வெள்ளி, 7 அக்டோபர், 2016

பெரியாரால் எல்லாம் கெட்டுவிட்டது|



நாயும், பூனையும் நடக்குமிடத்தில் மனிதர் நடந்தால் பாவம் என்றால் அதை பார்த்துக்கொண்டிருக்கும் நீ கல்லா? கடவுளா? என்று கேட்டு தீண்டாமையும், ஜாதியும் தலைவிரித்தாடிய நாட்டில் அதனை ஒழித்துக்கட்டிய தந்தை பெரியாரை கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் இன்று நாட்டில் புறப்பட்டிருக்கிறது.அவர்கள் கூறும் கூற்று ~பெரியாரால் எல்லாம் கெட்டுவிட்டது| என்பதாகும்.
ஆம், பெரியாரால் எல்லாம் கெட்டுவிட்டதுதான். என்னவெல்லாம் கெட்டுவிட்டது?

• ஒரு ஆறு வயதுப் பார்ப்பனச் சிறுவன் அறுபது வயது முதியவரைப்பார்த்து ~டேய் கருப்பா, டேய் முனியா| என்று கூப்பிட்டானே, அந்த ஜாதித்திமிர் கெட்டு விட்டது.

• பார்ப்பனரல்லாத பிற்படுத்தப்பட்ட மக்களைப் பார்ப்பான் ஜாதித்திமிரோடு ~ஏ, சூத்திரப்பயலே, தள்ளி நில்லடா!| என்றானே அந்தத் திமிர் கெட்டுவிட்டது. எப்படி அது கெட்டது? சூத்திரன் என்பதை ஏதோ சர் பட்டம், சர்தார் பட்டம் போலவும் பெருமையாகக் கருதி கொண்டிருந்த தமிழனிடம் சாஸ்திரப்படி சூத்திரன் என்றால் ‘தேவடியாள் மகன் என்று பொருளப்பா, பார்ப்பான் உன்னை சூத்திரன் என்று அழைத்தால் ஆத்திரம் கொண்டு அடி| என்று சுயமரியாதை உணர்ச்சி ஊட்டியதால், சூடு சொரணையுள்ள தமிழனெல்லாம் சூத்திரன் என்று அழைத்த பார்ப்பானை ஆத்திரம் கொண்டு அடித்ததால் பார்ப்பனத் திமிர் கெட்டுவிட்டது.

• சூத்திரனுக்கு எதைக்கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்ற பார்ப்பன வஞ்சகம், பெரியார் போராடி அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமையைப்; பெற்றுத்தந்ததால் கெட்டுவிட்டது.

• சூத்திரன் படித்தாலும் அவனுக்கு தகுதி, திறமை இல்லை. தங்களுக்கு மட்டுமே தகுதி, திறமை உண்டு என்ற பார்ப்பனக் கொழுப்பு, பெரியார் அவர்கள் இடஒதுக்கீட்டில் நம் மக்களுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுத் தந்ததால் கெட்டுவிட்டது.

• கோயிலைக் கட்டிய தமிழனை வெளியேற்றி விட்டு அந்தக் கோயில் கட்ட ஒரு செங்கல்லைக்கூட எடுத்துக்கொடுக்காத பார்ப்பனப் பெருச்சாளிகள் கோயிலுக்குள் நுழைந்துகொண்டு  கோயில் கட்டியவன் நுழைந்தால் சாமி செத்துவிடும் என்று சொல்லிய அந்த ஜாதி வெறி கெட்டுவிட்டது.

• ‘கீழ்ஜாதியாகப் பிறந்தது நீ செய்த பாவத்தால்தான், இந்த ஜென்மத்தில் உன் ஜாதித் தொழிலை முறையாகச் செய்தால் அதாவது பார்ப்பனராகிய எங்களுக்குத் தொண்டூழியம் செய்தால் அடுத்த ஜென்மத்தில் மேல்ஜாதியாகப் பிறப்பாய்| என்று முன்ஜென்மம், மறுஜென்மம், பாவம், புண்ணியம் தலைவிதி என்று சொல்லி ஏமாற்றிய அந்தப் பழைய பஞ்சாங்கம் பெரியாரால் கெட்டுவிட்டது.

• அவரவர் அவரவர் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாட்டில் தொழில் வளர்ச்சியடையும் என்று நயவஞ்சம் பேசி குலக்கல்வித்திட்டத்தை அமுல்படுத்திய  குல்லூகப்பட்டர் ராஜாஜியின் திட்டம் பெரியாரால் கெட்டுவிட்டது.

• மானுடத்தின் சரிபகுதியாக இருந்த பெண்களுக்கு கல்வியுரிமை, சொத்துரிமை எதுவும் இன்றி ஆண்களின் உடைமையாக, ஒரு போகப்பொருளாக மட்டுமே இருந்த பெண்ணடிமைத்தனம் பெரியாரால் கெட்டுவிட்டது.

• பெல் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் கொடிகட்டிப் பறந்த அண்டை மாநிலத்தவர் ஆதிக்கத்தை எதிர்த்துப் பெரியார் கண்டனக்குரல் எழுப்பியதால் தமிழர்கள் வேலைவாய்ப்புப் பெரும் நிலை உருவாகி; அண்டை மாநிலத்தவர் ஆதிக்கம்; கெட்டுவிட்டது.

பெரியார் தன்னை தானே ஒரு அழிவு வேலைக்காரர் என்று அறிவித்துக்கொண்டவர். அவர் காலம் காலமாக இருந்து வந்த ஆதிக்கங்களை அழிவுவேலையின் மூலமாகத்தான் தகர்க்க முடியும் என்பதால், அதற்கான பணியை தன்மேல் போட்டுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவரால் பாதிப்படைந்த கூட்டம்,  பெரியாரால் எல்லாம் கெட்டு விட்டது என்று சொன்னால் அதனைப் புரிந்துகொள்ளலாம்.

 ஆனால் அவருடைய உழைப்பால் படித்துப் பட்டம்,  வேலைவாய்ப்பு, மக்களோடு மக்களாகச் சமமாக வாழும் உரிமை பெற்று, தன்னுடைய தாத்தனும் பாட்டனும் பெற்ற அவமானம் நீங்கி இன்று தன்மானத்தோடு வாழ்ந்துகொண்டிருக்கக் கூடிய தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களில் சிலரே பல்வேறு ஆதிக்க சக்திகளின் கைப்பாவையாகி ~பெரியாரால் எல்லாம் கெட்டுவிட்டது!| என்று கூறுவதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.

இன்றும் பெரியாரால் வாழ்கிறோம் என்று உலகெங்கிலும் நன்றியுடன் வாழ்த்தக்கூடிய  தமிழர் பலகோடி இருக்கிறார்கள். நன்றியுள்ளவர்களான நாமும் பெரியாரைப் போற்றுவோம். அவர் வழி நடந்து அவர் காண விரும்பிய சமுதாயம் அமைக்கப் பாடுபடுவோம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக