செவ்வாய், 7 மார்ச், 2017

அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?

அயோத்திதாசரைப் பெரியார் மறைத்தாரா?


தந்தை பெரியார் அவர்கள்மீது சேற்றை வாரி இறைப்பது என்பதில் மிகவும் துருதுருத்து இருப்பவர்களில் சிலர் அயோத்திதாசர் என்ற தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவரை பெரியார் மறைத்தார் என்று குற்றஞ் சாட்டி வருகின்றனர். யாரையும்  மறைத்தோ, இருட்டடித்தோ ஈரோட்டுச் சிங்கம் தன்னை உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியம் இல்லாதவர் - அது சுயச் சிந்தனையின் ஊற்று _ -சுட்டெரிக்கும் சூரியன்!
திராவிடர் இயக்க ஆய்வாளர் மானமிகு க. திருநா வுக்கரசு அவர்கள் எழுதியுள்ள திராவிடர் இயக்கம் தலித்துகளுக்கு எதிரானதா? எனும் நூலில் இதுகுறித்துத் திரட்டித் தந்துள்ள விளக்கம் இதோ!
அயோத்திதாசரது நூல்கள்: பூர்வத் தமிழொளி எனும் புத்தரது ஆதிவேதம், விபூதி ஆராய்ச்சி, கபாலீஸ்வரர் சரித்திர ஆராய்ச்சி, அரிச்சந்திரன் பொய்கள், திருவள்ளுவர் வரலாறு, புத்த மார்க்க வினா - விடை, இந்திரர் தேச சரித்திரம், விசேஷ சங்கைத் தெளிவு, விவேக விளக்கம், தென்னிந்தியர் தேச புத்த சாட்சியக்காரர்களில்  ஒருவராகிய ஸ்ரீஅம்பிகை அம்மன் அருளிய திரிவாசகம், ஆத்திசுவடி, குன்றை வேந்தன், வெற்றி ஞானம், தென்னிந்தியர் தேச புத்த தர்ம சாட்சியக்காரர்களில் ஒருவராகிய ஸ்ரீமுருகக்கடவுள் வரலாறு, யதார்த்த பிராமண, வேஷ பிராமண வேதாந்த விவரம் ஆகியனவாகும்.
இந்த நூல்கள் எல்லாம் நமக்கு 1980ஆம் ஆண்டின் கடைசியில்தான் கிடைத்தன. 1960களில் திரு.வி.க.வின் வாழ்க்கைக் குறிப்புகளைப் படித்த நமக்கு -_ பெ.சு. மணி எழுதியதற்கு பிறகு -_ நம் தோழர் எஸ்.வி. இராஜதுரை நீலகிரியிலிருந்து படியெடுத்து அனுப்பினார். இதற்கு இடையில் எத்தனை ஆண்டுகள் ஓடி மறைந்துள்ளன. இப்படி நூல்கள் இருப்பதாகவே எவர்க்கும் தெரியாமல் போனதேன்? இவற்றை யார் மறைத்தது?
_ 1938 வரை வாழ்ந்த ஆர். வீரையன் அயோத்திதாசர்க்கு என்ன செய்தார்?
_ 1941 வரை வாழ்ந்த ம. பழனி சாமி அயோத்திதாசரது சிந்தனை களைப் பிரச்சாரம் செய்தாரா?
_ 1945 வரை வாழ்ந்த இரட்டை மலை சீனிவாசன் அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளை _ நூல்களை முன்னெடுத்துச் செல்லாமல் பதிப்பிக்காமல் போனதேன்?
_ 1947 வரை வாழ்ந்த எம்.சி. ராஜா அயோத்திதாசரை நினைவுபடுத்த என்ன செய்தார்?
_ 1958 வரை வாழ்ந்த சுவாமி சக ஜானந்தாவுக்கு அயோத்திதாசர் பற்றிய மதிப்பீடு என்ன? அவர் அயோத்தி தாசரது சிந்தனைகளுக்குச் செய்தது என்ன?
_ 1964 வரை வாழ்ந்த மேயர் சிவராஜ் அயோத்திதாசரது சிந்தனை களை முன்னெடுத்துச் செல்ல உதவினாரா?
_ 1966 வரை வாழ்ந்த எல்.சி. குருசாமி அயோத்தி தாசரது சிந்தனைகளை வெளிப்படுத்தாதது ஏன்?
இப்படி நாங்களும் தாழ்த்தப்பட்ட தலைவர்களை வரிசைப்படுத்திக் காட்டிக் கேட்க முடியும்?
ஏன் திருமாவளவனைக்கூட இப்படிக் கேட்க முடியும்? அதற்கெல்லாம் என்ன காரணம் என்பதை நாட்டுக்குத் திருமாவளவன் போன்றவர்கள்தான் விளக்க வேண்டும்.
இக்கட்டுரையாளரான நாம் தலைவர் அல்லர். ஓர் ஆய்வாளன். நம்மினமும், மொழியும், நாடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என்பதன்றி நமக்கு வேறொரு பேராசை எப்போதும், எதிலும் இருந்ததில்லை. இனியும் இருக்கப் போவதில்லை. ஆகவேதான் திருமாவளவன் இவற்றையெல்லாம் விளக்கினால் விளங்கிக் கொள்ள நாம் ஆயத்தமாய் இருக்கின்றோம்.
அயோத்திதாசப் பண்டிதர் பற்றிய சிந்தனைகளை ஒருவாறு உள்வாங்கிக் கொண்ட நாம், 1990ஆம் ஆண்டுகளின் தொடக் கத்தில் பரிதி. இளம்வழுதியைச் சந்தித்தோம். நாம் அயோத்தி தாசரைப்பற்றிப் படித்ததை எல்லாம் எடுத்துக் கூறினோம். வியந்தார்.
அப்போது பரிதி, எங்க அப்பாதான், மேடையிலே பேசும்போது, நாங்க அயோத்தி தாசப் பண்டிதர் பரம்பரையடா என்று சொல்லுவார். எனக்கு அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று கூறினார். நாம் அயோத்தி தாசர்க்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். நாங்கள் இருவரும் அமைச்சராய் இருந்த க.சுந்தரம் அவர்களைச் சென்று பார்த்தோம். அதன்பிறகே தாழ்த்தப்பட்ட தலைவர்களைப் பற்றிய களத்தில் நின்ற காவலர்கள் எனும் எமது நூல் வெளிவந்தது. அயோத்திதாசர்க்கு ஒரு சிலை அமைக்க வேண்டும் என்று விரும்பி மீஞ்சூருக்குச் சென்றோம். சுந்தரம், கும்மிடிபூண்டி வேணு, பரிதி எல்லோரும் அதற்கு உதவ முன்வந்தனர். இதற்கிடையே மறுமலர்ச்சி தி.மு.க. உதயமாயிற்று. தொடங்கிய பணிகள் அப்படியே நின்றுவிட்டன.
இங்கே நாம் பார்க்க வேண்டியது. அயோத்திதாசரது சிந்தனைகள் அவரது மறைவுக்குப் பின் பிரச்சாரம் செய்யப்படவில்லை. அவரது வெளியீடுகள் அவர் வாழ்ந்த காலத்திலேயே அறிஞர்களிடையே எடுத்துச் செல்லப்படவில்லை. அவரது சிந்தனைகளை வெளிக் கொணர்ந்தவர்களைப் பாராட்டவில்லை.
அயோத்திதாசரது மரணத்திற்குப் பின் _ அதாவது 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெரியார் காங்கிரசில் (1919) சேருகிறார். அதற்கு முன்பே அவர்க்குத் தாழ்த்தப்பட்டோர் மீது ஓர் அனுதாபம் இருந்திருக்கிறது. மனித குலத்தின் மிகக் கொடிய பழக்கம் தீண்டாமை என்பதை உணர்ந்த அவர், 1917 ஆம் ஆண்டிலேயே ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது கொங்கப் பறைத்தெரு என்பதை வள்ளுவர் தெரு எனப் பெயர் மாற்றம் செய்தார். ஈரோடு நகராட்சிப் பள்ளிகளில் தீண்டப்படாத வகுப்புப் பிள்ளைகள் சேரவும், படிக்கவும் வழி செய்தார்.
பெரியாரது குடிஅரசைப் புரட்டினால் எத்தனை ஆதி திராவிட அமைப்புகளின் நிகழ்ச்சிகளுக்கு அவ்வேட்டில் முன்னுரிமை வழங்கப்பட்டு இருக்கின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பெரியார்க்கு இயல்பிலேயே மனிதநேயம் இருந்ததால்தான் இப்படியெல்லாம் தொடக்கக் காலத்திலேயே செய்ய முடிந்தது. காங்கிரசில் பெரியார் இருந்தபோது அவர் தலைமையில் வைக்கம் போராட்டம் நடந்தது. அதைப்பற்றி அம்பேத்கர் பாராட்டி எழுதினார் என்று தனஞ்சய் கீர் (அம்பேத்கர் வரலாற்றை எழுதியவர்) கூறுகிறார்.
அயோத்திதாசரைப்பற்றிய வெளியீடுகள் பெரியார்க்குக் கிடைத்திருக்குமானால் - _ அவரது கவனத்திற்கு எவரேனும் எடுத்துச் சென்றிருப்பார்களானால் கட்டாயம் விமர்சனம் செய்திருப்பார். ஒத்த கருத்துகளை _ உடன்பாடானவற்றைப் பாராட்டியிருப்பார். குடியரசில், விடுதலையில் எழுதியிருப்பார்.
சென்னையில் _ இராயப்பேட்டையில் திரு.வி.க.வின் வீட்டருகிலேயே வாழ்ந்த அயோத்திதாசரின் சிந்தனைகள் திரு.வி.க.வுக்கே கிடைக்கவில்லையே! அந்தக் காலத்தில் ஓர் அறிஞர் நூல் ஒன்று எழுதினால் அறிவார்ந்த பெருமக்களிடம் எடுத்துச் சென்று கொடுத்து அபிப்ராயம் கேட்கின்ற வழக்கத்தை _ எழுதி அனுப்புமாறு வேண்டுகோள் விடுக்கும் வழக்கத்தை வைத்திருந்தனர். அயோத்திதாசர் அப்படி யாருக்கும் அனுப்பியதாகத் தெரியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்றும் புரியவில்லை. இதனால் அவரது கருத்துகள் அவர் காலத்திலேயே பரவ வழியில்லாமல் ஆகிவிட்டது.
திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்தில் சங்க இலக்கியங்கள் கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்கள் கிடைக் காததனால் தமிழை அவர் போதிக்காமல் விட்டாரா என்ன? அவர் வாழ்ந்த காலத்தில் கிடைத்திருந்தால் மேலும் சிறப்பாகச் சங்க இலக்கியங்கள் அவரது உரையையும் பெற்றிருக்கும் அல்லவா? அதுபோலத்தான் பெரியார்க்கு அயோத்திதாசரது சிந்தனைகள் நூல்கள் கிடைக்கவில்லை; கிடைத்திருந்தால் அவரது கருத்தைக் கூறியிருப்பார். கட்டாயம் எழுதியிருப்பார்.
வள்ளலார் தமது இறுதிக் காலத்தில் சிந்தனையின் உச்சிக்கே சென்று சமயச் சிந்தனையாளர்களின் வட்டத்திலே ஞான வொளியைப் பாய்ச்சிய மேதை!
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்!
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகல்லவே!
நால்வருணம் ஆசிரமம் ஆச்சாரம் முதலாம் நவின்ற
கலைச் சரிதம்எலாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல் வருணம் கண்டறிவார் இல்லை
நீவிழித்திது பார் என்றனுக்கு விளங்கிய சற்குருவே!
என்று பாடுகிறார் வள்ளலார்.
வள்ளலார் (1823_1874) அயோத்தி தாசர்க்கு (1845_1914) முன்பு வாழ்ந்தவர். சைவ சித்தாந்தியாய் இருந்து அதிலும் நம்பிக்கையை இழந்து, ஞானவொளியை நாடியவரை, அயோத்திதாசர் _ அவர்க்குப் பின்வந்தவர் என்பதால் அவரைப்பற்றி இவர் ஒன்றும் சொல்லவில்லையே என வருத்தம் கொள்ளுவது, விமர்சனம் செய்வது எப்படி நமக்குக் குறையாகக் கொள்ள முடியாதோ, அப்படியே பெரியாரது எழுத்துக்களில் அயோத்திதாசரது சிந்தனைகளை விமர்சனங்களை அல்லது பாராட்டைத் தேடுவது, குறையாகக் கொள்ள முடியாது என்றே நாம் கருதுகின்றோம்.
அயோத்திதாசரது கருத்துகளைப் பற்றிப் பெரியார் கருத்து கூறாததற்கு, எந்தவித உள்நோக்கமும் இருக்க முடியாது என்பதை, அவரது வாழ்க்கை வரலாறு நமக்கு உணர்த்து வதால்தான் இப்படிக் குறிப்பிடுகின்றோம் என்கிறார் ஆய்வாளர் க. திருநாவுக்கரசு.
இதற்கு மேலும் விழிக்கவில்லை என்றால், குற்றம் சொல் வோர் பொய்த் தூக்கம் போடுவோரே!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக