வெள்ளி, 16 மார்ச், 2018

கி.வீரமணி மே தினச் சூளுரை!


தமிழர் தலைவர் கி.வீரமணி மே தினச் சூளுரை!


 மே முதல் நாளைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடக் கூடாது என்றும் புராணக் கற்பனைப் பாத்திரமான விசுவகர்மா பிறந்த நாளைத்தான் தொழிலாளர் தினமாகக் கொண்டாடவேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ். கூறுவதை எடுத்துக்காட்டி இத்தகைய மதவாத சக்திகள் அதிகாரத்தை பிடிக்கத் துடிப்பதன் ஆபத்தையும் கோடிட்டுக்காட்டி மதச் சார்பற்ற ஆட்சியை அமைப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தி மே தினத்தில் தொழிலாளர்கள் கடமையை நினைவூட்டும் வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:                                                                                                                                                                                 மே முதல் தேதி தொழிலாளர் தினம் என்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது - 1889 இல் அமெரிக்காவிலும்இ 1891 ல் ருசியாவிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது.1886 மே முதல் தேதி அமெரிக்காவில் கூடி எட்டு மணிநேரம்தான் உழைப்பின் நேரம் என்று அமெரிக்கா கனடா  தொழிற்சங்கங்கள்  உலகிற்கு அறிவித்தன. அதற்குமுன் 18 மணிநேரம் 20 மணிநேரம் உழைப்பு என்று தொழிலாளர்கள் கசக்கிப்பிழியப்பட்டனர்                                           
இந்தியாவைப் பொறுத்தவரை சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலர் 1923 இல் மே தினத்தைக் கொண்டாடச் செய்தார்.  சோவியத் சென்றபொழுது அங்கு நடைபெற்ற மேதினப் பொதுக்கூட்டத்திலும் (1932) தந்தை பெரியார் பங்கேற்று உரையாற்றினார்.           
 சோவியத்து யூனியனுக்குச் சென்றுவந்த பிறகு தந்தை பெரியார் மே தினத்தைக் கொண்டாடுமாறு அறிவித்தார்கள் (21.5.1933) தோழர்களே என்று அனைவரையும் விளிக் குமாறு அறிக்கை வெளியிட்டார் (குடிஅரசு 13.11.1932).பொதுவுடைமைப் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்கிறார் ஈ.வெ.ரா. என்று கூறி வெள்ளை அரசு தீவிரமாகக் கண்காணிக்கும் அளவுக்கும் நெருக்கடிகளைக் கொடுக்கும் அளவுக்கும் சென்றதெல்லாம் உண்டு.

இந்தியாவைப் பொறுத்தவரை உயர்ஜாதி வர்ணக் கூட்டமும் பண முதலைகளும் பின்னிப் பிணைந்தவை. காங்கிரசின் கொள்கை சோசலிசம் என்று கூறப்பட்டது. அந்த வகையில்இ ஆவடி மாநாடு பிரசித்தி பெற்றது.  பின்னர் மெல்ல மெல்ல உலகப் பொருளாதாரக் கொள்கைகளின் வலையில் சிக்கி வறுமைக்கோட்டுக்கும்கீழ் என்கின்ற ஒன்றைக் கண்டுபிடித்த வாஸ்கோடகாமாவாக இந்தியா இன்றைய தினம் இருந்து வருகிறது.காங்கிரசின் இந்த நிலைப்பாட்டைவிட எந்த வகை யிலும் மேலானதல்ல பி.ஜே.பி.; அதற்கு அதன் இந்துத்துவா அஜண்டாதான் முக்கியம் - மற்றவையெல்லாம் ஒரு பொருட்டேயல்ல.                                   
 அந்த அடிப்படையில் மே தினத்தையே ஏற்க மறுத்துக் கட்டுரை தீட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸின் அதிகாரப் பூர்வ வார இதழான விஜயபாரதம் (2.5.2014).விசுவ கர்மா என்னும் புராண மூட நம்பிக்கைக் கற்பனைப் பாத்திரத்தின் பிறந்த நாள் ஒன்றை முன்னிறுத்து கிறது; அந்த நாள் செப்டம்பர் பதினேழாம் - அந்நாளைத் தான் தொழிலாளர் தினமாகக் கொண்டாடவேண்டும் என்று கூறுகிறது  ஆர்.எஸ்.எஸ்.
                                                                                             
 மத்தியில் ஆட்சி வருமுன்னே இந்நிலையா என்பதை தொழிலாளர்த் தோழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.  மே தினம் என்பது உழைப்பாளர்களின் உரிமை நாள் - இவர்கள் கூறும் நாளோ புராணக் கற்பனைப் பாத்திரம்.  சேது சமுத்திரத் திட்டத்தை ராமன் பாலம் என்று சொல்லித் திசை மாற்றம் செய்யவில்லையா? எதிலும் மூடத்தனமான புராண பார்வை மட்டுமல்ல திசை மாற்றும் வேலையும்கூட!  அதுவும் செப்டம்பர் 17 என்பது - ஆரிய சனாதனத்தின் ஆணிவேரைச் சுட்டுப் பொசுக்கிய தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளாயிற்றே! அவர்களுக்கு உறுத்தாதா? அதை இருட்டடிக்கும் உள்நோக்கமும் உண்டு  எனினும்இ அதைவிட சிறுபிள்ளைத்தனம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது!                                                                                                                                                                           
இன்னொரு காரணமும் உண்டு. அதனையும் தன்னை அறியாமலேயே வெளிப்படுத்திக் கொண்டுவிட்டது விஜயபாரதம் ஏடு.  கத்தோலிக்க சபை மே தினத்தை பரிசுத்த தந்தை ஔசேபின் திருநாளாகக் கடைப்பிடிக்கிறது என்று குறிப் பிட்டுள்ளது விஜயபாரதம். எதிலும் இத்தகு குரூர மதக் கண் ணோட்டம் என்பது ஆர்.எஸ்.எஸின் ரத்தத்தோடு பிறந்ததாகும்.  நவம்பர் 14 நேரு பிறந்த நாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாட அரசு ஆணையிருந்தும்இ அதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.  கோகுலாஷ்டமியைத்தான் (அதிலும் புராணக் கடவுள் கிருஷ்ணன்தான் முன்னிறுத்தப்படுவதைக் கவனிக்கவேண்டும்) குழந்தைகள் தினமாகக் கொண்டாடுவார்கள்.

 டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர் களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது அரசின் ஆணை. ஆனால் அதனை இந்த ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஏற்பதில்லை. அதிலும் இதிகாச பாத்திரமான வியாசர் பிறந்த நாள் என்று கூறிஇ அதனைத்தான் ஆசிரியர் தினமாகக் கொண்டாடுவார்கள் (வியாசர் பிறந்த நாளையெல்லாம் எப்படி கண்டு பிடித் தார்கள் என்று கேட்டுவிடாதீர்கள்).                                                               

இந்தப் பிற்போக்குக் கூட்டம் ஆட்சி அதிகாரத்துக்கு வரத் துடியாய்த் துடிக்கிறது. நாட்டைக் கற்காலத்துக்குத் தள்ளிக்கொண்டு போகத் திட்டமிடுகிறார்கள்.  இவ்வாண்டு மே தினத்தில் இந்த அபாயங்களை யெல்லாம் எதிர்கொண்டு தொழிலாளர்த் தோழர்கள் தோள் தூக்கி எழுவார்களாக!                                                                மதச்சார்பற்ற ஒரு நிலைதான் சகோதரத்துவத்திற்கும் சமத்துவத்திற்கும்இ எல்லார்க்கும் எல்லாமும் என்பதற்கான உத்தரவாதத்திற்குத் தகுதியானதாகும்.  இதனை உணர்ந்துஇ மதவெறியை ஜாதி வெறியை மாய்த்து மனிதநேயம் காக்க இந்த மே தினத்தில் சூளுரை ஏற்போம்!  ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்னும் பிணி நீக்கப்பட்டு அவர்களின் பணியை நிரந்தரப்படுத்தவும் உரியது செய்வோம்!     பங்காளிகளாக்கிட பாடுபடுவோம்!  ஓங்கட்டும் தொழிலாளர் ஒற்றுமை!    உயரட்டும் சமதர்மக் கொடி!!                                                                                                                                                                                                                         கி.வீரமணி                                                     
தலைவர்திராவிடர்  கழகம். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக