வெள்ளி, 17 மார்ச், 2017

பகுத்தறிவின் எல்லை பொதுவுடைமைதான்


தந்தை பெரியார் ஒருபோதும் பொதுவுடைமைக்கு எதிரியல்ல. பகுத்தறிவின் எல்லை பொதுவுடைமைதான் என்றார். பொதுவுரிமையுடன் கூடிய பொதுவுடைமை வேண்டும் என்றார்.
ஆனால் கம்யூனிஸ்ட்களை வழிநடத்திய தலைவர்கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. சோஷலிச சமதர்மத்திட்டத்திலிருந்து விலகிவிட்டார் பெரியார் என்று விமர்சனம் செய்தார்கள். இராமமூர்த்தி போன்ற தலைவர்கள் பெரியாரை தவறான தத்துவத்தின் தந்தை என்று விம்ரசனம் செய்தார்கள். இன்று ஆர்எஸ்எஸ் காரர்கள் பேசுவதுபோல ஆரியர் திராவிடர் என்பதெல்லாம் ஒரு மாயை என்றார் இராமமூர்த்தி. பெரியார் இராமாயண எதிர்ப்புப் பிரச்சாரம் செய்தபோது ஜீவானந்தம் போன்றவர்கள் கலைநயத்திற்காக கம்பனைப் போற்ற வேண்டும் என்றார்கள். பெரியாரின் மத எதிரப்புப் பிரச்சாரத்தினை கம்யூனிஸ்ட்கள் ஆதரித்ததில்லை. வறட்டு நாத்திகம் பேசுகிறார் என்று பெரியாரைக் குறை கூறினார்கள்.
இட ஒதுக்கீட்டுக் கொள்கையையும் அவர்கள் ஆதரிக்கவே இல்லை.
வி.பி.சிங் அவர்கள் மண்டல் கமிஷனை அமுல்படுத்தியதற்காக பிஜேபியினரால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகுதான் கம்யூனிஸ்ட்கள் இட ஒதுக்கீட்டை ஆதரிக்க ஆரம்பித்தார்கள்.
அதேபோல ஆர்எஸ்எஸ் காவிக்கும்பல் பாபர் மசூதியை இடித்துவிட்டு மதவெறித்தாண்டவமாடிய பிறகுதான் அவர்களும் மதவாதத்தை எதிர்க்க ஆரம்பித்தார்கள். இன்றைக்கும் மதவாதிகளை எதிர்க்கிறார்களே தவிர முழுமையாக மதத்தை எதிர்க்கவில்லை. பார்ப்பனர்களைச் சேர்க்க மாட்டேன் என்று பெரியார் சொன்ன கருத்தை கம்யூனிஸ்ட்கள் ஏற்கவில்லை.
இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு பெரியாரியலும் அம்பேத்கரியலும்தான் தீர்வு என்பதை இப்பொழுதுதான் அனைவரும் உணர ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்த நாட்டை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவ்விப் பிடித்துள்ள மதவாத இருளுக்கு பெரியாரியலும் அம்பேத்கரியலும்தான் ஒரே தீர்வு. அந்தத் திசையில் பயணிப்பதே இன்று காலத்தின்கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக