வியாழன், 15 பிப்ரவரி, 2018

தந்தை பெரியார் தேசத்துரோகியா?


தந்தை பெரியார் அவர்கள் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது அதனை ஆதரிக்கவில்லை
வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டுப் போகக்கூடாது என்று சொன்னார் அதனால் அவர் ஒரு தேசத்துரோகி என்று திரும்பத் திரும்பக் காவிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்கள்.
தந்தை பெரியார் மாத்திரமல்ல். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக யாரெல்லாம் குரல் கொடுத்தார்களோ அவர்கள் எல்லோருமே வெள்ளைக்காரன் இந்த நாட்டிற்கு வந்ததனால்தான் ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரளவுக்கேனும் உரிமை பெற்றார்கள் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்கள். மகாத்மா ஜோதிபா புஃலேää அயோத்திதாசப் பண்டிதர் ஆகியோர் அவ்வாறு கருதினார்கள்.
அண்ணல் அம்பேத்கர் அவர்களும் தனது மூக் நாயக் என்ற பத்திரிகையில் எழுதுகின்றபொழுது “பிரிட்டிஷ் அரசின் நீதியற்ற அதிகாரத்தை எதிர்ப்பது சரி என்று பார்ப்பனர்கள் சொல்வதில் எந்த அளவிற்கு நியாயம் இருக்கிறதோ அதைவிட நூறு மடங்கு நியாயம் ஆட்சி அதிகாரம் பார்ப்பனர் கைகளுக்கு சென்றுவிடக் கூடாது என்று ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பதிலும் அடங்கி இருக்கிறது. பிரிட்டிஷ் அரசு அளித்து வரும் ஆதரவு விலக்கிக் கொள்ளப்படுமானால் தீண்டப்படாதவர்பால் இரக்கமில்லாதவர்கள் இவர்களை மிதித்து நசுக்கி விடுவார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அடிப்படை உரிமைகளை வழங்காத சுயராச்சியம் அவர்களுக்கு உண்மையான சுயராச்சியமாக இருக்க முடியாது. அது அவர்களுக்கு ஓர் அடிமைத் தளையாகவே இருக்கும் என்று எழுதினார்.
சுதந்திர இந்தியா பழைய மரபுகளுக்குத் திரும்பிச் சென்று விடும் என்று கருதினார். அந்நிலையில் அவருடைய மக்கள் வறுமைக்குழியில் தள்ளப்படுவார்கள் புறக்கணிக்கப்படுவார்கள். சமூகத்திலிருந்தும் அரசுப் பொது ஊழியத்திலிருந்தும் தள்ளி வைக்கப்படுவார்கள் என்றும் கருதினார்.
அதனால் 1946ம் ஆண்டு அக்டோபர் 15ம் நாள் இலண்டன் பயணமானார். அங்கு சென்று இங்கிலாந்தின் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். பிரிட்டிஷ் பிரதமர் அட்லிää இந்தியாவுக்கான செயலாளர்ää வின்ஸ்டன் சர்ச்சில் போன்றோரைச் சந்தித்துப் பேசினார். இப்பொழுது சுதந்திரம் வேண்டாம். இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து இந்தியாவிலுள்ள கட்சிகளிடம் ஒன்றுபட்ட இந்தியாவை ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
ஆனால் அது நிறைவேறாததால் மனந் தளர்ந்த நிலையில் இந்தியா திரும்பினார் என்று அவரது வாழ்க்கை வரலாற்று நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1927ல் சைமன் குழு இந்தியா வந்தபொழுது காங்கிரஸ் அதனை எதிர்த்தது. அம்பேத்கர் அவர்கள் அந்த கமிஷனைச் சந்தித்து ஒடுக்கப்பட்டவர்களுக்கான கோரிக்கைப் பட்டியலைக் கொடுத்தார். அதனால் அப்பொழுது காங்கிரசார் அம்பேத்கரை தேசதுரோகி என்றனர். அத்துடன் வட்டமேசை மாநாட்டில் பங்கேற்று தனித்தொகுதி முறைக்காகப் போராடியபொழுது அதனை காந்தி எதிர்த்தார் என்பதனால் காந்தியாரை அண்ணல் அவர்கள் கடுமையாக எதிர்த்தார். அப்பொழுதும் அண்ணலை தேச தரோகி என்று தூற்றினர்.
அண்ணல் அம்பேத்கர் என்ன காரணத்திற்காக சுதந்திரம் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினாரோ அதே காரணத்தினால்தான் தந்தை பெரியாரும் சுதந்திரம் இப்பொழுது வேண்டாம் என்றார்.
வெள்ளைக்காரன் நாட்டை விட்டுப் போனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் பார்ப்பன பனியா கைகளுக்குச் சென்று விடும். அது ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக அமைந்து விடும். வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு செல்வதற்குள் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டுச் செல்ல வேண்டும் என்றார்.
இதை எல்லாம் மூடி மறைத்துவிட்டு வெள்ளைக்காரன் எப்பொழுதுமே இந்த நாட்டை விட்டுப் போகக்கூடாது என்று சொன்னதாகப் பித்தலாட்டமாகக் கூறி பெரியாரை தேச துரோகி என்ற பிரச்சாரத்தை ஆர்எஸ்எஸ் காவிக் கூட்டம் செய்கிறது.
இன்று தந்தை பெரியாரை தேசதுரோகி என்று கூறுகின்ற இதே கூட்டம்தான் அண்ணல் அம்பேத்கரையும் அன்று தேச துரோகி என்று கூறியது என்பதையும் இந்த நேரத்தில் நினைவுகூர வேண்டும்.
அவர்கள் பார்வையில் பார்ப்பனர் நலனுக்குப் பாடுபடுகின்றவர்கள்தான் தேசப்பற்றாளர்கள். பார்ப்பனரல்லாத ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் பாடுபடுகின்றவர்கள் தேச துரோகிகள்.
இவர்கள் பார்வையில் பார்ப்பனரல்லாத மக்களுக்குப் பாடுபட்டவர்கள் தேசதுரோகிகள் என்று சொன்னால் அதுபோன்ற தேசதுரோகக் காரியத்தைத் தொடரந்து செய்வோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக