புதன், 10 ஜனவரி, 2018

தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு

தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் தை தைமுதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என கலைஞர் அவர்கள் ஆணையிட்டார். அது தவறு சித்திரை ஒன்றுதான் தமிழ்ப்புத்தாண்டு என்று அம்மையார் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதனை வெறும் அரசியலாகப் பார்க்கக் கூடாது. கலைஞருக்கும் ஜெயலலிதாவுக்குமான சண்டையோ போட்டியோ கிடையாது. காலங் காலமாய் உழைக்கும் மக்களுக்கும் அவர்களை உறிஞ்சிப் பிழைப்போருக்குமான சண்டையாகத்தான் பார்க்க வேண்டும்.
தமிழன் இதுவரை புத்தாண்டாய்க் கொண்டாடியது எதனை? பிரபவää விபவää சுக்கில என்று சொல்லக் கூடிய அறுபது ஆண்டுகளைத்தான். அந்த அறுபது ஆண்டுகளையும் ஞாயிறு திங்கள்ää செவ்வாய் என்பதுபோல வரிசையாகச் சொல்லக்கூடியவன் யாரும் இல்லை. காரணம் என்ன? அது தமிழனுடையது அல்ல என்பதனால்தான். இந்த அறுபது பெயர்களும் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. இந்த அறுபது ஆண்டுக்குச் சொல்லப்படும் கதையும் மிகவும் அருவருப்பானது. ஆபாசமானது.
தமிழனின் ஆண்டின் பெயர்கள் சமஸ்கிருதத்தில் இருக்கலாமா? என்பதனை 1921லேயே தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தலைமையில் 500 தமிழ் அறிஞர்கள் சென்னை பச்சையப்பன் கல்லூரியிலே ஒன்று கூடி ஆய்வு செய்தனர். தமிழனுக்கென்று ஒரு ஆண்டை உருவாக்க வேண்டும். அது தமிழனின் பெருமையையும் கலாச்சாரத்தையும் உயர்த்துவதாக இருக்க வேண்டும் என்று ஆய்வு செய்தனர். பொதுக்கணக்கு ஆண்டிற்கு எப்படி ஏசுநாதர் பிறப்பை அடிப்படையாகக்கொண்டு ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதோ அதேபோல் தமிழனின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றிய திருவள்ளுவர் பிறப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழனுக்கு ஆண்டினை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்து திருவள்ளுவர் பிறந்தநாளான தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு என்று முடிவு செய்தனர். அதுதான் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உகந்தது. பயன்பாட்டுக்கும் மிக எளிதானது என்பதனால் தமிழர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டோர் அனைவரும் குரல் கொடுத்து வந்தனர். அதனையே கலைஞர் அமுல் படுத்தினார்.
மனுதர்மத்தை ஏற்றுக்கொண்டிருக்கிற கூட்டம்தான் அதனை எதிர்த்தது. திருக்குறள் என்ன சொல்கிறது? சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்ற குறளில் உழவுத் தொழில்தான் மிகச் சிறந்தது. என்றும் உழுவார் உலகத்தார்க்கு ஆணி என்ற குறளில் உழவர்களே உலகத்துக்கு அச்சாணி போன்றவர்கள் என்றும் உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்ற குறளில் உழவுத்தொழில் செய்பவர்கள் பின்னால்தான் மற்றவர்கள் செல்ல வேண்டும் என்றும் திருவள்ளுவப் பெருந்தகை அறுதியிட்டுச் சொல்கிறார்.
ஆனால் மனுதர்மம் என்ன சொல்கிறது?
உழவுத்தொழில் மிகவும் பாவமானது என்றும் உழவு செய்பவர்கள் பாவிகள் என்றும் அதனால் அவர்கள் சூத்திரர்கள் என்றும் இழிவுபடுத்துகிறது. பார்ப்பனர்கள் உழவுத்தொழில் செய்யக் கூடாது. அப்படிப் பார்ப்பனர்கள் ஏர்பிடித்தால் அது பாவம் என்று சொல்லும் மனுதர்மம் அந்த ஏர்பிடிக்காத பார்ப்பனர்கள்தான் உலகத்தில் முதன்மையானவர்கள். அவர்களை மன்னன் உட்பட அனைவரும் வணங்க வேண்டும் என்கிறது.
இந்தப் போராட்டம் இரண்டாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதனுடைய தொடர்ச்சிதான் இந்தத் தமிழ்ப்புத்தாண்டு என்பதிலும் தொடர்கிறது. உழவுத்தொழிலை மிகவும் இழிவாகக் கருதுகின்றவர்களுக்கும் அதனை உயர்வாகப் போற்றுகின்றவர்களுக்குமான போராட்டம்தான் இதில் ஒளிந்திருக்கிறது.
தை முதல்நாள்தான் தமிழ்ப்புத்தாண்டு என்பதனை எதிர்க்கிறவர்கள் அனைவருமே திருவள்ளுவருக்கு கர்நாடகாவில் சிலை வைப்பதை எதிர்ப்பவர்கள். காவிரியில் தண்ணீர் கேட்க தமிழனுக்கு உரிமையில்லை என்பவர்கள். தமிழ் செம்மொழி ஆனால் வீட்டுக்கு வீடு பிரியாணி வருமா? என்று கேட்பவர்கள். தமிழ் மீனவர்களை இலங்கைக் கடற்படை தாக்குகின்றபோது தமிழன் ஏன் எல்லைதாண்டிச் செல்லுகின்றான்? அதனால் அவனை இலங்கை தாக்குவதில் தவறில்லை என்பவர்கள். தமிழில் அர்ச்சனை கூடாது என்பவர்கள். தமிழன் கோயிலுக்குள் நுழைந்தால் தீட்டு என்பவர்கள்.
தன்மானமுள்ள தமிழர்களே! இதில் நீங்கள் எந்தப் பக்கம் என்பதுதான் கேள்வி. உழைப்பவரான தமிழர்களை உயர்த்தும் தை முதல்நாளைப் புத்தாண்டாய் ஏற்றுக் கொள்ளப் போகிறீர்களா? உழைப்பவன் இழிஜாதி என்ற தத்துவத்தை நிலைநிறுத்தும் மனுதர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் கூட்டம் ஏற்றிப் போற்றும் சித்திரையை ஏற்று இழிவைச் சுமக்கப் போகிறீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக