சனி, 28 ஜனவரி, 2017

பாரத் மாதா கீ ஜெய்




நமது பெல் நிர்வாகம் தொழிற்சங்கங்களையெல்லாம் அழைத்து நீங்கள் ஜாதி மத உணர்வுகளைத் தூண்டக்கூடாது. எந்த ஒரு ஜாதிக்கோ அல்லது மதத்துக்கோ ஆதரவாகவோ அல்லது எதிராகவோ பேசவோ எழுதவோ செயல்படவோ கூடாது என்று அறிவுரை கூறினார்கள். ஆனால் அது ஊருக்குத்தான் உபதேசம் எனக்கு அல்ல என்பதுபோல பல காரியங்களைச் செய்வார்கள். பல உதாரணங்களை அதற்குச் சொல்ல முடியும்.

பல அதிகாரிகள் இந்துத்துவ ஆர்எஸ்எஸ் சக்திகளின் கைக்கூலிகளாகவே இருந்து நாங்கள் அப்படித்தான் செய்வோம். யார் எங்களை என்ன செய்ய முடியும் என்பதுபோல அதிகார மமதையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனுடைய தொடர்ச்சிதான் குடியரசு தின நிகழ்ச்சிகளிலும் சுதந்திர தின நிகழ்ச்சிகளிலும் செக்யூரிட்டி,NCC, SCOUT, HOME GUARD போன்ற அணிவகுப்புக்களில் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிடுகிறார்கள்.

இந்த பாரத் மாதா கீ ஜெய் என்று முழங்குவது ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் சங் பரிவார நிகழ்ச்சிகளில் முழங்குகின்ற முழக்கமே தவிர இது ஒன்றும் அரசு வழிகாட்டுதல் கிடையாது. இன்று இந்தியாவை ஆளுகின்ற பிஜேபி யினர் மனங்குளிர வேண்டும் என்பதற்காக நிர்வாகம் இதுபோன்ற செயல்களைச் செய்து வருகிறது. பிஜேபி அரசாங்கமே கூட இதனை இன்னும் துணிச்சலாக எங்கும் அமுல்படுத்தவில்லை. அவர்கள் ஏற்கனவே சரஸ்வதி வந்தனா பாடச் சொல்லியும் வந்தே மாதரம் பாடச் சொல்லியும் ஆணை பிறப்பித்து எதிக்கட்சியினர் எதிர்த்ததையடுத்து அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டனர். அதனால் சூடு கண்ட பூனையாக அரசு இதில் எச்சரிக்கையாக இருக்கிறது. படிப்படியாக இந்த நாட்டை இநது ராஜ்யமாக மாற்றுகின்ற பணியினை மத்திய பிஜேபி அரசு செய்து வருகிறது. இன்னும் முழுமையாக அது நிறைவேறவில்லை.

ஆனால் இங்கே இருக்கக் கூடிய அதிகாரிகள் ஏதோ இங்கே இந்துராஜ்யமே மலர்ந்து விட்டது போலவும் இப்படியெல்லாம் செய்தால் ஆட்சியாளர்களின் தயவு தங்களுக்குக் கிடைக்கும் என்றும் கருதிக்கொண்டு குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பாரத் மாதா கீ ஜெய் என்ற முழக்கத்தை ஆணையாகப் பிறப்பிக்கிறார்கள்.

இந்த முழக்கமானது வங்காளத்தில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்ட ஆனந்தமடம் என்ற நாவலில் வரும் ஒரு முழக்கமாகும் வந்தே மாதரம் என்ற பாடலும் அந்த நாவலில் பாடப்பட்ட பாடல்தான். அது முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான கதை கொண்ட நாவல். முஸ்லிம் வெறுப்பை நாவல் முழுக்க கக்கியிருக்கக் கூடிய கதைதான் அது.
அதிலே சொல்லக்கூடிய பாரத மாதா என்பது காளிதேவி என்கிறது அந்த நாவல். காளிதேவிதான் பாரதமாதா வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை வங்கமொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்த்த பாரதியே கூட பாரதமாதா என்பவள்

பத்துப்படைகொளும் பார்வதி தேவியும்
கமலத்து இதழ்களில் களித்திடும் கமலையும்
அறிவினை அருளும் வாணியும் அன்னை நீ

என்று பாரத மாதா என்பவள் இந்துக்கள் வணங்கக் கூடிய பார்வதி சரஸ்வதி ஆகிய தேவியரின் வடிவம் என்பதை வெளிப்படுத்துகிறார்.

இதனை ஆர்எஸ்எஸ் சும் சங்பரிவாரங்களும் அவர்கள் நிகழ்;ச்சிகளில் முழங்கிக் கொள்ளட்டும் அதனை ஒரு பொதுத்துறை நிறுவனம் தனது விழாக்களில் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது முழுக்க முழுக்க மதவெறி சக்திகளுக்கு ஆதரவான நிலையே தவிர இந்திய இறையாண்மைக்கும் இந்திய அரசின் மதச்சார்பற்ற தன்மைக்கும் எதிரானது. பல மதங்கள்ää பல இனங்கள்ää பல மொழிகள் பேசக்கூடிய மக்கள் வாழும் நாட்டில் இதுபோன்ற செயல்கள் ஏற்புடையது அல்ல.

 ஏற்கனவே இது முழக்கப்பட்டிருந்தாலும் இனி வரும் காலத்தில் இது முற்றிலும் தவிர்க்கப்பட  வேண்டும். அதுதான் உண்மையான மதச்சார்பற்ற தன்மை என்பதை சுட்டிக்காட்டுகிறோம். இல்லையேல் நிர்வாகமே தான் கூறியதற்கு மாறாக ஜாதி வெறியையும் மதவெறியையும் தூண்டுவதற்குத் துணைபோகிறது என்ற குற்றச்சாட்டு உண்மையாக மாறிவிடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக