புதன், 4 ஜனவரி, 2017

இந்துத்துவாவின் இளைய பங்காளி திக வா? மகஇக வா?



1992ல் இந்துத்துவா பிஜேபி ஆர்எஸ்எஸ் சங்பரிவார்க் கும்பல் பாபர் மசூதியை இடித்து மதவெறிக் கோரத்தாண்டவம் ஆடிய நேரத்தில் மதவெறியை மாய்ப்போம்@ மனிதநேயம் காப்போம் என்று முழக்கமிட்டு மதவெறி எதிர்ப்பு இயக்கங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றியவர் தமிழர் தலைவர் வீரமணி. பிஜேபி யோடு எந்தக் கட்சி கூட்டணி சேர்ந்தாலும் அவர்களுக்குத் தமிழ் மண்ணில் இடமில்லை என்ற அரசியல் வியூகத்தை வகுத்தவர் வீரமணி.

அந்த வியூகத்துக்கு உதாரணம்ää 2001 ல் திமுக பிஜேபியுடன் பிடிவாதமாகக் கூட்டணி சேர்ந்த நேரத்தில் பிஜேபியுடன் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வெற்றிபெற்றால் அது இந்துத்துவாவின் வெற்றியாகப் போய் விடும் என்பதால் யார் வெற்றிபெற வேண்டும் என்பதைவிட யார் வெற்றிபெறக் கூடாது என்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தி அரசியல் கூட்டணியை உருவாக்கியவர் வீரமணி.

1996ல் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்ததால் காங்கிரசை விட்டே வெளியேறி தமிழ் மாநிலக் காங்கிரசைத் துவக்கிய பெரியவர் மூப்பனாரை அதிமுக கூட்டணியில் சேர வைத்து பிஜேபியையும் அதனுடன் கைகோர்ப்பவர்களையும் மண்ணைக் கவ்வச் செய்தவர் வீரமணி. மூப்பனார் இவரை ராஜகுரு என்று சொன்னார்.

2004ல் அதிமுக பிஜேபியோடு சேர்ந்த போது அக்கூட்டணிக்கு எதிராக சுற்றிச் சுழன்று பிரச்சாரம் செய்து 40க்கு 40 என்ற நிலையைத் தோற்றுவித்தவர் வீரமணி.

கலைஞர் அவர்கள் வீரமணியின் சொல்படிதான் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராக சட்டம் கொண்டு வந்து இந்துத்துவாவின் இடுப்பொடியச் செய்தார். வீரமணியின் சொல்படிதான் தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்து இந்துத்துவாவை எழ முடியாமல் செய்தார்.

அதிமுக, திமுக, மதிமுக,பாமக என்று அனைத்துக்கட்சிகளும் பிஜேபியோடு கூட்டணியாகச் சேர்ந்து தேர்தலில் நின்றிருந்தாலும் இன்று பிஜேபியைச் சீந்துவதற்கு தமிழகத்தில் நாதியில்லை.

தமிழகத்தில் நாங்கள் நிலைபெற முடியாமல் போனதற்கு தந்தை பெரியாரும் அவர் ஊட்டிய திராவிட இயக்க உணர்வும்தான் காரணம் என்று இல.கணேசன் சொல்கிறார்

தந்தை பெரியார் ஊட்டிய அந்த உணர்வை மங்காமல் காத்து தவறு செய்த திராவிட இயக்கங்களைக்கூடத் திருத்தி இனி இந்துத்துவா கும்பலுக்கு தமிழகத்தில் இடமில்லை என்ற நிலையை உருவாக்கிய திக வைப் பார்த்து யார் கோபப்பட வேண்டும்? பிஜேபி யினர்தானே!

ஆனால் மகஇகவுக்கு அந்தக் கோபம் வருவானேன்? அப்படியானால் இந்துத்துவாவின் இளைய பங்காளி திக வா?  மகஇக வா?

இந்துத்துவாவின் தொழிற்சங்கமான பிஎம்எஸ் மே தினத்தைத் தொழிலாளர் தினமாக ஏற்றுக் கொள்வதில்லை. அதை முறியடிக்க திராவிடர் தொழிலாளர் கழகம் 2000 மே மாதம் 1ந் தேதி இந்துத்துவாவை எதிர்க்கிற அனைத்துச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து மே தின விழா நடத்தியது. மகஇகவைத் தவிர நாம் அழைத்த அனைவரும் அதில் கலந்துகொண்டார்கள். அவர்கள் கலந்துகொள்ளாததற்குக் காரணம் இந்துத்துவா கும்பலை எதிர்ப்பதை அவர்கள் விரும்பவில்லை என்று இப்பொழுதுதான் புரிகிறது.

மகஇகவே! முதலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதிலளிப்போம் என்றீர்கள். நாங்கள் கேட்ட கேள்விகள் உங்கள் அடித்தளத்தையே ஆட்டுகிறது என்றவுடன் ஈழப்பிர்சினையை மட்டும் பேசுவோம் என்றீர்கள். நாங்கள் திசை திருப்புவதாகச் சொன்ன நீங்கள் இப்பொழுது வேறு பக்கம் திசை திருப்புகிறீர்கள். ஒரே மேடையில் விவாதம் நடத்த காவல்துறையும் நிர்வாகமும் அனுமதி தர மறுத்துவிட்டது. நாங்கள் அனுமதி வாங்குகிறோம் என்று உங்கள் செயலாளர் வீரமாகச் சொன்னார். அதன்படி அனுமதி வாங்கி நீங்கள் சொன்னபடி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்வதுதான் அறிவு நாணயம். பந்து இப்பொழுது உங்கள் பக்கம். பந்தை அடிப்பதை விட்டுவிட்டு காலை அடிக்காதே. கூட்டத்துக்கு ஏற்பாடு செய்!
அங்கே நிரூபிப்போம். பங்காளி யார்? பகையாளி யார் என்று? இனியும் குறுக்குச்சால் ஓட்டாதே!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக