திங்கள், 26 டிசம்பர், 2016

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரே கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு



பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு மத்திய அரசைப் பொறுத்தவரை எப்போது கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்டது என்பது மிகவும் முக்கியமான வினாவாகும். இந்திய அரசமைப்புச்சட்டம் என்றைக்குச் செயல்பாட்டுக்கு வந்ததோ (1950ää சனவரி26) அன்றிலிருந்து இதுவும் செயல்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகுதான் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் 1990 ஆகஸ்ட் 7ந்தேதி அறிவி;க்கப்பட்டது. சமூகநீதி வரலாற்றில் அந்நாள் பொன்வரிகளால் தீட்டப்பட வேண்டிய நாள் என்பதிலே எந்தவித அய்யப்பாடும் கிடையாது.

அதனை எதிர்த்தும் நீதிமன்றம் சென்றனர் உயர்ஜாதிப் பார்ப்பனர்கள். அதன் காரணமாக மேலும் ஈராண்டுகள் தாமதப்பட்டது. இவ்வளவு காலம் தாழ்த்தி இட ஒதுக்கீடு அளிக்கும்பொழுது எப்படி பொருளாதார அளவுகோல் (கிரீமிலேயர்) திணிக்கப்பட்டது? பந்தியிலே உட்கார வைக்கப் படுவதற்கு முன்பே இதை மற்றவர்கள் சாப்பிட்டு விட்டனர். எனவேää இதனைத் தரம் பிரிக்கச் சொல்லுவது சரியா? என்ற வினாவை திராவிடர் கழகத் தலைவர் மானமிகு க.வீரமணி அவர்கள் சொன்னதை இந்த இடத்தில் நினைவூட்டுகிறோம்.

இந்தப் பொருளாதார அளவுகோலைத் திணிக்கவேண்டும் என்ற முயற்சியை இந்திய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட காலத்திலேயே உயர்ஜாதிப் பார்ப்பனர்களால் மேற்கொள்ளப்பட்டதுண்டு. ஜவஹர்லால் நேரு அவர்கள் அதுபற்றி நாடாளுமன்றத்தில் பின்வருமாறு கூறினார்.

“எனக்கிருக்கிற சிரமம் எல்லாம் இதுதான். சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளின் முன்னேற்றத்திற்காக என்ற சொற்களை ஏன் போட வேண்டும் என்றால்ää அவை அரசியலமைப்புச் சட்டம் 340 ல் இடம் பெற்றிருக்கின்றன என்பதால் நாம் அவற்றை இதிலே இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிறோம். இல்லாவிட்டால் பொருளாதார ரீதியாக என்பதனைச் சேர்க்க எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக என்பதனைச் சேர்த்தால் சொற்களை அடுக்கிக் கொண்டே போகிறோம் என்பதோடு இவற்றில் ஏதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிட வேண்டும் என்பதும் முக்கியமாகும். சமூகரீதியாக என்பது பரந்துபட்ட பல பொருள் தரக்கூடிய ஒரு சொல்லாகும். என்று பிரதமர் நேரு அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்

சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும்தான் இட ஒதுக்கீடு – பொருளாதார அளவுகோல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதற்கான வரலாறு இவ்வாறு இருக்க உச்சநீதிமன்றம் தன் மனம் போன போக்கில் கிரீமிலேயர் என்ற சொல்லாக்கத்தை உண்டாக்கித் திணித்தது எந்த வகையில் நியாயம்? “இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. சமூகநீதிக்கான வாய்ப்பினைக் காலம்காலமாக மறுக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் ஓர் ஏற்பாடு” என்று இதே உச்சநீதிமன்றமே சொன்னதுண்டு.

நீதிபதி நாற்காலிகளில் உட்காருவோரைப் பொறுத்து தீர்ப்புக்களும் ஆணைகளும் மாறும் என்றால் இது என்ன திருக்கூத்து? அரசு வகுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது சரியாகுமா? நீதிபதியாகி விட்டால் வானக் கூரையின்கீழ் உள்ள அனைத்தும் தங்களுக்கு அத்துபடி என்று நினைக்கும் மனப்பான்மை மாறவேண்டும்.

பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பிளவு ஏற்படுத்திய கிரீமிலேயரைப் புகுத்தியதால் ஏற்பட்ட பலன் என்ன? 27 சதவிகிதம் இடங்களைப் பூர்த்தி செய்ய பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்து உரியவர்கள் கிடைப்பதில்லை. வெறும் 7 சதவிகித இடங்கள்தான் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. மீதி 20 சதவிகித இடங்கள் எங்கே போகின்றன தெரியுமா? உயர்ஜாதியினரின் வயிற்றில் அறுத்து வைத்துக் கட்டப்படுகின்றன. கிரீமிலேயரால் ஏற்பட்ட அநீதி இது. இட ஒதுக்கீட்டைக் கொடுப்பதுபோல் கொடுத்துத் தட்டிப் பறிக்கும் சூழ்ச்சிதானே!

இட ஒதுக்கீட்டில் கிரீமிலேயரே கூடாது என்பதுதான் திராவிடர் கழகத்தின் நிலைப்பாடு. அந்த நிலை எட்டப்படும் வரை இப்போதுள்ள ஆண்டு வருமானம் 6 லட்சம் என்பதைத் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று பத்தரை லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதனை வலியுறுத்தியே திராவிடர் கழகம் போராடி வருகிறது.

எனவே ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களே! திராவிடர் கழகத்தின் இந்த சமூகநீதிப் போராட்டத்திற்கு ஆதரவு தாரீர்!  திராவிடர் தொழிலாளர் கழகத்தில் இணைந்து பெல் நிறுவனத்திலும் அனைத்துப் பதவிகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளைப் பெற உறுதுணையாக இருப்பீர்!
நன்றி : விடுதலை தலையங்கத்திலிருந்து



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக