நம்முடைய பக்த சிகாமணிகளுக்கு நாத்திகர்களைப் பார்த்தால் கோபம் வரும். “இவன் கடவுளை நிந்திக்கிறானே! இவன் உரூப்படுவானா?” என்று சாபம் விடுபவர்களும் இருக்கிறார்கள். சர்வசக்தியுள்ள கடவுளுக்கே கோபம் வருகிறதோ இல்லையோ இவர்களுக்கு அவ்வளவு கோபம் வரும். உண்மையில் கடவுளை நிந்திப்பது யார்? எந்த நாத்திகனும் கடவுளை நிந்திப்பதில்லை. மாறாக ஆத்திகர்கள் என்பவர்கள்தான் கடவுளை மிக மோசமாக சித்தரிக்கிறார்கள்.
இப்பொழுது கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் இரண்டு கடவுள்கள் பக்தர்களால் மிகவும் ஆரவாரமாகப் பூஜிக்கப்படுகிறார்கள். ஒன்று அய்யப்பன். இன்னொன்று திருவண்ணாமலை ஈஸ்வரர்.
இரண்டுக்கும் என்ன கதை? இரண்டுமே சைவத்துக்கும் அசைவத்துக்கும் நடக்கும் சண்டையின் வெளிப்பாடுதான்.
அய்யப்பன் கதை என்ன? பத்மாசுரன் என்கிற ஒரு அசுரன் பரமசிவனை நோக்கி தவமிருக்கிறான். அவனுடைய தவத்தை மெச்சி பரமசிவனும் நேரில் வந்து “பக்தா! உன் தவத்தை மெச்சினேன். என்ன வரம் வேண்டும் கேள்” என்று கேட்கிறார். “யார் தலையில் கை வைக்கிறேனோ அவர் தலை எரிந்து சாம்பலாக வேண்டும்” என்ற வரத்தைக் கேட்கிறான். சிவனும் வரத்தைக் கொடுத்துவிட்டார். உடனே பத்மாசுரன் அதைப் பரிசோதிக்க வேண்டும் என்று கூறி சிவன் தலையிலேயே கையை வைக்க வருகிறான். சிவன் பயந்துபோய் ஓட எதிரே வந்த விஷ்ணு என்ன விஷயமென்று சிவனைக் கேட்க சிவனும் விஷயத்தைச் சொல்ல சிவனைக் காப்பதற்காக விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்து அசுரனை ஒழித்தான். அந்த மோகினியுடன் சிவன் கூட அய்யப்பன் பிறந்தான் என்று அய்யப்ப புராணம் சொல்கிறது.
இந்தக் கதை சொல்லும் செய்தி என்ன?
1) சிவன் முன் யோசனையற்ற முண்டம். பின்னால் என்ன நடக்கும் என்பதையே அறியாமல் அசுரனுக்கு வரம் கொடுத்து விட்டான்.
2) அந்த அசுரனிடமிருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ள முடியாத கோழை சிவன்.
3) அதனால் அவன் தப்பி ஓடுகிறான்.
4) அந்த அசுரனிடமிருந்து விஷ்ணுதான் சிவனைக் காப்பாற்றினான் என்பதாகும்.
இந்தக் கதை சிவனை மட்டப்படுத்தி விஷ்ணுவை உயர்வாகச் சொல்ல எழுதப்பட்ட கதைதானே? இதைவிட சிவபெருமானை அவமானப்படுத்துபவர்கள் யாராவது இருக்க முடியுமா?
அதுபோல கார்த்திகை தீபத்தைப் பற்றி என்ன சொல்லப்படுகிறது? பிரம்மாவும் விஷ்ணுவும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தார்களாம். அங்கே வந்த சிவன் அதற்கு பஞ்சாயத்து செய்ய தீக்கோலத்தில் எழுந்து நின்று என்னுடைய அடியையும் முடியையும் யார் கண்டு பிடித்து வருகிறார்களோ அவரே பெரியவர் என்று தீர்ப்பு சொன்னாராம். பிரம்மா அன்னபட்சி வேடம்தாங்கி முடியைக் காண மேலே மேலே சென்றானாம். முடியைக் காண முடியவில்லையாம். சிவனுடைய முடியிலிருந்து வந்த தாழம்பூவை தனக்கு சாதகமாகப் பொய்ச் சாட்சி சொல்லச் சொன்னானாம். அதுவும் பொய்ச் சாட்சி சொன்னதாம். இதனை அறிந்த சிவன் கோபமுற்று பிரம்மாவுக்கு எங்குமே கோயில் இருக்கக் கூடாது என்றும் தாழம்பூவை பூஜைக்கு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தீர்ப்புச் சொன்னாராம். அதேபோல அடியைக் காண விஷ்ணு பன்றி வடிவெடுத்து பூமியைக் குடைந்து கொண்டே சென்றாராம். அவராலும் சிவனின் அடியை அதாவது பாதத்தைக் காண முடியவில்லையாம்.
அதனால் இங்கே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனின் முன் மிகவும் சிறியவர்கள் என்றும் சிவன்தான் எல்லோரையும்விட பெரியவன் என்றும் இந்தக்கதை உணர்த்துகிறது என்று சிவபக்தர்கள் குதூகலமாக இன்னமும் சொல்லி வருகிறார்கள். இதுபோல பல கதைகள் உண்டு.
இதைவிடவா நாத்திகர்கள் கடவுளை இழிவுபடுத்துகிறார்கள். பக்த சிரோண்மணிகளே! சிந்தித்துப் பாருங்கள். கடவுளை நிந்திக்கும் கயவர்கள் ஆத்திகர்களா? நாத்திகர்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக