வியாழன், 6 ஏப்ரல், 2017

சமஸ் தமது அறிவுரையை தி இந்து குழுமத்துக்கு வழங்கட்டும்!

ஒரு பகிர்வுப் பதிவு.
*******************
சமஸ் தமது அறிவுரையை தி இந்து குழுமத்துக்கு வழங்கட்டும்!
அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கு மூன்று அறிவுரைகளை அருளியிருக்கிறார் திருவாளர் சமஸ்!
திராவிட இயக்கம் தமது பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும், பார்ப்பனர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும், முஸ்லீம் மற்றும் தலித் சமூகங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்பவை சமஸ் செய்திருக்கும் பரிந்துரைகள்.
இந்த அறிவுரைகளை எல்லாம் வழங்குவதற்கு சமஸ்க்கு என்ன யோக்கியதை இருக்கிறது என்று கேட்கலாம் என்றாலும் நாம் அப்படி கேட்கப் போவதில்லை. அவர் சிலவற்றை எழுதி, அதை வெகுஜன பத்திரிகையில் வெளியிடும் வாய்ப்பை பெற்றிருக்கிறார் என்ற அந்த ஒரு தகுதியை மட்டும் கருத்தில் கொண்டு நாம் இதை எழுத வேண்டியதுள்ளது.
அவரின் பரிந்துரைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்!
திராவிட இயக்கம் அதன் பெயரை மாற்ற வேண்டுமாம். அப்போது தான் அது இன்னும் ஒரு நூற்றாண்டுக்கு தப்பி பிழைக்குமாம்! ஸ்டாலின் என்ற தனது இயற்பெயர் புரட்சிகரமான பெயராக இருந்தும்கூட அக்ரஹாரவாசிகள் மத்தியில் புழங்குவதற்கு ஏதுவாகவும் தாம் எந்தவித கருத்துப் பின்புலமும் இல்லாத பத்திரிகையாளர் என்று வாசகர்களை ஏமாற்ற தனது பெயரையே சமஸ் என்று மாற்றிக்கொண்டு பிழைப்பு நடத்தும் நபர் சொல்லியிருக்கும் அறிவுரை இது!
அவர் எப்படி பச்சோந்திப்போல நிறம் மாற்றி பிழைக்கிறாரோ அதேபோல் திராவிடர் இயக்கமும் பெயரை மாற்ற வேண்டும் என்று ஐடியா கொடுக்கிறார். எப்படி வேண்டுமானாலும் பிழைக்கலாம் என்பது ஒருவகை. இப்படி தான் பிழைக்க வேண்டும் என்பது மற்றொரு வகை!
ஒரு கிரிமினல் ஒவ்வொரு ஊராகச் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும்போது ஒவ்வொரு இடத்திலும் வெவ்வேறு பெயர்களைச் சொல்லி தப்பிச் செல்வான். ஆனால், நல்லவர்களுக்கு அந்த அவசியம் இல்லை!
அடுத்து, பார்ப்பனர்களுக்கு 3 சதவிகிதம் அரசியல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்கிறார் சமஸ்!
நீதித்துறை, மத்திய அரசின் நிர்வாகத்துறை, உயர்கல்வி நிறுவனங்கள், வங்கித்துறை, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆகியவற்றில் 100க்கு 90 பேர் பார்ப்பனர்கள் தானே இருக்கிறார்கள்? 100 சதவிகித இந்து ஆகம கோயில்களில் பார்ப்பனர்கள் தானே அர்ச்சகர்களாக இருந்து உழைக்காமல் உண்டு கொழுக்கிறார்கள்?
இந்த இடங்களில் எல்லாம் பிற்படுத்தப்பட்டோருக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் 80 சதவிகித பரிதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்று முதலில் அக்ரஹாரத்துக்கு அறிவுரை வழங்கிவிட்டு பிறகு திராவிடர் இயக்கத்துக்கு அறிவுரை வழங்கலாமே சமஸ்!
சென்னையின் சேரிப் பகுதிகளிலும் தமிழகத்தின் பிறப்பகுதிகளிலும் படுத்துத் தூங்குவதற்கு சரியான குடிசை இல்லாமல் தவிக்கும் மக்களில் பார்ப்பனர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சமஸ் சொல்வாரா? சென்னையில் வானத்தையே கூரையாகக் கருதி பிளாட்பாரங்களில் படுத்துத்தூங்கும் பார்ப்பனர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று சமஸால் விரல்விட முடியுமா?
அவ்வளவு ஏன்? வயல்களில் ஏர்பிடித்து உழவுச்செய்யும் ஒரே ஒரு பார்ப்பனரை சமஸ் பார்த்தது உண்டா? பார்ப்பனர்களில் பலர் நில உரிமையாளர்களாக இருப்பார்கள் ஆனால் வயல்களில் இறங்கி உழவுத்தொழில் செய்ய மாட்டார்கள். சமஸ்க்கு காரணம் தெரியுமா? மனுதர்மத்தின்படி உழவுத்தொழில் பாவத்தொழில்!
உழவுத்தொழிலில் 3 சதவிகித பார்ப்பனர்கள் ஈடுபட சமஸ் அறிவுரை வழங்கலாமே!
மூன்றாவதாக, முஸ்லீம் மற்றும் தலித் சமூகங்களுக்கு திராவிடர் இயக்கம் முன்னுரிமை தர வேண்டும் என்று அவர்கள் மீது ரொம்ப அக்கறை கொண்டவராக கேட்கிறார் சமஸ்!
இந்த வாதமே முதலில் மோசடியானது. திராவிடர் இயக்கத்தில் இருந்து முஸ்லீம்களையும் தலித்துகளையும் தனியே பிரித்துப் பார்க்கும் பித்தலாட்டம் இது!
‘இஸ்லாம் எங்கள் வழி, இன்பத்தமிழ் எங்கள் மொழி’ என்று முழங்கி திராவிடர் இயக்கம் நடத்திய மொழிப்போராட்டம் உட்பட சமூகநீதிப் போராட்டங்களிலும் பங்கேற்று தமிழகத்தின் முஸ்லீம்கள் திராவிடர் இயக்கத்தின் ஒரு அங்கமாகவே தொடர்ந்து இருக்கிறார்கள். இந்துத்துவக் கொடும்நெருப்பு சூழாமல் தமிழகத்தைப் பாதுகாத்து நிற்பது திராவிடர் இயக்கம் என்பதை அவர்கள் நன்றாகவே உணர்வார்கள். முஸ்லீம்களிடம் பணம் வாங்கிக்கொண்டு தான் திராவிடர் இயக்கம் இந்து எதிர்ப்பு பிரச்சாரம் செய்கிறது என்ற அடிப்படையற்ற குற்றச்சாட்டை இன்றும்கூட பார்ப்பனர்கள் பல இடங்களிலும் பகிரங்கமாக கூறிவருவதை சமஸ் நன்கு அறிவார் என்று நம்புகிறோம்.
பார்ப்பனரல்லாதார் என்ற சொல்லில் முஸ்லீம்களும் தலித்துகளும் அடக்கம் தானே, பிறகு ஏன் சமஸ் இந்த பிரித்துக்காட்டும் சூழ்ச்சியில் ஈடுபடுகிறார். தமிழகத்தில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற வரலாற்றில் முதல் தலித் நீதிபதியாக நீதியரசர் வரதராசன் வருவதற்கு காரணம் திமுக அரசு, கலப்புத்திருமணத்துக்கு ஊக்கத்தொகை கொடுத்ததில் இருந்து அருந்ததியர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது வரை திராவிடர் இயக்கம் அதன் பங்களிப்பை ஆற்றியே வருகிறது. சமஸின் அறிவுரை இல்லாமலேயே திராவிடர் இயக்கம் முஸ்லீம், தலித்துகள் மேம்பாட்டுக்கு பணியாற்றியிருக்கிறது. இவற்றை தெரிந்துகொள்ளாமல் இருப்பது சமஸின் அறியாமையையே காட்டுகிறது!
இருந்தாலும், சமஸின் இந்த அறிவுரைக்கு நன்றி! இந்த சமூகங்களை மேலும் முன்னேற்ற திராவிடர் இயக்கம் தம்மால் இயன்றதை நிச்சயமாக செய்யும். சமஸ்க்கு இந்த கவலையே வேண்டாம்!
முஸ்லீம், தலித் சமூகங்களின் முன்னேற்றம் பற்றி இந்த அளவு கவலைப்படும் சமஸ், அவர் பணிபுரியும் தி இந்து குழுமத்திற்கு இதே அறிவுரையை வழங்கலாமே! தி இந்து பத்திரிகைகளின்(தமிழ் மற்றும் ஆங்கிலம்) ஆசிரியர் குழு முழுவதும் ஒரே தயிர்சாத நாற்றம் அடிப்பதாகக் கேள்வி!
சமஸ் இதுபோல் எல்லாம் எழுதுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. அவர் இருக்கும் இடம் அவரை இப்படி தான் எழுத வைக்கும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக