வியாழன், 26 அக்டோபர், 2017

பிஎம்எஸ்சின்அம்பேத்கர் சிறப்பிதழ்

 ஆர்எஸ்எஸ் சின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் கோல்வால்கர் சிறப்பிதழ் வெளியிடலாம். சவர்க்கர் சிறப்பிதழ் வெளியிடலாம். ஹெட்கேவர் சிறப்பிதழ் வெளியிடலாம். டெங்கடி சிறப்பிதழ் வெளியிடலாம். ஏன்? மோடி சிறப்பிதழ் கூட வெளியிடலாம். அதையெல்லாம் யாரும் குறை கூறப் போவதில்லை. எதற்காக அம்பேத்கர் சிறப்பிதழ் வெளியிட வேண்டும்? அங்கேதான் அவர்களின் சூழ்ச்சி புதைந்திருக்கிறது.

தங்களது கொள்கை என்பது வெகுமக்களுக்கு எதிரானது. அதிலும் குறிப்பாக உழைக்கும் மக்களான தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானது. முஸ்லிம்களுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிரானது என்பதை இப்பொழுது அவர்கள் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். இருந்தாலும் அதனை அமுல்படுத்தியே ஆக வேண்டும் என்ற வெறி இருக்கிறது. எப்படியாவது இந்துராஜ்யத்தை உருவாக்கி பார்ப்பனர் கைகளில் ராஜ்யத்தை ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்கள் நோக்கம். அதற்காக அவர்கள் எவ்வளவு கீழான நிலைக்கும் செல்வதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
தங்கள் கொள்கைகள் வெகுமக்களிடம் எடுபடாமல் போனதற்குக் காரணம் அம்பேத்கரும் பெரியாரும் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தமிழகத்தில் அண்ணா போன்றவர்கள் காரணம் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அதனை எதிர்த்து அவர்கள் கொள்கைகளுக்கு மறுப்புச் சொல்லித் தங்கள் அமைப்பை இங்கே காலூன்ற வைக்க முடியாது என்பதால்தான் அவர்களை அரவணைப்பதுபோல் அரவணைத்து அழித்தொழிக்க நினைக்கிறார்கள். அதனால்தான் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களை வளைத்துப் போட்டு அவர்கள் மூலமாக இப்பொழுது பெரியார் கொள்கைகளும் அம்பேத்கர் கொள்கைகளும் ஒத்து வராது என்று சொல்ல வைக்கிறார்கள். அப்படிச் சொன்ன கையோடு அம்பேத்கரும் பெரியாரும் இப்பொழுது இருந்திருந்தால் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று பேச வைக்கிறார்கள்.
ஆர்எஸ்எஸ் சின் எந்த சித்தாந்தத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்பதையும் சொன்னால் பரவாயில்லை. அதைச் சொல்ல மாட்டார்கள். பெரியாரும் அண்ணலும் ஆர்எஸ்எஸ் சின் இந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்வார்களா? இராமராஜ்யத்தை ஆதரிப்பார்களா? இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் ஆதரிப்பார்களா? பகவத் கீதையை அங்கீகரிப்பார்களா? மனுதர்மத்தை ஒத்துக் கொள்வார்களா? இராமனுக்குக் கோயில் கட்டுவதை சரி என்பார்களா? சேது சமுத்திரத்திட்டத்தை எதிர்க்க இராமன் பாலம் இருந்தது என்ற சிந்தனையை அவர்கள் அங்கீகரிப்பார்களா?
இது எதுவும் நடக்காது. இருந்தாலும் மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற ஒரு கருத்தைப் பரப்பி வருகிறார்கள். இப்பொழுது புதிதாக ஒருவர் முரளிதர ராவ் என்ற ஆந்திராக்காரர் ஏதோ அண்ணாவை முழுதாக அறிந்தவர் போல அறிஞர் அண்ணா இன்று இருந்தால் பாஜக வில்தான் சேருவார் என்று கதை விடுகிறார்.
அதைவிட ஒருபடி மேலே போய் வெங்கடேசன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞரைப்பிடித்து இந்துத்துவ அம்பேத்கர் என்று எழுத வைக்கிறார்கள்.
அப்படி அண்ணல் அம்பேத்கரை இந்துத்துவ அம்பேத்கர் என்று நிரூபிப்பதற்காகத்தான் பிஎம்எஸ் சும் அம்பேத்கர் ஜெயந்தி சிறப்பிதழ் என்று வெளியிட்டு அம்பேத்கரின் கொள்கைகளை தப்பும் தவறுமாகச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறது. அதுபோன்ற கருத்துக்கள் அவர்கள் வெளியிட்ட அம்பேத்கர் சிறப்பிதழில் ஏராளம் மலிந்து கிடக்கிறது. அதில் பல விசமத்தனமான கருத்துக்கள் இடம் பிடித்துள்ளன.
அதில் ஒன்றுதான் அம்பேத்கர் பாக்கிஸ்தான் பிரிவதை கடுமையாக எதிர்த்தார் என்று எழுதுகிறது. பாக்கிஸ்தான் பற்றிய சிந்தனைகள் என்ற நூல் கிட்டத்தட்ட எழுநூறு பக்கங்கள் கொண்டது. அதை முழுவதையும் படித்து உள்வாங்குவதற்கே ஒரு தனி அறிவு வேண்டும். அந்த நூலில்  இந்துக்கள் இஸ்லாமியர் இரு தரப்பாருடைய வாதங்களையும் நடுநிலையோடு ஆராய்ந்து பொதுவான கருத்துக்கள் பலவற்றை எடுத்துரைக்கிறார். இருதரப்பாருடைய அணுகுமுறையுமே தேசிய நலனுக்கு அப்பாற்பட்டவையாகத்தான் உள்ளன என்கிறார். (பக்கம் 577)
எந்த இடத்திலும் பாக்கிஸ்தான் கூடாது கூடவே கூடாது என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இந்துராஜ்யத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று ஆணித்தரமாகச் சொல்கிறார். “இந்துராஜ்யம் நிஜமாகும் பட்சத்தில் அது இந்த நாட்டின் மிகப்பெரும் சோக சம்பவமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்துக்கள் என்ன சொன்னாலும் இந்துமதம் விடுதலைää சமத்துவம்ää சகோதரத்துவம் ஆகியவற்றுக்குப் பேரிடராகவே இருக்கும். இந்த விசயத்தில் அது ஜனநாயகத்துக்கு ஏற்புடையதல்ல. இந்து ராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட வேண்டும்” என்று சொல்லும் அவர் அதற்குப் பரிகாரமாக பாக்கிஸ்தான் அமையாது என்பதையும் நடுநிலையோடு சுட்டிக்காட்டுகிறார். பக்கம் 536)
இதனை அப்படியே மூடிமறைத்து விட்டு அண்ணல் அவர்கள் ஏதோ முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரான கருத்தைச் சொன்னார் என்று அவரைத் திசைதிருப்பப் பார்க்கிறது.
ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் முஸ்லிம்களிடையே உருவாகவில்லையே என்று கவலைப்படும் அவர் முஸ்லிம்கள் எடுத்த எடுப்பிலேயே பாக்கிஸ்தான் கோரிக்கையை வைக்கவில்லை என்பதையும் முகமதலி ஜின்னா 1920 லிருந்து 1937 வரை பாக்கிஸ்தான் கோரிக்கையை ஆதரிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார். “1937வரை கூடிவாழும் விருப்பம் நிச்சயமாக இருந்து வந்தது. 1935ம் ஆண்டின் இந்திய அரசாங்கச் சட்டம் உருவாக்கப்பட்டபோது தாங்கள் ஒரே நாட்டின் ஒரே சட்டத்தின் கீழ் கூடி வாழ வேண்டும் என்ற கருத்தை இந்துக்களும் முஸ்லிம்களும் ஏற்றுக் கொண்டதுடன் அச்சட்டம் ஏற்றப்படுவதற்கு முந்தைய விவாதங்களிலும் கலந்துகொண்டனர்” என்கிறார் அண்ணல் (பக்கம்521)
பாகிஸ்தான் எதிர்ப்பாளர்களின் முகத்திரையைப் பல இடங்களில் கிழித்துத் தொங்க விட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் இந்துமகாசபையின் இரட்டை வேடங்களைத் தோலுறித்துக் காட்டுகிறார்.
இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் பிரிவதை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டுவிட்ட கோட்பாடாகிவிட்டது. “கர்னாடகமும் ஆந்திராவும் பிரிவதில் அதிர்ச்சி அளிக்கக் கூடியது எதுவம் இல்லையெனில் பாக்கிஸ்தான் பிரிவினைக் கோரிக்கையில் மட்டும் என்ன அதிர்ச்சி இருக்க முடியும்? பாக்கிஸ்தான் கோரிக்கை சீர்குலைவை உண்டுபண்ணும் என்று வாதிப்பதனால் இந்து முhகாணங்களான கர்னாடகம் மகாராஷ்டிரத்திலிருந்தும் ஆந்திரா சென்னையிலிருந்தும் பிரிந்து செல்வதைவிட இது அதிக சீர்குலைவை ஏற்படுத்தி விடாது. பாக்கஸ்தான் என்பது தனக்கே  உரிய தனது சொந்தக் கலாச்சாரத்தை வளர்;த்துக்கொள்வதற்குச் சுதந்திரம் வேண்டும் என்ற ஒரு கலாச்சார யூனிட் முன்வைக்கும் கோரிக்கையின் மறு வெளிப்பாடாகும்” என்று கூறுகிறார் (பக்கம் 41)அத்துடன் 1826 முதல் இந்தியாவுடன் இணைந்திருந்த பர்மா 1937ல் தனி நிர்வாகத்தின் கீழ் வந்தது. அவ்வாறு இந்தியாவிலிருந்து பர்மா பிரிக்கப்பட்டதை எதிர்க்காத இந்துக்கள் அரசியல் நோக்கில் பிரிக்கக் கூடியதும் சமுதாய நோக்கில் பகையுணர்வு மிக்கதும் சமய நோக்கில் அந்நியமானதுமான பாக்கிஸ்தான் போன்றதொரு பகுதியை மட்டும் பிரிக்கக் கூடாதெனக் கூறுதல் மிக விந்தையானது”  என்கிறார் அண்ணல் (பக்கம் 96)
அத்துடன் பாக்கிஸ்தான் பிரிவதால் இந்தியாவின் வலிமை குன்றும் என்ற கூற்றுக்கு இங்கு நிறைந்துள்ள வளங்களை நோக்கும்போது விலிமையான அரண்களை நம்மால் உருவாக்க இயலும் என்று இந்துக்கள் உறுதியாக நம்பலாம் என்று மேலும் கூறுகிறார் பக்கம் 99) வளங்களின் பற்றாக்குறை குறித்தும் அச்சம் எதுவும் தேவை இல்லை என்பதையும் குறிப்பிடுகிறார். 102
போர்ப்படைகள் குறித்த பிரச்சினைகளைப்பற்றி அலசி ஆராய்ந்த அண்ணல் அவர்கள் போர்ப்படைகளுக்காக குறிப்பாக முஸ்லிம் போர்ப்படைகளுக்காக செலவிடப்படும் தொகை இந்துக்களின் வரிப்பணத்திலிருந்து செலவிடப்படுகிறது என்றும் அதற்கு உறுதியான வழி பாக்கிஸ்தான் பிரிந்துபோக விட்டுவிடுவதே நல்லது என்றும் அவர் சொல்கிறார்.
ஆனால் இந்துமகாசபையும் காங்கிரசும் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்த்து வந்தார்கள். இந்துக்களிலுள்ள உயர்சாதி இந்துக்கள் இந்தப் பிரிவினைகளை எதிர்த்துக் குரல் கொடுத்து வந்துள்ளார்கள். அவர்களது இரட்டை வேடத்தை அண்ணல் அவர்கள் அம்பலப்படுத்துகிறார். 1915ல் பம்பாய் மாநிலத்திலிருந்து சிந்துவைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டும் என்றவர்கள் 1929ல் சைமன் கமிஷன் முன்பு சிந்து மாகாணத்தைப் பிரிக்கக் கூடாது என்கிறார்கள் என்றும் அவர்களது முரண்பாட்டைச் சுட்டிக்காட்டும் அண்ணல் அவர்கள் 1915ல் சிந்து மாகாணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லை என்றும் முஸ்லிம் அரசாகவும் இல்லாத நிலையில் அரசு உயர் பதவிகளில் பெரும்பாலானவற்றைக் கைப்பற்றிவிடலாம் என்ற நோக்கிலேயே 1015ல் சிந்து மாகாணத்தைப் பிரிக்க ஒத்துக் கொண்டார்கள். ஆனால் 1929ல் சிந்து மாநிலமாகப் பிரிக்கப்பட்டு அங்கு முஸ்லிம் அரசு பொறுப்பேற்றுள்ளதால் அரசு உயர் பதவிகளில் தங்களுடைய ஏகபோக நிலைமை பாதிக்கப்படும் என்பதால் இந்துக்கள் எதிர்த்தனர் என்கிறார்.
மேல்சாதி இந்துக்களின் கீழான பண்புக்கு வங்கப் பிரிவினைக்கு அவர்கள் காட்டிய எதிர்ப்பினைக்  கூறலாம். முழுமையான வங்காளம் மட்டுமின்றி பீகார் ஒரிசா அஸ்ஸாம் அய்க்கிய மாகாணங்கள் ஆகியவற்றில் அனைத்து உயர் அரசுப் பொறுப்புக்களையும் வங்காள இந்துக்களே பெற்று வந்தனர். வங்க மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டால் பசுமையான இந்த மேய்ச்சல் நிலத்தின் ஒரு பகுதி போய்விடுமே என்பதால்தான் இந்துக்கள் வங்கப் பிரிவினையை எதிர்த்தனர். வங்கம் பிரிந்தால் கிழக்கு வங்கத்தின் ஆட்சி அதிகாரப் பதவிகளை முஸ்லிம்களுக்கு பெரும்பாலும் விட்டுத்தர வேண்டியிருக்கும். இவ்வாறு வங்காள முஸ்லிம்களுக்கு தமது பதவிகளில் ஒரு பகுதியை விட்டுத் தரவேண்டிய நிலைமையை தவிர்த்து தங்கள் ஏகபோக நிலையை நீடித்து இருத்திக் கொள்வதே இந்துக்களின் வங்கப் பிரிவினை எதிர்ப்புக்கு தலையாய காரணம்” என்று அண்ணல் அவர்கள் மேல்சாதிப்பார்ப்பனர்களின் இரட்டை வேடத்தைத் தோலுறித்துக் காட்டுகிறார்.
மேல்சாதி இந்துக்களின் தாழ்பண்புகள் காரணமாகத் தங்களது பதவி வேட்டைக்காடுகளின் பரப்பு குறைந்து விடுமேயென்ற காரணம் ஒன்றுக்காகவே பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்க்கிறார்களோ என்ற அச்சம் தோன்றுவதாக அண்ணல் கூறுகிறார். பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பதற்கான பல்வேறு காரணங்களில் மேல்;சாதி இந்துக்களின் தன்னலமும் ஒன்றாக இருக்குமெனில் வியப்பதற்கில்லை என்கிறார் 176
“தங்களுடைய உயர் வேலைவாய்ப்புப் பகுதிகளில் சில குறைந்துவிடும் என்பதற்காக வங்க பஞ்சாபி மேல்சாதி இந்துக்கள் பாக்கிஸ்தான் பிரிவினையை எதிர்ப்பதன் மூலம் மாபெரும் தவறு செய்கிறார்கள் என்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். அரசுப் பதவிகள் அனைத்தையும் தங்கள் ஏகபோக உரிமையாய் வைத்துக்கொள்ளும் காலம் மலையேறிவிட்டதென்று அவர்களுக்கு உணர்த்த வேண்டும். தேசியத்தின் பெயரால் அவர்கள் தாழ்ந்த சாதி இந்துக்களை வேண்டுமானால் இன்னும் ஏமாற்றிக் கொண்டிருக்கலாமேயன்றி முஸ்லிம் பகுதிகளில் வாழும் முஸ்லிம் மக்களை ஏமாற்றி அதிகாரப் பதவிகளைத் தங்கள் வசமே தக்க வைத்துக்கொள்வது என்பது இனியும் நடவாது. …. முஸ்லிம்களை முட்டாளாக்கி முழுமையான ஆட்சி அதிகாரத்தை என்றென்றும் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று அவர்கள் கருதுவது அறிவுடைமை ஆகாது” என்று பார்ப்பனர்களின் முகத்திரையைக் கிழித்துக்காட்டுகிறார் (பக்கம் 177)
மேலும் சவர்க்கர் இந்தியாவின் பாதுகாப்புக்கும் பந்தோபஸ்துக்கும் ஆபத்தான ஒரு நிலையை உருவாக்குகிறார் என்றும் இந்து இனத்தவர் தங்களுக்கென்று தனியாக ஒரு நாடு இருக்க வேண்டும் என்று கோருகின்ற அவர் முஸ்லிம் இனத்தவர் தங்களுக்கென்று ஒரு நாடு வேண்டும் என்று கோருவதை எப்படி மறுக்க முடியும்? என்கிறார் (பக்கம் 206)
“முஸ்லிம் இனத்தவர்கள் அதிகாரத்தில் இந்து இனத்தவர்களுடன் சரிசமமாக இருப்பதை திரு சவர்க்கர் அனுமதிக்க மாட்டார். இந்து இனம் ஆதிக்கம் செலுத்தும் இனமாகவும் முஸ்லிம் இனம் சேவகம் புரியும் இனமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்து இனத்தவருக்கும் முஸ்லிம் இனத்தவருக்கும் இடையில் பகைமை என்னும் விதையைத் தூவிய பின்னர் ஒரே அரசியல் சட்டத்தின் கீழ் ஒரே நாட்டில் வாழ வேண்டுமென்று திரு சவர்க்கர் விரும்புகிறார் என்பது விளக்குவதற்குக் கடினமானதாகும்” என்கிறார் அண்ணல் (பக்கம் 207)
திரு சவர்க்கர் உருவாக்கிய சுயராஜ்யத் திட்டம் முஸ்லிம்களை அடக்கி ஆளும் ஒரு சாம்ராஜ்யத்தை இந்துக்களுக்கு வழங்கி அதன் மூலம் தாங்கள் ஒரு ஏகாதிபத்திய இனம் என்ற திருப்தியையும் பெருமையையும் வழங்கும். ஆனால் அது இந்துக்களுக்கு ஒரு நிலையான அமைதியைத் தராது. ஏனெனில் முஸ்லிம்கள் இத்தகையை ஒரு பயங்கரமான மாற்றுத் திட்டத்திற்கு ஒருபோதும் ஒப்புக்கொண்டு அடிமைகளாக இருக்க மாட்டார்கள்” என்றும் அண்ணல் அவர்கள் சவர்க்கரை அம்பலப்படுத்துகின்றார்.
இந்துராஜ்யம் எந்த விலை கொடுத்தேனும் தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறும் அண்ணல் அவர்கள் எந்த இடத்திலும் அதேபோல பாக்கிஸ்தான் தடுக்கப்பட்டாக வேண்டும் என்று கூறவில்லை. மாறாக “பாக்கிஸ்தான் வேண்டும் என்று முஸ்லிம்கள் கோரும் பட்சத்தில் அவர்களது கோரிக்கைக்கு இணங்குவதே அறிவார்ந்த பாதையாக இருக்கும் என்பதில் அய்யம் ஏதும் இருக்க முடியாது” என்கிறார் (பக்கம் 550)
அப்படி பாக்கிஸ்தான் வேண்டும் என்பதை யார் முடிவு செய்ய வேண்டும் என்பதையும் அண்ணல் கூறுகிறார்.
பாக்கிஸ்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லக் கூடிய வேலை பம்பாய் அல்லது சென்னையைச் சேர்ந்தவர்களுக்கு இல்லை. பல ஆண்டுகளாக தங்களது வாழ்வும் வருங்காலமும் எந்த அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளதோ அதில் ஏற்பட்ட மிகவும் உக்கிரமான மிகவும் புரட்சிகரமான மிகவும் அடிப்படையான ஒரு மாற்றத்தின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ளக் கூடிய அப்பகுதிகளில் வாழும் மக்களே அதைத் தீர்மானிக்க விட்டு விட வேண்டும். பாக்கிஸ்தான் மகாணங்களில் வாழும் மக்களிடையே நடத்தப்படும் ஒரு கருத்துக் கணிப்புத்தான் பாக்கிஸ்தான் பிரச்சினையைத் தீர்க்கும் மிகவும் பாதுகாப்பான அரசியல் சட்டரீதியான வழிமுறையாக எனக்குத் தோன்றுகிறது என்று அண்ணல் கூறுகிறார். 593.
இந்தியாவைப் பிரிவினை செய்வதற்கு மாட்சிமை பொருந்திய மன்னரின் அரசாங்கத்தினுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தச் செய்வதன் மூலம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள எண்ணுவது முஸ்லிம் லீக்கின் நலன்களுக்கு உகந்தது அல்ல என்ற இன்னொரு விசயத்தையும் நான் கூற விரும்புகிறேன். பாகிஸ்தானைப் பெறுவதைவிட மிக முக்கியமானதென்று நான் கருதுவது என்னவெனில் பாகிஸ்தானை ஏற்படுத்துவதில் பின்பற்றப்படும் நடைமுறைகளேயாகும். பிரிவினைக்குப் பின்னர் பாக்கிஸ்தானும் இந்தியாவும் இரு நேச நாடுகளாக ஒன்று மற்றதன்பால் நல்லெண்ணத்துடனும் பகைமையுணர்வு இன்றியும் தொடரவேண்டும் என்பதே குறிக்கோளாகும்.
மக்களின் வாக்கெடுப்பு மூலம் மேற்கொள்ளப்படும் முடிவைத் தவிர இந்த இலக்கை அடைவதற்கு வேறொரு சிறந்த தீர்வு இருக்க முடியுமா என்பதை நானறியேன். 600
இவ்வளவு தெளிவாக பாக்கிஸ்தான் பற்றிய தனது முடிவை அண்ணல் அவர்கள் தெரிவித்திருக்கும்போது முஸ்லிம் லீக்கின் பிரிவினை கோஷத்தை அவர் வன்மையாகக் கண்டித்தார் என்று எழுதுவது விசமத்தனமானது. அண்ணலை முஸ்லிம்களுக்கு எதிராகச் சித்தரிப்பதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு அவர்களை அடியாளாகப் பயன்படுத்துவதே அவர்களது நோக்கமாகும்.
அதே நூலில் அண்ணல் அவர்கள் இந்துராஜ்யம் அமைவதைத் தடுக்க முகமதலி ஜின்னாவுக்கு யோசனையும் தெரிவிக்கிறார். நாட்டைத் துண்டாடாமல் முஸ்லிம் லீக்கை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்துக்களும் முஸ்லிம்களும் கலந்த ஒரு கட்சியை உருவாக்குவதுதான் இந்துராஜ்யம் என்ற பூதத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரே பயனுறு வழியாகும். அரசியல் சட்டரிதியான பாதுகாப்பு நடவடிக்கைளின் பிரச்சினை மீதான கருத்து வேறுபாடுகள் தொடரும்வரை காங்கிரசிலும் இந்துமகாசபையிலும் சேருவது முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் சாத்தியமில்லை என்பது உண்iதான். ஆனால் இப்பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படும். தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை இது. இத்தீர்வு முஸ்லிம்களுக்கும் இதர சிறுபான்மையினருக்கும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பைப் பெற்றுத்தரும் என்பதை நம்பிக்கையுடன் கூற முடியும். இது நிறைவேற வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகின்றோம். அவ்வாறு நிகழும்போது கட்சிகள் மறு ஒருங்கிணைக்கப்படும் வழியில் எதுவும் குறுக்கிட முடியாது.
காங்கிரசும் இந்து மகாசபையும் தகர்ந்துபடும்.
இந்து சமுதாயத்தில் பல கீழ்மட்டப் பிரிவுகள் உள்ளன. அவர்களுடைய பொருளாதார அரசியல் சமூகத் தேவைகள் பெரும்பாலான முஸ்லிம்களின் தேவைகளைப் போன்றதேயாகும். பல நூற்றாண்டுகளாகத் தங்களுக்கு சாதாரண மனித உரிமைகளை மறுத்தும் பறித்தும் வந்த உயi;ஜாதி இந்துக்களுடன் இணங்கிப் போவதைவிட பொதுவான இலக்குகளை எய்துவதற்கு முஸ்லிம்களுடன் ஒரு பொதுவான இலட்சியத்தில் இணைவதற்கு அவர்கள் தயாராக இருப்பார்கள். இத்தகைய ஒரு போக்கை பின்பற்றுவதை அபாயகரமான செயல் என்று கருத முடியாது. இப்பாதை நன்கு பழகிய பாதைதான். பெரும்பாலான மாநிலங்களில் மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் கீழ் முஸ்லிம்களும் பிராமணர் அல்லாதார்களும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் ஒன்று சேர்ந்து 1920 முதல் 1937 வரை ஒரே குழு உறுப்பினர்களைப் போன்று சீர்திருத்தங்களைச் செயல்படுத்தப் பாடுபட்டது உண்மையல்லவா?
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஒரு வகுப்புவாத நல்லிணக்கத்தை எய்தவும் இந்துராஜ்யம் உருவாகும் அச்சுறுத்தலை ஒழிக்கவுமான மிகவும் பயனுள்ள வழிமுறை இதில்தான் உள்ளது.
திரு.ஜின்னா இந்த வழியை எளிதில் பின்பற்றியிருக்கலாம். அதில் வெற்றிபெறுவது திரு ஜின்னாவுக்கு கடினமானது அல்ல. இத்தகைய ஒரு வகுப்புசாராத கட்சியை உருவாக்க திரு ஜின்னா முயன்றிருந்தாரேயானால் அவரது தரப்பில் வெற்றிக்கு எல்லா வாய்ப்புக்களும் இருந்திருக்கும் என்று திரு ஜின்னாவுக்கே ஆலோசனை வழங்கியவர் அண்ணல் அவர்கள்.
அவரது ஆலோசனையை ஏற்காமல் பிரிட்டிஷ் அரசு பாக்கிஸ்தானைப் பிரித்ததால்தான் தேவையற்ற மதக்கலவரங்களும் கொலைகளும் வெட்டுக்குத்துகளும் ஏற்பட்டன.
இந்தியாவிலுள்ள மற்ற சிறுபான்மையினரும் பார்ப்பனரல்லாதாரும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரும் ஒருங்கிணைந்தால் இந்துராஜ்யம் அமையும் அபாயத்தைத் தகர்க்க முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக அண்ணல் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவரது ஆலோசனையின்படி இன்றுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பினரும் பார்ப்பனரல்லாதாரும் முஸ்லிம்களும் மற்ற சிறுபான்மையினரும் ஒன்று சேர்ந்து இந்துராஜ்யம் உருவாவதைத் தடு;த்து விடுவார்கள் என்ற அச்சத்தினால்தான் சங் பரிவார் கும்பல் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடப் பார்க்கிறது. அதனை அண்ணலின் அறிவுhயுதத்தைக்கொண்டு முறியடிப்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக