செவ்வாய், 15 மார்ச், 2016

ஜாதி ஆணவக் கொலை!

                       ஒரு ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதற்காக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் பலபேரும் கூடியுள்ள பொது இடத்தில் துள்ளத் துடிக்க அந்த இளைஞனை வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். வெட்டப்பட்ட பெண் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். காரணம் அந்த இளைஞன் ஒரு தலித் என்பதுதான். இது எவ்வளவு பெரிய வெட்கக்கேடு? .
எண்பது ஆண்டுகளுக்கு முன்பே ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற முழக்கத்தோடு ஜாதி பெருமைக்குரியதல்ல. அத்தகைய ஜாதிப் பட்டங்களை அனைவரும் தூக்கியெறிய வேண்டும் என்று சொன்ன பெரியார் வாழ்ந்த மண்ணில் இப்படிப்பட்ட செயல்கள் நாம் அனைவரும் நாகரிக சமுதாயத்தில்தான் வாழ்கிறோமா என்று கருதத் தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?
    
         ஜாதியை ஒழிக்கச் சொன்ன பெரியார் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார். பெரியார் தொண்டர்கள் பலரும் ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்டனர். அதனை பெருமைக்குரிய விசயமாகப் பறைசாற்றினர். பெரியார் நடத்துகின்ற மாநாடுகளில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஏராளம் நடைபெறுவதுண்டு. ஜாதியைப் பற்றிப் பேசுவதற்கே அனைவரும் வெட்கப்பட்ட காலத்தை பெரியார் உருவாக்கியிருந்தார்.
                         ஆனால் அண்மைக் காலமாக ஜாதீய இயக்கங்கள் தலைதூக்க ஆரப்பித்துள்ளன. ஜாதியைப் பெருமையாகப் பேசக்கூடிய சூழ்நிலையை உருவாக்க ஆரம்பித்துள்ளனர். ஜாதி ஒழிப்பு மாநாடுகள் நடந்த தமிழகத்தில் ஜாதி மாநாடுகள் நடத்தி ஜாதி பெருமைக்குரியது. ஜாதி பாதுகாக்கப்பட வேண்டும். ஜாதிக்குள்ளேயேதான் திருமணங்கள் நடைபெற வேண்டும். அப்பொழுதுதான் நம்முடைய கலாச்சாரங்கள், பாரம்பரியங்கள் காப்பாற்றப்படும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள். ஜாதியைப் பாதுகாக்கக் கூடிய சுளுளு இதற்கு உறுதுணையாக இருந்து அதனை ஊக்குவித்து வருகிறது. நம்முடைய மதம் இந்து மதம். நாம் அனைவரும் இந்துக்கள். நமது கலாச்சாரம் இந்துக் கலாச்சாரம் என்று பேசக் கூடியவர்கள் இந்து மதத்தைச் சேர்ந்த, இந்துக் கடவுளை வணங்குகிற இந்துக் கலாச்சாரத்தைப் பின்பற்றுகிற இருவேறு ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொண்டால் மட்டும் அதனை எதிர்ப்பது ஏன்? அதுவும் உயர்ஜாதி ஆண் கீழ்ஜாதிப் பெண்ணை திருமணம் செய்வதை அங்கீகரிப்பவர்கள் கீழ்ஜாதி ஆணை ஒரு உயர்ஜாதிப் பெண் திருமணம் செய்வதை மட்டும் அங்கீகரிக்க மறுப்பது ஏன்? இந்துமதம் என்பது ஒரே  மதம் இல்லையா? இந்துக் கலாச்சாரம் என்பது ஒரே கலாச்சாரம் இல்லையா? இந்துப்பண்பாடு என்பது ஒரே பண்பாடு இல்லையா?

             ஜாதிகள் அப்படியே இருக்க வேண்டும். ஆனால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்று சுளுளு சொல்கிறது. அது எப்படி ஜாதிகளை வைத்துக் கொண்டு அனைவரையும் சமமாக நடத்த முடியும்? ஒரு கோயிலில் மணியடிக்கிற அர்ச்சகரும் இந்து. சாக்கடையில் மலம் அள்ளுகிற தோட்டியும் இந்து. இருவரையும் சமுதாயம் ஒரே அந்தஸ்தோடு நடத்துமா? பார்ப்பானை எல்லோரும் சாமி என்று அழைக்கிறார்கள். ஆனால் தோட்டி மற்றவர்களை சாமி என்றுதானே அழைக்க வேண்டும் என்று சமுதாயம் எதிர்பார்க்கிறது? ஜாதியை வைத்துக்கொண்டு சமத்துவத்தை நிலைநாட்ட முடியாது. சமூக ஒற்றுமை உருவாகாது.

               எனவே ஜாதி ஒழிப்பு ஒன்றே சமுதாய சமத்துவத்தை உருவாக்கும். ஜாதி ஒழிப்பைப்பற்றிப் பேசுவதற்கே முற்போக்கு இயக்கங்கள் என்பவைகூடத் தயங்குகின்றன. தீண்டாமை ஒழிப்பைப்பற்றிப் பேசுகின்றவர்கள் ஜாதி ஒழிப்பைப் பற்றிப் பேசுவதில்லை. தீண்டாமைக்கு அடிப்படை ஜாதிதானே? ஜாதி ஒழியாமல் தீண்டாமை எப்படி ஒழியும்?

     ஜாதியை ஒழிக்க சரியான வழிகளைச் சொன்னவர்கள் தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மட்டுமே. அந்த இருபெரும் தலைவர்கள் வழியில் ஜாதியையும் தீண்டாமையையும் ஒழிக்கக் களம் காணுகிறது திராவிடர் கழகம். எல்லா அரசியல் கட்சிகளும் அடுத்த தேர்தலைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கும் இயக்கமான திராவிடர் கழகம் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டினை வரும் மார்ச் 19, 20 ஆகிய தேதிகளில் சிறுகனூரில் நடத்துகிறது. அம் மாநாட்டிற்கு அனைவரும் வாரீர்! வாரீர்!! என அன்புடன் அழைக்கின்றோம். ஜாதி ஒழிந்த தீண்டாமை ஒழிந்த நல்ல சமுதாயத்தை அமைக்க உறுதியேற்போம். அத்தகைய சமுதாயமே ஜாதியக் கவுரவக் கொலைகள் நடைபெறாத கண்ணியமிக்க சமுதாயமாகத் திகழ முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக