பறையர் என்ற காரணத்தினால், ஒரு நபரை முன்வைத்து அம்பேத்கருக்கு இந்துத்துவ முலாம் பூச முயற்சி எடுத்து வருகிறது இந்துத்துவ கும்பல். அதற்கு பதில் சொல்ல வக்கற்றவர்களாகவே, முற்போக்கு முகாம் இருக்கிறது என்பதும், அம்பேத்கரின் எழுத்துகள் இன்னும் தீண்டத்தகாததாகவே இருப்பதுவும் உண்மை என்பதை எவரும் மறுக்கலாகாது.
அம்பேத்கருக்கு இந்துத்துவ பெயிண்ட் அடிக்க அனுமதித்துக் கொண்டிருந்தால், தலித்’ என்று அழைக்கப்படும் பட்டியல்சாதி மக்களின் கரங்களாலேயே முற்போக்காளர்களுக்கு எதிரான வன்முறைகளை இந்துத்துவ கும்பல் பரவலாக்கும் என்பதை எச்சரிக்கையாக கொள்ள வேண்டும்.
சாதி ஒழிய இந்து மதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றார் அம்பேத்கர். இந்து சனாதன தர்மம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்டது. பௌத்தம் சமத்துவத்தை அடிப்படையாக கொண்டது ஆகவே, நான் பௌத்தத்தை தழுவுகிறேன் என்றார் அம்பேத்கர். இந்திய வரலாறு என்பது பௌத்தத்திற்கும், ஏற்றத்தாழ்வை அடிப்படையாக கொண்ட சனாதன தருமத்திற்கும் நடந்த போர் என்கிறார் அம்பேத்கர்.
சாதி வேரூன்றியிருப்பதற்கும், தீண்டப்படாத மக்கள் படுகிற துன்பத்திற்கு காரணம் அவர்கள் சாதி இந்துக்களை அண்டி பிழைக்க வேண்டிய நிலை இருப்பதால் என்று பல்வேறு இடங்களில் சுட்டிக் காட்டுகிறார். சொத்து ஓரிடத்தில் குவிந்து கிடக்கச் செய்யும் சனாதன தருமத்தின் ஏற்பாடு அயோக்கியத்தனமானது என்கிறார் அம்பேத்கர். சொத்துகள் பரவலாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் வேண்டும் என்கிறார். ஆனால், இது எதையும் பேசாமல் சாதி ஒழிய வேண்டும் என்கிறது இந்துத்துவம். அதாவது, பண்ணையார்களின் கட்சியான பாஜக சாதி ஒழிய வேண்டும் என்கிறது. பண்ணையார்களுக்கும், ஆதிக்க சாதிகளுக்கு நோகாமல் எப்படி சாதி ஒழியும்.
மானுடவியலின் அடிப்படையில் ஆரிய-திராவிட கோட்பாடு பிழையானது என்று கூறும் அம்பேத்கர். தமிழகத்துக்கு பார்ப்பனர்களுக்கும், தமிழக பறையருக்கும் இருக்கும் தொடர்பு, வங்காள பார்ப்பனர்களுக்கும், தமிழக பார்ப்பனர்களுக்கு உள்ள தொடர்பைவிட நெருக்கமானது என்கிறார்.
ஆனால், இந்தியாவெங்கும் நிலவும் பார்ப்பன பண்பாட்டின் அடிப்படையிலான மேலாதிக்க சிந்தனை ஒன்று இருப்பதை அவர் மறுக்கவில்லை.
இந்த மண்ணின் பூர்வீக பழங்குடிகள் என்று நாகர்களை சுட்டும் அம்பேத்கர். ஆரிய, பார்ப்பன கும்பல் இந்த மண்ணின் மைந்தர்கள் என்று எங்கும் சுட்டவில்லை.
பின்னர் வந்திணைந்தவர்கள் திராவிடர்கள் என்றும், பின்னர் ஆரியர்கள் வந்தனர் என்கிறார். அது மட்டுமில்லாமல், இன்றைய பார்ப்பனர்கள், தங்களை ஆரியர்களின் வாரிசாக அறிவித்துக் கொள்கிறவர்கள், தங்களது முன்னோர்களின் அசிங்கமான பண்பாட்டை தங்களது என்று இன்று உரிமை கொள்ள துணிய மாட்டார்கள் என்று எள்ளி நகையாடுகிறார்.
ஆரிய-திராவிட கோட்பாட்டை அண்ணல் அம்பேட்கர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்வதன் மூலம் இந்த இந்துத்துவ கும்பல் பெரியாரின் திராவிட இயக்கத்தின் வரலாற்று பங்கை மறுக்க பார்க்கிறது. ஆனால், அம்பேத்கர் அதன் வரலாற்று பாத்திரத்தை அங்கீகரிக்கிறார். பார்பனரல்லாதோர் இயக்கம் வர்ணாசிரம கோட்பாட்டை தலைகீழாக மாற்றியமைக்க முயற்சி செய்தது என்கிறார். அங்கீகரிக்கிறார். அதிகார பங்கீடு என்று வரும் போது, உயர்சாதி இந்துக்கள் பங்கு போடுவதாக மாறிவிட்டதாக வருந்துவதையும் மறுப்பதிற்கில்லை. ஆனால், இந்துத்துவ கும்பலின் வருத்தம் வேறானது. பாஜகவில் இந்தியாவெங்கும் பொறுப்பில் இருப்பவர்கள் இதே உயர்சாதி வெறி பிடித்த கும்பல்தான்..
வன்முறை பாதையில் புரட்சியை முன்னெடுத்து சென்றால், பின்னர் துப்பாக்கி முனையில் புரட்சியை எப்படி தக்க வைப்பது. பொதுவுடமை தோழர்கள், பண்பாட்டு தளத்தில் பௌத்த நெறியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனையும் அண்ணல் அம்பேட்கர் முன்வைக்கிறார். அன்றைய கம்யூனிஸ்டுகளின் அணுகுமுறையோடு அண்ணல் அம்பேட்கருக்கு முரண் இருந்தது என்பது மறுப்பதிற்கில்லை.
ஆனால், அதே காலத்தில் அண்ணல் அம்பேட்கர் இந்துத்துவ கும்பலுக்கு கடும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார் என்பதும் மறுப்பதிற்கில்லை. சாவர்க்கர் அண்ணல் அம்பேதுகரின் பௌத்த மதமாற்ற முடிவை துரோகத்தன்மை கொண்டது என்றும், அது வீழ்த்தப்பட வேண்டும் என்றுதான் தன்னுடைய இந்துத்துவம் தொடர்பான நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், ம.வெங்கடேசன் போன்ற திரிபுவாதிகள் அம்பேத்கருக்கு காவி வர்ணம் பூச முயல்கின்றனர்.
கீதைக்கு நேரதிரான சித்தாந்தம் கொண்டது பௌத்தம், அதாவது, போர் செய்து சொந்த சகோதரர்களாயினும் கொலை செய்வது சத்ரிய தருமம் என்கிறது கீதை.  கொலை செய்ய முடியாது என்கிறார் புத்தர்.
இதில் இந்துத்துவ கிளை மதம் என்று பௌத்தத்தை ஏற்றுக் கொண்டதாம்…
இந்தியா, பாகிஸ்தான் இணைந்திருக்க வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவும், அகண்ட பாரத கனவும் ஒன்றென கூறும் ஏமாற்று வேலையை செய்கிறது இந்துத்வம். பாகிஸ்தான் தொடர்பான சிந்தனை தொடர்பான நூலில் இந்து ராஜ்யமே ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்…அப்படியிருக்க அகண்ட பாரத கனவோடு அம்பேத்கரின் எண்ணம் எப்படி ஒத்துப் போகும்?
ஊருக்கொரு சட்டம், சேரிக்கொரு சட்டம் என்று நடைமுறையில் இருக்கும் நாட்டில்…அண்ணல் அம்பேத்கரின் பொது சிவில் சட்ட நோக்கம் என்பது சமத்துவத்திற்கானது…இந்துத்துவ கும்பல் கோரும் பொது சிவில் சட்டம் அத்தகையது அல்ல..இஸ்லாமியர்கள் தங்கள் பண்பாட்டை காத்துக் கொள்ளும் உரிமை இருக்கக் கூடாது என்கிற நோக்கம்தான் இந்துத்துவ கும்பலுக்கு இருக்கிறது.
ம. வெங்கடேசன் எழுதிய இந்துத்துவ அம்பேத்கர்(கிழக்கு வெளியீடு) நூலுக்கு மறுப்பாக எழுதியது.