புதன், 16 ஆகஸ்ட், 2017

மாடு தீண்டலாம் உங்கள ஆடு தீண்டலாம் – நாங்க
மனுசன் மட்டும் தீண்டக்கூடாதா?
நாடு என்பதா இதை நரகமென்பதா? – இங்கே
சேரியெல்லாம் சிறைகளானதே.
கோட்டை கட்டினோம் கோயில் மேளம் கொட்டினோம் – சவக்
குழிகள் கூட நாங்க வெட்டினோம்
கோட்டைவிட்டும் கோயில் விட்டும் தூர நிற்கிறோம் -புதைக்கும்
சுடுகாடும் இல்ல நாங்க தவிக்கிறோம்
பாரதத்தாய் மேனியிலே பாதி உடல் சீழ்பிடித்தால்
மீதி உடல் நோயில்லாமல் வாழுமோ? – இந்த
ஜாதிபேதம் எந்த நாளில் வீழுமோ?
தோட்டிகளாக ஈனத் துளும்பர்களாக – மலம்
தோள் சுமக்கும் அடிமைகளாக
உயிரிருந்தும் சவங்களாக உணர்விருந்தும் ஜடங்களாக
உழலுகின்றோம் நடைபிணமாக
தாயே சுதந்திரமே தாழ்த்தப்பட்ட சேரிமகன்
வீட்டில் என்று வந்து குடி ஏறுவாய்? – அதையே
தீட்டு என்றா நீயும்கூட எண்ணுவாய்?
எந்த நாட்டிலும் இந்த இழிவு இல்லையே
சொந்த நாட்டில் அன்னியரானோம்
உழுவதற்கு நிலமுமில்லை அழுவதற்கு உரிமையில்லை
தொழுவதற்கா பூமியில் பிறந்தோம்?
மனிதர்களைப் புழுவாக்கி மகிழுகின்ற கேவலத்தை
மனுநீதி என்ரு பெயர் சூட்டினார் – இங்கே
மனித நீதியை சிறையில் பூட்டினார்.
-எழுதியவர் அய்யா தலித் சுப்பையா....
இந்த பாடலை பாட முடிந்தவர்கள் பாடலாய் பாடி சமூக வலை தளங்களில் பரப்புங்கள் தோழர்களே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக