செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஆபத்துக்கு உதவாததை அப்புறப்படுத்துங்கள்

கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக சென்னை, கடலூரை மழை ஒரு வழிப்படுத்தி விட்டது. அதுவும் சென்னையில் ஏரிகள் நிரம்பி, அதைத் திறந்துவிட்டு, இதுவரை நீரைப்பார்க்காத பகுதிகளில் எல்லாம் வெள்ளம் பாய்ந்து பல லட்சம் மக்களை மீளமுடியாத துயரத்தில் தள்ளிவிட்டுள்ளது.

எப்பவும் மழை என்றால், அது ஏழைகளின் பகுதிக்கும் குடிசைக்குள்ளும் பாயும் என்பது மாறி, இம்முறை நடுத்தர மற்றும் உயர்வருவாய் பெறும் மக்கள் வாழும் பகுதியிலும் வெள்ளம் பாய்ந்து, பணம் இருந்தும் எதுவும் கிடைக் காமல் நெஞ்சளவு தண்ணீரில் குடும்பத்தோடு கதறும் நிலைமையை உருவாக்கி விட்டது.

மாநிலத்தில் அரசு ஒன்று இயங்குகிறதா? என்ற கேள்வியை அனைவருக்கும் ஏற்படுத்தி விட்ட இந்த மழையும் வெள்ளமும், அத்தோடு, ஈர நெஞ்சங்கள் இந்த மண்ணில் இன்னும் குறையவில்லை என்பதையும் எடுத்துக்காட் டியுள்ளது.

பல திசைகளில் இருந்தும் ஆதரவுக் கரங்கள்; மதத்தைத் தாண்டி, ஜாதியைப் புறந்தள்ளி, தந்தை பெரியார் காண விரும்பிய கடவுளை மற  மனிதனை நினை எனும் மனித நேயத்தை இயற்கை மழையின் மூலமாகவும் வெள்ளத்தின் காரணமாகவும் பலரின் நெஞ்சில் விதைத் துள்ளது.

பல தன்னார்வ அமைப்புகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட மக்களை நோக்கி அலை அலையாய்; தனி நபர்கள் தங்களால் இயன்ற வகையில் உதவிக் கரம் என தங்களின் பங்களிப்பை, ஓர் அரசு செய்ய வேண்டியதை நம்மால் முடிந்த அளவு செய்வோம் என விளம்பரம் இன்றிச் செய்து வரும் போக்கு, தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் ஓர் செயல்.

திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னையில் பெரியார் திடலில் வெள்ள நிவாரணப் பணிக்காக தொடங்கிய சிறு ஏற்பாடு, பலரும் மலைக்கும் வண்ணம் சிறப்பாக நடக்கிறது; இதற்கு உறுதுணையாக, பல்வேறு இடங்களில் இருந்து தங்களுக்கு கிடைத்த பல பொருள் களையும் லாரிகளிலும், கார்களிலும், ஆட் டோக்களிலும் தந்த வண்ணம் உள்ளனர். இதில் மதம் இல்லை; மொழி இல்லை; ஜாதி இல்லை; மனித நேயம்  ஆம் மனித நேயம் மட்டும்தான் வெளிப்படுகிறது.

யாரும் எதிர்பாராத நிலையில் ஏரிகளில் தண்ணீர் திறக்கப்பட்டு அதன் காரணமாக தென் சென்னையின் பல பகுதிகளிலும் தண்ணீர் வீட்டின் முதல் தளம்வரை வந்து, மக்கள் தங்கள் உடமைகளை இழந்ததோடு, வீட்டின் மேல்தளத்தில் ஓரிரு நாட்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டு வாழ வேண்டிய நிலை; வெள்ளம் சூழ்ந்ததோடு, மின்சாரம் நிறுத்தப்பட்டு, இருளும் நிறைந்து, வாழ்க்கையே சூன்யமான நிலை ஏற்பட்டது பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு.

இந்த நிலையில் எங்கள் மசூதியில் இடம் இருக்கிறது; தேவாலயத்தில் இடம் இருக்கிறது; தங்கிக் கொள்ள வாருங்கள் என்ற செய்தி வருகிறது. தனிப்பட்ட சிலர் தங்கள் இல்லத்தில் இடம் இருக்கிறது வாருங்கள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தியை அனுப்புகிறார்கள். சில திரைப்பட நடிகர்கள் தங்களுக்குச் சொந் தமான திருமண மண்டபத்தைப் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இலவசமாகத் தருகிறார்கள்.

கல்விக்கூடங்கள் அனைத்தும் மக்கள் தங்கும் அரங்குகளாக ஆக்கப்பட்டது. ஆனால் பெரும்பான்மை மக்களின் வழிப்பாட்டுத் தலங் களான கோயில்கள், பாதிக்கப்பட்ட மக்களுக் காக திறந்திருக்கும், வாருங்கள் என்று சொல்ல எந்த சங்கரமடத்து சவுண்டியும் வரவில்லை; சீரங்கத்து ஜீயரும் பேசவில்லை. இந்த நாட்டில் பெரும்பான்மை மக்கள் ஹிந்துக்கள்; இவர் களுக்கான முகவரி நாங்கள் தான் என்று சொல் லும் எச்சைகள், கச்சையைக் கட்டிக்கண்டு களத்திற்கு வருவார்கள் என்று பார்த்தால், ஒருத்தனையும் காணோம்.

ஆக இப்போதாவது புரிகிறதா? நம் அனை வரின் பணத்தில் கட்டப்பட்ட கோயில்கள் எதுவும் ஆபத்துக் காலத்தில் கூட உதவாது என்பது. ஆபத்தில் உதவாத எதுவும் நமக்கு எதற்கு? என அப்புறப்படுத்த மக்கள் தயாராக வேண்டும். அது கோவிலாக இருந்தால் என்ன, ஆட்சியாக இருந்தால் என்ன?

            -குடந்தை கருணா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக