செவ்வாய், 3 அக்டோபர், 2017

உலகமகாப் பொய்

ஆர்எஸ்எஸ் ஸின் சங்கமான பிஎம்எஸ் (புருடா மன்னர்கள் சங்கம்) தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17,2010 அன்று ஜமுக்காளத்தில் வடிகட்டி ஒரு பொய்யை அவிழ்த்து விட்டது. வெள்ளைக்காரன் வருவதற்கு முன் இந்த நாட்டில் 70 சதவிகிதம் பேர் படித்திருந்ததாகவும் வங்காளத்தில் மட்டும் 12000 பள்ளிக்கூடங்கள் இருந்ததாகவும் வெள்ளைக்காரன் வந்தபிறகு படித்தவர் எண்ணிக்கை 7 சதவிகிதமாகக் குறைந்து விட்டதாகவும் உலகமகாப் பொய்யை அவிழ்த்து விட்டார்கள். படித்தவர்கள் எல்லோரும் செத்துப் போய்விட்டார்களோ? அல்லது இந்த நாட்டை விட்டு ஓடிவிட்டார்களோ தெரியவில்லை.
அது எவ்வளவு பெரிய பொய் என்பதற்கு அண்ணல் அம்பேத்கர் வரலாற்றிலிருந்து ஆதாரங்களைத் தருகிறோம். அண்ணல் அம்பேத்கர் நினைவுநாளில் அதைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.
“அக்காலத்தில் பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட இலக்கியமும் கல்வியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தாக விளங்கின. இவை இரண்டும் சாதி இந்துக்களுக்கு மறுக்கப்பட்டன. சத்தாராவின் அரசர்கூட இரவில்தான் கல்வி கற்க வேண்டும் என்ற அளவிற்குப் பார்ப்பனர்களின் அதிகாரம் அச்சமூட்டுவதாய் இருந்தது. 1821ல் பூனாவில் சமஸ்கிருதப் பள்ளி ஒன்றை மகாராட்டிர அரசு தொடங்கியது. அப்பள்ளியில் பார்ப்பனர்களைத் தவிர சாதி இந்துக்களும் சேர்த்துக் கொள்ளப் படுவதற்கு பார்ப்பனர்கள் கடுமையான வெறுப்பையும் எதிர்ப்பையும் காட்டினர். பெரும்பாலான பார்ப்பன ஆசிரியர்கள் பள்ளிகளில் இருந்து தங்கள் பதவிகளைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறினர். எனினும் சாதி இந்துக்கள் பயில்வதற்கான பள்ளிகள் பையப்பைய அரசினால் நிறுவப்பட்டன. இதனால் பார்ப்பனர் அல்லாதவர்களும் பின்தங்கிய வகுப்பினரும் கல்வியிலும் அரசு வேலைகளிலும் மெல்ல மெல்ல முன்னேறினர். இதற்கான பெருமை பிரிட்டிஷ் அரசையே சேரும்.
சாதி இந்துக்களுக்கே இந்த ஈனகதி என்றால் தீண்டத் தகாத வகுப்பு மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் இந்தத் துறைகளில் இடம் பெறவே இல்லை. கல்வியில் இவர்கள் நெடுந்தூரம் பின்தங்கி இருந்தனர். தீண்டத் தகாதவர்களுக்குக் கல்வி தருவதன்மூலம் பார்ப்பனர்களின் பகையைத் தேடிக்கொள்ள ஆங்கிலேய ஆட்சி விரும்பவில்லை. அதனால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி அளிப்பதில எப்போதும் நழுவல் போக்கும் திசை திருப்பல் முயற்சியுமே அரசிடம் இருந்தது. மேலும் அக்காலத்தில் ஆசிரியர்கள்ää பள்ளி ஆய்வாளர்கள்ää கல்வி அலுவலர்கள் ஆகிய அனைவருமே பார்ப்பனர்கள். வெகு மக்களுக்கு கல்வி தருவது என்ற சிந்தனையையே இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
கிறிஸ்தவ மத நிறுவனங்கள் இந்த சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்களுக்கு ஓர் உள்நோக்கம் இருந்தாலும் தாழ்ந்த சாதியினருக்கும் தீண்டப்படாத வகுப்பு மக்களுக்கும் கல்வி வழங்கிடத் தொடங்கினர். சாதி இந்துக்கள் படிக்கும் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புக் குழந்தைகள் சேர்க்கப்படவில்லை. பரோடா மன்னர் சாயாஜிராவ் கெய்க்வாட் 1883ல் தாழ்த்தப்பட்டவர்களுக்கெனப் பள்ளிகளை நிறுவினார். இந்தப் பள்ளிகளில் இந்துக்கள் எவரும் ஆசிரியராகப் பணியாற்ற முன் வராததால் முஸ்லிம் ஆசிரியர்களைக் கொண்டே நடத்த வேண்டி இருந்தது”              ---(தனஞ்செய்கீர் எழுதிய அண்ணல் அம்பேத்கர் வரலாறு பக்கம் 5ää6ää7)               
இந்த இலட்சணத்தில் எழுபது சதவிகிம் பேர் யார் படித்திருப்பார்கள்? பார்ப்பனர்கள் வேண்டுமானால் படித்திருக்கலாம். வேறு யாராவது படித்திருக்க முடியுமா? நோட்டீஸ் மேல் நோட்டீஸ் போடும் பிஎம்எஸ் இதற்கு பதில் சொல்லுமா?   இது கடந்த ஆண்டு வெளியிட்ட துண்டறிக்கை. இதுவரை பதில் இல்லை. இனியாவது பதில் சொல்லுமா பிஎம்எஸ்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக