திங்கள், 9 அக்டோபர், 2017

வர்ணாஸ்ரமதர்மம்

BJPயும் RSS ம் BMS எங்கேயும் மனுதர்மத்தை சட்டமாக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்பார்கள். அது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் தெரியுமா? தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் மனுதர்மத்தை அடித்துத் துவைத்துக் காயப் போட்டு விட்டதால் வெளிப்படையாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேச மாட்டார்களே தவிர அவர்களுடைய வார்த்தைகளில் மறைமுகமாக மனுதர்மத்தை ஆதரித்துப் பேசிக்கொண்டுதான் இருப்பார்கள்.

உதாரணத்திற்கு
“நமது சமுதாயத்தில் அர்ச்சகர்கள், ஆசிரியர்கள், மற்றும் வைத்தியர்கள் உள்ளனர். அவர்களுக்கு சம்பளம் கொடுக்கப்படவில்லை. அவர்கள் சமுதாயத்திற்காக தொண்டாற்றினார்கள். சமுதாயம் அவர்களைக் காப்பாற்றியது. அரசர் சட்டத்தை இயற்ற முடியாது. அது ரிஷி, முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டது. ராஜா கூட அந்த சட்டங்களுக்குப் பணிந்து செயல்புரிந்தனர். இதுபோன்ற உயர்ந்த மரபுகள் நமது சமுதாயத்தினை உயிரூட்டமுள்ளதாகக் காத்து வருகிறது. நமது நாட்டை நாம் அதே அடிப்படையில் அமைக்க வேண்டும்” (BMS சங்க மடல் 1998 ஜன. பிப்)

இப்படிச் சொல்கிறது பிஎம்எஸ்ஸின் சங்க மடல். இதில் உள்ள வார்த்தை ஜாலத்தைக் கவனித்தால் இதில் உள்ள விசமத்தனமும் ஆபத்தும் நன்றாகப் புரியும். இதுதான் மனுதர்மம். அர்ச்சகர்கள் ஆசிரியர்கள், வைத்தியர்கள் சமுதாயத்திற்காகத் தொண்டாற்றினார்களாம். என்ன தொண்டு? அவர்களால் யாருக்கு என்ன நன்மை? அர்ச்சகர்கள் யார்? ஆசிரியர்கள் யார்? வைத்தியர்கள் யார்? இவர்கள் அனைவரும் பிராமணர்கள்தானே?


அர்ச்சகர்களால் சமுதாயத்திற்கு என்ன நன்மை? ஆசிரியர்கள் யாருக்குக் கல்வி புகட்டினார்கள்? பிராமணர்கள் வைத்தியத்தொழில் செய்தார்களா? அவர்கள் எல்லா சாதிக்காரர்களையும் தொட்டு வைத்தியம் செய்தார்களா?
கல்வி சூத்திரர்களுக்குக் கிடைத்ததா? சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்றுதானே இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் இயற்றிய சட்டங்கள் சொன்னது? இவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் சூத்திரர்களுக்குக் கல்வி கற்பிக்க மறுத்தார்கள் என்பதுதானே கடந்த கால வரலாறு? அர்ச்சகர்கள் ஒரு ஆறு மாதத்திற்கு ப10ஜை புனஸ்காரங்கள்ää சடங்குகள் செய்யாமல் இருந்தால் யாருக்காவது ஏதாவது நட்டம் ஏற்பட்டிருக்குமா? எந்த நட்டமும் ஏற்பட்டிருக்காது. மாறாக நன்மைகள்தான் ஏற்பட்டிருக்கும். அப்படியிருக்க அவர்கள் ஏதோ சமுதாயத்திற்குத் தொண்டாற்றினார்கள் என்று சவடால் அடிக்கிறது பிஎம்எஸ்.

அடுத்து அரசர்கூட சட்டத்தை இயற்ற முடியாதாம். அது ரிஷிகள் முனிவர்கள் போன்றவர்களிடம் விடப்பட்டதாம். சுவாமி சிவானந்தா என்பவர் இவ்வாறு எழுதுகிறார்:

“இந்து ரிஷிகளும் முனிவர்களும் சமூகத்திற்குரிய லட்சியம் நிறைந்த திட்டத்தைத் தீட்டினர். தனியாரின் வாழ்வுக்கான லட்சியம் வாய்ந்த வழியையும் வகுத்துத் தந்தனர். அம்முறைதான் வர்ணாஸ்ரமதர்மம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. வர்ணாஸ்ரமதர்மம் என்னும் அடிமனையால் இந்துமதம் என்னும் சொர்ண மாளிகை கட்டப்பட்டுள்ளது. வர்ணாஸ்ரம தர்மங்களைக் கடைப்பிடித்தலானது தன் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் உதவி புரிகிறது. இது மிகமிக அவசியமானது. அதன் விதிகள் மீறப்படுமானால் நாடு இருந்த இடம் காடாக மாறிவிடும். பொதுவான நிலையான தர்மத்தின் வளர்ச்சியை அல்லது மேம்பாட்டை மேன்மேலும் உயர்த்துதலே வர்ணாஸ்ரம தர்மத்தின் முக்கிய நோக்கமாகும்.

(இந்து தர்மம் என்ற நூலில் பக்கம் 89ää சிவானந்தா ஆஸ்ரமம் வெளியீடுää நாமக்கல்)

~உலகில் உள்ள செல்வங்கள் அனைத்தும் பார்ப்பனருக்கே சொந்தம்; மற்றவர்கள் பார்ப்பனர் தயவிலேயே வாழ்கிறார்கள்| (மனு - அத்தியாயம் 1 சுலோகம் 100)

என்ற சாஸ்திர விதிகள் எல்லாம் இவர்கள் சொல்லும் ரிஷிகளும் முனிவர்களும் உண்டாக்கியதுதானே! இதனால் முழுப் பலனையும் அடைந்தவர்கள் பார்ப்பனர்கள்தானே?

அதே அடிப்படையில் நமது சமுதாயத்தை அமைப்பதுதான் நமது இலட்சியம் என்று பிஎம்எஸ் சொல்கிறது என்றால் அவர்கள் யாருக்காக சங்கம் வைத்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லுகின்ற அந்த சமுதாய அமைப்பு இன்று மாறிப்போய் அனைவருக்கும் பொருந்தக் கூடிய பொதுவான சட்டத்தை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இயற்றியுள்ளார்கள். பிஎம்எஸ்ஸின் இந்தக் கூற்றுப்படி அம்பேத்கர் எழுதிய சட்டங்கள் மாற்றப்பட்டு மீண்டும் பழைய மனுதர்ம சாஸ்திர சம்பிரதாயங்களைக் கொண்டு வந்து பார்ப்பனர் கையில் ஆட்சியை ஒப்படைக்கத்தான் அவர்கள் பாடுபடுகிறார்கள் என்பது இதன் மூலம் விளங்கவில்லையா?

அத்தகைய சமுதாயம் அமைந்தால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களே! உங்கள் நிலை என்ன? சிந்திப்பீர்! பிஎம்எஸ் ஐ நம்பி கிடைத்த வாழ்வையும் இழக்காதீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக