செவ்வாய், 15 மார்ச், 2016

ஜாதி ஆணவக் கொலை!

                       ஒரு ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் பலபேரும் கூடியுள்ள பொது இடத்தில் துள்ளத் துடிக்க அந்த இளைஞனை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். வெட்டப்பட்ட பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். காரணம் அந்த இளைஞன் ஒரு தலித் என்பதுதான். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு? .
எண்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஜாதி பெருமைக்குரியதல்ல. அத்தகைய ஜாதிப் பட்டங்களை அனைவரும் தூக்கியெறிய வேண்டும் என்று சொன்ன பெரியார் வாழ்ந்த மண்ணில் இப்படிப்பட்ட செயல்கள் நாம் அனைவரும் நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்று கருதத் தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?
    
         ஜாதியை ஒழிக்கச் சொன்ன பெரியார் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். பெரியார் தொண்டர்கள் பலரும் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்டனர். அதனை பெருமைக்குரிய விசயமாகப் பறைசாற்றினர். பெரியார் நடத்துகின்ற மாநாடுகளில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம் நடைபெறுவதுண்டு. ஜாதியைப் பற்றிப் பேசுவதற்கே அனைவரும் வெட்கப்பட்ட காலத்தை பெரியார் உருவாக்கியிருந்தார்.
                         ஆனால் அண்மைக் காலமாக ஜாதீய இயக்கங்கள் தலைதூக்க ஆரப்பித்துள்ளன. ஜாதியைப் பெருமையாகப் பேசக்கூடிய சூழ்நிலையை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதி ஒழிப்பு மாநாடுகள் நடந்த தமிழகத்தில் ஜாதி மாநாடுகள் நடத்தி ஜாதி பெருமைக்குரியது. ஜாதி பாதுகாக்கப்பட வேண்டும். ஜாதிக்குள்ளேயேதான் திருமணங்கள் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் காப்பாற்றப்படும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஜாதியைப் பாதுகாக்கக் கூடிய சுளுளு இதற்கு உறுதுணையாக இருந்து அதனை ஊக்குவித்து வருகிறது. நம்முடைய மதம் இந்து மதம். நாம் அனைவரும் இந்துக்கள். நமது கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் என்று பேசக் கூடியவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த, இந்துக் கடவுளை வணங்குகிற இந்துக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிற இருவேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் மட்டும் அதனை எதிர்ப்பது ஏன்? அதுவும் உயர்ஜாதி ஆண் கீழ்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்வதை அங்கீகரிப்பவர்கள் கீழ்ஜாதி ஆணை ஒரு உயர்ஜாதிப் பெண் திருமணம் செய்வதை மட்டும் அங்கீகரிக்க மறுப்பது ஏன்? இந்துமதம் என்பது ஒரே  மதம் இல்லையா? இந்துக் கலாச்சாரம் என்பது ஒரே கலாச்சாரம் இல்லையா? இந்துப்பண்பாடு என்பது ஒரே பண்பாடு இல்லையா?

             ஜாதிகள் அப்படியே இருக்க வேண்டும். ஆனால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று சுளுளு சொல்கிறது. அது எப்படி ஜாதிகளை வைத்துக் கொண்டு அனைவரையும் சமமாக நடத்த முடியும்? ஒரு கோயிலில் மணியடிக்கிற அர்ச்சகரும் இந்து. சாக்கடையில் மலம் அள்ளுகிற தோட்டியும் இந்து. இருவரையும் சமுதாயம் ஒரே அந்தஸ்தோடு நடத்துமா? பார்ப்பானை எல்லோரும் சாமி என்று அழைக்கிறார்கள். ஆனால் தோட்டி மற்றவர்களை சாமி என்றுதானே அழைக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது? ஜாதியை வைத்துக்கொண்டு சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது. சமூக ஒற்றுமை உருவாகாது.

               எனவே ஜாதி ஒழிப்பு ஒன்றே சமுதாய சமத்துவத்தை உருவாக்கும். ஜாதி ஒழிப்பைப்பற்றிப் பேசுவதற்கே முற்போக்கு இயக்கங்கள் என்பவைகூடத் தயங்குகின்றன. தீண்டாமை ஒழிப்பைப்பற்றிப் பேசுகின்றவர்கள் ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுவதில்லை. தீண்டாமைக்கு அடிப்படை ஜாதிதானே? ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும்?

     ஜாதியை ஒழிக்க சரியான வழிகளைச் சொன்னவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மட்டுமே. அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் ஜாதியையும் தீண்டாமையையும் ஒழிக்கக் களம் காணுகிறது திராவிடர் கழகம். எல்லா அரசியல் கட்சிகளும் அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும் இயக்கமான திராவிடர் கழகம் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டினை வரும் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் சிறுகனூரில் நடத்துகிறது. அம் மாநாட்டிற்கு அனைவரும் வாரீர்! வாரீர்!! என அன்புடன் அழைக்கின்றோம். ஜாதி ஒழிந்த தீண்டாமை ஒழிந்த நல்ல சமுதாயத்தை அமைக்க உறுதியேற்போம். அத்தகைய சமுதாயமே ஜாதியக் கவுரவக் கொலைகள் நடைபெறாத கண்ணியமிக்க சமுதாயமாகத் திகழ முடியும்.

நீதிமன்றம் செல்ல வேண்டியது அவசியம்தான்

                        நமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சமூக அநீதிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு சமூகநீதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அது ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவது போலவும் மற்ற மக்களுக்கு இல்லாதது போலவும் சிலர் பேசி தங்களது அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். வாராது வந்த மாமணியாம் வி.பி.சிங் அவர்கள் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பல பொதுத்துறை மற்றும் அரசுத்துறைகளில் அது நிறைவேற்றப்படவே இல்லை.

                              அத்துடன் முதலில் பொதுப்போட்டியை நடத்தி அதில் யாரெல்லாம் தகுதி திறமையோடு அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் இதர பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் அவர்களை பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகுதான் இட ஒதுக்கீட்டு முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால் நமது நிறுவனத்தில் பொதுப்போட்டி என்பதை அதாவது OC  என்பது Open Competition  என்று எடுக்காமல் Other Community  என்று எடுத்தார்கள். அதனால் ஒட்டுமொத்த OBC மற்றும்SC ST அனைவருக்குமே பாதிப்புத்தான். அதனை எதிர்த்து இரண்டாவது பேட்ஜ் ஆர்டிசான் தேர்வின் போது நீதிமன்றம் சென்றது CITU   மற்றும் BP.Dr.AEU  ஆகிய இரண்டு சங்கங்கள்தான். அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அந்த தேர்வு முறையே ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டதில் 225 ஆர்டிசான்களில் கூடுதலாக பொதுப்போட்டியில் 55 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்களும் 11 பேர் தாழ்த்தப்பட்டவர்களும் தேர்வானார்கள். அதனைத் தொடர்ந்து அதற்குப் பிறகு வந்த அனைத்துத் தேர்வுகளுமே அப்படி நடத்தப்பட்டதில் பல பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பொதுப்போட்டியில் தேர்வானார்கள்.

                                    இன்றைக்கு வீடு ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் செல்வோம் என்று சொல்பவர்கள் அப்பொழுது யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. அந்த தீர்ப்பினால் அதிகம் பலன் பெற்றவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்கள்தான் என்பதற்காக ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை. நன்றி சொல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. அவர்களை எதிரியாக நினைக்காமல் இருந்தாலே போதுமானது. ஆனால் ஒரு சிலரின் சுயநலத்துக்காக வேண்டுமென்றே ஜாதி மோதல் துவங்குவது யாருக்கும் நல்லதல்ல.

                            2006லேயே முதலில் பொதுப்போட்டியை நடத்தி அதன் பிறகுதான் இட ஒதுக்கீட்டின்படி நிரப்ப வேண்டும் என்று தெளிவாக நீதிமன்றத் தீர்ப்பு இருந்தாலும் 2007 முதல் 2011 வரை வளாகத் தேர்வில் நடைபெற்ற பொறியாளர் நியமனத்தில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. பொதுப்பிரிவில் இதர பிற்படுத்தப்பட்டவர் ஒருவரும் இடம் பெறவில்லை. தாழ்த்தப்பட்டவர் இரண்டே இரண்டுபேர் தேர்வானார்கள். அதிலும் கொடுமை என்னவென்றால் இதர பிற்படுத்தப்பட் மக்களுக்கு 27 சதவிகிதம் இடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் வெறும் 18.85 சதவிகித இடங்களையே இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது. (இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது) இன்றைக்கு வீடு ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் செல்வோம் என்று சொல்பவர்கள் அப்பொழுது யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. பொங்கி எழவும் இல்லை. கார்ப்பரேட் கதவையும் தட்டவில்லை.
இங்கு மட்டுமல்ல. இந்திய முழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் IIT, IIM, AIMS  போன்ற கல்வி நிறுவங்களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இரண்டு பேருடைய இடங்களையும் முன்னேறிய உயர்ஜாதியினரே தட்டிப்பறித்து அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் யார் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இணைந்து போராட வேண்டிய இரு பிரிவினரும் மோதிக்கொள்வது இரத்தம் குடிக்கும் ஓநாய்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆனால் ஆடுகளுக்கு அது நல்லதல்ல. நாங்கள் புலிகள். நாங்கள் சிங்கங்கள். எங்களை சீண்டாதே என்பதுகூட நல்லதுக்கல்ல. அனைவரும் மனிதர்களாக மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் ஆதாயம் அடைவதற்காக அப்பாவி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை மோத விட நினைக்காதீர்! எனக்கும் கொடு என்று கேட்பதுதான் அறிவுடைமை. அவனுக்குக் கொடுக்காதே என்பது அறியாமை மட்டுமல்ல, அயோக்கியத்தனம். எனக்கு மேல் எவன் இருந்து என்னை அவமதித்தாலும் என்னை இழிவுபடுத்தினாலும் என் உரிமையைப் பறித்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் எனக்குக் கீழே அடிமையாக யாராவது இருக்க வேண்டும். அவன் முன்னேறக்கூடாது என்கின்ற மனப்பான்மை இருக்கின்றவரை இந்த சமுதாயம் உருப்படாது. சம்மந்தப்பட்டவர்கள் திருந்தவேண்டும். இல்லையேல் திருத்தப்படுவார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்ட மார்ச் 19, 20ல் சிறுகனூரில் நடைபெற உள்ள ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி மாநாட்டிற்கு வாரீர்! வாரீர்!! என அழைக்கிறோம்.

டிஜிட்டல் இந்தியா!


திருவிழாக் கூட்டத்தில் திருடப் போன கும்பலில் ஒருத்தன் மட்டும் மாட்டிக் கொண்டு தர்ம அடி வாங்கினால் மற்ற திருடனெல்லாம் என்ன செய்வான் தெரியுமா? தர்ம அடி கொடுப்பவர்களை விடவும் வேகமாக சத்தம் போட்டு “ ஏண்டா படவா ராஸ்கல், எவ்வளவு தைரியமிருந்தால் இப்படிப் பட்டப் பகலில் பிக்பாக்கெட் அடிப்பே?” என்று மத்தவங்களைவிட பலமாவே அடிப்பாங்க. பார்க்கிறவங்களுக்கு “ ஆஹா, இவன் ரொம்ப யோக்கியன் போல இருக்கு, நம்மளவிட வேகமா அடிக்கிறான”; என்று வெள்ளேந்தியா நினைப்பாங்க. அவங்களப் பாத்து இந்தக் கூட்டுக் களவாணிப்பய என்ன செய்வான் தெரியுமா? “சார் இவன சும்மா விடப்புடாது சார், போலீஸ்ல புடுச்சிக் குடுத்து உள்ள போட்டு முட்டிக்கு முட்டி தட்டச் சொல்லனும் சார்” என்று கூப்பிடுவான். அந்த அப்பாவி பொது ஜனம் தனக்கு தலைக்கு மேல வேலை இருக்குதுன்னு சாக்குச் சொல்லிட்டு நழுவிடும். இந்தக் கூட்டுக் களவாணி நைசாத் தன்னோட ஆளை கும்பலிலிருந்து வெளிய கொண்டு வந்திடுவான்.

இந்தக் கதை எதுக்குன்னு கேட்கிறிங்களா?
                          ஆர்எஸ்எஸ் சின்னா ரெடி ஃபார் சோசியல் சர்வீஸ் ன்னு சொல்லி கதை விடுவாங்க. அந்த ஆர்எஸ்எஸ்ஸோட சித்தாந்தத்தை மக்களிடம் கொண்டு செல்ல பல்வேறு பெயர்களில் அமைப்புக்கள். அரசியலில் பிஜேபி. மாணவர்களிடம் ஏபிவிபி, விவசாயிகளிடம் கிசான்சங், வழக்கறிஞர்கிளிடம் அனிருத்தரர பாரத், சாமியார்களிடம் விஸ்வ ஹிந்து பரிஷத், தொழிலாளர்களிடம் பாரதீய மஸ்தூர் சங். எல்லோருக்கும் ஒரே தலைமைதான்.

அந்தத் தலைமையின் கீழ சமுதாய சேவை செய்வதாக மக்களிடம் பரவி மக்களை மூளைச்சலவை செய்வாங்க. எந்த சமுதாயத்துக்குச் சேவை என்று யாரும் கேள்வி கேட்கப்படாது. பிராமணர் மட்டும்தான் அறிவாளிகள். அவர்களிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டால் நாடே ஆகா, ஓகோ என்று ஆகிவிடும். சூத்திரராக இருந்தாலும் பிராமணர் ஆலோசனையோடு ஆட்சி நடத்தனும் என்ற திட்டம்தான் அவர்களோட திட்டம்.


அப்படி பிராமண ஆலோசனையோடு ஆட்சிக்கு வந்த சூத்திர மோடி இந்திவை டிஜிட்டல் இந்தியவா மாத்தப் போறாராம். டிஜிட்டல் இந்தியான்னா என்னான்னு ஒருத்தர் அப்பாவித்தனமாக் கேட்டாரு. அது வேற ஒன்னும் இல்லீங்க ஒரு மூணு இலட்ச ரூபாய் விவசாயக் கடன வாங்கி ஒழுங்கா தவணை கட்டிக்கிட்டிருக்கிற விவசாயி வருமானமில்லாததனால ரெண்டு தவணை கடனைக் கட்டல. அவரை போலீசு காட்டுமிராண்டித்தனமாத் தாக்கி தரதரன்னு தெருவில இழுத்துட்டுப்போகும். அது சாதா இந்தியா. ஆனா ஏழாயிரம் கோடி கடன வாங்கிட்டு யாருக்கும் தெரியாம விஜய மல்லய்யா என்கிற கோடீஸ்வரன் இந்தியவ விட்டே ஓடிப்போவான். அது அரசாங்கத்துக்கும் தெரியாது. போலீசுக்கும் தெரியாது. அதுக்குப் பேரு டிஜிட்டல் இந்தியான்னாரு விவரம் தெரிஞ்ச ஒருத்தரு.


அந்த டிஜிட்டல் இந்தியாவ உருவாக்குறதாச் சொல்லி ஆட்சியப் பிடிச்ச மோடிஜி, அருன்ஜெட்லி மூலமா ரெண்டு பட்ஜெட்டப் போட்டுட்டாரு. ரெண்டு பட்ஜெட்லயும் நம்மள மாதிரி மாசச் சம்பளம் வாங்கிக்கிட்டு ஒழுங்கா வருமான வரி செலுத்தறவங்களுக்கு வருமானவரி உச்சவரம்ப ஒரு பைசாக் கூட ஏத்தல. அது மாத்திரமில்ல. குதிரை கீழே தள்ளினதுமில்லாம குழியும் பறிச்சதாம்னு சொல்லுவாங்கல்ல, அது மாதிரி நம்மளோட வருங்கால வைப்பு நிதிக்கும் அறுபது சதவீதத்துக்கு வரி போட்டாங்க. இது யாரோட மூளையில உதிச்சதுன்னு தெரியல. இதை எதிர்த்து நாடே கொந்தளிச்சது. நாடாளுமன்றமே முடங்கியது. வேற வழியில்லாம ஆர்எஸ்எஸ் கும்பல் இப்போதைக்கு கொஞ்சம் பின்வாங்கியது.


இதை தொழிலாளிக்காகவே பாடுபடறதாச் சொல்ற BMS நியாயப் படுத்த முடியுமா? அதை நியாயப் படுத்தினா வரப்போற பங்குபெறும் சங்கத் தேர்தலில ஏமாத்தி ஓட்டு வாங்க முடியுமா? அதனாலதான் கும்பலில் மாட்டிக்கிட்ட தன்னோட சகாவ மீட்டு வெளியில கொண்டுவர்ற கூட்டுக் களவாணி மாதிரி வேறு யாரும் சத்தம் போடுறதுக்கு முன்னால முதல் முதலா கேட் மீட்டிங் போட்டு அதிகமாச் சத்தம் போட்டாங்க. அந்தச் சத்தம் பாராளுமன்றம் வரைக்கும் கேட்டு அருன் ஜெட்லி காதக் கிழிச்சதால வருங்கால வைப்புநிதிக்கான வரியை ரத்து பண்ணிட்டாங்கன்னு கூவுது.
அதை எல்லாரும் கட்டாயமா நம்பி வர்ற பங்குபெறும் தேர்தலில BMS க்கு ஓட்டுப் போட்டுருங்க. இல்லாட்டி நீங்களெல்லாம் தேசவிரோதின்னு முத்திரை குத்தி காராக்கிரகத்துல அடைக்கிற சூழ்நிலை உருவாகிடும். எச்சரிக்கையா இருங்க!

எல்லா நதிகளும் ஒரு இடத்தில்..

                       ஒரு திரைப்படத்துல நம்ம நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு அவர்கள் நான் தமிழ்நாட்டில இருக்கிற நதிகளையெல்லாம் ஒன்னா இணைக்கப் போறேன்னு பெரிய அளிவில விளம்பரம் பண்ணி எல்லோரையும் தாமிரபரணி பாலத்துக்கிட்ட வரச் சொல்லி இருப்பாரு. நதிகளையெல்லாம் இணைக்கிறதுக்கு ஏதோ திட்டம் வச்சிருப்பாருபோல என்று எதிர்பார்ப்போட எல்லோரும் கூடியிருப்பாங்க. நம்ம கஞ்சாக் கருப்பு என்ன செய்வாருன்னா பாட்டில்களில் தண்ணீரப் பிடிச்சு இது காவிரி தண்ணி, இது வைகை, இது பாலாறுன்னு அந்த பாட்டில் தண்ணியை தாமிரபரணியில ஊத்தி இப்ப நான் எல்லா நதிகளையும் இணைச்சுட்டேன் என்பாரு. அப்போ பொதுமக்கள் எல்லோரும் அவரப் போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவாங்க.

               இது எப்படி ஒரு நகைச்சுவையோ அதைவிட பெரிய நகைச்சுவை கும்பகோணத்தில் நடந்தது. பெரிய பெரிய அதிகாரிகள், அமைச்சர்கள், பெரிய பணக்காரர்கள் எல்லோரும் சங்கராச்சாரி தலைமையில கூடி வேதவிற்பன்னர்களின் வேத மந்திர முழக்கங்களோடு இது கங்கை, இது யமுனை இது சரஸ்வதி, இது சிந்து, இது கோதாவரி, இது சரயு, இது காவிரி என்று கூறி ஒவ்வொரு குடம் தண்ணீரை குளத்தில ஊத்துறாங்க. அதை பொதுமக்கள் எல்லோரும்  வேடிக்கை பார்க்கிறாங்க. எதற்கெடுத்தாலும் மயிர் பிளந்து கேள்வி எழுப்பும் டிவி காரன், பத்திரிகைக்காரன் எல்லாம் அதைப் படம் பிடிச்சு நாட்டில் உள்ள எல்லா நதிகளும் ஓரிடத்தில் சங்கமம்னு செய்தியாப் போடுறான்.


                  திரைப்படத்தில சிரிப்புக்காக கஞ்சாக் கருப்பு செய்த காரியத்துக்காக எல்லோரும் அவரைப் போட்டு அடிக்கிறாங்க. இங்கே நிஜமாகவே நதிகளை ஒரு இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறோம் என்று கூறி திரைப்படத்தில் அவர் செய்த அதே வேலையைச் செய்தால் அதை யாரும் தட்டிக் கேட்கல. கேட்டால் இது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள்.
                           அது என்ன நம்பிக்கை? கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் பெண்ணாக மாறி சிவபெருமானிடம் சென்று உலகில் பாவம் செய்தவர்களெல்லாம் எங்களிடத்தில் வந்து குளித்து அந்தப் பாவங்களைக் கழுவிச் செல்வதால் அந்தப் பாவங்களெல்லாம் எங்களைச் சேர்ந்துவிடுகிறது. அந்தப் பாவங்களை நாங்கள் எங்கே கொண்டு போய்க் கழுவுவது? என்று கேட்டனவாம். அந்தப் பெண்களை சிவபெருமான் கும்பகோணத்தில் அழைத்து வந்து மகாமகக் குளத்தைக் காட்டிக் குளிக்க வைத்தாராம். அதனால் அந்த நதிகளின் பாவங்களெல்லாம் போய்விட்டதாம் என்று ஸ்தல புராணம் எழுதி வைத்துள்ளார்கள்.
                              நதி பெண்ணுரு எடுத்தது, அது பேசியது என்பதெல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உகந்ததா? எப்பொழுதோ எவனோ முட்டாள்தனமாக எழுதி வைத்த கதையை, செவ்வாய் கிரகத்தில் சென்று அங்கே தண்ணீர் இருக்கிறதா? மனிதன் அங்கே குடியேற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்யக்கூடிய இந்தக்காலத்திலும் சொல்லி ஏமாற்றுவது என்றால் இது அயோக்கியத்தனமல்லவா? பகுத்தறிவைக் கொஞ்சமும் பயன்படுத்தாமல் இலட்சக்கணக்கில் மக்கள் சென்று அங்கே முழுக்குப் போடுவது என்றால் இதைத்தானே தந்தை பெரியார் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னார்? இதற்காக மக்கள் வரிப்பணம் 260 கோடி செலவாம். 27000 போலீஸ் காவலாம். மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை என்று பல துறை அதிகாரிகளும் அங்கே குவிக்கப்பட்டுள்ளதாம். இது அறிவு நாணயமுள்ள செயலா? உண்மையான மக்கள் மீது அக்கரையுள்ள அரசு செய்யக்கூடிய செயலா?
                      அங்கே சென்று குளிப்பதால் பாவங்கள் தொலையுமென்றால் சங்கராச்சாரி, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்தாரே, அந்தப் பாவமெல்லாம் போய்விட்டதா? அனுராதாரமணனைக் கையைப் பிடித்து இழுத்தாரே, சீரங்கம் உஷா ஹார்லிக்ஸ் சியாமளா என்று பலபேரிடம் சல்லாபம் செய்தாரே, நீதிமன்றத்தில் நீதிபதிக்கே இலஞ்சம் கொடுத்து அனைத்து சாட்சிகளையும் மிரட்டி, ஆசைவார்த்தை காட்டி பிறழ் சாட்சியம் சொல்லவைத்து நிரபராதி என்று வெளியில் வந்துவிட்டாரே, அந்தப் பாவமெல்லாம்; போய் அவர் லோகத்துக்கே குருவாகிவிட்டாரா? 1992ல் நடந்த மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளிக்கப் போய் அதை வேடிக்கை பார்க்கச் சென்ற நூற்றுக்கணக்கான பேர்கள் நெரிசலில் சிக்கி செத்துப் போனார்களே, அந்தப் பாவங்களெல்லாம் கரைந்துவிட்டதா?
                                 
அப்படிப் பாவங்கள் தொலையுமென்றால் குற்றங்கள் செய்துவிட்டு சிறைகளில் அகப்பட்டுக் கிடக்கிறார்களே, அவர்களையெல்லாம் அழைத்து வந்து அங்கே குளிக்க வைத்து அவர்கள் பாவங்கள் நீங்கிவிட்டன என்று கூறி இந்த அரசாங்கம் அவர்களை விட்டுவிடுமா? இந்த மகாமகத்தால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏதாவது ஒரு பைசா பயன் உண்டா? காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்துவரும் இ;க்காலத்தில்  இதற்கு இவ்வளவு செலவு, ஆர்ப்பாட்டம் தேவையா? பகுத்தறிவு கொண்டு சிந்திப்பீர்!