செவ்வாய், 4 ஏப்ரல், 2017

பார்ப்பனர்கள் தங்களை உயந்த ஜாதியார் என்று சொல்லிக் கொண்ட காலத்தில் பலவான்களாக இருந்தவர்கள் அதை ஒப்புக் கொள்ளாமல் பலாத்காரத்தை உபயோகப்படுத்த வந்த சமயத்தில், தந்திரமாய் நீங்கள் க்ஷத்திரியர்களாயிருந்து அரசாட்சி செய்யுங்கள், நாங்கள் உங்களுக்கு மந்திரிகளாயிருந்து ‘யோசனை’ சொல்லுகிறோமென்று சொல்லி அவர்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டார்கள். கையில் செல்வமும் செல்வாக்கு முள்ள மற்றொரு கூட்டத்தார் ‘நீங்கள் எப்படி உயர்ந்த ஜாதியாகலாம்’ என்று விவாதிக்கையில் ‘நீங்கள் வைசியர்களாக இருங்கள், உங்களுக்குக் கீழ் அநேகர் இருக்கிறார்களெ’ன்று சொல்லியும் ‘உங்களுக்கும் எங்களைப் போல் பூணூல் போடுகிறோ’மென்றும் சொல்லி அவர்களையும் ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டார்கள். பிறகு பெரும்பான்மையாயிருந்த விவசாயக்காரர்களையும் கைத் தொழிற்காரர்களையும் பார்ப்பனர்களுக்கு முதல் மூன்று வகைப் பிரிவுக்காரர்களுக்கும் வேலை செய்கிறவர்களென்று ஏற்படுத்தி விட்டார்கள். அவர்களில் பலர் இதை ஒப்புக் கொள்ளாமல் வாதாடவே ‘உங்களுக்கும் கீழாக ஒரு பிரிவாரை வைத்திருக்கிறோம், அவர்களுக்கு நீங்களே தான் எஜமானர்கள், உங்கள் இஷ்டம் போல் அவர்களை நடத்திக் கொள்ளலாம்’ என்று சொல்லி சாந்தமே உருவாகவும், சூதுவாது தெரியாத சாது ஜனங்களாகவும் இருந்தவர்களை பஞ்சமர்களென்று பெயர் வைத்து அவர்களை சூத்திரர் என்பவர்களுக்குக் காட்டிக் கொடுத்து அவர்களையும் ஏமாற்றி விட்டார்கள். கடைசியாக வாயில்லாப் பூச்சிகளாகிய ஒரு வகுப்பார் தீண்டாதவர்களாகி துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்விதக் கொடுமை செய்தவர்களைத்தான் நீங்கள் இன்றைய தினம் உங்கள் மத குருவாய் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இவ்விதக் கொடுமை நம்மை விட்டு விலக வேண்டுமானால் மத விஷயத்திலும் அரசியல் விஷயத்திலும் நாம் ஆதிக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்று நமது சுயமரியாதையை அடைய முயற்சிக்க வேண்டும். ஒரு சமூகத்திற்கானாலும் ஒரு தேசத்திற்கானாலும் சுயராஜ்யத்தை விட சுயமரியாதையே பிரதானமானதென்பது எனது தாழ்மையானதும் முடிவானதுமான கொள்கை.
- பெரியார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக