ஞாயிறு, 11 டிசம்பர், 2016

திருக்குறளும் கீதையும் எப்படி ஒத்துப் போகும்?

பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க ஆர்எஸ்எஸ் முயல்கிறது. பிஜேபியினர் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கப் போவதாக கதை விடுகின்றனர்.

திருக்குறளும் கீதையும் எப்படி ஒத்துப் போகும்?

திருவள்ளுவர் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறார். கிருஷ்ணன் நான்கு வருணங்கள் உண்டு என்கிறான்.

திருவள்ளுவர் ஒழுக்கமே உயர்வானது என்கிறார். கிருஷ்ணன் ஏராளமான பெண்களுடன் சல்லாபம் செய்கிறார்.

திருவள்ளுவர் உழவுத் தொழில் உயர்வானது என்கிறார். கிருஷ்ணன் ஏர்பிடித்தல் பாவம் என்கிறான

். திருவள்ளுவர் திருடக்கூடாது என்கிறார். கிருஷ்ணன் சின்ன வயதில் வெண்ணெய் திருடினான். பெரிய வயதில் பெண்ணைத் திருடினான்.

திருவள்ளுவர் கொலை செய்தல் பாவம் என்கிறார். 
கிருஷ்ணன் கொலை செய்வதில் தவறில்லை என்கிறான்.

திருவள்ளுவர் கள்ளுண்ணல் பாவம் என்கிறார். கிருஷ்ணன் சுரா பானம் சோமபானம் அருந்தும் கூட்டத்தின் தலைவன்.

திருவள்ளுவர் இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் என்கிறார். 
கிருஷ்ணன் பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்கிறான். 
திருவள்ளுவர் அனைவரையும் கல்வி கற்கச் சொல்கிறார். கிருஷ்ணன் சூத்திரனுக்குக் கல்வி கூடாது என்கிறான்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் என்பது திருவள்ளுவர் வாக்கு. சூத்திரன் வேதத்தைக் காதால் கேட்கக்கூடாது என்பது கண்ணனின் தத்துவம்.

பெண்ணுக்குக் கற்பு அவசியம் என்பது திருவள்ளுவர் தத்துவம். கற்பைப் பற்றிய கவலை கண்ணனுக்கில்லை.

சூதாடுதல் தவறு என்பது திருவள்ளுவர் கொள்கை. சூதாட்டத் தலைவன் தருமருக்கு உடந்தை கிருஷ்ணன்.

மானம் மனிதனுக்கு உயிர் போன்றது என்பது திருவள்ளுவர் கோட்பாடு.

மானத்தைப் பற்றிய கவலை கண்ணனுக்கில்லை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்பது வள்ளுவர் வாக்கு. எதையும் ஏன்? எதற்கு? என்று கேட்காதே! அப்படியே நம்பு! என்பது கண்ணனின் தத்துவம்.

பொய் சொல்லுதல் பாவம் என்பது திருவள்ளுவர் கோட்பாடு. அவனும் பொய் சொல்லி மற்றவரையும் பொய் பேச வைத்தவன் கண்ணன்.

ஏமாற்றுதல் தவறு என்பது திருவள்ளுவர் தத்துவம். கர்ணனையே வஞ்சித்து ஏமாற்றியவன் கண்ணன்.

அந்தணர் என்பர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான் என்பது திருவள்ளுவர் வாக்கு. முகத்தில் பிறந்தோரே முதல் வருணத்தார் என்பது கண்ணனின் கோட்பாடு!

உழவர்க்குப் பின்னால்தான் மற்றவர் என்பது வள்ளுவர் வாக்கு. பிராமணர்க்குப் பின்னால்தான் மற்றவர் என்பது கண்ணனின் தத்துவம்.

பிச்சை எடுத்துத்தான் ஒருவன் உண்ண வேண்டும் என்ற நிலை இருந்தால் நாட்டைக் காக்கும் மன்னன் ஒழியட்டும் என்பது திருவள்ளுவர் கூற்று. பிச்சை எடுத்தல் அவனவன் தலைவிதி என்பது கண்ணனின் கோட்பாடு.

ஒருவனுக்கு ஒருத்தி என்பது திருவள்ளுவர் கோட்பாடு. அய்வருக்குந் தேவி@ அழியாத பத்தினி என்பது கண்ணன் போற்றும் பாரதக் கோட்பாடு!

வேள்வியில் மிஞ்சிய அமுதத்தை உண்போர் என்றும் உளதாகிய பிரம்மத்தை அடைகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கு இவ்வுலகம் இல்லை. அவர்களுக்கு பரமலோகம் ஏது என்கிறான் கண்ணன்.

சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் என்கிறார் திருவள்ளுவர்.

யாகம் வளர்த்தலால்தான் உலகமே வாழ்கிறது என்பது கண்ணன்.
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று 

என்கிறார் திருவள்ளுவர். 

அதாவது ஆயிரம் யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் மிக நன்மை பயப்பது ஓர் உயிரையும் கொன்று தின்னாமையேயாகும் என்கிறார் வள்ளுவர்.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க 
சான்றோர் பழித்த வினை என்பது வள்ளுவர் வாக்கு. 

அறிநெறிக்குப் புறம்பாக மக்களைக் கொடுமைப் படுத்தும் நான்கு வருணங்களையும் நானே படைத்தேன் என்பவன் கண்ணன்.

கடமையைச் செய் பலனை எதிர் பார்க்காதே என்பது கீதை. அதன் நோக்கம் அவனவன் தன் சாதித்தொழிலைச் செய்ய வேண்டும். பலனை எதிர் பார்க்கக் கூடாது என்பதுதான் அதன் பொருள்.

நேர்மை எண்ணம் கொண்டவர்கள் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

திருக்குறளோ பலன் ஏற்படும் வகையில் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்கிறது.
அழிவதூவும் ஆவதூவும் ஆகிவழ பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல் 

என்பது திருக்குறள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின் 
என்று பலனை எதிர் பார்த்து அப்பலனைத் தவறாது எய்தும் வழியைத்தான் கூறுகிறது திருக்குறள்.

இப்படி ஏராளமான வேறுபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் திருவள்ளுவரின் கூற்று

எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதாய் தமிழரை உலக அரங்கில் உயர்த்தக் கூடியதாய் அமைந்துள்ளது. கண்ணனின் கோட்பாடு தமிழரைத் தாழ்த்துவதாய் அமைந்துள்ளது.

எனவே, திருக்குறள் நெறியே தமிழர் நெறி. அது உலகத்துக்கே பொதுவான நூல். அதனை ஏற்றுக் கொண்ட நல்லறிவு கொண்டோர் கெடுமனம் கொண்ட கண்ணனின் கீதையை ஏற்றுக் கொள்வரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக