வியாழன், 15 செப்டம்பர், 2016

சுதந்தரம் பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா?


 நமது நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் பட்ட கொடுமைகளுக்கு அளவே இல்லை. அவர்களுக்கு அறிவு வளர்ச்சி தடுக்கப்பட்டது. பெறற்கரிய புதையலாகக் கருதப்பட்ட கல்வி அளிக்கப்படவே இல்லை. அக்காலத்தில் கல்வி என்பது  வேதக் கல்வியே. அந்த வேதத்தை சூத்திரன் காதால் கேட்டால் காதிலே ஈயத்தைக் காய்ச்சி ஊற்று. மனதிலே தங்க வைத்தால் அவன் நெஞ்சைப் பிள என்றெல்லாம் வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் கூறின. பார்ப்பனர்க்கு மட்டுமே கல்வி தாரை வார்க்கப்பட்டது. மன்னர்கள் எல்லாம் சமஸ்கிருத வேதபாடசாலைகளை ஏற்படுத்தி பார்ப்பனர்களுக்கு கொட்டியழுது அவர்களைக் கொழுக்க வைத்தனர்.
 வெள்ளைக்காரன் இங்கு வந்து மெக்காலே கல்வியைக் கொண்டு வந்த நேரத்தில் அந்தக் கல்வியையும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்க்கு அளிக்க எதிர்ப்புத் தெரிவித்து அதனையும் பார்ப்பனர்களே அனுபவித்தனர். வெள்ளைக் காரனை நத்திக்கொண்டு குமாஸ்தா உத்தியோகம் முதல் ஜட்ஜ் உத்தியோகம் வரை பார்ப்பனர்களே எல்லாவற்றையும் தங்கள் வயிற்றிலேயே அறுத்துக் கொட்டிக் கொண்டனர்.
 ஜாதியும் தீண்டாமையும் இங்கு தலைவிரித்தாடியது. ஒரு மனிதனை இன்னொரு மனிதன் பார்த்தாலே பாவம். அவன் நிழல் பட்டால் தோஷம் என்ற கொடுமை இங்கு நீண்ட காலம் கோலோச்சியது. வெள்ளைக்காரனிடம் இம்மக்கள் அனுபவித்த கொடுமைகளைவிட பார்ப்பன உயர்ஜாதியினரிடம் அனுபவித்த கொடுமைகளே இங்கு அதிகம். சுதந்திரத்துக்குப் பாடுபட்டதாகச் சொல்லப்படும் தலைவர்களே தீண்டத் தகாதவர்களை மனிதர்களாகவே கருதவில்லை. சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்ன திலகரே தாழ்த்தப்பட்டவர்கள் காங்கிரஸ் மாநாட்டுப் பந்தலுக்குள்ளேயே நுழையக் கூடாது என்று சொன்னார்.
வ.வெ.சு அய்யர் போன்றவர்கள் பார்ப்பனப் பிள்ளைகளும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணக் கூடாது என்று பிரித்து வைத்தார். அப்படி பார்ப்பனப் பிள்ளைகளோடு பார்ப்பனரல்லாத பிள்ளைகள் ஒன்றாக உணவருந்தினார்கள் என்று கேள்விப்பட்டால் நான் பத்து நாட்கள் சாப்பிடாமல் இருப்பேன் என்று ஒரு பார்ப்பனர் சொன்னார். வெள்ளைக்காரன் கொண்டு வந்த இரயில்வே உணவகத்தில் பார்ப்பனர் சாப்பிடுவதற்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டது. அவர்கள் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதார் பார்த்து விட்டால் அந்த உணவே விஷமாகிப் போய்விடும் என்றனர்.
 இந்த நிலையில்தான் நம்நாட்டில் உயர்வு தாழ்வு என்ற ஆணவம் மிகுந்திருக்கிறது. சமத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவ வேண்டும் என்று பாடுபட்ட தந்தை பெரியார் அவர்கள் வெள்ளைக்காரன் போவதற்குள் இந்த ஜாதிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும் என்றார். ஆனால் அந்த ஜாதிப் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்காமலேயே வெள்ளைக்காரன் இந்த நாட்டுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டுச் சென்று விட்டான்.
 சுதந்தரம் பெற்ற நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டை சுதந்திரம் பெற்ற நாடாகக் கருத முடியுமா என்று கேள்வி எழுப்பி இந்திய அரசியல் சட்டம் ஜாதியைப் பாதுகாக்கிறது என்று கூறி அந்த சட்டத்தை பல்லாயிரக் கணக்கானவர்களோடு கொளுத்தி சிறைவாசம் பெற்றார் தந்தை பெரியார்.
 ஆனால் இன்னமும் இந்த ஜாதிப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவில்லை. ஒரே நாடு@ ஒரே மதம்@ ஒரே கலாச்சாரம் என்கிறார்கள். அந்த ஒரே மதத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்டவன் அதே மதத்தைச் சேர்ந்த உயர்ஜாதிப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து கொண்டால் உன்னுடைய கலாச்சாரம் வேறு@ என்னுடைய கலாச்சாரம் வேறு என்று சொல்லி இன்னமும் கவுரவக் கொலைகள் என்ற பெயரில் ஆணவக் கொலைகள் செய்து வருகின்றனர்.
 இதற்கு மூலகாரணமான ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று கூறி தனது 95 வயதிலும் போராடிய பெரியார் பிறந்த மண்ணில் எந்த ஜாதி மிகவும் கொடுமைகளுக்கு ஆளானதோ அதே ஜாதிக் காரர்களைக் கொண்டு ஜாதி பெருமைக்குரியது. ஜாதி காப்பாற்றப்பட வேண்டும். ஜாதியின் காரணமாகக் கிடைத்துவரும் இட ஒதுக்கிடு தேவையற்றது என்று பேச வைக்கிறார்கள் என்று சொன்னால் மீண்டும் அந்தப் பார்ப்பனியக் கலாச்சாரத்தைத் திணிக்க முயல்கிறார்கள் என்றுதான் பொருள். அவர்களுடைய கனவை பெரியார் பிறந்த மண்ணில் நனவாக்க விட மாட்டோம் என்று இந்த சுதந்திர நாளில் அனைவரும் சூளுரைப்போம்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக