செவ்வாய், 15 மார்ச், 2016

நீதிமன்றம் செல்ல வேண்டியது அவசியம்தான்

                        நமது நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சமூக அநீதிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு சமூகநீதி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அது ஏதோ தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்படுவது போலவும் மற்ற மக்களுக்கு இல்லாதது போலவும் சிலர் பேசி தங்களது அறியாமையை வெளிப்படுத்தி வருகின்றனர். வாராது வந்த மாமணியாம் வி.பி.சிங் அவர்கள் காலத்தில் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தார். தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு 22.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனால் பல பொதுத்துறை மற்றும் அரசுத்துறைகளில் அது நிறைவேற்றப்படவே இல்லை.

                              அத்துடன் முதலில் பொதுப்போட்டியை நடத்தி அதில் யாரெல்லாம் தகுதி திறமையோடு அதிக மதிப்பெண் பெற்றவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் இதர பிற்படுத்தப்பட்டவராக இருந்தாலும் அவர்களை பொதுப்போட்டியில் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பிறகுதான் இட ஒதுக்கீட்டு முறையில் இடங்கள் நிரப்பப்பட வேண்டும். ஆனால் நமது நிறுவனத்தில் பொதுப்போட்டி என்பதை அதாவது OC  என்பது Open Competition  என்று எடுக்காமல் Other Community  என்று எடுத்தார்கள். அதனால் ஒட்டுமொத்த OBC மற்றும்SC ST அனைவருக்குமே பாதிப்புத்தான். அதனை எதிர்த்து இரண்டாவது பேட்ஜ் ஆர்டிசான் தேர்வின் போது நீதிமன்றம் சென்றது CITU   மற்றும் BP.Dr.AEU  ஆகிய இரண்டு சங்கங்கள்தான். அந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி அந்த தேர்வு முறையே ரத்து செய்யப்பட்டு மறு தேர்வு நடத்தப்பட்டதில் 225 ஆர்டிசான்களில் கூடுதலாக பொதுப்போட்டியில் 55 பேர் இதர பிற்படுத்தப்பட்டவர்களும் 11 பேர் தாழ்த்தப்பட்டவர்களும் தேர்வானார்கள். அதனைத் தொடர்ந்து அதற்குப் பிறகு வந்த அனைத்துத் தேர்வுகளுமே அப்படி நடத்தப்பட்டதில் பல பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பொதுப்போட்டியில் தேர்வானார்கள்.

                                    இன்றைக்கு வீடு ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் செல்வோம் என்று சொல்பவர்கள் அப்பொழுது யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. அந்த தீர்ப்பினால் அதிகம் பலன் பெற்றவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்கள்தான் என்பதற்காக ஒரு நன்றி கூடச் சொல்லவில்லை. நன்றி சொல்ல வேண்டிய அவசியம்கூட இல்லை. அவர்களை எதிரியாக நினைக்காமல் இருந்தாலே போதுமானது. ஆனால் ஒரு சிலரின் சுயநலத்துக்காக வேண்டுமென்றே ஜாதி மோதல் துவங்குவது யாருக்கும் நல்லதல்ல.

                            2006லேயே முதலில் பொதுப்போட்டியை நடத்தி அதன் பிறகுதான் இட ஒதுக்கீட்டின்படி நிரப்ப வேண்டும் என்று தெளிவாக நீதிமன்றத் தீர்ப்பு இருந்தாலும் 2007 முதல் 2011 வரை வளாகத் தேர்வில் நடைபெற்ற பொறியாளர் நியமனத்தில் அது கடைப்பிடிக்கப்படவில்லை. பொதுப்பிரிவில் இதர பிற்படுத்தப்பட்டவர் ஒருவரும் இடம் பெறவில்லை. தாழ்த்தப்பட்டவர் இரண்டே இரண்டுபேர் தேர்வானார்கள். அதிலும் கொடுமை என்னவென்றால் இதர பிற்படுத்தப்பட் மக்களுக்கு 27 சதவிகிதம் இடங்கள் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நிர்வாகம் வெறும் 18.85 சதவிகித இடங்களையே இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கியது. (இதற்கெல்லாம் எங்களிடம் ஆதாரம் உள்ளது) இன்றைக்கு வீடு ஒதுக்கீட்டுக்கு நீதிமன்றம் செல்வோம் என்று சொல்பவர்கள் அப்பொழுது யாரும் நீதிமன்றம் செல்லவில்லை. பொங்கி எழவும் இல்லை. கார்ப்பரேட் கதவையும் தட்டவில்லை.
இங்கு மட்டுமல்ல. இந்திய முழுவதும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் IIT, IIM, AIMS  போன்ற கல்வி நிறுவங்களிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இரண்டு பேருடைய இடங்களையும் முன்னேறிய உயர்ஜாதியினரே தட்டிப்பறித்து அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் யார் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் இணைந்து போராட வேண்டிய இரு பிரிவினரும் மோதிக்கொள்வது இரத்தம் குடிக்கும் ஓநாய்களுக்கு நன்மையாக இருக்கலாம். ஆனால் ஆடுகளுக்கு அது நல்லதல்ல. நாங்கள் புலிகள். நாங்கள் சிங்கங்கள். எங்களை சீண்டாதே என்பதுகூட நல்லதுக்கல்ல. அனைவரும் மனிதர்களாக மனிதத் தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும். ஒரு சிலர் ஆதாயம் அடைவதற்காக அப்பாவி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை மோத விட நினைக்காதீர்! எனக்கும் கொடு என்று கேட்பதுதான் அறிவுடைமை. அவனுக்குக் கொடுக்காதே என்பது அறியாமை மட்டுமல்ல, அயோக்கியத்தனம். எனக்கு மேல் எவன் இருந்து என்னை அவமதித்தாலும் என்னை இழிவுபடுத்தினாலும் என் உரிமையைப் பறித்தாலும் அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை. ஆனால் எனக்குக் கீழே அடிமையாக யாராவது இருக்க வேண்டும். அவன் முன்னேறக்கூடாது என்கின்ற மனப்பான்மை இருக்கின்றவரை இந்த சமுதாயம் உருப்படாது. சம்மந்தப்பட்டவர்கள் திருந்தவேண்டும். இல்லையேல் திருத்தப்படுவார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்ட மார்ச் 19, 20ல் சிறுகனூரில் நடைபெற உள்ள ஜாதி – தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி மாநாட்டிற்கு வாரீர்! வாரீர்!! என அழைக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக