புதன், 24 பிப்ரவரி, 2016

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்?



தெலுங்கானா மாநிலத்தில் உலக நன்மைக்காக யாகம் நடத்தினார்கள். இந்தியா முழுவதிலுமிருந்து யாகம் வேள்வி செய்வதில் மிகவும் தேர்ச்சி பெற்ற 2000 புரோகிதர்கள் கலந்து கொண்டார்களாம். அவர்களுக்க தட்சணை மட்டும் 2 கோடியாம். பந்தல் அமைக்க 3 கோடி. இடத்தைச் செப்பனிட 7 கோடியாம். இப்படி 20 கோடி ரூபாய் செலவழித்து 4 நாட்கள் யாகம் நடந்துள்ளது.

இந்த யாகத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் மத்திய, மாநில அமைச்சர்கள், ஆளுனர்கள் என்று பல பெரிய மனிதர்களும் கலந்து கொண்டார்கள். யாக குண்டத்தில் பருப்பும் நெய்யும் விலை உயர்ந்த பட்டாடைகளும் போட்டு எரிக்கப்பட்டன. தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் யாகத்தில் கலந்துகொள்ள வந்தபோது பார்ப்பனர்கள் அவரை வரவேற்க தீவிரமாக யாகம் செய்வதுபோல் நடிக்க ஆரம்பித்தனர். வழக்கத்தைவிட அதிகமான நெய்யையும் பருப்பையும் கட்டைகளையும் போட்டு எரிக்க ஆரம்பித்தனர். அதனால் ஆங்காங்கே நெருப்புப் பொறிகள் பறந்து வைக்கோலால் வேயப்பட்ட யாகமேடை தீப்பிடித்து யாகப் பந்தலிலும் தீ பற்றிக் கொண்டது.

யாகம் செய்துகொண்டிருந்த பார்ப்பனர்களும் அதில் கலந்துகொண்ட பக்தர்களும் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று அலறி அடித்துக்கொண்டு ஓடினர். தீயணைப்பு வீரர்கள்தான் போராடி கொளுந்து விட்டு எரிந்த தீயை அணைத்தனர். எந்தப் பார்ப்பானும் தீயை அணைக்க யாகம் நடத்தவில்லை. ஒரு சொம்பு தண்ணீர்கூட எடுத்து ஊற்றவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக யாகம், வேள்வி என்ற பெயரால் மன்னர்களையும் மக்களையும் நம்ப வைத்து அந்த யாகத் தீயில் ஆடு, மாடு, குதிரை, பருப்பு, நெய், பட்டாடைகள் என்று போட்டு எரித்து பொருட்களை நாசம் செய்துவந்தனர் பார்ப்பனர்கள். இந்த யாகம், வேள்வி ஆகியவற்றை எதிர்த்து இயக்கம் கண்டவர்தான் புத்தர்பிரான்.
அதற்குப் பிறகும் இந்தப் பார்ப்பனர்கள் திருந்தியபாடில்லை. மன்னர்களும் புத்தி பெறவில்லை. அதற்கு எடுத்துக்காட்டு சோமநாதபுரப் படையெடுப்பு. சோமநாதபுரம் மன்னர் மிகுந்த பலசாலி. அவனிடம் மிகத் திறமையான படைவீரர்கள் இருந்தனர். காலாட்படை, யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என மிகவும் தேர்ச்சிபெற்ற படைகள் இருந்தன. அதனால்தான் அங்கே படையெடுத்து வந்த கஜினி முகமது 17 முறை படையெடுத்து வந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவன் 18வது முறையாகப் படையெடுத்து வந்தபோது மன்னன் அவனை முறியடிக்க படையெடுக்க ஆயத்தமான போது பார்ப்பனர்கள் அவனிடம் சென்று ~நீங்கள் படையெடுத்துச் செல்ல வேண்டாம் மன்னா, நாங்கள் யாகம் நடத்துகிறோம். அந்த யாகத்திலிருந்து கிளம்பிவரும் பூதம் கஜினிமுகமதுவை விரட்டியடித்து விடும்| என்று ஏமாற்றி பல கோடி பொன்; செலவில் யாகம் நடத்தினர். படைவீரர்கள் படுத்துத் தூங்கினர். போர்க்கருவிகள் கூடத்திலேயே முடங்கின. அதனால் மிகவும் சுலபமாக கஜினி முகமது சோமநாதபுரத்தின்மீது படையெடுத்து வந்து அங்கே டன் கணக்கில் குவிக்கப்பட்டுக்கிடந்த பொன்னையும் பொருளையும் அள்ளிச் சென்றான்.

அதேபோல 1924ல் தந்தை பெரியார் திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் நடக்க இருந்த தடையை எதிர்த்துப் போராடியபோது, பார்ப்பனர்கள்  திருவாங்கூர் மன்னரை ஏமாற்றி பெரியாரை ஒழித்துக்கட்ட சத்துரு சங்கார யாகம் என்ற ஒன்றை நடத்தினர். கடைசியில் பெரியார் சாகவில்லை. அதன்பிறகும் 50ஆண்டு காலம் உயிரோடுதான் இருந்தார். ஆனால் அந்த யாகம் நடத்த உதவிய மன்னர்தான் யாகம் நடந்து கொண்டிருக்கும்போதே இறந்துபோனார்
.
இவ்வளவு நடந்த பிறகும் பார்ப்பனர்களும் திருந்தவில்லை. ஆட்சியாளர்களும் திருந்தவில்லை. எம்ஜியார் ஆட்சியின்போது தஞ்சைப் பெரிய கோயிலில் பெரிய அளவில் யாகம் நடத்தப்பட்டது. அப்பொழுதும் யாகப்பந்தல் தீப்பிடித்து எரிந்து நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் இறந்துபோனார்கள். எந்தப் பார்ப்பானுக்கும் ஒரு சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஜெயலலிதா ஆட்சியிலும் மழை வேண்டி வருண ஜெபம் நடத்துகிறார்கள். திருட்டு கொலை கொள்ளை அதிகம் நடக்கிறது என்று காவல்நிலையத்திலேயே யாகம் வேள்வி நடக்கிறது.

ஏமாறுகிறவன் இருக்கும்வரை ஏமாற்றுகிறவனும் இருக்கத்தானே செய்வான்? அரசும் மக்களும் மூடத்தனத்தில் திளைக்கும்போது அதனை அயோக்கியன் அறுவடை செய்யத்தானே நினைப்பான்? இங்கே படித்தவனுக்கும் புத்தியில்லை. பதவியாளனுக்கும் அறிவு இல்லை. பார்ப்பானுக்கும் அறிவு நாணயமில்லை. இவர்களெல்லாம் திருந்துவது எப்போதோ அப்போதுதான் நம் நாடும் உருப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக