திங்கள், 13 மார்ச், 2017

அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தரப் பணி






பெல் நிறுவனத்திற்கு நிரந்தரப் பணிகள் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகத்தான் நிரப்பப் பட்டு வந்தன. அய்டிஅய் படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களை எழுத்துத் தேர்வு  செய்முறைத் தேர்வு , நேர்முகத் தேர்வு என தேர்வு வைத்து தேர்ந்தெடுத்தார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஓராண்டு அப்ரண்டிஸ் முடித்தவுடன் கிரேடு IV ஆக பணியமர்த்தப்பட்டார்கள். அப்ரண்டிசாக தேர்ந்தெடுக்கப்பட்டாலே இங்கு நிரந்தரப்பணி உறுதி. பயிற்சி முடித்து அடுத்த நாளே கிரேடு IV அளிக்கப்பட்டதும் உண்டு.

சில காலம் தினக்கூலியாக அமர்த்தப்பட்டு அதன்பிறகு பணியமர்த்தப்பட்டவர்களும் உண்டு.
அவ்வாறு 1980ல் பயிற்சிபெற்ற 27வது பேட்ச் வெல்டர்கள் 1981ல் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நீங்கள் ஆர்டிசான் கிரேடு IV பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள். உங்கள் பெயர் தே;ர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் உள்ளது. காலியிடம் ஏற்படும்பொழுது உங்களுக்குப் பணி நியமனம் வழங்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்தது.

அவர்களுக்கு 1987ல் தினக்கூலியாக ( NMR) ஆக பணியமர்த்த நிர்வாகம் தந்தி அனுப்பியது. அந்தத் தந்தியில் நீங்கள் ஏதேனும் வேறு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தால் இத்தற்காலிகப் பணிக்காக அதை ராஜினாமா செய்ய வேண்டாம். இத்தினக் கூலிப்பணிக்கு நீங்கள் வந்தாலும் வராவிட்டாலும் உங்கள் பெயர் தே;ர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் இருந்து நீக்கப்படமாட்டாது என்று தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

அவர்களில் 17 பேர் 1987 லில் இருந்து 1993 வரை கிட்டத்தட்ட 900 நாட்கள் வரை விட்டுவிட்டு தினக்கூலியாக ( NMR) ஆக பணியமர்த்தம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணியில் இருந்தபோதே 1991ல் நிர்வாக இயக்குனருக்கு தங்களுக்கு கிரேடு IV வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்கள்.

அதற்கு ஊழியர்துறை அதிகாரி திரு கந்தசாமி அவர்கள் ~26வது பேட்ச் வெல்டர்கள் சிலர் இன்னும் பணியமர்த்தம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கம் பணி வழங்கிய பிறகு உங்களுக்கும் பணி வழங்கப்படும். உங்கள் பெயர் தேர்வானோர் பட்டியலில் பராமரிக்கப்பட்டு வருகிறது| என்று கடிதம் அனுப்பினார். 27வது பேட்சிலேயே சிலர் நிரந்தரப் பணிக்கு எடுக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி அவர்கள் மீண்டும் விண்ணப்பித்தபோது எந்த பதிலையும் நிர்வாகம் வழங்கவில்லை.
இதற்கிடையில் 1997 ல் பயிற்சி முடித்த பொருத்துனர் 17 பேர் நீதிமன்றம் சென்று நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டார்கள். அப்பொழுது இவர்கள் நிர்வாகத்தை அணுகித் தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று கேட்டபொழுது நீங்களும் இதேபோல் நீதிமன்றம் சென்று தீர்ப்புப் பெற்று வாருங்கள் உங்களுக்கு வேலை வழங்குகிறோம் என்று ஆலோனை வழங்கினர் ஊழியர்துறை அதிகாரிகள்.

இதை நம்பி அவர்களும் நீதிமன்றம் சென்றார்கள். இவர்கள் வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் முருகேசன் அவர்கள்      18-04-2001ல் இவர்களுக்கு மூன்று மாதங்களுக்குள் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள்.
நிர்வாகம் அதற்கு தற்பொழுது புதிய பணி நியமனங்கள் இல்லாததாலும் இவர்களுக்கு வயது அதிகம் ஆகிவிட்டதாலும் அவர்களைப் பணி நியமனம் செய்ய முடியாது என்று பதிலளித்தது.

இதற்கிடையில் 2005ல் புதிதாக ஊழியர்கள் திறந்த போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அந்த 17 பேரும் இதனைச் சுட்டிக்காட்டி தங்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் சென்றார்கள். அந்த வழக்கை விசாரித்த மாண்புமிகு நீதியரசர் பால் வசந்தகுமார் அவர்கள் இந்த 17 பேரும் தங்கள் இளவயதில் இந்த நிறுவனத்திற்காக உழைத்திருப்பதால் அவர்கள் வயதைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று 05-09-2006 அன்று மிகச் சிறப்பான தீர்ப்பளித்தார்கள்.

நிர்வாகம் அதையும் எதிர்த்து மேல் முறையீடு செய்தது. நீதிமன்றம் வழிகாட்டுதல்தான் (Direction) செய்துள்ளதே தவிர ஆணை (Order) எதுவும் பிறப்பிக்கவில்லை. எனவே, இவர்களுக்குப் பணி நியமனம் வழங்க வேண்டிய அவசியமில்லை என்று நிர்வாகம் வாதாடியது.
இந்த வழக்கில் நீதிபதி மாண்புமிகு சுகுணா அவர்கள், நிர்வாகம் இந்த 17 பேருக்கும் உடனடியாக திருச்சியில் கிரேடு IV வேலை வழங்க வேண்டும், திருச்சியில் காலி இடம் இல்லாவிட்டால் அதன் சகோதர யூனிட்களிலாவது கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று 12-04-2007ல்  ஆணை பிறப்பித்தார்கள்.

இதற்கிடையில் நிரந்தர ஊழியர்களின் பிள்ளைகள் சிலர் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து NMR ஆக பணிபுரிந்து இதேபோல் நிறுத்தப்பட்டிருந்தார்கள். அவர்களும்  NMR ஆக பணிபுரிந்து நிறுத்தப்பட்ட இன்னும் சிலரும் தங்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று வழக்குத் தொடுத்தார்கள்.

இந்த வழக்கை நீதியரசர் மாண்புமிகு சந்துரு அவர்கள் விசாரித்து அப்ரண்டிஸ் சட்டம், நிறுவனத்தின் வேலைவாய்ப்புக் கொள்கை, இதேபோன்று பல்வேறு மாநில அரசுகள், நிறுவனங்களில் நடைபெற்ற வழக்குகள், தீர்ப்புக்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் முடித்தவர்களுக்கு கிரேடு IV வேலை வழங்கியிருக்கும்போது இவர்களுக்கு மறுப்பது தவறு. ஒரே தலைமை அதிகாரியின் கீழ் இயங்கி வரும் இரு நிறுவனங்களுக்கிடையே வவேறு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுவது தவறு என்றும், எனவே, இவர்கள் அனைவருக்கும் நான்கு வார காலத்திற்குள் திருச்சி நிர்வாகம் நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று     12-10-2007ல் சிறப்பான தீர்ப்பினை வழங்கினார்கள்.

அந்தத் தீர்ப்பையும் மதிக்காத நிர்வாகம் தனி நீதிபதி (Siingle judge) கொடுத்த தீர்ப்புக்களை அமுல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று ஆணவத்துடன் மீண்டும் மேல் முறையீடு செய்தது.

இதன்பிறகு இரு நீதிபதிகள் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வினை (Bench)  மதுரை உயர்நீதிமன்றம் அமைத்தது. நீதியரசர்கள் மாண்புமிகு P.K மிஸ்ரா, P.முருகேசன் ஆகியோர் அடங்கிய அமர்வு நீதிமன்றம் அப்ரண்டிஸ் அசோசியேசன் உட்பட இவ்வழக்கில் தொடர்புடைய மொத்தம் 159 பேருடைய  வழக்குகளையம் ஒன்றிணைத்து விசாரித்தது.

அப்பொழுது 27 வது பேட்ச் பற்றவைப்பாளர்கள் பதினேழு பேருடைய பெயர் நிரந்தரப்பணிக்காகத் தேர்வுபெற்றோர் பட்டியலில் இருப்பதாக தந்தியிலும் கடிதத்திலும் குறிப்பிட்டிருந்தீர்களே, அந்தப் பட்டியலைக் கொண்டு வாருங்கள் என்று நீதியரசர்கள் கேட்டபொழுது நிர்வாகம் அந்தப்பட்டியல் தற்சமயம் எங்களிடம் பாதுகாக்கப்படவில்லை என்று கூறியது.

இவ்வளவு பெரிய நிறுவனத்தில் உங்களிடம் அப்ரண்டிஸ் பயின்று NMR ஆக பணிபுரிந்தவர்களின் பட்டியலைக்கூடப் பராமரிக்க முடியவில்லையா? என்று நாக்கைப் பிடுங்கிக் கொள்வதுபோல் வினா எழுப்பி அதற்கு கண்டனமும் தெரிவித்தார்கள். அதற்கு இஞ்சி தின்ற மனிதனின் முன்னோடி போல விழிபிதுங்கி நின்றது நிர்வாகம்.

அத்துடன் இராணிப்பேட்டையில் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்தவர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கியிருக்கும்போது அதே தலைமையின் கீழ் இயங்கும் திருச்சியில் வழங்குவதற்கு என்ன கேடு என்று கேட்டு இவர்கள் அனைவருக்கும் திருச்சி நிர்வாகம் நான்கு வார காலத்திற்குள் நிரந்தரப்பணி வழங்க வேண்டும் என்று தனிநீதிபதி சந்துரு 12-10-2007ல் கொடுத்த தீர்ப்பை உறுதி செய்து              14-05-2008 அன்று அமர்வு நீமன்றமும் தீர்ப்பளித்தது.

நான்கு வார காலத்திற்குள் நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்று தீப்பளிக்கப் பட்டிருக்கும்போது நான்கு மாதங்கள் ஆகியும் அவர்களுக்கு இன்னும் பணி வழங்கப்படவில்லை.
இந்த வழக்கில் உள்ள நியாயங்களை சட்டப்படியும் நியாயப்படியும் சரியானதென்று கூறி ஆறு நீதிபதிகள் அதுவும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தும் பெல் நிர்வாகம் அதனை மதித்து அவர்களுக்கு வேலை வழங்கவில்லை. நீதிமன்றத்தையும் நீதியையும் தீர்ப்புக்களையும் இந்த நாட்டு அரசியல் சட்டத்தையும் அவமதிக்கிறோம் என்ற உணர்வு பெல் அதிகாரிகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

இவற்றைவிட இங்குள்ள அதிகாரிகள் மிகமிகப் பெரியவர்களா? இவர்களுக்கு இந்த அதிகாரத்தை; கொடுத்தது யார்? இவர்கள் இந்திய அரசுக்கும் அதன் சட்டத்துக்கும் நீதிக்கும் தீர்ப்புக்களுக்கும் கட்டுப்பட்டவர்கள் இல்லையா?

அப்படியானால் இவர்கள் தனிராஜ்யம் நடத்துகிறார்களா?
முன்னாள் அப்ரண்டிஸ் அசோசியேசன் நிர்வாகிகள் அய்என்டியுசி நிர்வாகிகளுடன் டெல்லிக்குச் சென்று பெல்நிறுவன முதன்மை மேலாண்மை இயக்குனர் திரு இரவிக்குமாரிடமும் முறையிட்டிருக்கிறார்கள். அவரும் இந்த அதிகாரிகளுக்கு இத்தீர்ப்பை அமுல்படுத்தச்சொல்லி அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

அதற்கும் இவர்கள் செவி சாய்க்கவில்லை என்றால் இவர்கள் யாருக்குத்தான் கட்டுப்படுவார்கள்?

ஒருவேளை பிரதமர் சொன்னால் கட்டுப்படுவார்களா? அல்லது குடியரசுத்தலைவர் சொன்னால் கேட்பார்களா?

நியாயப்படியும் சட்டப்படியும் போராடிக்கொண்டிருக்கின்ற இளைஞர்களுக்கு அவற்றில் தீர்வு ஏற்படவில்லையென்றால் அவர்கள் வன்முறையைக் கையிலெடுத்தால் என்னாவது? இதுபோன்ற அதிகாரிகளால் இந்த நாட்டில் வன்முறையும் தீவிரவாதமும் தலையெடுக்காதா?

ஆறு நீதிபதிகள் தீர்ப்பளித்த பிறகும் அதனை அமுல் படுத்த மறுத்து சண்டித்தனம் செய்வது வன்மையான கண்டனத்துக்குரியது. இதனை இங்குள்ள சங்கங்கள் (அய்என்டியுசி தவிர) யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதும் வேதனையானது.
எனவே, பெல் திருச்சி அதிகாரிகள் இந்த நாட்டின் சட்டத்திற்கும் நீதிக்கும் நீதிமன்றத்திற்கும் அதன் தீர்ப்புக்களுக்கும் மதிப்பளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தபடி உடனடியாக இவர்கள் அனைவருக்கும் நிரந்தரப் பணி வழங்க வேண்டும். இல்லையேல் இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறோம்.

இவண்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக