புதன், 17 ஜனவரி, 2018

MGR

எங்கள் ஊரில் ஒரு அய்ம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தது.
எங்கள் ஊரில் உயர்நிலைப்பள்ளி கிடையாது. தொடக்கப்பள்ளிதான். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தள்ளி உள்ள ஒரு சிறுகிராமத்தில் காமராசரால் கொண்டுவரப்பட்ட உயர்நிலைப்பள்ளி இருந்தது. அப்பள்ளியில் ஒரு ஆசிரியர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் பணியில் சேர்ந்தார். அவர் MSc BEd., பட்டதாரி.
அந்த ஊரில் அவர் பிற்ந்த ஜாதியைக்கேட்ட மக்கள் அவருக்கு குடியிருக்க வீடு தர மறுத்து விட்டார்கள். அதனால் எங்கள் ஊரில் வந்து ஜாதியை மாற்றிச் சொல்லி வீடு கேட்டார். உடனே கொடுத்து விட்டார்கள். ஒரு ஆண்டு குடியிருந்தார். ஆசிரியரின் மனைவியும் அந்த ஊர் மக்களோடு மிகவும் அன்பாக நெருக்கமாகப் பழகினார். அவர் வீட்டில் வந்து பலரும் சாப்பிட்டுவிட்டுச் செல்வார்கள்.
ஒரு நாள் அந்த வீட்டின் உரிமையாளர் அந்த ஆசிரியரின் ஊருக்குப் போனார். அந்த ஆசிரியர் சொன்ன ஜாதித் தெருவில் சென்று அந்த ஆசிரியரின் விடு எங்கே என்று கேட்கிறார். அந்த ஊர் மக்கள் எங்கள் ஜாதியில் அந்தப் பெயரில் எந்த ஆசிரியரும் இல்லை. பள்ளத் தெருவில்தான் அந்தப் பெயரில் ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்று சொன்னார்கள்.
உடனே ஏதோ குடியே முழுகிப் போய் விட்டதுபோல் உணர்ந்த அந்த நபர் தான் சென்ற காரியத்தையும் மறந்து உடனடியாக தனது ஊருக்கு வந்து அந்த ஆசிரியர் இல்லாத நேரத்தில் அவரது மனைவியை கடுமையாகப் பேசி என்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறி வீட்டில் இருந்த தட்டுமுட்டுச் சாமான்களை எல்லாம் எடுத்து வெளியில் வீசி அவர்களை அவமானப்படுத்தி வீட்டைவிட்டு விரட்டிவிட்டார்.
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற பழமொழி காற்றில் பறந்தது. பட்டதாரியானாலும் பண்டிதரானாலும் கீழ்ஜாதிக்காரன் கீழ்ஜாதிக்காரன்தான் என்று நிரூபணமானது.
அதே ஊரில் ஒரு பதினைந்து ஆண்டு கழித்து ஒரு கிராம நிர்வாக அலுவலர் வருகிறார். அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அந்த ஊரில் வந்து பணியில் சேர்ந்து தனக்கு ஒரு வீடு வேண்டும் என்று தேடுகிறார். எந்த ஜாதி ஆதிக்கவாதிகள் பட்டதாரி ஆசிரியருக்கு விடு தர மறுத்தார்களோ அவர்கள் இந்த கிராம நிர்வாக அலுவலருக்கு வீடு தர போட்டி போட்டார்கள். ஒவ்வொருவரும் எங்கள் வீட்டில் தங்குங்கள் சார். வாடகைகூடத் தர வேண்டாம் என்றார்கள். இவர் அய்யா நான் ஜாதியால் தாழ்த்தப்பட்டவன் என்று சொன்னார்.
சார் நாங்கள் லாம் ஜாதி பாக்கிறதில்ல சார். எங்க வீட்டில் தங்குங்க சார் என்றார்கள் என்று கூறி வீடு கொடுத்தார்கள்.
என்ன காரணம்?
இவர் சற்று அதிகாரமுள்ள கிராம நிர்வாக அலுவலர் பதவியில் உள்ளார்.
அப்பொழுதெல்லாம் தாழ்த்தப்பட்டவன் கிராம முன்சீப்பாகவோ கர்ணமாகவோ வர முடியாது. பரம்பரை பரம்பரையாக ஆதிக்க ஜாதியினர்தான் கிராம முன்சீப்பாகவோ கர்ணமாகவோ இருப்பார்கள். அவர்களுக்கு முன்னே தாழ்த்தப்பட்டவர்கள் கைகட்டி வாய்பொத்தித்தான் ஒரு ஜாதி சான்றிதழோ வருமான சான்றிதழோ பெற முடியும்.
அப்படிப்பட்ட ஜாதியில் வந்த ஒருவருக்கு போட்டிபோட்டு வீடு கொடுத்தார் என்றால் அதற்குக் காரணம் அவரது பதவிதான்.
இந்த மாற்றத்திற்குக் காரணம் என்ன?
எல்லாம் இட ஒதுக்கீடுதான். தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் இங்கே வெற்றி பெற்றார்கள். அத்துடன் இந்த மாற்றத்தை ஒரே இரவில் ஒரு துளி மையில் ஒரே கையெழுத்தில் மாற்றி இனி பரம்பரை கிராம முன்சீப் கர்ணம் யாரும் கிடையாது. படித்தவர்கள் அனைத்து ஜாதியிலுமிருந்து 68 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி கிராம நிர்வாக அலுவலராக நியமிக்கப்படுவார்கள் என்று அறிவித்து அதனை நடைமுறைப்படுத்தியவர் புரட்சித்தலைவர் MGR ஆவார்.
அவர் போட்ட உத்தரவால்தான் ஜாதி வெறி பிடித்த ஆதிக்க சாதிக்காரர்கள் மனதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது.
அந்த மாற்றம் உருவாகக் காரணமான உத்தரவு போட்ட எம்ஜியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக