இந்துத்துவா கும்பல் அரசின் பல திட்டங்களை மாற்றிக்கொண்டு வருகிறது. ஆர்எஸ்எஸ் என்ன சொல்கிறதோ அதனை மோடி அமுல்படுத்தி வருகிறார். ராதாகிருஷ்ணன் பிறந்தநாளுக்குப் பதிலாக வியாசர் பிறந்தநாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடச் சொல்கிறது ஆர்எஸ்எஸ். அதற்கு முன்னோட்டமாத்தான் ஆசிரியர் பிறந்தநாளின் பெயரை மோடி குரு உத்சவ் என்று மாற்றினார். வியாசர் எப்படி ஆசிரியரானார்?
யாருக்கு அவர் ஆசிரியர்? அவர் எப்படிப் பிறந்தார்? அவர் மகாபாரதத்தை எழுதியவராம். அவருக்கு அப்பன் பராசரர் என்ற முனிவராம். அந்த முனிவர் இருபத்தேழு நட்சத்திரங்களில் ஒரு நட்சத்திரம் உச்சமாகிற காலத்தில் ஒரு பெண்ணைக் கூடினால் அதன்மூலம் பிறக்கும் பிள்ளை வீரியத்துடன் இருக்கும் என்று கருதி, நகரத்திற்கு வந்தார். குறுக்கே யமுனையைக் கடக்க வேண்டி இருந்தது. தண்ணீர் கரை புரண்டு ஓடியது. அங்கே படகு ஓட்டிக் கொண்டிருக்கிறாள் மீனவப் பெண்ணான மச்சகந்தி. மச்சகந்தியிடம் உதவி கேட்டார். படகில் பாரம் இல்லை என்று கூறி அவள் மறுக்க தான் பாரத்துக்குச் சரியாய் இருப்பேன் என்று கூறி பயணம் செய்கிறான். அப்பொழுது அந்த நட்சத்திரம் உச்சத்துக்கு வர மச்சகந்தியிடம் தன் கோரிக்கையைத் தெரிவிக்கிறான். அவள் தான் வயசுக்கு வராதவள் என்றும் தன் உடம்பில் மீன் வாடை அடிப்பதாகவும் பகல் பொழுது என்றும் படகிலே செல்லுகிறபடியால் படகு கவிழ்ந்து ஆபத்தில் முடியும் என்றும் மச்சகந்தி மறுக்க நதிக்கு நடுவே ஒரு திட்டு உருவாக்கி அவளை வயசுக்கு வரவைத்து அவளுடம்பில் பரிமள வாசம் ஏற்படுத்தி அவளைக்கூடி ஒரு பிள்ளையைப் பெற்று மீண்டும் அவளைக் கன்னியாக்கிவிட்டுச் சென்றுவிட்டான். அதன்மூலம் ஜடாமுடியுடன் மான்தோல் புலித்தோலுடன் ஒருவன் பிறந்தானாம். அவன்தான் வேதவியாசராம். அவன் வரும்போதே வேதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு வந்தானாம்.
அவனுடைய பிறப்பை யாராவது அறிவுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ள முடியுமா? அம்மா வயிற்றிலிருந்து வரும்போதே மான்தோல் புலித்தோலுடன் பிறந்தான் என்றால் அவனுடைய அம்மா வயிற்றில் ஒரு காடே இருந்திருக்க வேண்டுமே! மான், புலி, சிங்கமெல்லாம் அவள் வயிற்றில் குடியிருந்ததா? அதனைப் பிடித்து வியாசர் உறித்து தோலை எடுத்து ஆடையாக உடுத்திக் கொண்டானா? வேதம் அந்தப் பெண்ணின் வயிற்றுக்குள் எப்படிப் போனது? இப்படிப் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டே போகலாம். இதனை அந்தக் காலத்தில் இருந்த முட்டாள்கள் நம்பியிருக்கலாம். இன்னமும் அதனை நம்பச் சொல்லி அவன் பிறந்தநாள்தான் ஆசிரியர் தினம் என்றால் நாமெல்லாம் என்ன காட்டுமிராண்டிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?
இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் பெயரில் எல்லாம் விழாக்களைக் கொண்டாடினால் அதைவிட முட்டாள்தனம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? வியாசருக்காவது எப்படிப் பிறந்தான் என்று கதை இருக்கிறது. விஸ்வகர்மா எப்படிப் பிறந்தான்? அவனுடைய அம்மா யார்? அப்பா யார்? என்று கேட்டால் அதற்கு பிஎம்எஸ் இதுவரை பதில் சொல்லவில்லை. ஆனால் விஸ்வகர்மா ஜெயந்தியை எல்லோரும் கொண்டாட வேண்டும் என்று கூறுவதை மட்டும் நிறுத்தவில்லை. அறிவு நாணயம் இருந்தால் அவன் எப்படிப் பிறந்தான்? அவனுடைய அப்பா அம்மா யார்? எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்தான் என்பதைச் சொல்லிவிட்டு விஸ்வகர்மா ஜெயந்தியைக் கொண்டாடச் சொல்லட்டும் பிஎம்எஸ்.
அதைச் சொல்லாமல் யாரோ விருதுராசுரன் என்று புதிதாகக் கதை கட்டுகிறது பிஎம்எஸ். விருதுராசுரன் ஒரு அசுரன் என்கிறீர்கள். அவனுடைய அப்பா விஸ்வகர்மா என்கிறீர்கள். அப்படியானால் விஸ்வகர்மா அசுரனா? தேவனா? விஸ்வகர்மா தேவனாக இருந்தால் அவனுடைய மகன் எப்படி அசுரன் ஆனான்? அவன் யாருக்குத் தொல்லை கொடுத்தான்? எதனால் அவனைக் கொல்ல வேண்டும்? அவனை விஸ்வகர்மா கொன்றதால் இன்றைய சமுதாயத்திற்கு என்ன நன்மை? அவனைக் கொல்ல முதுகெலும்பைக் கொடுத்த ததீசி முதுகெலும்பைக் கொடுத்து விட்டு நிமிர்ந்து நடந்தாரா? முதுகெலும்பில்லாமல் எப்படி அவரால் நடக்க முடியும்? தேவர்களுக்கு அவன் தொல்லை கொடுத்தான் எனில் அந்த தேவர்களுக்கு என்ன மாதிரியான தொல்லை கொடுத்தான்? அந்த தேவர்கள் அவனைக் கொல்லாமல் ஏன் விஸ்வகர்மாவை விட்டுக் கொல்ல வேண்டும்?
வரலாற்றில் தேவர்கள், அசுரர்கள் என்று யாரும் இல்லை. திராவிடர்களைத்தான் இதிகாச புராணங்கள் அசுரர் என்கிறது. ஆரியர்களைத்தான் தேவர்கள் என்கிறது. ஆரிய – திராவிடப் போர்களைத்தான் தேவாசுர யுத்தமாகக் கதைகட்டுகிறது ஆரியம்.
அய்யாயிரம் ஆண்டுகளாய் நம் திராவிட இனத்தை சூத்திரன் என்று சொல்லி இழிவுபடுத்திய கூட்டம்தான் இன்னமும் தேவர்கள் அசுரர்கள் என்று பேசிக்கொண்டு மீண்டும் ஆரியத்துக்கு நம்மை அடிமையாக்கத் துடிக்கிறது. அதனுடைய ஒரு அங்கம்தான் விஸ்வகர்மா என்பது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளுக்கு ஒரு வாழ்த்துக்கூடத் தெரிவிக்காத பிஎம்எஸ்தான் பொங்கல் பண்டிகையைப் போலத்தான் இந்த விஸ்வகர்மா ஜெயந்தி என்று ஏய்க்கப் பார்க்கிறது. எத்தனைப் பார்ப்பான் ஏர் உழுகிறான்? எத்தனைப் பார்ப்பனர் இல்லங்களில் பொங்கல் கொண்டாடப்படுகிறது என்பதை ஆய்வு செய்தாலே பிஎம்எஸ்எஸின் கூற்று எவ்வளவு பித்தலாட்டமானது என்பது விளங்கும். எனவே தொழிலாளர்கள் அவர்களின் பசப்பு வார்த்தையில் மயங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக