புதன், 2 டிசம்பர், 2015

அண்ணல் அம்பேத்கர் நவீன மனுவா?


              
                 அரசியல் சட்டம் வரைந்த நம் தலைவர் அண்ணல் அம்பேத்கரை நவீன மனு என்று கூறுவார்கள். காரணம் என்ன? நமது நாட்டில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து சாம்ராஜ்யங்களிலும் (அசோக சாம்ராஜ்யத்தைத் தவிர) மனுதர்மமே சட்டமாக இருந்தது. அதனால் சட்டத்தை வரைந்தளித்த அண்ணலை நவீன மனு என்கிறார்கள். அந்த மனுதர்மம்தான் வர்ணாசிரமம் என்ற பெயரால் ஜாதியைப் புகுத்தியது. தீண்டாமையை வலியுறுத்தியது. உழைக்கும் மக்களை பல்வேறு கூறுகளாக்கி அவர்களை அடிமைப்படுத்தியது. அந்த மனுவின் காரணமாகவே உழைத்துக் கொடுப்பவன் கீழ்ஜாதியாகவும் எந்த வித உரிமையும் இல்லாதவனாகவும் உழைக்காமல் உண்டு கொழுக்கும் சோம்பேறி மேல்ஜாதியாகவும் எல்லாவற்றையும் அனுபவித்தும் வந்தான்.

                         இடையில் வெள்ளைக் காரன் வந்ததால் அதில் சற்று மாற்றம் ஏற்பட்டது. அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத உயர்ஜாதிக் கூட்டம் வெள்ளைக் காரன் இந்த நாட்டை விட்டுப் போன பிறகு மீண்டும் மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று துடித்தது. சுயராஜ்யம் எனது பிறப்புரிமை என்று சொன்னவர் திலகர்.

                             ~~நமது சட்டம் மனுஸ்மிருதிதான் என்று கூறிய திலகர், கற்றறிந்தவர்கள் மற்றும் பிராமணர்களின் உதவியுடன் அரசன் ஆட்சி நடத்த வேண்டும் என்று இந்த மனுஸ்மிருதிச் சட்டம் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். ( Tilak’s speech at Yeotmal on 9th jan 1917)

                                  சுதந்திரத்துக்காகப் பாடுபட்டதாகச் சொல்லப்பட்ட அத்தனைத் தலைவர்களும் மனுதர்மத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான். தேசப்பிதா என்று அழைக்கப்பட்ட காந்தியார்கூட வருணாசிரமம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார். மதன் மோகன் மாளவியாää சர்தார் வல்லபாய் பட்டேல் உட்பட வடநாட்டுத் தலைவர்கள் அனைவரும் வருணாசிமத்தின் மீதும் மனுதர்மத்தின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள்தான். தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கருதப்பட்ட வ.வெ.சு.அய்யர்ää சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும் இராஜகோபாலாச்சாரியாரும் மனுதர்மத்தின்மீது நம்பிக்கை உள்ளவர்கள்தான். அதன் காரணமாகத்தான் அன்றைய சென்னை மாகாணத்தில் இரண்டுமுறை பிரதமர் பதவி வகித்த இராஜகோபாலாச்சாரி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி தேவையில்லை என்று கூறி பள்ளிகளை இழுத்து மூடினார். அத்துடன் வருணாசிர தர்மத்தின்படி அவரவரும் அவரவர் குலத்தொழிலைச் செய்ய வேண்டும் என்று உத்தரவு போட்டார்.

                    அன்று சட்டம் படித்தததாகச் சொல்லப்பட்ட பலரும் பார்ப்பனர்களே! நீதிபதிகள் அனைவரும் பார்ப்பனர்களே! இவர்களில் யாராவது சுதந்திர இந்தியாவிற்கான சட்டத்தை எழுதியிருந்தால் நிச்சயம் மனுஸ்மிருதிதான் இந்தியாவின் அரசியல் சட்டமாக ஆக்கப்பட்டிருக்கும்.

             மேற்கூறிய எவரிடமும் அந்தப் பொறுப்பு செல்லாமல் அண்ணல் அம்பேத்கர் அவர்களிடம் சென்றதால்தான் இந்தியாவிற்குப் புதிய ஒரு அரசியல் சட்டம் கிடைத்தது. ஏனெனில் மனுதர்மத்தின் அத்தனை கொடுமைகளையும் அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்ந்தவர் அண்ணல் அம்பேத்கர். தந்தை பெரியார் அவர்களும் மனுதர்மத்தை நார் நாராhகக் கிழித்தெறிந்தார். இருபெரும் தலைவர்களும் அந்த நூலினைத் தீயிட்டுப் பொசுக்கினார்கள். அதனால்தான் அண்ணல் அவர்கள் மிகவும் எச்சரிக்கையாக மனுதர்மத்தை அரசியல் சட்டத்தில் ஏற்றாமல் பார்த்துக் கொண்டார். 

                        இன்று இந்திய அரசின் ஆட்சிப் பீடத்தில் ஏறியுள்ள பாரதிய ஜனதாவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் இந்தியாவிற்கு மனுஸ்மிருதிதான் சட்டமாக ஆக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கொண்ட அமைப்பு. அதனால்தான்; அவர் இந்திய அரசியல் சட்டத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தபோதும் இந்தியா குடியரசாக ஆனபோதும் ஆர்எஸ்எஸ் சின் ஆர்கனைசர் ஏடு மனுஸ்மிரிதியில் இருந்து எந்த அம்சமும் அரசியல் சட்டத்தில் இடம்பெறவில்லை என்று குறைகூறிக் கட்டுரை எழுதியது. 

                  அதனுடைய பல்வேறு பிரிவுகளும் இன்றைக்கும் மனுஸ்மிருதியைச் சட்டமாக ஆக்க வேண்டும் என்று பேசி வருகின்றன. அண்மையில் காலமான விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் 2014 நவம்பரில் டெல்லியில் நடந்த விஷ்வ இந்து பரிஷத் மாநாட்டில் வெளிப்படையாகவே மனுதர்மத்தைச் சட்டமாக்க வேண்டும் என்று பேசினார். அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூம் கலந்துகொண்டார்.
 
               அந்த ஆர்எஸ்எஸ் சின் அரசியல் அமைப்புதான் பாரதீய ஜனதா. அவர்களின் உள்ளத்தில் இன்னமும் மனுதர்மம் உறங்கிக் கொண்டிருக்கிறது. அந்த மனுதர்மத்தை அமுல்படுத்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடாகத்தான் இன்றைக்கு அவர்களுடைய பல்வேறு நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. அதனை அனுமதித்தால் ஒடுக்கப்பட்ட மக்கள் பெற்றுள்ள இன்றைய வளர்ச்சி அத்தனையும் பறிபோய்விடும். மீண்டும் அடிமைப் படுகுழிக்குத் தள்ளப்படுவோம். அத்தகைய நிலை வராமல் தடுக்க அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் உறுதியேற்போம்.!


1 கருத்து: