புதன், 1 பிப்ரவரி, 2017

சுயமரியாதைத் திருமணங்கள்

      தமிழ்ச்சமுதாயத்தில் பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் தங்கள் இல்லத் திருமணங்களை, தங்கள் சமுதாயத்துப் பெரியவர்கள் தலைமையில் ஊரார் முன்னிலையில் நடத்தி வந்தார்கள். பிற்காலத்தில் படித்து வேலைவாய்ப்புக்கள் பெற்று பொருளாதாரத்திலும் சற்று உயர்ந்தவுடன் மற்ற சமுதாயத்தினரைப் பார்த்து, தங்கள் வீட்டு திருமணம் மற்றும் விழாக்களைப் பார்ப்பனரை அழைத்து நடத்த முயல்கின்றனர். அது எவ்வளவு பெரிய இழிவு என்பதனை அவர்கள் உணர்வதில்லை.

புரோகிதர்; நடத்தி வைக்கும் திருமணங்கள் மற்றவர்களைக் காட்டிலும் ஜாதியாலோ, மதத்தாலோ தங்களைவிட உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் பார்ப்பனரைக் கொண்டு நடத்தப்படுகிறது. பார்ப்பனர் உயர்ந்த ஜாதி என்றால் நம்மை நாமே தாழ்ந்த ஜாதி என்பதை ஒத்துக் கொண்டாக வேண்டும். இது நமக்கு இழிவு.

அத்திருமணத்தில் மணமக்களுக்கும் பொதுமக்களுக்கும் புரியாத மொழியில்  அர்த்தமற்ற சடங்குகளும் பொருள்புரியாத மந்திரங்களும் சொல்லப்படுகின்றன. அந்த மந்திரங்களின் பொருள் மிகவும் ஆபாசமும் அருவருப்பும் நிறைந்தவையாகும். இதோ அந்த மந்திரங்களில் ஒன்று,

~~ஸோமோ பிரதமோ
விவிதே கந்தர்வோ
விவித உத்தர
திரிதியோ அக்நிஷ்டேபதி
துரியஸ்தே மனுஸ்யஜா||

என்ற மந்திரமும் திருமணத்தில் பார்ப்பனரால் கூறப்படும்.

~திருமணமாகப் போகும் மணப்பெண்ணானவள் முதலாவதாக ஸோமன் என்ற கடவுளுக்கு மனைவியாக இருந்தாள். இரண்டாவதாக கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாள். மூன்றாவதாக அக்னிக்கு மனைவியாக இருந்தாள். நான்காவதாகத்தான் தற்பொழுது மணம் செய்யப் போகும் மாப்பிள்ளைக்கு மனைவியாகிறாள். என்பதுதான் இதன் பொருள்:
ஆதாரம் : கீழாத்தூர் ஸ்ரீநிவாசாச்சாரியார் எழுதிய விவாஹ சுபமுகூர்த்த மந்திரார்த்த போதினி

நாம் கண்ணுக்குக் கண்ணாக ஈ கடிக்காமல் எறும்பு கடிக்காமல் பார்த்துப்பார்த்து வளர்த்த பெண்ணை மூன்று பேருக்கு மனைவியாக்கி நான்காவதாக நாம் பார்த்த மணமகனுக்குத் தாரை வார்ப்பது என்றால் அது கேவலம் இல்லையா? இது தமிழர் பண்பாட்டுக்கு நேர் விரோதம் இல்லையா?

அடுத்து அய்யரை வைத்துச் செய்யப்படும் புரோகிதத் திருமணத்தில் பெண்ணை ஒரு மனித உயிராகப் பார்க்காமல் ஒரு ஜடப்பொருளாக நினைத்து கன்னிகாதானம் என்ற பெயரில் மணமகனுக்கு தானமாக வழங்கப்படுவதாக அதன் தத்துவம் கூறுகிறது.

மேலும் ஆணுக்கு திருமணத்தின்போது பூணூல் அணிவிக்கப்பட்டு அதன் பிறகுதான் தாலி கட்ட அனுமதிக்கப்படுவார். அதன் தத்துவம் என்னவெனில் பார்ப்பனரல்லாத சூத்திரர்களுக்கு சாஸ்திரப்படி திருமணம் செய்து கொள்ள உரிமையில்லை. இந்த பூணூலை அணிவிப்பதன்மூலம் தற்காலிக பிராமணனாக சாதி உயர்வு பெற்று அந்த வேளையில் திருமணம் செய்து வைக்கப்படுகிறது.

இதுபோல ஏராளமான அர்த்தமற்ற சடங்குகளும் ஆபாசமான மந்திரங்களும் இருப்பதால்தான் தந்தை பெரியார் அவர்கள் நமமுடைய சுயமரியாதையை மீட்டெடுக்க சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகம் செய்து வைத்தார்கள்.

1925 முதல் ஏராளமான சுயமரியாதைத் திருமணங்கள் புரோகிதர் இல்லாமலும் எந்த வித மூடச்சடங்குகளும் இல்லாமலும் நடைபெற்று வந்திருக்கின்றன. அவ்வாறு திருமணம் செய்தவர்கள் சமுதாயத்திலும் அரசியலிலும் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். 1967 வரை அத்திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்ற நிலை இருந்தது. நீதிமன்றத்திலேயே அத்தகைய தீர்ப்புக்கள் வந்தன. இருந்தாலும் சுயமரியாதை உணர்வு பெற்ற மக்கள் பார்ப்பனரை அழைத்து எங்கள் திருமணத்தை நடத்திக்கொள்ள மாட்டோம் என்று உறுதியுடன் பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை நடத்திக் கொண்டனர்.

1967ல் அறிஞர் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தபிறகுதான் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லும் என்று சட்டம் இயற்றினார். தமிழகத்தில் மட்டும்தான் அத்திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் இருக்கிறது. இந்தியா முழுமைக்கும் இத்திருமணம் சட்ட வடிவமாக வரவேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் குரல் கொடுத்து வருகிறார். தமிழகத்தில் இன்று ஏராளமான சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அனைவரும் வாழ்வில் எந்தவித குறைபாடும் இன்றி சிறப்பான வாழ்வு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்னும் நமது மக்களில் சிலர் அய்யரை வைத்துத்தான் திருமணம் நடத்த வேண்டும் என்பதும் அர்த்தமற்ற மூடச்சடங்குகளை நடத்தினால்தான் வாழ்வு சிறக்கும் என்று நம்புவதும் நாள்ää நட்சத்திரம்ää கோள் என்று நம்பி அறிவையும் மானத்தையும் இழப்பதும் வேதனையளிக்கிறது.
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்
என்றார் வள்ளுவர். மனிதனுக்கு மிகமிக அவசியம் மான உணர்ச்சியே. அந்த மான உணர்ச்சியை மீட்டெடுப்பது சுயமரியாதைத் திருமணங்களே! எனவேää தமிழர் அனைவரும் மானத்துடன் வாழ சுயமரியாதைத் திருமணங்களையே நடத்திக் கொள்வோம். உலகிலுள்ள மற்ற சமுதாய மக்களைப்போல மானமும் அறிவும் உள்ள சமுதாயமாக தலைநிமிர்ந்து வாழ்வோம்!

இவண்
பெல் திராவிடர் தொழிலாளர் கழகம்
பாரத மிகுமின் நிறுவனம், திருச்சி -14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக