ஞாயிறு, 29 ஜனவரி, 2017

இது யாருடைய அரசு? - பேரா.சுப.வீரபாண்டியன் -2
சிறிய நிகழ்வு தொடங்கி புதிய கல்விக் கொள்கை, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பெரிய மாற்றங்கள் வரையில் எல்லாவற்றிலும், இந்தியாவின் பன்முகத் தன்மையை அழித்து, தட்டையான ஒற்றை இந்துத்துவ முகத்தை நிலைநிறுத்த மோடி அரசு முயல்கிறது.
புதிய கல்விக் கொள்கை என்றால் உடனே, "எல்லா பல்கலைக்கழகங்களும் சமற்கிருத மொழிக்குத் தாராளமாக உதவ முன்வர வேண்டும்” என்கிறது வரைவு அறிக்கையின் ஒரு பிரிவு. அது ஏன், சமற் கிருதத்துக்கு மட்டும்? இந்திய அரசமைப் புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை ஏற்றுக் கொண்டுள்ள 22 மொழிகளில், ஒரு மொழிக்கு மட்டுமே எல்லா உதவிகளும் என்றால், மற்ற 21 மொழிகளின் நிலை என்ன?
1950ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபோது, எட்டாவது அட்டவணையில் 14 மொழிகள் மட்டுமே இருந்தன. பிறகு, காங்கிரஸ் ஆட்சியில் நான்கு மொழிகளும், பாஜக ஆட்சியில் நான்கு மொழிகளுமாக எட்டு மொழிகள் சேர்க்கப்பட்டு 22 மொழிகள் ஆயின. அவற்றுள் பல மொழிகள் கோடிக்கணக் கான மக்களால் பேசப்படுபவை.
சில மொழிகள் லட்சக்கணக்கான மக்களால் பேசப்படுபவை. ஆயிரக்கணக்கானவர்களால் மட்டும் பேசப்படும் ஒரே மொழி சமற்கிருதம்தான். 1951ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கின்படி, சமற்கிருதத்தைத் தங்கள் தாய்மொழி என்று பதிவு செய்த வர்கள் 1,544 பேர் மட்டுமே. பல கோடி மக் களின் வரிப்பணம், சில ஆயிரம் மக்களின் மொழிக்காகச் செலவிடப்படுவதுதான் இந்தியாவின் ஜனநாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக