செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

இவர் தான் வீரமணி!



இவர் தான் வீரமணி!
- பேரா. முனைவர் ந.க.மங்களமுருகேசன்
இந்திய வரலாற்றில் - முகலாயர் காலத்தில் மேவார் என்னும் பகுதியை ஆட்சி செலுத்திய ராணா சங்ரம்சங்கா எனும் ராஜபுத்திர வீரரை Fragment of a Soldier என்பார்கள் உடல் முழுவதும் 18 போர்த் தழும்புகள். போரில் சில உறுப்புகளை இழந்தவர்.
அதுபோல் நம் தமிழர் தலைவர் இன்று உழைத்து வரும் உழைப்பின் பின்புலம் பலரும் அறியாத ஒன்று. இந்த நிலையிலும் அவர் எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் பதவி சுகம் தேடாமல் - தமிழ் மக்களுக்கு உழைத்து வருவது வியப்பாக இருக்கிறது.
பத்து வயதில் மேடையேறிப் பகுத்தறிவு முழக்கம் செய்தவர் - பட்டமேற்படிப்பில் பதக்கம் தங்கத்தில் பல்கலையில் பெற்றவர். ஒரு பத்துப்பதினைந்து ஆண்டுகள் நீதி மன்றப் படிக்கட்டு ஏறிப்புகழ்மிக்க வழக் கறிஞர் என்ற தான் பெற்ற பெருமையை நிலை நாட்டி இருந்தால் போதும் - கடலூரிலிருந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகி - உச்சநீதிமன்ற நீதிபதியாய் உயர்ந்திருக்க வேண்டியவர். இன்று உச்ச நீதிமன்றம் உயர் வகுப்பார் மன்றமாய் இருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாகவில்லை என்று குரல் கொடுக்கிறார்.
நீதிமன்றத் தலைமைப் பொறுப்பான நீதிபதி பொறுப்பை விட்டுத் தள்ளுங்கள் - வழக்கறிஞராய் இருந்திருந்திருந்தால் வசதி - வாய்ப்பு - பங்களா - சொத்து சுகம் என்று குவித்திருக்க முடியும்.
தந்தை பெரியாரே, விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்க முன்வந்தபோது மன மாரப்பாராட்டிச் சொன்ன வார்த்தைகளில். தினமும் நல்ல வருவாய் ஈட்டும் வக்கீல் தொழிலை விட்டு, விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்கச் சொன்னபோது ஏற்றுக்கொண்டதைப் பாராட்டி எழுதியது இன்றும் விடுதலை ஏட்டின் பக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
நாம் தொடக்கத்தில் குறிப்பிட்டோமே திக்ஷீணீரீனீமீஸீt ஷீயீ ணீ ஷிஷீறீபீவீமீக்ஷீ என்று அதற்கும் தமிழர் தலைவருக்கும் என்ன சம்பந்தம்? என்ன தொடர்பு? என்று கேட்கலாம்.
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தனிமையில் உரையாடுகையில் ஆசிரியரைக் குறித்து வியந்து சொன்னவை இந்தப் பிறந்த நாள் வேளையில் நினைவுக்கு வருகின்றன.
அவருடைய உடலில் ‘மருத்துவரின் கத்தி படாத இடமே இல்லை’ என்று கூறு மளவிற்கு பல்வேறு நோய்த்தாக்கங் களுக்கு ஆளான போதிலும் தளர்ச்சியோ, சோர்வோ, அதைப்பொருட்படுத்தாது உழைத்து வரு வதைக் கேள்விப்படுகையில் வியப்படை கிறோம்.
நாளெல்லாம் மேடையில் முழங்கு கிறாரே, அதுவும் குறைந்தது அரை மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை முழங்குகிறாரே! இவருடைய தொண் டையில் டான்சில் தொந்தரவு ஏற்பட்டுச் சிகிச்சை பெற்றுள்ளார்.
அடுத்து குடல் இறக்கம் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர் அன்று மாலையே ஒரு கூட்டத்தில் பங் கேற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மூன்றாவது பாதிப்பு பைல்ஸ் எனும் நோய்த் தாக்கம். அதற்கும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
ரிப் எனும் விலா எலும்பிலே ஏற்பட்ட பழுதுக்கும் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
நெருக்கடி காலத்தில் சிறைப்பட்ட வரைக் காவலர் தாக்கியதில் மூக்கில் ஏற்பட்ட வலி 1975இல் தொடங்கியது, பல நாட்கள் தொல்லை தந்து சிறைக்கொடு மையை நினைவில் பதியச்செய்திருக்கிறது.
இதைத் தவிர கண் சிகிச்சைகள் எல்லாம் சர்வ சாதாரணம்.
ஆனால் இதய அறுவைச் சிகிச்சை ஒருமுறை இருமுறை அல்ல - நான்கு முறை. அதிலும் இதய அறுவைச் சிகிச்சையின் போது பேச்சுவராத நிலையிலிருந்து மீண்டவர் இன்று மூச்சுப்பிடிக்க முழங்கு கிறார். இந்தக் கோளாறு ஏற்பட்டபின் மீண்டவர், இதுபோல் நிலையிலிருந்து மீளலாம் எனக்கவிஞர் வாலிக்குத் தேறுதல் சொல்லித் தேற்றியதை மேடையிலேயே வாலி சொல்லிப் பெருமைப்பட்டார். இத் தனைக்கும் மேலே இப்போது தோள்பட்டை வலி. இதிலிருந்தும் மீண்டு வந்து மீண்டும் தொண்டாற்றும் மனவலிமை உண்டு.
இவையெல்லாம் இயற்கை அளித்த சோதனைகள். திருவில்லிப்புத்தூர் மம்சா புரத்திலே உயிருக்கே உலை வைக்கப் பார்த்தனரே அதிலிருந்தும் மீண்டு துணிவு டன் வந்தவர், தொண்டறம் தொடர்கிறார்.
அரசியல்வாதியல்லாத சமூக சீர்த்திருத்த வாதி - பெரியார் கொடுத்த அறிவு மட்டுமே போதும் என்று மனநிறைவோடு குறிப்பிடும் தமிழர் தலைவர் அய்ம்பது முறை கைதாகி இருக்கிறார்.
1956இல் இராமன் படத்தை எரித்த தற்காகக் கைது செய்யப்பட்டவர். 50ஆவது முறையாக 2016இல் கைது ஆனார். இவர் கைதான அய்ம்பது முறையும் காராக்கிரகம் ஏறிய அய்ம்பது முறையும் தனிப்பட்ட காரணங்கள் எதன் பொருட்டாவது உண்டா? இல்லை, சமூகநலம், சமூகநலம், சமூகநலம் என்பதன் பொருட்டுத்தான்.
1960இல் தேசப்பட எரிப்பு, 1974இல் இராவண லீலா, 31..1.1976 முதல் 23.1.1977 வரை மிசாச் சட்டத்தின் கீழ் கைது! நாகம்மை யாரைக் குறித்து அவதூறு எழுதிய ஆஸ்தான கவிக்கு எதிர்ப்பு, மனுசாத்திர எரிப்பு, மண்டல் குழுப் பரிந்துரை நிறைவேற்றம்.
தமிழக மீனவர்களுக்கு, ஈழத் தமிழர் களுக்கு, காவிரி நீருக்கு, புதிய கல்வித் திட்ட எதிர்ப்பின் பொருட்டு என்று கைதுகள் அத்தனையிலும் தமிழ்ச் சமூக நலன் தவிர வேறு ஒன்றுமில்லை.
கைதானவர் முதலில் திராவிடர் கழகச் பொதுச் செயலாளர், பின்னர் திராவிட கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆனால் கைதாகிய அத்தனை வேளைகளிலும் தொண்டர்களை விட்டுத் தனியே சிறையில் சுகம் தேடியதில்லை. தொண்டர்களோடு தொண்டராய் இருந்திருக்கிறார்.
90களில் மண்டல்குழு அறிக்கை நிறைவேற்றம் பற்றிப் போராடியவர்களைக் கைது செய்து சிறைக்கு அனுப்பியது அன்றைய அரசு. இதய அறுவைச் சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த வேளை. சென்னையில் கைதானவரை வேலூர் சிறைக்குக் கொண்டு சென்றனர்.
இவர் சிறைப்பட்டபோது, அப்போது கைது செய்த காவல்துறை அதிகாரி, “இதய நோய்க்கச் சிகிச்சை பெற்றவர் என்பதால் இவருடைய காரிலே வேண்டுமானால் வேலூர் சிறைக்கு வரலாம்” என்ற போதும், காவல்துறை வேனிலேயே பயணித்து வேலூரில் சிறைப்பட்டார்.
வேலூரில் சிறைப்பட்டவர் தம் குடும் பத்தினருக்கு இட்ட முதல் கட்டளை - தன்னை யாரும் காணச் சிறைக்கு வரக்கூடாது என்பது.
எல்லாவற்றிற்கும் மேலே இவருடைய அண்ணன் கடலூரிலே இருந்தார். அவ ரையும் தன்னைக் காண வரக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டார். வேலூரில் சிறைப்பட்ட காலம் முழுவதும் குடும்பத் தினர் எவரும் பார்க்கவில்லை. அது மட்டு மல்லாது சிறையில் மற்ற கைதிகளுக்கு என்ன உணவு வழங்கப்படுகிறதோ அந்த உணவைத் தவிரத் தனக்கென்று தனி உணவு ஏதும் கூடாது என்று கண்டிப்பாக இருந்த தையும் இங்கே சொல்ல வேண்டும்.
திராவிட இயக்கம் - திராவிடர் கழகம், கண்டிப்பும், ஒழுக்கமும் உள்ள இயக்கம் என்பதைச் சிறையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருந் திடுவார்.
வேலூரில் சிறைப்புகுந்தபோது தன் உடன் கைது ஆன தோழர்களுக்கு விதித்த முதல் கட்டளை.
“சிறையில் எவரும் பீடி, சிகரெட் பிடிக்கக்கூடாது. எப்படியாவது கொண்டு வந்து குடிப்பதும் கூடாது. அப்படிக் கட்டுப் பாட்டோடு இருக்க இயலாதவர்கள் எழுதிக்கொடுத்துவிட்டு சிறையை விட்டு வெளியே போய்விடுங்கள்” என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
இதன் விளைவு திராவிடர் கழகத் தோழர்கள் சிறைப்பட்டவர்கள் தலைவர் கட்டளையைச் சிரமேற்கொண்டு சிறை யிலிருந்தனர். இதனால் புகை பிடிக்கிற பழக்கத்தையே விட்டு விட்டவர்கள் - முழுக்க முழுக்க விட்டுவிட்டவர்கள் பலர்.
இதே போல் சிறையில் என்ன கொடுக்கப்படுகிறதோ, அந்த உணவை உண்ணும் காட்சியை உடனிருந்து நேரில் காணும் வாய்ப்பு இருமுறை கிடைத்தது.
தளபதி ஸ்டாலின், பேராசிரியர் சுப.வீர பாண்டியன் ஆகியோருடன் பாரதிதாசன் சாலையில் சமூகக்கூடம் ஒன்றில் உடன் கைதானபோதும், ஆயிரம் விளக்கில் சமூகக்கூடத்தில் கைதாகி வைத்திருந்த போதும் எல்லோரும் சாப்பிட்ட சாம்பார் சோறு, தயிர் சோறும் தான் சாப்பிட்ட தலைவர் அவர்.
இவ்வளவு துன்பங்களையும் துயரங் களையும் ஏற்றுத் தமிழ்ச்சமுதாய நலனுக்கு உழைக்கும் இவர்தான் வீரமணி.
இது போராட்டக்களத்தில் நாம் கண்ட தமிழர் தலைவர் குறித்த பார்வை.
கல்விப்பணியில் அவர் கால் பதித்தது, காலமெல்லாம் நிலைத்து நிற்கும் வீரமணி அவர்களின் பெயரை மட்டுமல்ல, தந்தை பெரியாரின் பணியையும் காட்டும் அருஞ் செயல்.
பட்டியல் போட்டால் 43 நிறுவனங்கள் ஆம்! ஒன்றல்ல இரண்டல்ல 43 நிறுவ னங்கள். திருச்சியில் பெரியார் பயிற்சி நிறுவனம். நாகம்மை பயிற்சி நிறுவனம், பெரியார் தொடக்கப்பள்ளி, பெரியார் மணியம்மை பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நாகம்மையார் குழந்தைகள் இல்லம், பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் பள்ளி, பெரியார் நூற்றாண்டு மழலையர் பள்ளி, பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரி, சாமி கைவல்யம் முதியோர் இல்லம் என்று பெயர் கூறித் தொண்டறம் நிகழ்த்துகின்றன.
இவை மட்டும்தானா? சோழநாட்டில் தஞ்சைத் தரணியில் வல்லத்தில் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி, பெரியார் - மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சமூகத் தொடர் கல்விக் கல்லூரி, பெரியார் வணிகவியல் பயிற்சி மய்யம் (வல்லம்), வல்லத்தில் பெரியார் மணியம்மை இலவச மருத்துவமனை, பெரியார் மருத்துவ மனை குடும்ப நல மய்யம், மரபு சாரா கற்றல் ஆய்வு கல்வியகம், பெரியார் உயிரி தொழில்நுட்ப - உயிர் மண்டல ஆராய்ச்சிக் கழகம் என்று பட்டியல் நீளும்.
சென்னையில் ஏராளமான நிறுவனங்கள். இவை தவிர ஜெயங்கொண்டம், சோழங்க நல்லூர் ஆகியவற்றிலும் தந்தை பெரியார் பெயர் கூறும் சமூகப் பணி மய்யங்கள் என்று கூறிக்கொண்டே செல்லலாம்.
பெரியார் உலகமயமாகிறார் என்பதில் தொடக்கமாக, புதுடில்லியிலே தந்தை பெரியார் இந்திய மயமானார் என்பதன் எடுத்துக்காட்டு ‘புதுடில்லி பெரியார் மய்யம்’.
தந்தை பெரியார், அன்னை மணியம் மையார் மறைந்த பின் இயக்கத்தை அறப்போர் வழியிலும், சமூகப்பணி வழியிலும் செயலாற்றி முன் எடுத்துச் செல்லும் வீரமணி, வீரமணி என்ன செய்து விட்டார் என்று கேட்போர் வாய்மூடும் வண்ணம் ஆற்றும் பணிகளைப் பயன் பெற்றோர் குடும்பமே வாழ்த்துகிறது, பாராட்டுகிறது, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்! பாராட்டுவோருடன் இணைந்து வாழ்த்து மழை பொழிகிறது! வாழ்க பெரியார். வளர்க ஆசிரியர் வீரமணியின் தொண்டு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக