புதன், 24 பிப்ரவரி, 2016

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பிரச்சினை நீதிமன்றத்தீர்ப்பு சொல்வது என்ன?


சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது அரசியல் சட்டம். ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்கிறார்கள் மதவாதிகள். கிறிஸ்தவன் யாராக இருந்தாலும் அந்த மத சட்டங்களைப் படித்தால் பாதிரியாராகலாம். ஒரு இஸ்லாமியன் அந்த மத விதிகளைப் பயின்றால் முல்லாவாகலாம். ஆனால் ஒரு இந்து என்று சொல்லப்படுகிறவர் மட்டும் அந்த மதத்துக்குரிய மதசடங்குகளைப் படித்து அர்ச்சகராக முடியாது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவருக்கு மட்டும்தான் அந்த உரிமை உண்டு என்று சொன்னது. அப்படிச் சொன்னதோடு மட்டுமல்லாமல் நீங்களெல்லாம் சூத்திரர்கள். அதாவது பார்ப்பனரின் வைப்பாட்டி பிள்ளைகள் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதனால் நீங்கள் கோயிலுக்;குள் நுழைந்தால் தீட்டாகிவிடும். கருவறைக்குள் வந்தால் சாமி செத்துப்போகும். என்றார்கள்.


கோயில் கட்டப் பணம் தருவது அந்த சூத்திரர்கள். கொத்தனார் வேலை பார்ப்பது சூத்திரர்கள். சித்தாள் வேலை பார்ப்பது சூத்திரர்கள். சிலை வடிப்பது சூத்திரர்கள். வண்ணம் தீட்டுவது சூத்திரர்கள். இவர்களெல்லாம் கோயிலுக்குள் வந்தால் தீட்டு; சாமி செத்துப் போகும் என்கிறார்கள். ஒரு பைசா முதல் போடாதவன், இதில் எந்த வேலையும் செய்யாத பார்ப்பான் கடைசி நேரத்தில் வந்து செட்டியார்வாள் தள்ளுங்கோ, முதலியார்வாள் தள்ளுங்கோ, பிள்ளைவாள் தள்ளுங்கோ, நாயக்கர்வாள் தள்ளுங்கோ என்று அனைவரையும் தள்ளிவிட்டு பார்ப்பான் மட்டும்தான் கருவறைக்குள் நுழைய முடியுமென்றால் அது அனைத்து இந்துக்களுக்கும் அவமானமில்லையா? சுயமரியாதை உள்ளவன் இதை ஒத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று போராடினார் பெரியார்.
1972ல் முதல்வராக இருந்த கலைஞர் அவர்கள் அதற்கான சட்டத்தை இயற்றினார். அப்பொழுது அதனை எதிர்த்து பார்ப்பனர்கள் நீதிமன்றம் சென்றார்கள். இதன் மூலம் ஆகம முறைகளைத் தெரியாதவர்கள் அர்ச்சகராகிவிடுவார்கள். அதனால் முறைப்படி ஆகமங்களைக் கற்றவர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்று அப்பொழுது தீர்ப்பு சொன்னது நீதிமன்றம்.


2006ல் முதல்வரான கலைஞர் அவர்கள் ஓய்வுபெற்ற நீதிபதி இராஜன் என்பவர் தலைமையில்; இந்து சமய அறநிலையத்துறை ஆணையர், மற்றும் தவத்திரு தெய்வசிகாமணி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், போரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிறீரங்கம் சிறீங்க நாராயண ஜீயர், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார், திருப்பரங்குன்றம் சந்திரசேகர பட்டர் ஆகியோரை உறுப்பினராகக் கொண்ட குழுவை அமைத்து அந்தக் குழுவின் பரிந்துரையின்பேரில் வேத ஆகமப் பயிற்சிப் பள்ளியைத் துவக்கி அதில் 69 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி அனைத்து ஜாதியினரையும் தேர்ந்தெடுத்து முறைப்படி வேத ஆகமப் பயிற்சி முடித்து  207 பேர் தீட்சை பெற்று அர்ச்சகர் பணி நியமனத்துக்குத் தயாராக இருந்தார்கள்.


இவர்களை அர்ச்சகராக்கக் கூடாது என்று தொடரப்பட்ட வழக்கில் கடந்த புதன்கிழமை உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில் தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று சொல்லவில்லை. வேத ஆகமப்படி பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்றுதான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்தீர்ப்பின்படி ஏற்கனவே தமிழக அரசால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ள அனைவரும் அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம்.
ஆனால் இந்து, தினமணி, தினமலர் போன்ற பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்து விட்டதாக செய்தி வெளியிட்டார்கள். அது அவர்களது ஆசையாக இருக்கலாம். ஆனால் உண்மையில் அத்தீர்ப்பில் எந்த இடத்திலும் அந்த சட்டம் செல்லாது என்றோ தமிழக அரசால் பயிற்சியளிக்கப்பட்ட அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கக் கூடாது என்றோ சொல்லப்படவில்லை.


அந்தத் தீர்ப்பினை முழுவதும் சரியாகப் படித்து அதன்படி அர்ச்சகர் பயிற்சிபெற்ற அனைத்து ஜாதியினரையும் தமிழக அரசு அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று சொன்னவர் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் மானமிகு அய்யா வீரமணி அவர்கள்தான். அவர்கள் அனைவரும் ஆகம விதிப்படி பயிற்சி பெற்றவர்கள்தான். எனவே, இத்தீர்ப்பின்படி அவர்கள் அனைவரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். அதுதான் சமூகநீதிக்கும் சட்டத்திற்கும் நியாயத்திற்கும் சரியானது.
எனவே, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கி சமூகநீதியை நிலைநாட்டவும் காலங்காலமாக பார்ப்பனர்கள் நம் மக்கள்மீது சுமத்திவந்த சூத்திரப்பட்டத்தை ஒழித்து இழிவைத்துடைக்க அனைத்து முற்போக்கு சக்திகளும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக