புதன், 7 டிசம்பர், 2016

இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ஒரு அம்மன் சிலையைக் கொண்டு வந்து பீடம் எழுப்பி சிலையை நிறுவி விட்டார்கள்.

திராவிடர் தொழிலாளர் கழகத்தின் பணி
நமது நிறுவனம் மதச்சார்பற்ற அரசுக்குச் சொந்தமான நிறுவனம். இதில் எந்த விதமான மத நடவடிக்கைகளும் இடம் பெறக்கூடாது என்பதுதான் அடிப்படை.

ஆனால் இங்கு நடைபெறும் செயல்களெல்லாம் அதற்க நேர்மாறாகவே இருக்கும். இந்துத்துவ வாதிகள் இந்த நிறுவனத்திற்கு உள்ளே நுழைந்து தங்களுடைய மதவாத நடவடிக்கைகளைத் தொடங்குவதன் மூலம் இந்நிறுவனத்தில் மதவெறியைத் தூண்ட வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்கள்.

அந்த இந்துத்துவ சக்திகள் 1984ம் ஆண்டு கட்டிட எண் 1 டிரம் ஷாப் பகுதியில் இரவோடு இரவாக திருட்டுத்தனமாக ஒரு அம்மன் சிலையைக் கொண்டு வந்து பீடம் எழுப்பி சிலையை நிறுவி விட்டார்கள். தொழிலாளர்கள் சாரி சாரியாக வந்து கும்பிட ஆரம்பித்து விட்டார்கள். கூட்டம் அதிகரிக்க அதிகரிக்க அங்கே உண்டியலும் வைத்துவிட்டார்கள். ஒரு ஆள் பூசாரி வேஷம் போட்டு பூஜை செய்ய ஆரம்பித்து விட்டார்.

திராவிடர் தொழிலாளர் கழகம் தொடர்ந்து இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தது.

நிர்வாகம் காவல்துறை உதவியுடன் எப்படி இரவோடிரவாக சிலையை விஷமிகள் வைத்தார்களோ அதே மாதிரி இரவோடிரவாக அப்புறப்படுத்தி விட்டது.

அதே காலக்கட்டத்தில் நமது டவுன்ஷிப் பி செக்டார் பகுதியில் ஒரு வீட்டில் அம்மன் பூமியிலிந்து வெடித்து வரப்போவதாகத் தகவல் பரப்பி விட்டார்கள். ஒரு பெண்மணி சாமி வந்ததுபோல ஆட ஆரம்பித்தார். இங்கே வரப்போகிறது அங்கே வரப்போகிறது என்று போக்குக் காட்டிக் கொண்டே இருந்தார்கள்.

அந்த இடத்தில் திராவிடர் கழகத் தோழர்கள் ஏராளம் குவியத் தொடங்கினார்கள். அதனை எதிர்த்து அங்கே குரல் கொடுத்துக் கொண்டு இருந்தார்கள். அதனால் அந்தக் கும்பலின் செயல் எடுபடாமல் போனது.
நாம் கொஞ்சம் ஏமாந்திருந்தால் பூமிக்கு அடியிலே ஏதாவது ஒரு இடத்தில் சாமி சிலையைப் புதைத்து வைத்து அது தானாக வந்ததாகக் கதைகட்டி டவுன்ஷிப்புக்குள் நிரந்தரமாகக் கோயில் கட்டி இருப்பார்கள்.

நம்முடைய எதிர் நடவடிக்கையின் காரணமாக அந்த திருட்டுத்தனம் முறியடிக்கப்பட்டு விட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக