வெள்ளி, 25 மே, 2018

கம்யூனிசம் பற்றி பிஎம்எஸ் சின் புருடா



“காட்டுத்தீ எரிந்துகொண்டே இருக்கும். அனைத்தையும் கருக்கி விடும். கம்யூனிசமும் இதைப் போலவே செய்லபட்டு வருகிறது. எனவே,கம்யூனிசமும் ஜனநாயகமும் ஒருபோதும் சேர்ந்து இருக்க முடியாது” என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளதாக புருடா மன்னர்கள் தனது பிஎம்எஸ் நியூஸ் மே 2018ல் தெரிவித்துள்ளார்கள். இதற்கு என்ன ஆதாரம்? அண்ணல் அவர்கள் எங்கே அப்படிச் சொல்லி இருக்கிறார்? என்றெல்லாம் ஒன்றும் அதில் குறிப்பிடப்படவில்லை.

ஆனால் நாம் படித்தவரை “இந்துமதம் ஒரு எரிமலையின் மீது மிதந்துகொண்டிருக்கிறது. இன்று அது உயிரற்ற எரிமலையாகத் தோன்றலாம். ஆனால் அதில் உண்மை இல்லை. இந்த வலுமிக்க கோடிக்கணக்கான பெரும்பான்மை மக்கள் தாங்கள் இழிநிலையில் இருப்பதற்குக் காரணம் இந்து மதத்தின் தத்துவங்கள்தான் என்பதை உணர்ந்த நொடியில் அது உயிர்பெற்று வெடிக்கத் தொடங்கிவிடும்” என்கிறார் அம்பேத்கர். ஆதாரம் : அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு தொகுதி 17

அதுபோல கம்யூனிசமும் ஜனநாயகமும் சேர்ந்து இருக்க முடியாது என்று சொல்லும் புருடா மன்னர்களுக்கு அம்பேத்கர் என்ன கூறுகிறார் தெரியுமா?

 “ பார்ப்பனியமும் ஜனநாயகமும் எதிரெதிர் நிலைகளில் நிற்பவை. ராமன் கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்கள். ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள்” என்று கூறி அவர்களின் தேசியக் கதாநாயகர்களான ராமன், கிருஷ்ணன் ஆகியோரின் யோக்கியதையைத் தோலுறிக்கிறார். ஆதாரம் ஜனதா இதழில் 17.5.1951ல் அம்பேத்கர் எழுதிய கட்டுரை

மேலும் அம்பேத்கர் அவர்கள் “ உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக்கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும்  இந்த வகையில்  முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். உழைக்கும் வர்க்கம் இந்த ஆவணங்கள் மீது உரிய கவனம் செலுத்தத் தவறி விட்டன. மாறாக பண்டைய மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய புனைசுருட்டல்களின் கட்டுக்கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர். இந்தக் கெட்ட பழக்கத்திற்கு அடிமைகளாகி விட்டனர்” என்று அம்பேத்கர் நூல் தொகுதி 18 பக்கம் 144ல் குறிப்பிடுகிறார்.

மார்க்சின் மூலதனத்தைத் தொழிலாளர்கள் படிக்க வேண்டும் என்று சொல்கிற அம்பேத்கர் எந்த இடத்திலும் இராமாயணத்தைப் படியுங்கள், கீதையைப் படியுங்கள், வேத புராண இதிகாசங்களைப் படியுங்கள் என்று சொன்னதில்லை. மாறாக சாதி ஒழிய வேண்டுமானால் இந்தப் புராணங்கள் இதிகாசங்கள் வேதங்கள் அனைத்தும் புனிதமானவை என்ற நம்பிக்கையைத் தகர்க்க வேண்டும் என்று தனது ஜாதி ஒழிப்பு என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறார். (நூல் தொகுதி 1)


அத்துடன் தொழிலாளர்கள் காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபையிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்கிறார். அப்படி விலகி இருப்பதன் மூலமாகத்தான் தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் அண்ணல் கூறுகிறார். (ஆதாரம் அம்பேத்கர் எழுத்தும் பேச்சும் நூல் தொகுதி 18பக்கம் 146)

இந்துமகாசபை என்பது ஆர்எஸ்எஸ்சின் அரசியல் கட்சி. பாஜக வின் முந்தைய பெயர். பிஎம்எஸ்சின் மூத்த சகோதரர்) இந்துமகாசபையில் சேரக் கூடாது என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் இன்று பிஎம்எஸ் வைக்கும் தேசபக்தியுள்ள தொழிலாளர்களை உருவாக்குவோம் என்ற முழக்கமும் தொழிலாளர்களை ஏமாற்றும் தந்திர வார்த்தை என்றும் கூறுகிறார்.


எனவே,ஆர்எஸ்எஸ் பிஎம்எஸ் கும்பல் தன்னை செருப்பாலடித்ததை மறைத்து அடுத்தவரை குச்சியால் அடித்ததாக பெரிதுபடுத்தி இன்பம் காண்கிறது. அவர்களின் பித்தலாட்ட வார்த்தைகளில்; மயங்க வேண்டாம் என்று தொழிலாளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக