செவ்வாய், 15 மார்ச், 2016

எல்லா நதிகளும் ஒரு இடத்தில்..

                       ஒரு திரைப்படத்துல நம்ம நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு அவர்கள் நான் தமிழ்நாட்டில இருக்கிற நதிகளையெல்லாம் ஒன்னா இணைக்கப் போறேன்னு பெரிய அளிவில விளம்பரம் பண்ணி எல்லோரையும் தாமிரபரணி பாலத்துக்கிட்ட வரச் சொல்லி இருப்பாரு. நதிகளையெல்லாம் இணைக்கிறதுக்கு ஏதோ திட்டம் வச்சிருப்பாருபோல என்று எதிர்பார்ப்போட எல்லோரும் கூடியிருப்பாங்க. நம்ம கஞ்சாக் கருப்பு என்ன செய்வாருன்னா பாட்டில்களில் தண்ணீரப் பிடிச்சு இது காவிரி தண்ணி, இது வைகை, இது பாலாறுன்னு அந்த பாட்டில் தண்ணியை தாமிரபரணியில ஊத்தி இப்ப நான் எல்லா நதிகளையும் இணைச்சுட்டேன் என்பாரு. அப்போ பொதுமக்கள் எல்லோரும் அவரப் போட்டு சாத்து சாத்துன்னு சாத்துவாங்க.

               இது எப்படி ஒரு நகைச்சுவையோ அதைவிட பெரிய நகைச்சுவை கும்பகோணத்தில் நடந்தது. பெரிய பெரிய அதிகாரிகள், அமைச்சர்கள், பெரிய பணக்காரர்கள் எல்லோரும் சங்கராச்சாரி தலைமையில கூடி வேதவிற்பன்னர்களின் வேத மந்திர முழக்கங்களோடு இது கங்கை, இது யமுனை இது சரஸ்வதி, இது சிந்து, இது கோதாவரி, இது சரயு, இது காவிரி என்று கூறி ஒவ்வொரு குடம் தண்ணீரை குளத்தில ஊத்துறாங்க. அதை பொதுமக்கள் எல்லோரும்  வேடிக்கை பார்க்கிறாங்க. எதற்கெடுத்தாலும் மயிர் பிளந்து கேள்வி எழுப்பும் டிவி காரன், பத்திரிகைக்காரன் எல்லாம் அதைப் படம் பிடிச்சு நாட்டில் உள்ள எல்லா நதிகளும் ஓரிடத்தில் சங்கமம்னு செய்தியாப் போடுறான்.


                  திரைப்படத்தில சிரிப்புக்காக கஞ்சாக் கருப்பு செய்த காரியத்துக்காக எல்லோரும் அவரைப் போட்டு அடிக்கிறாங்க. இங்கே நிஜமாகவே நதிகளை ஒரு இடத்துக்கு அழைத்து வந்திருக்கிறோம் என்று கூறி திரைப்படத்தில் அவர் செய்த அதே வேலையைச் செய்தால் அதை யாரும் தட்டிக் கேட்கல. கேட்டால் இது எங்கள் நம்பிக்கை என்கிறார்கள்.
                           அது என்ன நம்பிக்கை? கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, கோதாவரி, நர்மதை, காவேரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் பெண்ணாக மாறி சிவபெருமானிடம் சென்று உலகில் பாவம் செய்தவர்களெல்லாம் எங்களிடத்தில் வந்து குளித்து அந்தப் பாவங்களைக் கழுவிச் செல்வதால் அந்தப் பாவங்களெல்லாம் எங்களைச் சேர்ந்துவிடுகிறது. அந்தப் பாவங்களை நாங்கள் எங்கே கொண்டு போய்க் கழுவுவது? என்று கேட்டனவாம். அந்தப் பெண்களை சிவபெருமான் கும்பகோணத்தில் அழைத்து வந்து மகாமகக் குளத்தைக் காட்டிக் குளிக்க வைத்தாராம். அதனால் அந்த நதிகளின் பாவங்களெல்லாம் போய்விட்டதாம் என்று ஸ்தல புராணம் எழுதி வைத்துள்ளார்கள்.
                              நதி பெண்ணுரு எடுத்தது, அது பேசியது என்பதெல்லாம் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உகந்ததா? எப்பொழுதோ எவனோ முட்டாள்தனமாக எழுதி வைத்த கதையை, செவ்வாய் கிரகத்தில் சென்று அங்கே தண்ணீர் இருக்கிறதா? மனிதன் அங்கே குடியேற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்யக்கூடிய இந்தக்காலத்திலும் சொல்லி ஏமாற்றுவது என்றால் இது அயோக்கியத்தனமல்லவா? பகுத்தறிவைக் கொஞ்சமும் பயன்படுத்தாமல் இலட்சக்கணக்கில் மக்கள் சென்று அங்கே முழுக்குப் போடுவது என்றால் இதைத்தானே தந்தை பெரியார் காட்டுமிராண்டித்தனம் என்று சொன்னார்? இதற்காக மக்கள் வரிப்பணம் 260 கோடி செலவாம். 27000 போலீஸ் காவலாம். மருத்துவத்துறை, தீயணைப்புத்துறை என்று பல துறை அதிகாரிகளும் அங்கே குவிக்கப்பட்டுள்ளதாம். இது அறிவு நாணயமுள்ள செயலா? உண்மையான மக்கள் மீது அக்கரையுள்ள அரசு செய்யக்கூடிய செயலா?
                      அங்கே சென்று குளிப்பதால் பாவங்கள் தொலையுமென்றால் சங்கராச்சாரி, காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமனைக் கொலை செய்தாரே, அந்தப் பாவமெல்லாம் போய்விட்டதா? அனுராதாரமணனைக் கையைப் பிடித்து இழுத்தாரே, சீரங்கம் உஷா ஹார்லிக்ஸ் சியாமளா என்று பலபேரிடம் சல்லாபம் செய்தாரே, நீதிமன்றத்தில் நீதிபதிக்கே இலஞ்சம் கொடுத்து அனைத்து சாட்சிகளையும் மிரட்டி, ஆசைவார்த்தை காட்டி பிறழ் சாட்சியம் சொல்லவைத்து நிரபராதி என்று வெளியில் வந்துவிட்டாரே, அந்தப் பாவமெல்லாம்; போய் அவர் லோகத்துக்கே குருவாகிவிட்டாரா? 1992ல் நடந்த மகாமகத்தில் ஜெயலலிதாவும் சசிகலாவும் குளிக்கப் போய் அதை வேடிக்கை பார்க்கச் சென்ற நூற்றுக்கணக்கான பேர்கள் நெரிசலில் சிக்கி செத்துப் போனார்களே, அந்தப் பாவங்களெல்லாம் கரைந்துவிட்டதா?
                                 
அப்படிப் பாவங்கள் தொலையுமென்றால் குற்றங்கள் செய்துவிட்டு சிறைகளில் அகப்பட்டுக் கிடக்கிறார்களே, அவர்களையெல்லாம் அழைத்து வந்து அங்கே குளிக்க வைத்து அவர்கள் பாவங்கள் நீங்கிவிட்டன என்று கூறி இந்த அரசாங்கம் அவர்களை விட்டுவிடுமா? இந்த மகாமகத்தால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏதாவது ஒரு பைசா பயன் உண்டா? காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் அழிந்துவரும் இ;க்காலத்தில்  இதற்கு இவ்வளவு செலவு, ஆர்ப்பாட்டம் தேவையா? பகுத்தறிவு கொண்டு சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக