செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஆபத்துக்கு உதவாததை அப்புறப்படுத்துங்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சென்னை, கடலூரை மழை ஒரு வழிப்படுத்தி விட்டது. அதுவும் சென்னையில் ஏரிகள் நிரம்பி, அதைத் திறந்துவிட்டு, இதுவரை நீரைப்பார்க்காத பகுதிகளில் எல்லாம் வெள்ளம் பாய்ந்து பல லட்சம் மக்களை மீளமுடியாத துயரத்தில் தள்ளிவிட்டுள்ளது.

எப்பவும் மழை என்றால், அது ஏழைகளின் பகுதிக்கும் குடிசைக்குள்ளும் பாயும் என்பது மாறி, இம்முறை நடுத்தர மற்றும் உயர்வருவாய் பெறும் மக்கள் வாழும் பகுதியிலும் வெள்ளம் பாய்ந்து, பணம் இருந்தும் எதுவும் கிடைக் காமல் நெஞ்சளவு தண்ணீரில் குடும்பத்தோடு கதறும் நிலைமையை உருவாக்கி விட்டது.

மாநிலத்தில் அரசு ஒன்று இயங்குகிறதா? என்ற கேள்வியை அனைவருக்கும் ஏற்படுத்தி விட்ட இந்த மழையும் வெள்ளமும், அத்தோடு, ஈர நெஞ்சங்கள் இந்த மண்ணில் இன்னும் குறையவில்லை என்பதையும் எடுத்துக்காட் டியுள்ளது.

பல திசைகளில் இருந்தும் ஆதரவுக் கரங்கள்; மதத்தைத் தாண்டி, ஜாதியைப் புறந்தள்ளி, தந்தை பெரியார் காண விரும்பிய கடவுளை மற  மனிதனை நினை எனும் மனித நேயத்தை இயற்கை மழையின் மூலமாகவும் வெள்ளத்தின் காரணமாகவும் பலரின் நெஞ்சில் விதைத் துள்ளது.

பல தன்னார்வ அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அலை அலையாய்; தனி நபர்கள் தங்களால் இயன்ற வகையில் உதவிக் கரம் என தங்களின் பங்களிப்பை, ஓர் அரசு செய்ய வேண்டியதை நம்மால் முடிந்த அளவு செய்வோம் என விளம்பரம் இன்றிச் செய்து வரும் போக்கு, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ஓர் செயல்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் பெரியார் திடலில் வெள்ள நிவாரணப் பணிக்காக தொடங்கிய சிறு ஏற்பாடு, பலரும் மலைக்கும் வண்ணம் சிறப்பாக நடக்கிறது; இதற்கு உறுதுணையாக, பல்வேறு இடங்களில் இருந்து தங்களுக்கு கிடைத்த பல பொருள் களையும் லாரிகளிலும், கார்களிலும், ஆட் டோக்களிலும் தந்த வண்ணம் உள்ளனர். இதில் மதம் இல்லை; மொழி இல்லை; ஜாதி இல்லை; மனித நேயம்  ஆம் மனித நேயம் மட்டும்தான் வெளிப்படுகிறது.

யாரும் எதிர்பாராத நிலையில் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு அதன் காரணமாக தென் சென்னையின் பல பகுதிகளிலும் தண்ணீர் வீட்டின் முதல் தளம்வரை வந்து, மக்கள் தங்கள் உடமைகளை இழந்ததோடு, வீட்டின் மேல்தளத்தில் ஓரிரு நாட்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை; வெள்ளம் சூழ்ந்ததோடு, மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருளும் நிறைந்து, வாழ்க்கையே சூன்யமான நிலை ஏற்பட்டது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு.

இந்த நிலையில் எங்கள் மசூதியில் இடம் இருக்கிறது; தேவாலயத்தில் இடம் இருக்கிறது; தங்கிக் கொள்ள வாருங்கள் என்ற செய்தி வருகிறது. தனிப்பட்ட சிலர் தங்கள் இல்லத்தில் இடம் இருக்கிறது வாருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தியை அனுப்புகிறார்கள். சில திரைப்பட நடிகர்கள் தங்களுக்குச் சொந் தமான திருமண மண்டபத்தைப் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாகத் தருகிறார்கள்.

கல்விக்கூடங்கள் அனைத்தும் மக்கள் தங்கும் அரங்குகளாக ஆக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மை மக்களின் வழிப்பாட்டுத் தலங் களான கோயில்கள், பாதிக்கப்பட்ட மக்களுக் காக திறந்திருக்கும், வாருங்கள் என்று சொல்ல எந்த சங்கரமடத்து சவுண்டியும் வரவில்லை; சீரங்கத்து ஜீயரும் பேசவில்லை. இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஹிந்துக்கள்; இவர் களுக்கான முகவரி நாங்கள் தான் என்று சொல் லும் எச்சைகள், கச்சையைக் கட்டிக்கண்டு களத்திற்கு வருவார்கள் என்று பார்த்தால், ஒருத்தனையும் காணோம்.

ஆக இப்போதாவது புரிகிறதா? நம் அனை வரின் பணத்தில் கட்டப்பட்ட கோயில்கள் எதுவும் ஆபத்துக் காலத்தில் கூட உதவாது என்பது. ஆபத்தில் உதவாத எதுவும் நமக்கு எதற்கு? என அப்புறப்படுத்த மக்கள் தயாராக வேண்டும். அது கோவிலாக இருந்தால் என்ன, ஆட்சியாக இருந்தால் என்ன?

            -குடந்தை கருணா

வியாழன், 3 டிசம்பர், 2015

திராவிடர் தொழிலாளர் கழகம் துவங்கப்படவேண்டிய அவசியம் என்ன?

திராவிடர் தொழிலாளர் கழகம் துவங்கப்படவேண்டிய அவசியம் என்ன?
                     
                                           நம்முடைய தோழமைக்கும் பாசத்திற்கும் உரிய சசோதரர்கள் கூட திடீரென்று இப்படி ஒரு கழகத்தை துவங்குகிறார்கள் என்று கொஞ்சம் குழப்பத்தோடு நோக்குகிறார்கள்
                                            அவர்களுக்கு உண்மையைத் தெளிவுபடுத்த வேண்டியது நமது கடமை  நம்மை பொறுத்தவரையிலே இப்படி ஒரு கழகம் துவங்குவது என்பது, தந்தை பெரியார் அவர்கள் நீண்ட காலமாக எந்த கருத்துக்களைத் தொழிலாளர்கள் மத்தியில் ஆழமாக விதைக்க வேண்டுமென்று விரும்பினார்களோ, அந்த பணியை நாம் விவசாயத் தொழிலாளர்கள் மத்தியிலே ஏராளமாக விதைத்து, ஒரு குறிப்பிட்டத் தகுந்த வெற்றியினையும் பெற்றிருக்கிறோம்
                                                                                                                -தொடரும்

பிள்ளையாருக்கு விடுமுறையா??

   
  பிள்ளையார் பிறந்தநாளுக்கு விடுமுறையாம். இது என்ன காலத்தின் கொடுமை. 2014ம் ஆண்டுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் என்ன விளைவுகள் வரும் என்பதை எடுத்துச்சொல்லி திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பாக அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களுக்கும் கடிதம் கொடுத்து நேரிலும் பேசினோம். நாம் எடுத்துக் கூறிய காரணத்தின் நியாயத்தை உணர்ந்துகொண்ட அனைத்துப் பணிக்குழு உறுப்பினர்களும் 2015ம் ஆண்டில் விடுமுறைப் பட்டியலில் இருந்து விநாயகர் சதுர்த்தியை நீக்கி விட்டார்கள். நமது சார்பாக அனைவருக்கும் நன்றி தெரிவித்தோம். ஆனால் தற்பொழுது 2016ம் ஆண்டிற்கான விடுமுறைப் பட்டியலில் விநாயகர் சதுர்த்தியை இணைத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. இது உண்மையா? என்பது தெரியவில்லை. உண்மையாக இருக்குமானால் இது மிகவும் வருத்தத்திற்குரியது.

மதப் பண்டிகைகளிலேயே மற்ற பண்டிகைகளுக்கும் விநாயகர் சதுர்த்திக்கும் ஒரு வேறுபாடு உண்டு. மற்ற பண்டிகைகளை மதநம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே தங்கள் வீடுகளிலோ வழிபாட்டுத் தலங்களிலோ யாருக்கும் எந்த இடைய10றும் இல்லாமல் கொண்டாடுவார்கள்.

ஆனால் இந்த பிள்ளையார் சதுர்த்தி மட்டும் மதவெறியர்கள் கைகளில் சிக்குண்டு அது மதவெறியைத் தூண்டுவதற்கான கருவியாகப் பயன்படுகிறது. உண்மையான பக்தர்கள் மிகச்சிறிய பிள்ளையார் பொம்மையை களிமண்ணால் செய்து தங்கள் வீட்டு கிணற்றிலோ குளங்களிலோ கரைத்துவிட்டுப் போய்விடுவார்கள். அவ்வளவுதான். ஆனால் இப்பொழுது மதவாதிகள் அதைக் கையிலெடுத்து 50 அடி 60 அடி என்று பிள்ளையார் பொம்மைகளைச் செய்து வீதிக்கு வீதி மூலைக்கு மூலை சந்துக்கு சந்து என்று நான்கு நாள் அய்ந்து நாள் என்று வைத்து ஊர்வலம் செல்வதாகப் பெயர்பண்ணி எங்கெல்லாம் மசூதி இருக்கிறதோ எங்கெல்லாம் இஸ்லாமியர் அதிகம் குடியிருக்கிறார்களோ அங்கெல்லாம் ஊர்வலமாகச் சென்று இஸ்லாமியருக்கு எதிராக முழக்கமிட்டு மதக்கலவரத்தைத் தூண்டி வருகிறார்கள். அவர்களிடம் பக்தி என்பது எதுவும் கிடையாது. அவர்களிடம் இருப்பது மதவெறியே!

இந்த விநாயருக்கு விடுமுறை விடுவது என்பது அத்தகைய மதவெறியர்களுக்கு ஊக்கம் கொடுப்பதாக அமையுமே தவிர இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை. விருப்ப விடுப்பு நான்கு நாள் வருவதால் தொழிலாளர்களுக்கு அதனால் இலாபம்தான். ஏற்கனவே நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு விடப்பட்டதற்கான ஆதாரங்களும் நம்மிடம் இருக்கின்றது. கடந்த 2011ம் ஆண்டு நமக்கு நான்கு நாட்கள் விருப்ப விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த விருப்ப விடுப்பு இருந்தால் எத்தனையோ ஈட்டிய விடுப்புக்களும் மருத்துவ விடுப்புக்களும் தொழிலாளர்களுக்கு மீதம் ஆகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளது. தனக்குத் தேவையான நாட்களில் ஊழியர்கள் விருப்ப விடுப்பினை எடுத்துக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அதைவிடுத்து ஏன் மதப் பண்டிகைக்கு விட வேண்டும். ஏதாவது ஒரு விடுமுறை விட்டுத்தான் ஆக வேண்டும் என்றால் இந்நிறுவனம் இங்கு அமைவதற்குக் காரணமாக இருந்த பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளுக்கு விடலாமே! 

நாட்டில் இன்னும் மதவாத செயல்கள் தலைவிரித்தாடுகின்றதே. சகிப்பின்மை பற்றி பாராளுமன்றமே முடங்கும் அளவுக்கு நாட்டில் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் அவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதுபோல் விநாயகர் சதுர்த்திக்கு விடுமுறை விடத்தான் வேண்டுமா? 

அனைத்து உறுப்பினர்களும் இதனை ஒத்துக் கொள்ளாமல் ஒரு சிலர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள் என்கிறபோது பெரும்பான்மை என்று கூறி இதனை அமுல்படுத்துவது சரியாக இருக்குமா என்பதை பணிக்குழு உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நிர்வாகம் கொடுக்கும் நெருக்கடிக்கு இடம் தர வேண்டாம் என்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக திராவிட இயக்கத்தைச் சார்ந்த பணிக்குழு உறுப்பினர்கள் இதனைப் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் என்று உரிமையுடன் கேட்டு;கொள்கிறோம்.

புதன், 2 டிசம்பர், 2015

பார்ப்பான் புரட்சி செய்வானா?

                                    "புரட்சி மனப்பான்மையுடையான் போப் ஆகவே மாட்டான். போப் ஆகும் மனிதன் புரட்சி செய்ய விரும்பவும் மாட்டான். "இந்த அபிப்பிராயங்கள் இந்தியப் பார்பனர்களுக்கும் பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறேன் போப் ஆகிறவன் புரட்சி செய்ய விரும்ப மாட்டான் என்றால், பார்ப்பனனாகப் பிறந்தவனும் புரட்சி செய்ய விரும்பமாட்டான் என்பது நிச்சயம். பார்ப்பானாகப் பிறந்தவன் சமூகப் புரட்சிக்காரனாயிருப்பான் என்று எதிர் பார்ப்பது ஒரு சந்தர்ப்பத்தில் தோழர் லெஸ்வீ ஸ்டீபன் கூறியதுபோல நீலக் கண் உடைய குழந்தைகளையெல்லாம் கொன்றுவிட வேண்டும்மென்று பிரிட்டிஸ் பார்லிமெண்ட் சட்டமியற்றும் என எதிர்பார்ப்பதற்கே ஒப்பாகும்
               
                                                                                 -டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
                                                                                 "சாதியை ஒழிக்க வழி"-பக்கம் 83

அண்ணல் அம்பேத்கர் நவீன மனுவா?


              
                 அரசியல் சட்டம் வரைந்த நம் தலைவர் அண்ணல் அம்பேத்கரை நவீன மனு என்று கூறுவார்கள். காரணம் என்ன? நமது நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து சாம்ராஜ்யங்களிலும் (அசோக சாம்ராஜ்யத்தைத் தவிர) மனுதர்மமே சட்டமாக இருந்தது. அதனால் சட்டத்தை வரைந்தளித்த அண்ணலை நவீன மனு என்கிறார்கள். அந்த மனுதர்மம்தான் வர்ணாசிரமம் என்ற பெயரால் ஜாதியைப் புகுத்தியது. தீண்டாமையை வலியுறுத்தியது. உழைக்கும் மக்களை பல்வேறு கூறுகளாக்கி அவர்களை அடிமைப்படுத்தியது. அந்த மனுவின் காரணமாகவே உழைத்துக் கொடுப்பவன் கீழ்ஜாதியாகவும் எந்த வித உரிமையும் இல்லாதவனாகவும் உழைக்காமல் உண்டு கொழுக்கும் சோம்பேறி மேல்ஜாதியாகவும் எல்லாவற்றையும் அனுபவித்தும் வந்தான்.

                         இடையில் வெள்ளைக் காரன் வந்ததால் அதில் சற்று மாற்றம் ஏற்பட்டது. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத உயர்ஜாதிக் கூட்டம் வெள்ளைக் காரன் இந்த நாட்டை விட்டுப் போன பிறகு மீண்டும் மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று துடித்தது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொன்னவர் திலகர்.

                             ~~நமது சட்டம் மனுஸ்மிருதிதான் என்று கூறிய திலகர், கற்றறிந்தவர்கள் மற்றும் பிராமணர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று இந்த மனுஸ்மிருதிச் சட்டம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ( Tilak’s speech at Yeotmal on 9th jan 1917)

                                  சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதாகச் சொல்லப்பட்ட அத்தனைத் தலைவர்களும் மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியார்கூட வருணாசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். மதன் மோகன் மாளவியாää சர்தார் வல்லபாய் பட்டேல் உட்பட வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும் வருணாசிமத்தின் மீதும் மனுதர்மத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கருதப்பட்ட வ.வெ.சு.அய்யர்ää சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும் இராஜகோபாலாச்சாரியாரும் மனுதர்மத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான். அதன் காரணமாகத்தான் அன்றைய சென்னை மாகாணத்தில் இரண்டுமுறை பிரதமர் பதவி வகித்த இராஜகோபாலாச்சாரி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி தேவையில்லை என்று கூறி பள்ளிகளை இழுத்து மூடினார். அத்துடன் வருணாசிர தர்மத்தின்படி அவரவரும் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

                    அன்று சட்டம் படித்தததாகச் சொல்லப்பட்ட பலரும் பார்ப்பனர்களே! நீதிபதிகள் அனைவரும் பார்ப்பனர்களே! இவர்களில் யாராவது சுதந்திர இந்தியாவிற்கான சட்டத்தை எழுதியிருந்தால் நிச்சயம் மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசியல் சட்டமாக ஆக்கப்பட்டிருக்கும்.

             மேற்கூறிய எவரிடமும் அந்தப் பொறுப்பு செல்லாமல் அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் சென்றதால்தான் இந்தியாவிற்குப் புதிய ஒரு அரசியல் சட்டம் கிடைத்தது. ஏனெனில் மனுதர்மத்தின் அத்தனை கொடுமைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்தவர் அண்ணல் அம்பேத்கர். தந்தை பெரியார் அவர்களும் மனுதர்மத்தை நார் நாராhகக் கிழித்தெறிந்தார். இருபெரும் தலைவர்களும் அந்த நூலினைத் தீயிட்டுப் பொசுக்கினார்கள். அதனால்தான் அண்ணல் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக மனுதர்மத்தை அரசியல் சட்டத்தில் ஏற்றாமல் பார்த்துக் கொண்டார். 

                        இன்று இந்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ள பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு மனுஸ்மிருதிதான் சட்டமாக ஆக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட அமைப்பு. அதனால்தான்; அவர் இந்திய அரசியல் சட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தபோதும் இந்தியா குடியரசாக ஆனபோதும் ஆர்எஸ்எஸ் சின் ஆர்கனைசர் ஏடு மனுஸ்மிரிதியில் இருந்து எந்த அம்சமும் அரசியல் சட்டத்தில் இடம்பெறவில்லை என்று குறைகூறிக் கட்டுரை எழுதியது. 

                  அதனுடைய பல்வேறு பிரிவுகளும் இன்றைக்கும் மனுஸ்மிருதியைச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று பேசி வருகின்றன. அண்மையில் காலமான விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 2014 நவம்பரில் டெல்லியில் நடந்த விஷ்வ இந்து பரிஷத் மாநாட்டில் வெளிப்படையாகவே மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று பேசினார். அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம் கலந்துகொண்டார்.
 
               அந்த ஆர்எஸ்எஸ் சின் அரசியல் அமைப்புதான் பாரதீய ஜனதா. அவர்களின் உள்ளத்தில் இன்னமும் மனுதர்மம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனுதர்மத்தை அமுல்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடாகத்தான் இன்றைக்கு அவர்களுடைய பல்வேறு நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. அதனை அனுமதித்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுள்ள இன்றைய வளர்ச்சி அத்தனையும் பறிபோய்விடும். மீண்டும் அடிமைப் படுகுழிக்குத் தள்ளப்படுவோம். அத்தகைய நிலை வராமல் தடுக்க அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் உறுதியேற்போம்.!