செவ்வாய், 2 மே, 2017

விஸ்வ கர்ம ஜெயந்தியாம்!

விஸ்வ கர்ம ஜெயந்தியாம்!


உலகம் முழுவதும் மே முதல் நாள் தொழிலாளர் நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் இயக்கம் - தனது சர்வதேச சித்தாந்த திணிப்புத் தந்திரத்தின் அடிப் படையில் இந்த மே தினம் திணிக்கப்பட்டுள்ளதாம். அழுத்த மான தேசிய கலாச்சாரம் கொண்ட பாரதம் அதற்குத் தலைவணங்கக் கூடாதாம். மாறாக செப்டம்பர் 17 அன்று ‘விஸ்வ கர்ம ஜெயந்தி’தான் கம்பீரமான தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்படவேண்டும். சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள பூங்காவிற்கு தி.மு.க. ஆட்சியில் மே தினப் பூங்கா என்று பெயர் சூட்டப்பட்டது அல்லவா - அந்தப் பெயரை நீக்கிவிட்டு, ‘‘விஸ்வ கர்மப் பூங்கா’’ என்று பெயர் சூட்டப்படவேண்டுமாம்.
இவ்வளவையும் எழுதுவது - ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதம்‘ (5.5.2017).
எதிலும் இந்தக் கூட்டத்திற்குப் பார்ப்பனக் கலாச்சாரப் பார்வைதான் - அதைத்தான் இந்துக் கலாச்சாரம் என்று பெயர் சூட்டுவார்கள்!
இந்துத்துவா பார்வையில் சொல்லவேண்டுமானால், தொழிலாளர்கள் கடினமான வேலை செய்வது - போதிய வருவாயின்றி அல்லல்படுவது என்பது எல்லாம் - கர்மப் பலன் என்பதே! அதற்காகப் போராடுவது என்பதுகூட கர்மப்பலனுக்கு எதிரான ஒன்றே!
உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் மே தினம் இந்த இந்துத்துவாவின் இடுப்பு எலும்பை முறிக்கும் நாளாகக் கொண்டாடப்படவேண்டும். அந்நாளில் இந்துத்துவாவின் தோலை உரிக்கும் பிரச்சாரத்தை மிகப்பெரிய அளவில் மேற்கொள்வதே சரியானதாக இருக்க முடியும்.
சூத்திரர்கள் யார் என்று மனுதர்ம சாத்திரம் கூறுவதைக் கவனித்தால் தொழிலாளர்கள் பற்றிய பார்ப்பனீயத்தின் கண்ணோட்டம் எத்தகையது என்பது எளிதில் விளங்கும்.
சூத்திரன் என்றால் யார்? இதோ இந்துத்துவாவின் மனுதர்மம் கூறுகிறது.
‘‘யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டுவரப்பட்டவன்; பக்தியி னால் வேலை செய்கிறவன்; தன்னுடைய தேவடியாள் மகன்; விலைக்கு வாங்கப்பட்டவன்; ஒருவனால் கொடுக்கப் பட்டவன்; குல வழியாக தொன்றுதொட்டு வேலை செய் கிறவன்; குற்றத்திற்காக வேலை செய்கிறவன் எனத் தொழி லாளிகள் ஏழுவகைப்படுவர்’’ (மனுதர்மம், அத்தியாயம் 8; சுலோகம் 415).
இதன்மூலம் அறியப்படுவது என்ன? சூத்திரர்கள் என்றால், தொழிலாளர்கள்தான். தேவடியாள் மகன் உள்பட ஏழுவகைப்படுவர் என்பதுதானே இந்து மதம்? இந்து ராஜ்ஜியத்தைக் கொண்டுவரத் துடிப்பவர்களின் தொழிலாளர் கொள்கை எத்தகையது என்பது விளங்கவில்லையா?
விவசாயத்தைப் பாவத் தொழில் என்று கூறும் மனு தர்மத்தை இந்தியாவின் அரசமைப்புச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று கூறுகிறவர்கள்  தொழிலாளர்கள்பற்றிப் பேசிட சற்றும் தகுதி உடையவர்கள்தானா?
மன்னார்குடி அரசில் உள்ள வடுவூர் (1921) என்னும் கிராமத்தில் ஒரு பார்ப்பனக் குடும்பம் விவசாயத்தில் ஈடுபட்டது என்பதற்காக, அவர்கள் கொடுத்த தட்சணையை வாங்கிட மறுத்தவர்தான் (மறைந்த) காஞ்சிபுரம் சங்கராச் சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்; பிழைப்புக்காக உடலால் உழைப்பது என்ற பாவத்தைச் செய்த பிராமணர்களிடமிருந்து தாம் காணிக்கை எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விட்டார் சங்கராச்சாரியார்.
அந்த இரு பார்ப்பனர்களும் காந்தியாருக்குக் கடிதம் எழுதி விளக்கம் கேட்டனர். ‘‘கொடுமையான ஒரு சமூகத்திலிருந்து விலக்கி வைக்கப்படுவது ஒரு சிறப்புதான். அதை வரவேற்க வேண்டும்‘’ என்று பதில் எழுதியவர் காந்தியார்.  (ஆதாரம்: ‘‘தமிழ்நாட்டில் காந்தி’’, பக்கம் 378).
‘‘மே முதல் நாளை தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் கூடாது என்பதற்கு ஆர்.எஸ்.எஸ். இதழ் சொல்லும் காரணம் விசித்திரமானது.
1884 இல் அமெரிக்காவிலுள்ள சிகாகோவில் வேலை நேரம் எட்டு மணிநேரமாக நிர்ணயிக்கவேண்டுமென தொழி லாளர்களும், அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் வன்முறையில் முடிந்து போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் 6 தொழிலாளர்கள் மரணமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 4 ஆம் தேதியன்று நடத் திய போராட்டத்தில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கும், போலீசிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமான போலீசார் காயமடைந்தனர். 4 தொழிலாளர்களுக்குத் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்டது. இந்த துக்க சம்பவம்தான் மே தினத்திற்கு உருவம் கொடுத்தது. 1920 இல் ரஷ்யா முதல் முறையாக மே 1 ஆம் தேதி விடுமுறை அறிவித்தது.
இந்தியக் கலாச்சாரத்திற்கு இந்தக் கொண்டாட்டம் ஏற்றதல்ல. ஏனெனில் மரணமடைந்த சம்பவம் துக்க தினம்; அதைக் கொண்டாடுவது நமது மரபல்ல’’ என்று எழுதுகிறது ஆர்.எஸ்.எஸின் விஜயபாரதம்.
அப்படியென்றால், இந்து மதத்தின் முக்கிய பண்டி கையான தீபாவளியைக் கொண்டாடலாமா? தீபாவளி என்பது நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் அல்லவா? ஓணம் பண்டிகையைத்தான் கொண்டாடலாமா? மகாவிஷ்ணு குள்ளப் பார்ப்பான் (வாமன அவதாரம்) உருவெடுத்து மாவலி சக்ரவர்த்தியைக் கொன்ற நாள்தானே இந்து மதத்தின் ஓணம் பண்டிகை.
தீபாவளியையும், ஓணத்தையும் கொண்டாடக்கூடாது - காரணம் அவை கொலையை அடிப்படையாகக் கொண் டவை - அது, பாரத கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என்று அடுத்த இதழ் ‘விஜயபாரதத்தில்’ அறிவிப்பு வெளிவருமா?
எங்கே பார்ப்போம்!


Read more: http://www.viduthalai.in/page-2/142239.html#ixzz4fw4glAz4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக