வியாழன், 8 மார்ச், 2018

விவேகானந்தர் - 5



"ஒரு பெண்ணிற்கு ஒரு ஆணைத் தேடித்தருவதே எவ்வளவு கஷ்டம்! இதில் ஒரு பெண்ணிற்கு அடுத்தடுத்து இரண்டு மூன்று ஆண்களைத் தேடித்தருவது எப்படி? எனவேதான் சமுதாயம் ஒரு பிரிவினரைப் பிரதிகூலத்திற்கு உட்படுத்தி வைத்திருக்கிறது. அதாவது ஒரு கணவனை அடைந்த பெண் இரண்டாம் கணவனை அடைய சமுதாயம் அனுமதிப்பதில்லை. அனுமதித்தால் ஒரு கன்னி கணவனை அடைய முடியாமல் போகும். விதவைகளுக்குக் கிடைக்கும் கணவர்களின் எண்ணிக்கையால்தான் ஒரு நாடு காப்பாற்றப்படும் என்று நினைக்கிறீர்களா?"

என்று பாரதமே உயித்தெழு என்ற நூலில் விவேகானந்தர் சொல்கிறார்.

அந்தக் காலத்தில் நம் நாட்டில் விதவைப் பெண்கள் என்பவர்கள் எத்தனை வயதில் இருந்தார்கள் தெரியுமா?

1921 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1 வயது விதவைகளின் எண்ணிக்கை 597. 2 வயது விதவைகள் 494. 3 வயதில் 1257. 4 வயதில் 2837. 5வயதில் 6707 பேர். 5 முதல் 10 வயதுவரை 85037. 10 முதல் 15 வயதுவரை 232147. 15 முதல் 20 வயதுவரை 396172. 20 முதல் 25 வயதுவரை 742820. 25 முதல் 30 வயது வரை 1163720 பேர்.

இவ்வளவு விதவைகள் எப்படி வந்தார்கள்? அர்த்தமுள்ள இந்துமதத்தில் ஒரு பெண்ணுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும். அப்படி ஒரு தகப்பனால் எட்டு வயதுக்குள் தன்னுடைய மகளுக்குத் திருமணம் செய்துகொடுக்க முடியவில்லையென்றால் அந்தப் பெண் வயசுக்கு வந்தபிறகு அப்பெண்ணின் மாதவிடாயின்போது வெளியாகும் கழிவைக் குடிக்க வேண்டும் என்று இந்து மத சாஸ்திரங்கள் கூறுவதாக அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரி ~இந்த மதம் எங்கே போகிறது?| என்ற நூலில் குறிப்பிடுகிறார்.

இதன் காரணமாக குழந்தைத் திருமணத்தை அங்கீகரித்த இந்துமதம் விதவை மறுமணத்தை ஆதரிக்கவில்லை. அதே நேரத்தில் ஒரு ஆண் தன்னுடைய மனைவி இறந்த உடன் மறுமணம் செய்துகொள்ள இந்துமதம் அனுமதிக்கிறது. அத்துடன் மனைவி உயிருடன் இருக்கும்போதே பிரசவித்திற்காக மனைவி தாய்வீடு சென்றுவிட்டாலோ

மாதவிடாய்க்காலத்திலோ தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக்கொள்ள தேவதாசி முறை இருக்க வேண்டும் என்று வாதாடியவர் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்.

“பால்மணம் மாறாத 5 வயது இளம் குழந்தைகள் மட்டும் 11892பேர். பிறவிப்பயனையே நாடுவதற்கில்லாது இன்பந்துய்க்காத 15 வயதுக்குட்பட்ட விதவைகள் 232747 பேர் இருக்கிறார்கள் என்பதைக் கேட்கவே குலை நடுங்குகிறது. நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. நெஞ்சம் கொதிக்கிறது. இது மனிதத் தன்மையற்ற ஜீவகாருண்யமற்ற செயல். இத்தகைய படுமோசமான செயலை எந்த நாகரிக உலகம் ஏற்கும்?” என்கிறார் தந்தை பெரியார்.

அந்த மனிதத் தன்மையற்ற செயலை விவேகானந்தர் ஆதரிக்கிறார் என்றால் அவரது அந்த எண்ணம் வக்கிரமானது. விவேகமற்றது நாகரிகமற்றது என்று கூறினால் அது தவறாகுமா?

அதே நேரத்தில் இந்து மதத்தில் விதவைகள் குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. பிள்ளையில்லாமல் குலம் நசிக்கிறதாயிருந்தால் விதவையான  ஒரு பெண்  தனது மைத்துனன் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி ஒருவனோடு உடம்பில் நெய்யைப் ப10சிக்கொண்டு பிள்ளையை உண்டு பண்ணலாம் என்று மனுதர்மம் சொல்கிறது. அப்படி புருஷன் செத்துப்போய் விதவையாய் இருந்தவர்களுக்கு வேதத்தைத் தொகுத்ததாகச் சொல்லப்படும் வியாசர்மூலம் பிறந்தவர்கள்தான் பாண்டவர்களின் தகப்பனான பாண்டுவும் கவுரவர்களின் தகப்பனான திருதராஷ்டிரனும் என்று மகாபாரதக் கதை கூறுகிறது.

விதவைகள் பிள்ளைபெற்றுக் கொள்ளலாம். ஆனால் மறுமணம் செய்யக்கூடாது என்பது எவ்வளவு வக்கிரமான கூற்று. இந்தக் கருத்தைச் சொல்லக்கூடிய நூல்தான் விவேகானந்தரின் ~பாரதமே உயிர்த்தெழு| என்றநூல். குழந்தைத் திருமணத்தைக் கண்டிக்காத விவேகானந்தர் விதவைத் திருமணத்தைக் கண்டிப்பது வேடிக்கையாக இல்லையா?. சிந்திப்பீர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக