வியாழன், 15 மார்ச், 2018

அப்ரண்டிஸ்களுக்குத் தமிழில் தேர்வு நடத்து

அப்ரண்டிஸ்களுக்குத் தமிழில் தேர்வு நடத்து

பெல் பயிற்சிப்பள்ளியில் ஆண்டுதோறும் இரண்டாயிரம் பேருக்கு மேல் பல்வேறு டிரேடுகளில் பயிற்சியாளராகச் சேர்ந்து பயிற்சி முடித்து வெளியில் செல்கிறார்கள். அவர்கள் பிற நிறுவனங்களுக்கு வேலைக்குச் செல்லும்போது இங்கு பெற்ற பயிற்சி பயனுள்ளதாக மதிப்பு மிக்கதாக இருக்கும் என்ற அடிப்படையில்தான் இங்கு பயிற்சி பெற வருகிறார்கள்.

அதற்கேற்றாற்போல கடந்த காலங்களில் நல்ல தரமான பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மனிதவள மேம்பாட்டு மய்யம் என்ற பெயருக்கு ஏற்றாற்போல் நடக்காமல் மனித வள சுரண்டல் மய்யம் என்று சொல்லக்கூடிய வகையில் எந்த பயிற்சியுமே அளிக்காமல் வெறும் எடுபிடிகளாகப் பயன்படுத்தி வந்தது நிர்வாகம்.

எந்தப் பயிற்சியும் அளிக்காமல் ஆண்டு இறுதியில் தேர்வு நடத்தி அதில் பெறும் மதிப்பெண்ணை வைத்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்தது. போதிய பயிற்சி இல்லாமலேயே தேர்வு வைப்பது என்பது எப்படி நியாயம் என்றே தெரியவில்லை. கடந்த ஆண்டு ஆன் லைனில் தேர்வு நடத்தப்பட்டது. அந்தத் தேர்வு நம் தாய்மொழியான தமிழில் நடத்தாமல் ஆங்கிலத்தில் நடத்தப்பட்டது. அய்டிஅய் படித்து வந்த யாரும்  ஆங்கில வழியில் படித்தவர்கள் கிடையாது. பெரும்பாலும் முதல் தலைமுறையைச் சேர்ந்த பிள்ளைகள்தான். அவர்களது பெற்றோரே போதிய கல்வி பெற்றிருக்க மாட்டார்கள்.

விவசாயிகளாகää கூலித்தொழிலாளர்களாக உடலுழைப்புத் தொழிலாளர்களாக இருக்கக் கூடியவர் வீட்டுப் பிள்ளைகள்தான் பெரும்பாலும் உடலுழைப்புத் தேவைப்படும் அய்டிஅய் படிக்க வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பெரும்பாலும் அரசுப்பள்ளிகளில் படித்தவர்களாக இருப்பார்கள்.
அவர்களுக்கு ஆங்கிலத்தில் தேர்வு வைக்கும்போது அதைப் புரிந்துகொண்டு எழுதுவது சிரமமாக இருக்கிறது. அதனால் கடந்த ஆண்டு ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்று தெரிகிறது. அதனைச் சரி செய்ய இந்த ஆண்டு பயிற்சிப்பள்ளி நிர்வாகம் முயற்சி எடுத்திருப்பது பாராட்டுக்குரியது.
மாணவர்களுக்கு பயிற்சி மட்டும் போதாது. அவர்கள் தேர்வு எழுதுவது அவர்களது தாய்மொழியில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்த விவரங்களைக் கூட எழுத முடியும். ஆங்கிலத்தில் வினாக்கள் இருந்தால் அதற்கு விடை தெரிந்தாலும் அதனை எழுதுவதற்கு பலராலும் முடியாது.

வினாத்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருப்பதுää இந்தி பேசாத மாநில மாணவர்களை வஞ்சிக்கும் செயல் ஆகும். இந்தி பேசுகிறவர்கள் மட்டும் தமது தாய்மொழியில் எழுதுவர். மற்ற மாநிலத்தவர் அனைவரும் தங்கள் தாய்மொழி அல்லாத ஆங்கிலத்தில் எழுத வேண்டி இருக்கும். அதனால் இந்தி பேசக்கூடியவர்கள் நிறைய மதிப்பெண் பெற்று அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்வுகளில் பங்குபெறும்பொழுது அவர்களால் எளிதாக அந்த வேலைகளைப் பெற முடியும்.

விண்ணப்பிப்பதற்கே போதிய மதிப்பெண் இல்லாமல் பிற மொழி பேசக்கூடியவர்கள் அவதிப்படுவார்கள். அப்ரண்டிஸ் மதிப்பெண்ணும் குறைவாகப் பெற்று போட்டித் தேர்வுகளிலும் குறைவான மதிப்பெண் எடுத்தால் போட்டி நிறைந்த இவ்வுலகில் நல்ல வேலைக்குப் போக முடியாது.

எனவே BHEL நிர்வாகம் அகில இந்திய அப்ரண்டிஸ் துறையை அணுகி நமது மாணவர்களுக்கு தமிழில் தேர்வெழுத அனுமதி பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். அதுதான் பெல் நிறுவனத்தை நம்பி பயிற்சிக்கு வரும் தமிழின மாணவர்களுக்கு நாம் செய்யும் உதவி

. எனவே பயிற்சிப்பள்ளி நிர்வாகமும் மனிதவள நிர்வாகமும் இதற்கான முயற்சியை எடுத்து இந்த ஆண்டு ஏப்ரலில் நடைபெற உள்ள தேர்வில் தமிழில் தேர்வெழுத ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக