ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

*கேள்விகள் பத்து*


*கேள்விகள் பத்து*
ஒன்று;
கடவுள் இருப்பதாகப் பிறர் சொல்லி நம்புகிற நீங்கள், அவர் தோன்றியது ஏன்? எப்படி? எப்போது? என்றெல்லாம் நீங்களாகவே கேள்விகள் கேட்டு, உங்கள் சுய அறிவால் விடை தேட முயன்றதுண்டா?
இரண்டு:
நீங்கள் நம்புகிற கடவுளின் படைப்பில் உயிர்களுக்கு விளையும் நன்மைகள் அதிகமா, தீமைகளா என்று ஆராய்ந்து பட்டியலிட்டதுண்டா?
மூன்று:
‘நாம் பாவம் செய்தோம்; தண்டிக்கப்படுகிறோம்’ என்று உணர்கிற அறிவு வாய்த்த பிறகு ஒரு மனிதர் தண்டிக்கப்படுவதில் நியாயம் இருக்கிறது. மழலைகளையும் மழலை மனம் கொண்டவர்களையும் கடவுள் தண்டிக்கிறார் என்றால், அவரை எப்படி உங்களால் போற்றி வணங்க முடிகிறது?
நான்கு:
மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கிறீர்கள். அவர்களின் சிறுநீர் இனிக்குமா? அவர்கள் வெளியேற்றும் மலம் கமகமக்குமா? அவர்கள் செத்தால், சடலம் புழுத்து நாறிப் புழுக்கள் நெளியாமல், மலர்கள் மலர்ந்து மணம் பரப்புமா?
எரித்தால் சாம்பல் ஆகாமல், பூத உடலோடு மாயமாய் மறைந்து ‘சொர்க்கம்’ சேர்வார்களா?
ஐந்து:
கடவுள், தான் விரும்பிய மனித உருவிலோ, பிற உயிர்களின் உருவிலோ உங்கள் முன்பு காட்சியளித்து, “நான்தான் கடவுள்” என்றால் நம்புவீர்களா?
நம்பாத உங்களை நம்ப வைக்கக் கடவுள் கையாளும் உத்தி என்னவாக இருக்கும்?
ஆறு:
கடவுளுக்குக் கோயில் கட்டுகிறீர்கள்; விழாக்கள் எடுக்கிறீர்கள். விதம் விதமாய் வழிபடுகிறீர்கள். கடவுளும் மனிதனைப் போலப் புகழ்ச்சிக்கு மயங்குபவர் என்று நீங்கள் நம்புவது சரியா?
‘அவரைப் புகழ்வது, எங்கள் மனதைச் சுத்தப்படுத்த” என்று நீங்கள் சமாளிப்பீர்கள். நாம் கேட்கிறோம். புகழ்வதால் மனம் தூய்மை பெறுமா? அவரைப் புகழ்ந்து, அவர் உத்தரவு போட்டால்தான் நாம் திருந்துவோமா?
ஏழு:
உங்கள் வேண்டுதல் கடவுளைச் சென்று சேர்கிறது என்பதை எப்படி நம்புகிறீர்கள்? அதற்கு முன்னுதாரணம் ஏதும் உண்டா?
எட்டு:
கடவுளுக்கு நீங்கள் செலுத்தும் காணிக்கைகள், படையல்கள் எல்லாம் சில மனிதர்கள் வசம் சேர்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஏமாறுகிறீர்களே, கடவுளின் பெயரால் ஏமாற்றப்படுவதைப் பெருமையாகக் கருதுகிறீர்களா?
ஒன்பது;
கடவுள், இந்த மண்ணுலகில் உங்களைப் பிறக்கச் செய்ததற்காக நன்றி சொல்கிறீர்கள். அதே கடவுள்தான், உங்களை மரணமடையச் செய்கிறார். அந்த மரணம் பற்றிய நினைப்புதான் உங்களைச் செத்துச் செத்துப் பிழைக்க வைக்கிறது. இதை அறியாதவரா நீங்கள்? அறிந்தும் அவருக்கு நன்றி சொல்லித் துதி பாடுகிறீர்களே, இது அறிவுடைமை ஆகுமா?
பத்து:
நீங்கள் என்னை மனம் போனபடி திட்டினாலும், திரும்பத் திரும்ப மேற்கண்ட கேள்விகளைப் படித்தீர்கள். இது உண்மை. உண்மையைச் சொல்லுங்கள்.....
கடவுளின் ‘இருப்பு’ பற்றித் தீவிரமாய்ச் சிந்திக்கத் தொடங்கிவிட்டீர்கள்தானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக