையை குழிதோண்டிப் புதை என்று அதற்குப் பொருள்.

 உடனடியாக அன்று மாலையே விடுதலை பத்திரிகையில் அதன் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் “HURRY THE MANDAL REPORT” என்று எழுதினார். அதாவது மண்டல் குழு அறிக்கையை விரைந்து அமுல்படுத்து என்று பொருள். அன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இந்து பத்திரிகை நிருபர் மிகவும் புத்திசாலித்தனமாகக் கேட்பதாக நினைத்துக்கொண்டு ~மண்டல் அறிக்கை இன்னும் வெளியாகவே இல்லை@ அதில் என்ன இருக்கிறது? என்பதே தெரியாது. அப்படி இருக்க “HURRY THE MANDAL REPORT” என்று எப்படி எழுதுகிறீர்கள்? என்று கேட்டார்..

 அதற்கு ஆசிரியர் வீரமணி என்ன பதில் சொன்னார் தெரியுமா? எனக்கு அதில் என்ன இருக்கிறது என்று தெரியாது. அதேபோல உங்கள் இந்து வுக்கும் அதில் என்ன இருக்கிறது என்று தெரியாது. அப்படித் தெரியமலேயே நீங்கள் என்ன காரணத்திற்காக அதனை “BURRY THE MANDAL REPORT” என்று எழுதினீர்களோ அதே காரணத்துக்காகத்தான் விடுதலையும் “HURRY THE MANDAL REPORT” என்று எழுதியது என பதில் அளித்தார். நிருபர் வாயடைத்துப் போனார்.

வீரமணி அறிக்கை விட்டதுடன் நின்றாரா? அதற்காக 42 மாநாடுகளை நடத்தினார். பதினாறு போராட்டங்களை நடத்தித் தொண்டர்களுடன் பலமுறை சிறையேகினார். வடபுலத்திலிருந்த தலைவர்களை தமிழகத்திற்கு அழைத்து வந்து மாநாடுகளில் பேசச் செய்தார். வடபுலத்திற்குச் சென்று பல தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து அதன் அவசியத்தை வலியுறத்தினார்.

ராம் விலாஸ் பஸ்வான் மூலம் வாராது வந்த மாமணியாம் வி.பி.சிங் அவர்களுக்கு அதன் அவசியத்தை உணர வைத்து அதனை அமுல் படுத்தவும் செய்தார். அதனை அமுல்படுத்திய நேரத்தில் பாராளுமன்றத்தில் பெரியார் ஜிந்தாபாத், அம்பேத்கர் ஜிந்தாபாத் என்று முழங்கியதோடு  வீரமணி ஜிந்தாபாத் என்றும் முழங்கப்பட்டது.

அப்படிப் போராடிப் பெற்றதுதான் 27 சதவிகித இட ஒதுக்கீடு என்ற வரலாறு எத்தனை பேர் அறிவார்?அந்த வரலாற்றுக்குச் சொந்தக் காரர்தான் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி. அவரது பிறந்தநாள் டிசம்பர் 2.

முந்தாநாள் பெய்த மழையில் நேற்று முளைத்த காளான் எல்லாம் பிற்நதநாளை படாடோபமாகக் கொண்டாடும்போது தன்னுடைய பிறந்தநாளை இதுவரை அவர் கொண்டாடியதே இல்லை. அப்படித் தன்னடக்கத்தோடு இருக்கும் அந்த பெரியார் தொண்டரின் 82ம் பிறந்த நாளில் பெல் திராவிடர் தொழிலாளர் கழகம் அவரை வாயார மனதாரப் பாராட்டுகிறது.
02.12.2014

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக