திங்கள், 26 ஜூன், 2017

நீட் தேர்வு என்னும் குழப்பம்

நீட் தேர்வு என்னும் குழப்பம்

இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரியில் சேர இருக்கும் தமிழக மாணவர்களுக்கு நீட் என்னும் அகில இந்திய நுழைவுத் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பம் நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குடியரசுத் தலைவர் இதுவரை அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் இந்த ஆண்டு நீட் தேர்வுக்கு விலக்கு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனாலும் ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவி வருகிறது. பாஜக வைத் தவிர தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிற சூழ்நிலையில் மத்திய அரசும் பாஜகவும் நீட் தேர்வை நுழைக்க என்ன காரணம்? ஏற்கனவே இருக்கும் மருத்துவ சேர்க்கையில் என்ன கோளாறு என்று சொல்ல முடியுமா? பனிரெண்டாம் வகுப்பில் பெறக்கூடிய மதிப்பெண்ணை வைத்துத் தேர்வு செய்வதில் என்ன குறையினை இவர்கள் கண்டார்கள்? மருத்துவர்களுடைய தகுதியை தரத்தினை எப்படி நீட் தேர்வின் மூலம் முடிவு செய்வார்கள்?

இந்தி ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும்தான் இந்த நீட் தேர்வு எழுத முடியும். அது இந்தி பேசக்கூடிய பகுதிகளுக்குத்தான் சாதகமாக அமையும் என்று அனைவரும் எதிர்த்ததால் அதிலே ஒரு தளர்வு செய்கிறோம் என்று கூறி தமிழிலும் எழுதலாம் என்றார்கள். ஆனால் அத்தேர்வை எழுத தமிழில் பாடப் புத்தகமே இதுவரை வரவில்லை. எல்லாமே தமிழர்களை ஏய்ப்பதற்கான திட்டமாகவே இருக்கிறது. தமிழகத்தில் அய்ந்தே இடத்தில்தான் அதற்கான தேர்வு மய்யங்கள் அறிவிக்கப்பட்டன. கன்னியாகுமரியில் இருப்பவன் மதுரைக்கு வர வேண்டும். தருமபுரியிலேயும் ஒசூரிலேயும் இருப்பவன் சேலம் வரவேண்டும். இவ்வளவு தொலைவு வந்து மாணவர்கள் தேர்வு எழுத முடியுமா? என்றதற்கு இப்பொழுது மேலும் மூன்று ஊர்களில் தேர்வு எழுதலாம் என்கிறார்கள்.

 இப்பொழுது மூலைக்கு மூலை நீட் கோச்சிங் சென்டர்கள் புற்றீசல்கள் போல முளைத்து விட்டன. அவற்றில் ஒரு மாதம் மட்டுமே பயிற்சி அளிப்பார்கள். அதற்கு ஒரு மாணவனுக்கு குறைந்தது அறுபது ஆயிரம் கட்டணமாகப் பெறுகிறார்கள். ஒரு கோச்சிங் சென்டரில் குறைந்தது நூறு மாணவன் என்று வைத்துக் கொண்டாலும் குறைந்தது அறுபது லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. இப்படி தனியார் கோச்சிங் சென்டர் வைத்திருப்பவன் ஒரு மாதத்தில் அறுபது லட்சம் ரூபாய் கொள்ளை அடிக்கவும் தனியார் கல்வி நிறுவனங்கள் கொள்ளை அடிக்கவுமே இந்த நீட் தேர்வு முறை பயன்படும். இத்தகைய கோச்சிங் சென்டர்களில் ஏழை எளிய பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பணம் கட்டிப் படிக்க முடியுமா? நகர்ப்புற ஏழை மாணவர்களாலேயே முடியாதபோது கிராமப் புறத்திலுள்ள மாணவர்கள் அதனை நினைத்துப் பார்க்கவாவது முடியுமா? இதன் காரணமாகத்தான் நாம் இந்த நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்குத் தேவை இல்லை என்கிறோம். அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு என்பதும் பல ஊழலுக்கு வழிவகுக்கும். ஏற்கனவே மத்தியப் பிரதேசத்தில் வியாபம் என்ற ஊழல் நாற்றமெடுத்துக் கொண்டிருக்கிறது. வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில்தான் அங்கெல்லாம் தேர்வுகள் நடக்கும். உண்மையான தகுதி திறமை உள்ளவன் யாரும் அதில் தேர்வாக முடியாது என்பதே முற்றிலும் உண்மை.

ஒரு காலத்தில் மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்று விதியை வைத்து பார்ப்பனர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேர முடியும் என்ற நிலையை உருவாக்கி இருந்தார்கள். இன்றைய மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் பார்ப்பனர்களால் நம் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுடன் போட்டி போட்டு மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர முடியவில்லை. பொதுப் போட்டியிலேயே தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகள் ஏராளம் அதில் சேர்ந்து விடுகிறார்கள்.

அதனை ஒழித்துக்கட்டி பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளும் சிபிஎஸ்சி யில் படிக்கும் பிள்ளைகளும் வடநாட்டுக்கரனும் தமிழக மருத்துவக் கல்லூரி இடங்களைக் கவர்ந்து செல்லவே இந்த நீட் தேர்வு வலுக்கட்டாயமாக தமிழகத்தில் திணிக்கப்படுகிறது. அதனை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அனுமதிக்காமல் விரட்டி அடிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக